Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, April 28, 2004

பரணும் நானும்

போன மாதம் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அகப்பட்டவை:

1. பழைய மரப்பெட்டி ஒன்று. வழுவழுவென்று, சிறியதாக, கைக்கடக்கமாக இருந்தது. ஏதோ ஒரு யுகத்தில் என் பாட்டிக்குப் பாட்டியால் கடுகு, சீரகம் கொட்டிவைக்கப் பயன்படுத்தப்பட்டதாம். 'பழைய பொட்டிதானே, தூக்கியெறியவா?' என்றார்கள். 'வரலாற்று முக்கியத்துவம் படைத்த சமாச்சாரத்தையெல்லாம் தூக்கியெறியவாவது?' என்று எடுத்து வைத்துக்கொண்டேன் ['உன்னைக் கேட்டிருக்கவே கூடாது...' - அப்பா.]. இப்பொழுது அதில் ஒவியம் வரையும் வர்ணங்களையெல்லாம் அடுக்கி வைத்திருக்கிறேன்.

பிரச்சனை என்னவென்றால்...பெட்டி நல்ல கனம். அசால்ட்டாகத் தூக்கிக்கொண்டு போக முடியவில்லை. நான் வரையும் இடத்திற்கு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு பதில், அது இருக்கும் இடத்திற்கு ஓவியத்தைக்கொண்டு வர வேண்டியதாகிவிட்டது. இப்பொழுது வேறு பெட்டி தேடிக்கொண்டிருக்கிறேன்.

2. பழைய டைரிகள் பத்து. நான்காவது படிக்கும் நாளிலிருந்து டைரி எழுதும் பழக்கம் உண்டு. ஆண்டுக்குப் பத்து முறை. (அதுவே அதிகம். மிச்சத்திற்கு பக்கம் பக்கமாகக் கிழித்து நண்பிகளுக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிடுவேன்.). அதில் 'கடவுள்' பற்றிய தத்துவ விசாரணை எல்லாம் எழுதி வைத்திருந்தேன் (என்பது பிரித்தபோதுதான் நினைவுக்கு வந்தது.). அன்றைய தேதியில் நடந்த கிரிக்கெட் மாட்சுகள், இன்னும் என்னென்னவோ...தெரிந்தவர்களிடம் அதையெல்லாம் காட்ட முடியவில்லையே என்று அப்பொழுதெல்லாம் பயங்கர ஏக்கமாக இருக்கும்.

3. 'சுழிக் காற்று' என்று பைண்ட் செய்யப்பட்ட பழைய நாவல். செல்லரித்துப் போய்க் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது. அதைத் தட்டிக்கொட்டி சரி செய்ய முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். 'டம்பப் பை,' குட்டைத் தலைப்புப் புடவை, ஆளுயரக்கொண்டை, ('வசந்தமாளிகை' வாணிஸ்ரீயின் தலையலங்காரம் மாதிரி.)...

கதை: ஒரு ஜமீன் பங்களா. கதாநாயகியும் அவளது காதலரும் வருகின்றனர் (அந்தக் காலத்துக் கதைகளில் எவ்வளவு சுலபமாகக் காதலிக்கின்றனர்!). அப்புறம் டிரங்குப் பெட்டியில் உடல், பங்களாவில் இருளில் மர்மம், சொத்துத் தகராறு என்று கதை ஜாலியாகப் போகிறது.

4. இரண்டு பக்கெட் அகல்விளக்குகள். (கார்த்திகைக்கு இன்னும் நாளிருக்கே?)

5. நான்கு பனை விசிறி. தாத்தாவின் சொத்து. (அவர் புதிதாக வேறு வாங்கிக் கொண்டுவிட்டார்.). ஒரு சாக்கு மூட்டை நிறைய பழைய துணி.

6. 'கிராண்ட் ஸ்வீட்ஸ்' அட்டைப் பெட்டிகள் இரண்டு. (எப்படி இவை பரணில் வந்து மாட்டிக்கொண்டன என்பது 'சுழிக்காற்றை' விடப் பெரிய மர்மம்.).

7. மரப்பாச்சி பொம்மைகள் நான்கு. கலர் கலராக ஜிகினா பேப்பர் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

8. ஐம்பது கரப்பான்பூச்சிகள். இரு அணில்கள். ஒரு குருவி (உயிரோடு). ஏகப்பட்ட தூசி.

"யோசித்துப் பார்த்தால், நம் மனமெனும் பரணிலும் எத்தனையோ விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன..." என்று எழுத ஆசையாகத்தான் இருக்கிறது. வேண்டாம்.

முக்கியக் குறிப்பு: '2004 - ஒரு பரணின் குறிப்புகள்' என்ற கட்டுரைத் தொகுதியில் மேற்சொன்ன பட்டியல் இடம்பெறும்.

|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home