Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, May 14, 2004

தேர்தலில் 'இருவர்'

பெரும்பாலான பெண்கள் தேர்தல் சமாச்சாரமெல்லாம் எழுதுவதில்லை என்று பரவலாக உள்ள [(நான் கேள்விப்பட்ட) கருத்தை - இப்படி ஒரு disclaimerஐ எல்லா இடங்களிலும் கொடுத்து வைக்க வேண்டியிருக்கிறது)] நானும் உண்மையாக்கப்போகிறேன். தலைப்பில் மட்டும்தான் தேர்தல்.

நேற்று 'இருவர்' படம் பார்த்தேன். எலக்க்ஷன் ஸ்பெஷலாம். பொருத்தமாகப் படம் தேர்வு செய்த கில்லாடிகள்.

'இருவர்' வெளியான போது, 'படம் நல்லாவே இல்லை' என்ற விமர்சனத்தையெல்லாம் துச்சமாக மதித்து, பறந்தடித்துக்கொண்டு தியேட்டரில் போய்ப் பார்த்தவள் நான். பெருவாரியான கருத்துக் கணிப்போடு பல சமயம் என் கருத்து ஒத்துப்போனதில்லை. இந்த முறையும் அப்படித்தான் ஆயிற்று. அணு அணுவாக நான் ரசித்த படம் 'இருவர்'. வீட்டிற்கு வந்து படத்தை அங்கம் அங்கமாக அலசி ஆராய்ந்த பிறகும் என் ஆர்வம் குறையவில்லை. அதற்குப் பிறகு, எப்போதெல்லாம் 'இருவர்' ஒளிபரப்பாகிறதோ (இது வரை 'விஜய்' மட்டும்தான் ஒளிபரப்பியிருக்கிறது, இல்லையா? இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? :-) அப்போதெல்லாம் தவறாமல் ஆஜராகிவிடுவேன். நேற்றும் விதிவிலக்கல்ல.

பத்தி பத்தியாக எழுத இன்று சலிப்பாக இருக்கிறது (எனக்கு.) என் வாசகப் பெருமக்களே...!என் மீது அளவிலாப் பிரியமும், சொல்லவொண்ணா அன்பும் கொண்டு, இன்றுவரை எனக்கு எள்ளளவும் குறையாத ஆதரவு காட்டி வரும் உங்களூக்கு என் எழுத்தின் மீது அலுப்பே வராது என்பது நான் முன்னமே அறிந்த உண்மை. (Hear, hear...!). இனி...


1. மோகன்லாலும், பிரகாஷ்ராஜும் 'பின்னு' 'பின்'னென்று பின்னியெடுத்திருக்கிறார்கள். அவர்களைத் திரையில் பார்த்தால், நடிகர்கள் என்று சொல்லத் தோன்றவில்லை. கதாபாத்திரமாக உருமாறி, நடிகன் ஆனந்தனாகவும், அரசியல்வாதி தமிழ்ச் செல்வனாகவும் கலந்து போயிருக்கிறார்கள். புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை. புதிதாகக் கண்டுபிடித்துத் தமிழ் அகராதியில் சேர்க்க வேண்டும்.

2. படம் சுற்றிச் சுற்றி திருமலை நாயக்கர் மஹாலிலேயே நடக்கிறது. ஆனந்தனும் தமிழ்ச்செல்வனும் சந்திக்கும் இடங்கள், அவ்வப்போது நடக்கும் ஷ¥ட்டிங், கடைசியில் நடக்கும் விழா, படத்தின் முடிவில் தமிழ்ச் செல்வன் நண்பனின் மரணத்தை நினைத்து துக்கப்படும் காட்சி...எல்லாமே.

3. வேலுத்தம்பி ஐயாவின் கட்சியில் ஆனந்தன் சேர வரும் போது, முகம் இறுகிப் போகும் தமிழ்ச் செல்வன், 'சினிமாக்காரந்தானே?' என்று உடனேயே புன்னகையை வரவழைத்துக்கொள்ளூம் காட்சி. கட்சியில் சேர்ந்து ஐயாவின் வரவேற்பையும் பெற்ற பிறகு, தமிழ்ச்செல்வனைத் தழுவிக்கொள்ளும் ஆனந்தன், 'தமிழ்செல்வனுக்கு நான் கட்சியில் சேர்ந்தது பிடிக்கலை.' என்று புன்னகையுடனும் (வருத்தத்துடனும்) சொல்வது. அவர்களின் நட்பில் விரிசல் விழுந்து விட்டதற்கறிகுறியாகப் பின்னால் ஒலிக்கும் போர் முரசைப் போன்ற சப்தம்...

4. மலர்க்கிரீடம் அணிந்துகொண்டு கூட்டத்தில் வீராவேசமாகப் பேசும் தமிழ்ச்செல்வன், ஆரவாரத்துடன் வந்து இறங்கும் ஆனந்தனையும் கல்பனாவையும், அவர்கள் வந்தவுடன் அருகே தலைதெறிக்க ஓடும் கூட்டத்தையும் பார்த்து சுரத்திழந்து போவது...

5. ஐஸ். ஐஸ். ஐஸ். (யாரைப் பிரதிபலிக்கும் விதமாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதோ, அவரைப் போல் இன்னும் கொஞ்சம் 'கொழுக்' 'மொழுக்' கென்று இருந்திருக்கலாம்.). புஷ்பாவாக அவர் வரும் காட்சிகள்.

6. முதன் முதலில் கல்பனாவைக் (ஐஸ்) கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கும்படி மனைவி பரிந்துரைக்க, 'வேணாம். அப்புறம் வருத்தப்படுவே,' என்று சொல்லும் ஆனந்தன்...

7. தமிழ்ச் செல்வனும், அவரது இரண்டாவது மனைவியாகப் போகிறவரும் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் காட்சி. திருமணம் ஆன பிறகு, அவர் அவரது மகள் 'மணி மேகலைக்கு' நிதானமாகத் தமிழ் கற்றுத் தரும் இடம்.

8. வேலுத்தம்பி ஐயா இயற்கை எய்தியவுடன் நடக்கும் இரங்கல் கூட்டத்தில், ஆனந்தன், 'எனக்குக் கவிதை பேசத் தெரியாது. கண்ணிர் விடத் தெரியாது...' என்று ஆரம்பித்து, கட்சி நிதிக் கணக்கு வரை செல்லும் காட்சி. சபை முன்னால் எதையும் மறுக்க முடியாமல் உறைந்து போன முகத்துடன் அவர் பின்னால் நிற்கும் தமிழ்ச் செல்வன்.

9. கட்சியை விட்டு நீக்கியவுடன், கூடியிருக்கும் பத்திரிகை நிருபர்களுக்குப் பாயசம் கொடுத்து, மைனஸ்ஸைப் ப்ளஸ்ஸாக்கும் ஆனந்தனின் மெகா திறமை. [வந்திருக்கும் நிருபர்கள் எல்லோரும் பாக்ஸ் கேமரா வைத்திருக்கிறார்கள்.:-]

10. ஆனந்தன் முதல்வரான பிறகு, அவரும் தமிழ்ச்செல்வனும் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினராகச் சந்தித்துக்கொள்ளூம் திருமண விழா. 'தேர்தல் வருது. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரிச்சிட்டு இருக்கக்கூடாது' - ஆனந்தன்.

11. ஆனந்தன் இறந்தவுடன், அவரைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன், பார்க்காமலேயே தளர்ந்த நடையுடன் திரும்புவது. இளவயது நினைவுகளையும் இழந்த நட்பையும் நினைத்து 'எல்லாவற்றிலும் என்னை முந்த வேண்டும் என்று நினைத்த நீ, மரணத்திலும் என்னை முந்திவிட்டாயா?' என்று மறுகுவது.

12.உண்மையிலேயே பிணமாகிவிட்டாரோ என்று நினைக்கும்படியான மோகன்லாலின் அசாத்திய நடிப்பு (வாயில் ஈ மொய்க்கிறது.).

13. பாடல்களும் பின்னணி இசையும் அற்புதம். அதிலும் 'ஆயிரத்தில் நான் ஒருவன்...'

14. படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அடியில் 'திமுக இங்கு ஜெயித்தது, அங்கு ஜெயித்தது' என்று scroll ஆகிக் கொண்டிருந்த செய்திகள். 'அதிமுகவுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்' என்று கறுவிக்கொண்ட எதிரணியினர்.

Who had the last laugh? ஆனந்தனா? தமிழ்ச்செல்வனா?



|

Monday, May 10, 2004

நட்சத்திர ஜன்னலில்...


பரீட்சைக்கும் கற்பனை வளத்திற்கும் ஏகப்பட்ட சம்பந்தம் இருக்கிறதாக எனக்குத் தோன்றும். பரீட்சை அவசரத்தில்தான் அருமையான கதைக் கருக்கள் தோன்றும். கற்பனைக் குதிரை 'இப்போதே ஏறிக்கொள்; நான் உன்னை புத்தம்புது உலகங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்' என்று வாசலில் காத்து நிற்கும். சில சமயம், புதிய உலகங்கள் கற்பனைக் குதிரையின் உதவி இல்லாமலே அறிமுகமாகும்.

எனக்கு astronomy அறிமுகமானது ஒரு பரீட்சை வேளையில்தான். அது ஒரு ராசி.

ஒவ்வொரு நாளும் அன்றைக்குப் படிக்க வேண்டியதைப் படித்துவிட்டு (அல்லது படித்ததாகப் பேர் செய்துவிட்டு:-), இரவு பதினோரு மணிக்குப் புத்தகத்தை மூடுவேன். அதுதான் நான் வானத்தைப் பார்ப்பதற்கு ஆரம்பம்.

வாசல் 'கேட்'டைத் திறந்தால் தெருவே வெறிச்சோடிப் போயிருக்கும். எங்கள் வீட்டிற்கு எதிரில் (அப்போது) வெட்டவெளி ஒன்று பரவிக்கிடக்கும். சுற்றுப்புறத்தில் அவ்வளவாக வீடுகள் கிடையாது. நகரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி நாங்கள் குடியிருந்ததால், வானம் துல்லியமாக, ஒரு மேகமோ, புகைமூட்டமோ அற்று இருக்கும். பவர்-கட் ஆனால் (அடிக்கடி நடக்கும் விஷயம்) - நீலமும் சிகப்பும் வெள்ளையுமாக, நட்சத்திர மண்டலம் தலைக்கு மேல் பிரகாசிக்கும். வைரங்களை வாரியிறைத்ததுபோல் ஜொலிக்கும்.

அப்படி ஜொலித்த ஓரிரவில்தான் என் முதல் பாடம் ஆரம்பித்தது. தெருவின் நடுவில் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்தேன்.

"மேல பாரு...ஒரே நட்சத்திரமா இருக்கா?"

"ம்."

"தலைக்கு மேல பாரு. ஒரு வேட்டைக்காரன் கை காலையெல்லாம் விரிச்சுகிட்டு நிக்கிற மாதிரி இல்லை?"

"கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கற்பனை செஞ்சா, அந்த மாதிரிதான் இருக்கு." சிரிப்பு. "நடுவுல பெல்ட் மாதிரி மூணு நட்சத்திரம் இருக்கே?"

"அதுதான் Orion constellation."

"என்னது?!"

"Orion. திருப்பிச் சொல்லு."

இரண்டு முறை ஒப்பித்த பிறகு, அடுத்தது.

"Orionஉக்குப் பக்கத்துல கொஞ்சம் சின்னதா இருக்கிறதுக்குப் பெயர்தான் Canis Major constellation. அதுல ரொம்ப 'பளிச்'சுன்னு தனி வைரம் மாதிரி ஜொலிக்குது பாரு? அதுதான் Sirius. வேட்டைக்காரனுக்குத் துணையாக இருக்கிற நாய்."

இப்படி தினம் ஒவ்வொரு விண்மீன் கூட்டமும் எனக்குப் பரிச்சயமாகியது. சோம்பேறிச் சிங்கமாகப் படுத்துகிடக்கும் Leo constellation, சமையல் பாத்திரத்தைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டது போல் அந்தரத்தில் தொங்கும் Ursa Major - The Big Dipper (தமிழில் : சப்தரிஷி மண்டலம். திருமணங்களில் பார்க்கும் 'அருந்ததி' - இந்த விண்மீன் கூட்டத்தில்தான் இருக்கிறது.)....இப்படி. வார்த்தைகளே புது உலகுக்கு அழைத்துச் செல்லும். ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு கதை. பெரும்பாலான நட்சத்திர மண்டலங்கள் கிரேக்கப் பெயர்களூம், கிரேக்க இதிகாச சம்பவங்களூம் பின்னணியாகக் கொண்டவை (Pegasus ஒரு உதாரணம். கிரேக்க புராணத்தில், 'மெடுசா'வின் இரத்தத்திலிருந்து உயிர்த்தெழுந்தது இந்தக் குதிரை.). இரவு பதினொன்றரைக்கு வாசலில் உட்கார்ந்து கதை கேட்டால்...நேரம் போவதே தெரியாது.

நட்சத்திரங்களிலிருந்து, புகை மண்டலங்களாக வானில் தங்கியிருக்கும் nebulaக்களுக்குத் தாவினோம் (கற்பனையில்தானே? அதற்கு எல்லையே கிடையாதல்லவா?). அப்புறம் Black hole, Galaxy...(ஒரே ஒரு முறை, டெலெஸ்கோப் வழியாக Whirlpool Galaxyயைப் பார்த்தது நன்றாக நினைவிலிருக்கிறது. மறக்கக் கூடிய விஷயமா? முதல் முறையாக, என் புறக்கண்களால் பார்த்த galaxy. அன்றைக்கு நான் தரையிலேயே இருக்கவில்லை:-)

வானவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சிலதைப் படிக்க ஆரம்பித்தேன். வானத்தில் பார்த்ததை புகைப்படங்களோடு ஒப்பிட்டு மனதில் பதித்து வைத்துக்கொள்ள முயன்றேன்.
பெயர்கள் சிலதெல்லாம் அவ்வளவு சுலபத்தில் வாயில் நுழையாது. ஒவ்வொன்று பல்லையே உடைத்துவிடும்.("ஒண்ணும் கஷ்டமேயில்ல. 'பிட்டெல்ஜியஸ்'. ஒழுங்கா சொல்லு!")

பூமியிலிருந்து வெவ்வேறு உலகங்களுக்குப் பயணம் செய்வது பற்றியும், அங்கு உயிர்கள் இருக்குமா, என்பது பற்றியும், காரசாரமாக தினமும் சர்ச்சை நடக்கும். நான் 'உயிர் உண்டு' கட்சி.:-). இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில், ஒரே ஒரு உலகில் மட்டும் உயிர்கள் இருப்பது சாத்தியமேயில்லை - என்னைப் பொறுத்தவரை. Aliens exist.

[இது விஷயமாக சர்ச்சை நடக்கும் போதெல்லாம் நான் நினைவுபடுத்திக்கொள்ளும் வசனம்:

"1500 years ago, everyone *knew* that the earth was flat.

500 years ago, everyone *knew* that the sun and all the other planets revolved around the earth.

Today, you *know* that aliens don't exist.

Imagine what you might know tomorrow.
"


- Tommy Lee Jones, "Men in Black". வேற்று கிரக ஜீவராசிகள் பற்றிப் பேசும்பொழுது, வரும் வசனம் இது. நினைவிலிருந்து எழுதுகிறேன். வார்த்தைகள் முன்னே பின்னே இருக்கலாம். ]

நிற்க. வேற்றுக் கிரகங்களுக்குப் பயணம் செலவ்து பற்றிப் பேச்சு வந்தால், sci-fi கதைகள் பின்னால் தங்குமா? அதைப் பற்றியும் பேசுவோம். [சமீபத்தில் நான் மிகவும் ரசித்த சை-·பை கதை இது. திரு. ரெகா எழுதிய 'புழுத்துளை']

அவ்வப்போது என் ஆசிரியர் ஏக்கத்துடன் வானத்தை பார்த்து பெருமூச்சுவிடுவார். "என்னால் மட்டும் முடிந்தால், அந்த உலகங்களையெல்லாம் ஒரு சுற்று சுற்றிவிடமாட்டேனா?"

"அடுத்த பிறவியில் உருவமே இல்லாத 'எனர்ஜி ' வடிவமாக இரு. நடந்தாலும் நடக்கலாம்." - இது நான்.

என்றைக்காவது அவரது ஆசை உண்மையிலேயே நிறைவேறட்டும் என்று நான் நினைத்துக்கொள்வது உண்டு. ('நடக்கவே நடக்காது' என்று உலகில் ஏதாவது உண்டா என்ன?:-)

'அன்னையர் தினம்' என்று கொண்டாடுகிறார்களே? 'தனக்குத் தெரிந்த வித்தையையெல்லாம் எனக்கும் கற்றுக்கொடுத்துவிடவேண்டும்' என்று ஆசைப்பட்ட/படும் என் ஆசிரியருக்குப் பரிசாக, ஒரு கற்பனை விண்கலம் தயார் செய்துவிடலாம் என்றிருக்கிறேன். நிஜ விண்கலத்தில் எந்த இடத்திற்குச் செல்லலாமோ தெரியவில்லை - என் கற்பனைக் கலம் அடையக்கூடிய உயரங்களுக்கு எல்லைகளே இல்லை.


பி.கு: 'இருளில் ஓர் அலறல்' தொடரும்.
|