Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, August 10, 2006

கண்டனூரில் மூவர்





வெகு நாளாயிற்று, இந்த மாதிரி ஒரு படம் பார்த்து. எப்பேர்ப்பட்ட கதாபாத்திரங்கள். என்ன கதை. என்ன களம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரும் சுற்றுபுரங்களும் மனதை அள்ளுகின்றன.

மகேந்திரனின் 'சாசனம்' படத்தைதான் சொல்கிறேன்.

ஏறக்குறைய இரண்டேமுக்கால் மணி நேரப்படம். பார்த்ததிலிருந்து, மனதில் பதிந்துபோன காட்சிகள் சில ...

1. கண்டனூர் அழகாக இருக்கிறது. பழையகால வீ¢டுகளும், திண்ணைகளும், தூண்களும் ... ஆரம்பக் காட்சிகளில் அர்விந்தசுவாமியும் கௌதமியும் - கௌதமி என்ன அழகாக இருக்கிறார். கோயில் சிற்பம் மாதிரி. இருள் படிந்த அறையில் ஒளிரும் ஒரே ஒரு தீபம் போல. முதன் முதலில் இராமநாதனும் (அ.சுவாமி) விசாலமும் (கௌதமி) ஒருவரையொருவர் சீண்டிக்கொள்ளும் இடங்கள் ரம்மியமாக இருக்கின்றன. ஊருக்குப் புதிதாக வந்து சேரும் ரஞ்சிதாவும் (சரோஜி) அவளது அம்மாவும் வியந்து போகின்றனர். "ரொம்ப வயசானவரா இருப்பாரோ?" என்று அ.சுவாமியைப் பற்றி ரஞ்சிதா கவலைப்படுவது தமாஷாக இருக்கிறது.

2. "ஆரம்பமே நன்றாக இருக்கிறதே" என்று சற்று நிமிர்ந்து உட்காரும்போது அபசுரம் லேசாகத் தலையைக் காட்டுகிறது. முதன்முதலில் வீட்டுக்கு வரும் ரஞ்சிதாவின் கைகளில் கோணல் மாணலாக இருக்கும் அல்தாவைப் பார்த்து "மருதாணி ரொம்ப நல்லா பத்தியிருக்கு உங்களுக்கு" என்று விசாலம் புகழ்கிறாள். சரி, விசாலத்திற்கு மருதோன்றியும் தெரியவில்லை, அல்தாவும் தெரியவில்லை போலும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொள்ள முயலும்போது ...

3. அடைக்கலம் கேட்டு வரும் தாய்க்கும் மகளுக்கும் இராமநாதன் பெரிய அரண்மனைபோல வீட்டைத் திறந்துவிடுகிறார். சரி. நல்ல மனிதர். பெரிய மனிதர். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டைக் கொடுக்கிறார். அப்புறம் 'அவர்களைப் பார்த்து வருகிறேன்' என்று போய், சரோஜி பாடுவதைக் கேட்டுவிட்டு, "நீ எனக்கு மட்டும் பாடிக்கொண்டேயிருக்கணும்போல இருக்கு," என்று ஒரு ஸ்டேட்மெண்ட் அடித்துவிட்டு வருகிறார். ஆகா, துரோகம் என்ற வார்த்தை முதன்முதலில் மனதுக்குள் தோன்றுகிறது. சரோஜியின் அம்மாவுக்கும் தெரிகிறது. "இதெல்லாம் நல்லா இல்லை," என்று நாசூக்காக மகளிடம் சொல்கிறார். "கடை வெக்கலாமா, பாட்டு சொல்லித் தரலாமா," என்று கொஞ்சமாவது வாழும் வகை செய்துகொள்ள அவர் மட்டுமே பாடுபடுகிறார். "பாட்டு, கடையெல்லாம் சரி வராது," என்று இராமநாதன் மறுக்கும்போது, சந்தோஷமென்று சரோஜியும் நிம்மதியாக வீட்டிலேயே இருந்துவிடுகிறாள்.

4. Then things go the predictable way. ஆனால், அவை அப்படி செல்வதற்கான காரணங்கள் தான் சரிவர கொடுக்கப்படவில்லை. இராமநாதன் அப்பாவால் சுவீகாரம் கொடுக்கப்படுகிறார். பல சொத்துகளுக்கு அதிபதி ஆகிறார். அப்பாவால் 'விற்கப்பட்டோம்' என்ற எண்ணம் மனதின் அடியாழத்தில் உறுத்துகிறது. ஒப்புக்கொள்ளலாம். [சுவீகாரம் கொடுக்கும் காட்சிகளை விஸ்தாரமாகக் காட்டியிருக்கிறார்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது.] அந்த வருத்தம் தெரிந்த விசாலம் அன்பான மனைவியாக அவரை சமாதானப்படுத்துகிறார். [இப்படிப்பட்ட மனைவி கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.] அதற்கும் அவர் சரோஜியிடம் அடிமையாவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அவருக்கும் விசாலத்திற்கும் ஒத்துப்போகவில்லையா என்றால், இல்லை. இருவரும் மிக அன்னியோன்யமாக வாழ்கிறார்கள். 'சிந்து பைரவி' படத்தில் வருவதுபோல், மனைவிக்கு ரசனை கிடையாது என்பது மாதிரியான காரணமா என்றால், அதுவும் இல்லை. [ரஞ்சிதா அற்புதமான நடனக் கலைஞர் என்பதை மனது சுத்தமாக ஏற்கமாட்டேனென்கிறது. ஒரே ஒரு பாடல் பாடி அவர் உத்தமரான இராமநாதனின் மனதைக் கலைத்து விடுகிறாராம்.]Only one explanation fits the bill: சரோஜியைப் பார்த்தவுடனேயே இராமனாதனின் மனதில் சபலம் உண்டாகிவிட்டது என்பதுதான். அப்படியென்றால் மனைவி விசாலத்தின்மேல் அவருக்கிருக்கும் 'அன்பு'? SmileyCentral.com

5. இராமநாதனின் அப்பா இறந்ததற்கு சரோஜியும் செல்கிறாள். (ஏன்? "ஊர்ல எல்லாரும் தப்பா பேசறாங்க," என்று முந்தைய நாள் வரையில் துயரப்படும் சரோஜிக்கு இது அதிகப் பேச்சைக் கிளப்பும் என்று தெரியாதா?] அங்கு, எல்லோரும் (எதிர்பார்த்தது போல்)தவறாகப் பேசுவதைத் தாள முடியாமல், பாதியிலேயே தன் வீட்டுக்கு வந்து, உள்பாவாடையைக் கட்டிக்கொண்டு மேலே ஒரு புடவையை மட்டும் போட்டுக்கோண்டு தேம்பித் தேம்பி அழுகிறாள். அங்கு சரியாக வரும் இராமநாதன் (?!) அவள் அழுவதைக் காணச் சகிக்காமல் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு வரும் கலாசாரத்தின்படி நெற்றியில் ஒரு திலகம் வைத்து, சரோஜியின் மனக்காயத்தைத் தீர்க்கிறார். "நாங்க அந்த மாதிரி ஒருத்தரையொருத்தர் நினைக்கவேயில்லை" என்று அவரும் சரோஜியும் மாற்றி மாற்றி புலம்புவதும், அழகான, அற்புத குணம் படைத்த விசாலத்திற்கு துரோகம் செய்வதும் என்ன மாதிரியான காதல் என்று புரியவில்லை. அப்படியே அது காதல்தானா என்றால், அதுவும் இல்லை. ஏதோ விபத்தாம். கண நேரத்தில் திருவிழாவில் குழந்தை காணாமல் போவது மாதிரி தொலைந்து போய்விட்டார்களாம். [காதில் பூ சுற்றும் ஸ்மைலி எதாவது இருக்கிறதா?]

6. நடுவில் மெய்யம்மை ஆச்சி அவ்வப்போது தலைகாட்டி, சரோஜிக்கு மிக ஆதரவாக இருக்கிறார். அவர் சரோஜியை ஏறக்குறைய தத்தெடுத்துகொள்வதைப்பார்த்தால், விசாலத்திற்கும் அவருக்கும் ஜென்மப்பகை என்பது போல தோன்றுகிறது. அப்படி எதுவும் இல்லை. அவரும் இராமநாதனும் அக்கா, தம்பி முறை - விசாலமும் அவருக்கு சொந்தப்பெண் போலத்தானாம். நிகழ்ந்து விட்ட எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, என்னவோ 'நேற்று வைத்த ரசம் கெட்டுவிட்டது," என்று சரோஜி சொன்னது போல சாதாரணமாக பூஜையறைக்குள் சென்று சரோஜி தலையில் பத்து முழம் பூவைச் சுருட்டி வைக்கிறார். பற்றாக்குறைக்கு வீட்டை வேறு அவளுக்கு எழுதி வைக்கிறார்.

7. பெரிய குடும்பங்களில் இன்றியமையாத அம்சம் - கணக்குப்பிள்ளை போன்ற இதர காரியதரிசிகள். இதில் கணக்குப்பிள்ளையின் கதாபாத்திரம் கச்சிதமாக இருக்கிறது. ஆனால், தலைவாசல் விஜய்யின் கதாபாத்திரம் ஒட்டவேயில்லை. எல்லோரையும் போல் அவரும் சரோஜியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். நல்ல குணம் படைத்த விசாலத்திற்கு ஆதரவாக யாராவது இருக்கிறார்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய்விட்டுத் தேடினாலும் யாரும் அகப்பட மாட்டேனென்கிறார்கள்.

8. மெய்யம்மை ஆச்சியின் வீட்டில் வேலை செய்வது உமா என்று ஒரு சிறுமி. படத்தின் தொடக்கத்தில் 'கண்டனூர் 2005' என்று கொட்டை எழுத்துக்களில் காட்டுகிறார்கள். எந்த ஊரில் ஜாக்கெட் இல்லாத இளங்குமரிகள் ஊரின் எல்லா மூலைகளிலும் நடமாடுகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தின் கடைசியில் மட்டும் உமா 'போனால் போகிறது' என்று திருமணமாகி நான்கு (!) குழந்தைகளுடன், ஜாக்கெட் அணிந்து வருகிறாள்.ஆ. மனதில் ஒரு அபூர்வ திருப்தி பரவுகிறது.

9. மீண்டும் இராமநாதன்-சரோஜி-விசாலம். சரோஜியின் தாயார் (படத்தில் கொஞ்சமாவது உருப்படியாக யோசிப்பவர்), தன் பெண் இப்போதைக்கு கண்டனூரை விட்டுக் கிளம்பப்போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, திடீரென்று ஒரு நாள் காணாமல் போகிறார், [கடைசி வரையில் அவர் கிடைப்பதேயில்லை. அவரும் சரோஜியும் கிணற்று மேட்டில் இது பற்றிப் போடும் சண்டை, படத்தின் யதார்த்தமான காட்சிகளில் ஒன்று.] படத்தில் அவ்வப்போது "அம்மா எங்கேன்னு தெரியலை," என்று சரோஜி முகத்தைத் தொங்க வைத்துக்கொள்வதோடு சரி. இராமநாதன் - மனைவியின்மேல் உயிரையே வைத்திருக்கும் இராமநாதன் - எப்படி கூசாமல் சரோஜியுடனும் இருக்கிறார் என்பது புரியாத புதிர்களில் ஒன்று.

10. "நான் தவறு செய்துவிட்டேன்," என்று இராமநாதன் விசாலத்திடம் புலம்பும் இடத்தில் கௌதமி - wow. அவர் கண்களில் தெரியும் வலியும், பரிதாபமும் - bravo! இபப்டிப்பட்ட நடிகைக்கு படத்தில் சரியான வாய்ப்பே இல்லை. சரோஜிக்குத் திருவாரூரில் பாட்டும் நடனமும் சொல்லித் தரும் ஆசிரியை வேலை கிடைத்தவுடன் - இதையும் படத்தில் வில்லனாகவே சித்தரிக்கப்படும் ஒருவர்தான் வாங்கித் தருகிறார் (சரோஜிக்கு நன்மையாகவே எல்லாம் நடப்பதைதான் ஜீரணிக்க முடியவில்லை) தடாலென்று 'தலைவலி, காய்ச்சல்', என்று அழுது, சொத்துக்களையெல்லாம் சரோஜியின் குழந்தைக்கு எழுதிவைத்து விட்டு, இறந்துபோகிறார். What a waste.

11. பெரிய காமெடி: அவர் இறந்த விஷயத்தை யாரும் திருவாருரில் இருக்கும் சரோஜிக்குத் தெரிவிக்கக்கூடாது என்று தடா செய்கிறார் இராம்நாதன். அதனால் விசாலம் இறந்து பதினைந்து வருடமாகியும் சரோஜிக்கு விஷயமே தெரியாதாம். ஹ¤ம். நிஜ வாழ்க்கையில் அடுத்த செகண்டே தெரிந்துவிடும். [நிஜ வாழ்க்கையில், விசாலம் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டாள் என்று கதை கட்டுவார்கள். அல்லது, இராமநாதனே மனைவியை விஷம் வைத்துக் கொன்றுவிட்டார் என்று சொல்வார்கள்.]

12. இன்னொரு மிகப்பெரும் காமெடி: சரோஜியின் நடன நிகழ்ச்சி. அவர் போட்டுக்கொண்டிருக்கும் உடையே விசித்திரமாக இருக்கிறது. நடனத்தில் திடீரெண்று பரதநாட்டியம், ஒடிஸ்ஸி, வெஸ்ட்டர்ன் நடனம் என்று கலந்துகட்டியாக தையாதக்கா என்று குதிக்கிறார். நடனம் முடிந்தபின், மெய்யம்மை ஆச்சி வந்து இராமநாதனிடம் "சரோஜியின் நடனம் அபாரமா இருந்துச்சாம். வெளிநாட்டுக்கெல்லாம் கூட்டிட்டுப் போகப்போறாங்களாம்" என்று சொல்லும்போது தியேட்டரே கொல்லென்று சிரிக்கிறது.

13. கடைசியில் சரோஜியும் இராமநாதனும், அவர்களுக்குப் பிறந்த பெண்ணும் அமோகமாய் வாழ்கிறார்கள். சுபம்.

14. Net result: பெருத்த ஏமாற்றம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் முயற்சி என்று வைத்துக்கொண்டாலும், கதாபாத்திரங்களில் அழுத்தமேயில்லை. யார் எதை, எதற்காக செய்கிறார்கள் என்று சொல்லப்படவேயில்லை. எல்லோரும் எல்லோருக்காகவும் விட்டுக்கொடுக்கீறார்கள்; மாற்றி மாற்றி அழுகிறார்கள். தவறே நடந்திருந்தாலும், "ஐய்யோ பாவம்," என்று தவறு செய்தவர்களையே தூக்கி வைத்துக்கொண்டாடுகிறார்கள். சரோஜியிடம் சென்றதற்காக இராமநாதனிடம் விசாலத்திற்கு மலையளவு ஆத்திரம் வந்திருக்க வேண்டாம்? எந்த மனைவியும் அவ்வளவு விட்டுக்கொடுப்பாள் என்பதை சுத்தமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. போட வேண்டிய சண்டைகளையெல்லாம் போட்டபிறகு மன்னிப்பு வரலாம். அதுவும் சந்தேகமே.

அப்புறம் சரோஜி. ஆரம்பத்திலிருந்து அவளது செய்கைகளையெல்லாம் பார்த்தால், she's played her cards very well. அப்பாவி போல இருந்து, அழ வேண்டிய இடங்களில் அழுது, சிரிக்க வேண்டிய இடங்களில் சிரித்து, மயக்கி ... யாரிடமெல்லாம் சொத்து வாங்க முடியுமோ வாங்கி ... இறுதியில் சந்தோஷமாக வாழ்கிறாள். மற்றவர் மனதைக் கொஞ்சமும் புண்படுத்தாத பிறவி, அற்புத நாட்டியப் பேரொளி என்று அவளை ஏற்க முடியவில்லை.

எப்பேர்ப்பட்ட கதாபத்திரங்கள். என்ன கதை. என்ன களம்.

இதோடு ஒப்பிட்டால், நேற்று பார்த்த மரிலின் மன்ரோவின் 'Seven year Itch' எப்படிப்பட்ட படம்! ஒரே ஒரு சிறிய வீட்டிற்குள், முன்று கதாபாத்திரங்களை வைத்து, ஏறக்குறை இதே கருத்துள்ள படம்தான். அதைக் கையாண்ட விதமே தனி. அற்புதமான திரைக்கதை அது. அப்புறம் மரிலின் ... SmileyCentral.com

இதையும் அதையும் ஒப்பிடுவது என்ன நியாயம் என்கிறீர்களா? ஒன்று சீரியஸ் படமென்றாலும் அபத்தக் களஞ்சியமாக இருந்து சிரிப்பை வரவழைக்கிறது; இன்னொன்று காமெடி படமாக இருந்தாலும், சமயத்தில் சீரியசாக இருந்து யோசிக்க வைக்கிறது.

சாசனம் ...?

பழையகாலத்தின் லாஜிக் அற்ற, பிழியப் பிழிய அழும் படங்கள் வரிசையின் ரசிகர் என்றால், அவசியம் பாருங்கள். யதார்த்தவாதியா? Stay away.
|