Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, June 11, 2006

இரு வேறு உலகங்கள் ...

இப்பொழுது படித்துக்கொண்டிருப்பது இமையத்தின் 'செடல்'. 'செடல்' என்றால் என்னவென்றே தெரியாமல்தான் புத்தகத்தை எடுத்தேன். ஒரு நாவலின் முதல் வார்த்தையிலிருந்து வாசகர்களை உள்ளே இழுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது எவ்வளவு நிஜமென்பதைப் படிக்கப் படிக்கப் புரிந்துகொண்டேன். செடல் ஒரு பெண்ணின் கதை. வருடக்கணக்காக மழையே இல்லாமல் பொய்த்துப்போன ஒரு கிராமத்தில், கூத்தாடுபவர்களின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை பிடுங்கியெடுத்துக் கோயிலில் நட்டு வைக்கிறார்கள் - பொட்டுக் கட்டி விட்டு.

அவள் பெயர்தான் செடல்.

செடல் வாழ்கக்கையைப் பார்க்கும் விதமே சுவாரசியமாக இருக்கிறது. அம்மா அப்பாவை விட்டு வந்துவிட்டோம் (அவர்கள் கண்டிக்கு பஞ்சம் பிழைக்கப்போகிறார்கள்) என்ற ஆதங்கம் ஒரு பக்கம், அப்புறம், 'நான் செல்லியாயிக்கு நேந்துவுட்ட புள்ள', என்ற லேசான - மிக லேசான - அலட்டல் ஒரு பக்கம் என்று, அவள் வயது ஏற ஏற உலகத்தை அவள் பார்க்கும் பார்வையும் மாறி வருகிறது.

முதன் முதலில் கிராமத்திற்கு மழை வரும் அந்தத் தருணங்கள் அற்புதம்.

இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன். பாயும் நதி போல் அருமையாக இருக்கிறது அவர் நடை. "எப்படி சார் இந்த வட்டார வழக்கை அப்படியே கொண்டு வந்தீங்க?" என்று இமையத்தைக் கேட்டால், சிரிக்கிறார். "எல்லாம் நம்ம வாழ்க்கையைத் சுத்தி நடக்கிறதுதான். என்ன பெரிய ஆராய்ச்சி?"

இமையத்தின் speciality என்று சொல்லலாம்: வெளியுலகத்தில் எது எப்படி ஆனாலும், தனக்குள்ளேயே இயங்கிக்கொள்ளும் ஒரு சிறிய உலகத்தைப் படம் பிடித்துக்காட்டுவது. 'ஆறுமுக'த்தில் அவர் தேர்ந்தெடுத்த களம்: செக்குமேடு. இந்தக் கதையில், அது ஒரு சிறிய கிராமம். வெளியே யுத்தமோ, வெள்ளமோ, பஞ்சமோ, யார் ஆள்கிறார்களொ, யார் சாகிறார்களோ, அதைப் பற்றியெல்லாம் அதிகம் பாதிக்கப்படாமல்,திருவிழா, வயல்வெளி, கூத்து, கோயில் குளம், வேப்பமரம் என்று ஒரு சிறிய இடத்திற்குள் நடக்கும் போராட்டங்கள். அப்புறம், அதிக வார்த்தைகளை வாரி இறைக்காமல், 'நறுக் நறுக்'கென்று எழுதும் விதம். அங்கே அவர் ஜெயிக்கிறார்.

பெண்களை அவர் சித்தரிக்கும் விதத்தில், 'தி. ஜா'வை நிறைய நினைவு படுத்துக்கிறார்.

கடந்த நான்கு மாத காலமாக நான் படித்து (ஓரளவு கிழித்துப்) போட்ட இன்னொரு புத்தகம், சு.ராவின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'. எடிட் செய்யப் படித்தது கொஞ்சம்; உண்மையாகவே ரசித்து ரசித்துப் படித்தது நிறைய. கொஞ்சம் கரடுமுரடாக இருக்கின்றன முதல் சில அத்தியாயங்கள். அப்புறம் போகப் போக சுளுவாகிறது. கேரளத்தைச் சேர்ந்த என் நண்பி அதைப் படித்த்விட்டு உருகிப்போய்விட்டார். இப்போதும் 'கு. பெ'ஆ'வைப் பற்றி அவரிடம் பேச ஆரம்பித்தால், கண்களில் பல்ப் மின்னும். நாவலில் வரும் 'களரிக்கல் பஜா'ரைத் தோற்றுவித்தவர் அவரது தாத்தா - அதனால், எப்போதெல்லாம் நாவலில் அந்த இடம் வருகிறதோ, அப்போதெல்லாம் பயங்கர ஆவலுடன் நான் இருக்குமிடம் தேடி வந்து, அமைதியாக உட்கார்ந்திருப்பார். அப்புறம் மெதுவாக, 'இந்த மாதிரி நான் படிச்சதேயில்லை. கோட்டயம் போயிட்டாப்புல இருக்கு," என்பார்.

எனக்கும் 'கு.பே'ஆ', பிடித்திருக்கிறது. எஸ்.ஆர்.எஸ் மனதில் கம்பீரமாக நிற்கிறார். It's a saga. அந்த முறையில் அதன் நுணுக்கங்களை ரசிக்க முடிகிறது. என்றாலும் ... கொஞ்சம் அங்கங்கே வார்த்தைகள் ஏராளமாக தேங்கி நிற்கின்றன.

'ஜே. ஜே', சில குறிப்புக்களில், சு,ரா'என்னும் மனிதரின் எண்ணங்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே அள்ளித் தெளிக்கப்பட்டிருந்ததாக எனக்குத் தோன்றும். 'அட, இவ்வளவு யோசிக்கும் திறன் பெற்றவனா நான்?' என்று தன்னைத் தானே வியந்துகொள்ளும் தன்மை தூக்கலாக இருந்தது. 'கு. பெ.ஆ' அப்படி இல்லை. It is unselfconscious. கோட்டயம் பச்சைப் பசேலென்று மழைக்காற்றுடன், கேரளத்து வாசனையுடன் கண் முன்னால் வந்து நிற்கிறது. திருநக்கரை கோயிலின் மணிகள் காதில் ஒலிக்கின்றன. ஆனந்தமும், கௌரியும், லக்ஷ்மியும் உயிர்ப்புடன் நடமாடுகிறார்கள்.

எனக்கு மிகப் பிடித்த இடம்: லக்ஷ்மி, தன் தங்கை கோமதிக்குக் கடிதமெழுதும் பகுதி: "...ஒதுங்கிப் போகாதே, தனியாக அறைக்குள் உட்கார்ந்துகொண்டு உனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருக்காதே. தனியாக இருக்க முடிகிறவர்களை மற்றவர்களுக்குப் பிடிக்காது."

I'm not quoting it verbatim. நினைவில் இருப்பதை எழுதியிருக்கிறேன். படித்த போது, 'எவ்வளவு உண்மை?' என்று தோன்றியது. 'எனக்குத் தனியாக இருக்க ரொம்பப் பிடிக்கும்,' என்று சொல்லும் எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவர்களால் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடிந்ததில்லை. அருகிலிருக்கும் நம்மை அரிக்கத் தொடங்கி விடுவார்கள். வேண்டுமென்றே வம்புக்கிழுப்பார்கள். 'என்னால் தனியாக இருக்க முடியவில்லை. நீ மட்டும் இருக்க விடுவேனா?' என்று கண்களாலேயே அதட்டுவார்கள்.

தனியாக இருக்க முடிவது ஒரு கலைதான். செடல் கூட, ஒரு கட்டத்தில் தனியாக இருப்பதை விரும்புகிறாள். ஆயிரம் பேர் அவளைச் சுற்றிக் குழுமிக்கொண்டே இருக்கின்றனர். அவள்தான் சுற்றுப்பட்டுக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். கோயில் காரியங்களைக் கவனிக்க வேண்டும். பூஜை செய்ய வேண்டும். விளக்கேற்ற வேண்டும். இன்னாரையும் அன்னாரையும் கௌரவித்து, அதே சமயம் தனக்கும் எந்த தீங்கும் நேராமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வப்போது யாராவது கண்ட இடத்தில் கை வைத்தால், நாசூகாக சிரித்துக்கொண்டு நழுவத் தெரியவேண்டும். வேண்டாமென்றால் தள்ளியிருக்கவும், வேண்டுமென்றால் சிரித்துகொண்டிருக்கவும் தெரிய வேண்டும். அவளுக்குத் தெரிகிறது.

உண்மையில், செடல்தான் தனிமைக் கலையை அதிகம் கற்றிருக்கிறாள் போல. She is her own self.

அவளுடன் நானும் கொஞ்சம் நிலா வெளிச்சத்தில் உறங்கும் ஊரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.
|