Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, October 14, 2004

கொலுவிருத்தல்...

நவராத்திரி ஆரம்பம். இன்று கிரகணமோ என்னமோ வந்துவிட்டதால், இன்று பூஜை கிடையாதாம் (அதனால் இந்த வருடம் 'அஷ்ட ராத்திரி'தான் என்கிறார்கள் :-). இருந்தாலும், நவராத்திரி களை எங்கள் வீட்டுப் பக்கத்தில் நன்கு 'கட்டி'விட்டது.:-) பட்டுப்புடவை சரசரக்கப் பெண்கள், பொம்மையும் கையுமாக வீட்டுக்கும் வாசலுக்கும் குழந்தைகள். இப்பொழுதெல்லாம் மாறு வேடம் போட்டுவிட்டு, குழந்தைகளை சுண்டல் வாங்க அனுப்புகிறார்களா என்று தெரியவில்லை. நான் போயிருக்கிறேன். ஒரு நாள் ராதை, ஒரு நாள் மீரா, இன்னொரு நாள் வேறு ஏதோ. வீட்டிலிருக்கும் ஊசி, பாசி, எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு, ராஜஸ்தானி ஸ்டைலில் அலங்காரம் செய்துகொண்டு, என்னில் பாதி உயரம் இருக்கும் கூடை ஒன்றை (பத்து பன்னிரண்டு வீடுகளில் கிடைக்கும் சுண்டலுக்காக) தூக்கிக் கொண்டு, நண்பிகளோடு அலைந்திருக்கிறேன். ரோட்டில் போவோரும் வருவோரும் கண்களை விரித்துகொண்டு செல்வார்கள். சிலர் அருகில் வந்து தொட்டுப் பார்ப்பார்கள். படு ஜாலியாக இருக்கும். அப்போதே மாறுவேடமெல்லாம் அரிதாகிவிட்டது. அப்புறம் கொள்ளையடிக்கச் செல்லும் கும்பல் போல, 'நான்கைந்து பேர் மாறு வேடமணிந்தால்தான் சரிப்பட்டு வரும்' என்று கூட்டம் கூட்டமாக சுண்டல் வாங்கப் படையெடுத்ததும் உண்டு.

நாளையிலிருந்து வரிசையாக அழைப்புக்கள் வர ஆரம்பிக்கும். எங்கள் குடியிருப்பிலேயே கொலு வைக்கும் குடும்பங்கள் பல. அத்தனை பேர் வீட்டிலும் தவறாமல் எதையாவது பாட வேண்டி வரும் (ஒரு முறை, 'சாமி பாட்டுத்தானே பாடணும்?' என்று விட்டேத்தியாகக் கேட்டுவிட்டு, 'When Jesus came to us...'என்று பள்ளியில் சொல்லிக்கொடுத்த எதையோ பாடிய நினைவு இருக்கிறது. வீட்டிலுள்ள அத்தனை பேரும் சிரியோ சிரி என்று சிரித்துவிட்டு, ஒரு பக்கெட் (பக்கெட்தாங்க) சுண்டல் கொடுத்து அனுப்பிவைத்தார்கள்.:-).

நவராத்திரிக்குப் பொருத்தமாக 'நவராத்திரி' படம். 'அஸ்வபதி பூஊஊத்ரி,' என்று சாவித்திரி இழுக்கும் அழகுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்புறம் சி.ஐ.டியாக வேடமிட்டுக்கொண்டு இரவு சிவாஜி வீட்டில் தங்க நேரிட, படுக்கையில் கிடக்கும் ஒரு புத்தகத்தை ஆசையாகப் பிரித்துவிட்டு, 'ஓடிப்போனவள். சே!' என்பாரே...:-)

நவ ராத்திரியும் நவ நவமான அனுபவங்கள் அடைகிறார் என்பதெல்லாம் சரி. சினிமா என்பது சரியாகத்தான் இருக்கிறது.:-). இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் நடந்தால்...? Horrifying.


|