Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, January 29, 2006

மீண்டும் ஒரு 'KATHA'


KATHA ASIA INTERNATIONAL UTSAV 2006 இந்த வருடம் இனிதே நிறைவடைந்து முடிந்தது. தில்லி குளிர் வெளியே சுரீரென்று உறைத்தாலும், நாங்கள் இந்தியா ஹாபிடாட் செண்டருக்குள் இருந்ததால் அநேகமாக அதிலிருந்து தப்பிவிட்டோம்.

திரும்பிய பக்கமெல்லாம் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள். பத்திரிகை ஆசிரியர்கள். கவிஞர்கள். ஓவியர்கள். பல நாடுகளிலிருந்து, பல முகங்கள். எங்கு திரும்பினாலும் புன்னகைகள். பல வித்தியாசமான அனுபவங்கள், சந்திப்புகள். முகவரி பரிமாற்றங்கள்.

ஜனவரி ஆறாம் தேதியிலிருந்து பதினொன்றாம் தேதி வரை நடைபெற்ற இந்த இலக்கிய உற்சவத்தில் நான் கண்டதும், கேட்டதும் நிறைய. ஒவ்வொரு முறையும் 'கதா'வில் ஒரு குறிப்பிட்ட கருவை மனதில் வைத்துக்கொண்டு, அதைச் சுற்றி உற்சவ இழைகள் பின்னப்படும். இந்த முறை நாங்கள் எடுத்துக்கொண்ட கரு, 'நகர வாழ்க்கை - மாறுபட்ட கோணங்களும் பரிமாணங்களும்.' இத்தனை விதமாக ஒரு நகரத்தை - அது எந்த நகரமோ, சென்னையோ, தில்லியோ, பாக்தாத்தோ, லண்டனோ - பார்க்க முடியும், இத்தனை விதமாக ஒரு நகரத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பதையே நான் முதன் முதலாக இங்கு கண்டேன்.

'என் எழுத்தை நகரம் எப்படியெல்லாம் உருவாக்கியது?' என்பதில் ஆரம்பித்து, 'நகரம் என்னை எப்படியெல்லாம் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிற்று' என்பது வரை பலர் விதம் விதமாகப் பேசினார்கள். முடிந்தவரை அவற்றை பதிவு செய்துகொண்டேன். விரைவில் அவற்றை எல்லாம் எழுத்து வடிவமாக்கி, அத்துடன் என் நகரப் பரிச்சயத்தையும் - தில்லி மூலமாக - கலந்து எழுதலாம் என்றிருக்கிறேன்.

ஆகவே, விரைவில் ... மீண்டும் ஒரு பயணக் கட்டுரை - இந்த முறை, தில்லியின் 'கதா'வைச் சுற்றி.
|