Shangri - La

Anything under the sun - in Thamizh!

Monday, June 21, 2004

போரும் அமைதியும்

"இறந்தவர்கள் மட்டுமே போரின் முடிவைக் காண்கிறார்கள்."


அசோகச் சக்கரவர்த்தி. வாழ்ந்த வருடம் : c.299 BC - 237. சந்திர குப்த மவுரியரின் பேரன். போர் வெறி பிடித்தவர். மகத நாட்டின் எல்லைகளை விஸ்தீரணம் செய்துகொண்டே வந்தவர். கலிங்க நாட்டை இரத்தக் களறியில் வென்றவர். மனம் மாறியவர். புத்தமதத்தைத் தழுவி, 'தர்ம அசோகா' என்ற பெயரைப் பெற்றவர். அப்புறம் மரம் நட்டார், குளம் வெட்டினார், ஸ்தூபி எழுப்பினார், புத்த மதத்தின் நெறிகள் வாயிலாக அன்பையும் அமைதியையும் பரப்பினார், உலகப்புகழ் பெற்றார்.....

இன்றைக்கு எல்லாருக்கும் சர்வசாதாரணமாகத் தெரிந்திருக்கும் விஷயங்கள் இவை. 88 வருடங்களுக்கு முன்பு வரை, இது எதுவுமே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றால், நம்ப முடிகிறதா? 1835இல்தான் 'Devanampriya Piyadasi' என்ற பெயரில் ஒரு அரசன் ஆண்டதற்குரிய ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் (கண்டுபிடித்தவர் James Prinsep என்னும் ஆங்கிலேயர்.). அப்போதுகூட, 'இது அசோகராக இருக்கலாம்' என்று யாருக்கும் தோன்றவில்லை. எத்தனையோ அரசர்கள், தங்களைத் தாங்களே 'இந்திரன்', 'சந்திரன்' என்று புகழ்ந்து வெட்டிக்கொண்ட கல்வெட்டுக்களைப் போன்றவைதான் இவையும் என்று நினைத்திருக்கிறார்கள். யாரும் இவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

1915ஆம் வருடத்தில், இந்த 'தேவனாம்ப்ரிய' அரசனும் அசோகரும் ஒருவரே' என்னும் விஷயம் மெதுவாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஏறக்குறைய 1700 வருடங்கள் ஆகியிருக்கின்றன - ஒரு சக்கரவர்த்தி வெளிச்சத்திற்கு வர.

இந்தியாவை ஆண்ட ஒரு மிகப்பெரிய அரசரைப் பற்றிக் கிடைக்கும் தகவல்கள் கொஞ்சம்தான். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தது? என்னவிதமான ரசனைகள் அவருக்குண்டு? உண்மையிலேயே இரத்தவெறி பிடித்துத்தான் அலைந்தாரா? கலைகளில் விருப்பம் உண்டா? நெருக்கமான நண்பர்கள் யார்? இரத்தவெறி பிடித்தவர் என்பது உண்மையானால், கலிங்க நாட்டைக் கைப்பற்றும் யுத்தத்தின்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்? எப்படி திடீரென்று அமைதியை நோக்கித் திரும்பினார்?

சில நாட்களுக்கு முன்னால், 'சாம்ராட் அசோகா' படம் பார்த்தேன். அந்தப் படத்தில், அசோகரின் வாழ்க்கையில் இருண்டு கிடக்கும் சில விஷயங்களை தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார்கள்.

Indiatimes.com
முதலிலேயே என்னைக் கவர்ந்தது - படத்தை எடுத்திருந்த நேர்த்தி. ஒவ்வொரு காட்சியும் நுணுக்கமாக வரையப்பட்ட ஓவியம்போல் ஜொலிக்கிறது. பச்சைப் பசேல் என்று சோலையும் மலையும் காடும் தண்ணீருமாக கலக்கியிருக்கிறார்கள். லொக்கேஷனுக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். [சிமெண்ட்டும் செங்கல்லும் பெயிண்டும் சூழ்ந்த நகரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்தால், எதுவும் நன்றாகத்தான் இருக்கும்.].

கதை...? அதைக் கொஞ்சம் அங்கே இங்கே எடுத்து, கோர்த்து, ஒட்ட வைத்து...அரசன் என்றால் காதல் என்று ஏதாவது இல்லாமல் போகுமா? அதுவும் மகத நாட்டின் சக்கரவர்த்திக்கு? அதனால் கவுர்வகி என்னும் கலிங்க இளவரசியைப் புகுத்தி, அசோகரின் மனமாற்றத்திற்குக் காதலியும் காரணம் என்று கொண்டு வந்து...


'சாம்ராட் அசோகா'வைப் பார்த்த பிறகு, சில புகைப்படங்கள் மனதில் நின்றுவிடுவதுபோல், காட்சிகள் அங்கங்கு பதிந்துகொண்டன.

1. அசோகனும், அவனது சகோதரன் சுஷீமும் மோதிக்கொள்ளும் காட்சிகள். தன்னுடைய பலத்தை நன்கு உணர்ந்தவனாக, எப்போதும் லேசான ஆணவத்துடனேயே இளவரசன் நடந்துகொள்ளும் விதம்...

2. இளவரசன் அசோகன், சகோதரச் சண்டைக்கும் சிம்மாசனப்போட்டிக்கும் பயப்படும் அம்மா தர்மாவால், நாட்டைவிட்டு அனுப்பப்படுகிறான். 'பவன்' என்னும் பெயரில் அவன் தன் பயணத்தை ஆரம்பிக்க, முதன்முதலாக அவன் காட்டில் கவுர்வகியை (கரீனா கபூர்) சந்திக்கும் காட்சி. ஒரே தண்ணீர் மயம். 'சில்'லென்ற அனுபவம்.

3. படத்தின் முதல்பாதி முழுவதும் காதல், காதல், காதல். தண்ணீர். மேகம், மலை, காடு. பார்க்க அழகாக, மிக அழகாக இருக்கிறது. கவுர்வகியும் அட்டகாசமான, அலட்டல் இளவரசியாக, ஒரு நிமிடம் கோபம் காட்டி, மறுநிமிடம் கள்ளப் பார்வை பார்த்து...பின்னுகிறார். அதோடு சரி. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, 'காதலைத் தவிர வேறு எதையாவது காட்ட மாட்டார்களா?" என்று ஏங்க வைத்துவிடுகிறார்கள்.

4. நடுவில் ஒரு சண்டைக் காட்சி வந்து ஏக்கத்திற்கு விடை கொடுக்கிறது. கவுர்வகியையும், கலிங்க இளவரசன் ஆர்யாவையும் காப்பாற்ற 'பவன்' கத்திச் சண்டையிடும் காட்சி. அழகான நாட்டியம் பார்ப்பதுபோல், மிக நளினமாக இருக்கிறது.

5. பவன் மீண்டும் மகதநாடு செல்ல, 'அவன் திரும்பி வருவான்' என்று ஏங்குகிறார்கள் கலிங்க இளவரசியும் இளவரசனும். ஒன்றே ஒன்றுதான் நம்ப முடியாமல் இருக்கிறது: நாட்டைவிட்டு ஓடி ஒளிந்து காடு மலைகளில் வாழும் கவுர்வகி, ஆர்யா - ஏறக்குறைய தன்னுடைய உயிரையே பணயம் வைத்து அவர்களை ஒவ்வொரு முறையும் காப்பாற்றும் சேனாதிபதியிடம் சொல்லாமல் கொள்ளாமல் பவனைத் தேடிப் போகிறார்கள். [ஆ, லாஜிக்.]. அப்புறம் திடீரென்று அவனுடன் சேர்ந்தும் கொள்கிறார்கள். [எடிட்டிங்?]

6. இந்தக் காட்டு அலைச்சல் காட்சிகள், பனி சூழ்ந்த மரங்கள், எல்லாம் 'Braveheart' படத்தை நிறைய நினைவுபடுத்துகின்றன.

7. ஊர் ஊராக இளவரசன் அசோகனைத் துரத்தோ துரத்தென்று துரத்தி மல்லுக்கு நிற்கும் 'விராத்' என்ற வீரன், அவன் உண்மையில் யார், அவனது பின்புலம் என்ன என்பது புரிந்தவுடன், நெருங்கிய நண்பனாகும் காட்சிகள். 'கலிங்கப் போர்' என்னும் பெயரில் அட்டூழியங்கள் நடக்கும்போது, அசோகனைத் தடுத்து நிறுத்த முயலும் அவனது தைரியம்.

8. ஷா ரூக் கான். 'இளவரசன் அசோக'னாக தன்னைக் காண்பித்துக்கொள்ள முயன்றாலும், ஷா ரூக் என்னும் நடிகர் அதிகம் வெளிப்படுகிறார். இருந்தாலும், எக்கச்சக்கமாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அவருக்காகவே எத்த்த்த்த்...தனை முறை வேண்டுமானாலும் படத்தைப் பார்க்கலாம்.:-))))))

9. இறுதியாக நடக்கும் கலிங்கப் போர், அழகாக வடிவமைக்கபட்ட நடனம் ஒன்றைத் தண்ணீருக்கடியில் பார்ப்பதுபோல் இருக்கிறது [கரீனா கபூர், கலிங்கநாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் போருக்கு அணிந்துகொண்டு வருவது என்ன மாதிரியான உடை? நேராக fashion showவிலிருந்து இறங்கிவந்த மாதிரி இருக்கிறார். இந்த உடையில் சண்டை போட்டால்...]. உஷ்ணமும், ஆக்ரோஷமும், வீராவேசத்தையும் இன்னும் கொஞ்சம் புகுத்தியிருக்கலாம். ஒவ்வொருவரும் வாளை சுழற்றும்போது "வேகமா சுத்துங்கப்பா!" என்று கத்த வேண்டும்போல இருக்கிறது. குட்டி இளவரசன் ஆர்யாவைக் கடைசியில் சாகடித்துவிட்டார்கள். ப்ச்.

10. எவ்வளவு லாஜிக் உதைத்தாலும், 'இது சரி, அது சரியில்லை' என்றெல்லாம் அங்கங்கு தோன்றினாலும்...எம்ஜியார் படங்களைப் போல், இன்னும் இரண்டு மூன்று முறையாவது பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.

நீதி: படம் பிடித்துவிட்டால், லாஜிக்காவது, கத்தரிக்காயாவது?

|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home