Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, August 25, 2004

கருவூர்க் கதை

நான்கு நாட்களாக கரூர் விஜயம். சென்னையின் குழப்படியான 'என் சமையலறையில் இன்று வெய்யிலா, மழையா?' சூழலிலிருந்து, கரூரும் திருச்சியும் வேறுபட்டிருந்தன.

நாள்கணக்காகப் ப்ளான் செய்து மேற்கொள்கிற பயணங்களை விட, "போகலாமா? போகலாம்," என்று கிளம்பும் தடாலடிப் பயணங்கள்தான் அதிக வெற்றியடைகின்றன என்பது என் தீர்மானமான முடிவு. இந்த பயணமும் அப்படித்தான் அமைந்தது. திரும்பிப் பார்ப்பதற்குள் ட்ரெயின் ஏறி, கோயில் பார்த்து, காவேரி ரசித்து...சிங்காரச் சென்னை திரும்பியாகிவிட்டது.

கரூரின் தான்தோன்றிப் பெருமாள் கோயில் நிறைய மாறிவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு தான்தோன்றி மலையில் கணக்கு வழக்கில்லாமல் ஏறி இறங்கியிருக்கிறேன். இப்போது மலையைச் சுற்றி கடைகள் வந்துவிட்டன. வேலிகள் போட்டுத் தடுத்துவிட்டார்கள். கலர் கலராக பெயிண்ட் அடித்து, கடவுளே பளபளவென்று இருக்கிறார். இருந்தாலும், சொந்த வீட்டிற்குள் நுழையும் அந்நியோன்யம் இருக்கத்தான் செய்கிறது. [கல்வெட்டு, ஆராய்ச்சி என்று மூளையே திசை திரும்பிவிட்டதால், சன்னதிக்கு வெளியே அரை குறையாக செதுக்கப்பட்டிருந்த துவாரபாலகர்களைப் பார்த்துவிட்டு, 'இந்தக் கோயில் எந்தக் காலத்தில் குடையப்பட்டிருக்கும்' என்று ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். ]

நாங்கள் சென்ற வேளை முகூர்த்த வேளை. எல்லாப் பக்கமும் விதம் விதமாகப் பட்டுப் புடவைகளும் வேட்டிகளும் சரசரக்க திருமண ஜோடிகள். மாப்பிள்ளைகள் மிதப்பாக 'சூரியனை விலைக்கு வாங்கலாமா?' ரேஞ்சில் வானத்தை சீரியஸாக நோக்கிக்கொண்டிருக்க, கல்யாணப் பெண்கள் அத்தனை பேரும் நீள நீளமாக முதுகில் தொங்கும் மட்டைப் பின்னலோடு, திருதிருவென்று முழித்துக்கொண்டு தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுற்றிலும் உறவினர் கூட்டம்.

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பாதை...தேவலோகத்திற்குச் செல்லும் பாதை என்று ஒன்று இருந்தால், அது இதுவாகத்தான் இருக்க வேண்டும். உறைந்து போன சென்னையின் கான்கிரீட் சுவாசத்தை மறக்க, இந்த 75 கி.மீட்டர்கள் பயணம் செய்தால் போதும். [இந்தப் பிறவியில் இந்தப் பகுதிதான் என் சொந்த ஊராக அமைய வேண்டும் என்று நான் வரம் வாங்கிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதுதான் இழுக்...கிறது.]

சிவசங்கரியின் 'பாலங்கள்' நாவலில் ஒரு வரி வரும். 'ஊரிலிருந்து சற்றுத் தள்ளி, தென்னந்தோப்பைத் தாண்டினால், ஜலஜலவென்று சிருங்காரமாய் ஓடும் காவேரி...". சிருங்காரமாய். எவ்வளவு அழகான வார்த்தை. எதனாலோ இந்த வரிகள் மனதில் அப்படியே பதிந்து விட்டன. காவேரியின் பரந்து விரிந்த, பாதம் எரிந்துபோகும் வெப்பமான மணற்பரப்பைப் பார்க்கும் போதெல்லாம், "சிருங்காரமாக ஓடும் காவேரி எங்கே?" என்று தோன்றும்.

இந்த முறை அந்தக் குறையும் தீர்ந்தது. சலசலத்துக்கொண்டு ஓடும் ஆறுகளைப் பார்த்து எவ்வளவு நாளாகிறது. ஒரு பக்கம் காவேரி, ஒன்னொரு பக்கம், இடது புறத்தில், தென்னந்தோப்பிற்கும் வாழைத் தோட்டங்களுக்கும் இடையே சுழித்துக் கொண்டு ஓடும் 'தென்கரை வாய்க்கால்' [கொசுறுத் தகவல்: 59000 ஏக்கர் பாசனமாம்.]. தண்ணீர் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! பவுர்ணமி நிலவில் கடலைப் பார்ப்பது போல், சில விஷயங்கள் அலுப்பதே இல்லை. மேலிருந்து சூரிய வெளிச்சம் பொட்டுப் பொட்டாக தரையில் சிதறிக் கிடக்க, சிலு சிலுவென்று காற்று அடிக்க, என்னைச் சுற்றி தண்ணீர் மயம். சின்னஞ்சிறிய படித்துறைகளில், புதிதாக வந்துவிட்ட தண்ணீரில் எல்லோரும் மணிக்கணக்காக ஊறித் திளைத்துக்கொண்டிருந்தார்கள்.

லாலாப்பேட்டை லெவல் க்ராஸ்ஸிங் அருகில் வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றபோது, மோர் விற்பனையாளர் காரைப் பற்கள் தெரிய புன்னகைத்தார். தனக்குப் பின்னால் தளும்பிக்கொண்டு சென்ற வாய்க்கால் நீரை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு,

"இந்த மாதிரி வந்து எவ்வளவு நாளாச்சுங்க? இதைப் பாத்துக்கிட்டே இருந்தா போதும்னு தோணல?" என்றார். தோன்றியது.

"·போட்டோ புடிச்சுக்குங்க," என்றார் மீண்டும்.

எடுத்தேன். ஆனால் கறுப்பு டப்பாவுக்குள் அடைக்க முடிகிற விஷயமா இது? :-)

********



பி.கு: எனக்கும் தொடர்களுக்கும் ராசி இல்லையோ என்று தோன்றுகிறது. அது என்னவோ தெரியவில்லை. ஒன்று , இரண்டு என்று வரிசைப்படுத்த ஆரம்பித்துவிட்டால், விரல்கள் விசைப்பலகையின் மேல் ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. பிரேக் போட்டதுபோல், மனம் 'ஐயோ, இன்னும் எத்தனை?' என்கிறது. நவீன எழுத்தாளர்கள் எழுத்து பற்றிப் பக்கம் பக்கமாக 'மேசைக் கரண்டி,' 'செட் தோசை' போன்ற அற்புத இலக்கிய சிறுபத்திரிகைகளில் கிறுக்கித் தள்ளியிருப்பதையெல்லாம் படித்துவிட்டு, மனதை இரும்பாக்கிக் கொண்டு 'கல் சொன்ன கதை'யைத் தொடர்கிறேன். இனி தொடரல்லாத தொடர்கள் எழுதுவதாக உத்தேசம். [எழுத்துலகில் புதிய/பழைய புதிய/புதிய பழைய உத்தி!]

பி.பி.கு: அது சரி...'செட் தோசை' என்றெல்லாம் இன்னும் சிறு பத்திரிகை வரவில்லைதானே?

பி.பி.பி.கு: சமீபத்தில் 'நறுமுகை' என்று ஒரு தக்கணூண்டு பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு கிராமீய கதைத் தொகுப்பை ஒருவர் விமர்சனம் செய்து எழுதியிருந்தார். அந்தத் தலைப்பு...ஆகா, என்ன தலைப்பு. இது மாதிரி தலைப்பு வைக்க இனி யாராவது பிறந்துதான் வர வேண்டும். இதுவல்லவோ 'தலைப்பு இலக்கியம்' என்று வெகு நேரம் வியப்பில் ஆழ்ந்து, அமிழ்ந்து, வாயடைத்துப் போய்...புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.
|

6 Comments:

  • At 10:02 PM, Blogger ILA (a) இளா said…

    I think u can write continously, having a very good skill. expecting a lot from u

     
  • At 3:22 PM, Blogger அன்பு said…

    எழுத்தோட்டம் நன்றாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள் (அதைத்தானடா செஞ்சுண்டுருக்கேன்-றீங்களா... அப்படிலாம் சொல்லப்படாது, நாங்க தோணுறத சொல்றதுக்குதான இந்தக் கமெண்ட் பொட்டி :)

    அப்படியென்ன கரூர்-திருச்சி பாதைல இருக்குது - போய் ரொம்ப நாளாச்சு. அப்புறம் என்ன வீட்டுக்கு புதுசா வண்ணம் பூசுணீங்களா? நல்லாருக்குது.

     
  • At 3:24 PM, Blogger அன்பு said…

    அப்புறம், அந்தக் கருப்பு பெட்டியில் பிடித்தவரை இங்கு வலையேற்றலாம்தானே!?

     
  • At 8:58 AM, Blogger அன்பு said…

    பவித்ரா,

    உங்களுடைய 'கருவூர்க் கதை'-யின் தொடுப்பை திருச்சியில் பிறந்து கரூரில் வசிக்கும் (தற்போது என்னுடன் இங்கு சிங்கையில்) எனது கல்லூரி நண்பணுக்கு அனுப்பியிருந்தேன் அவனுடைய மறுமொழி:

    Anbu,

    Thanks for giving me a chance to brush up the sweet memories.

    Still Karur-Erode road is my all time favourite.

    Early morning bus ride via "Kodumudi - pachai pasel nel vayal - Thanneer vazhindu odum kinaru,  ilangkalai sooriyan, sillendru veesum kattru,  private bus-il favourite song" 

    Indha sugam inimel kidaikkuma? 

    Bye
    Ram

     
  • At 11:17 AM, Blogger Pavithra Srinivasan said…

    ILA - I keep writing as and when I can :-)

     
  • At 11:21 AM, Blogger Pavithra Srinivasan said…

    அன்பு - உங்கள் நண்பருக்கு ஒரு 'ஆட்டோகிரா·ப்' அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி. :-)அந்தச் சாலையில் பயணம் செய்தவர்களுக்கு அது ஒரு அற்புத அனுபவம்தான். கருப்பு டப்பாவில் பதிவு செய்ததையெல்லாம் கூடிய சீக்கிரம் வலைப்பதிவில் ஏற்றுகிறேன். :-)

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home