Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, June 25, 2004

வார்த்தை ஜாலம்

Warning:Rant.

வழக்கில் இருக்கும் சில உப்பு சப்பற்ற வாசகங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

**********


வெற்று வாசகம் 1:"...எனக்கு புக்கு படிக்க எல்லாம் நேரமேயில்லை. பயங்கர பிசி. "

அர்த்தம்: வேறு வேலையில்லாதவர்கள்தான் இதெல்லாம் செய்வார்கள். நான் அப்படி இல்லை. [ஆழமான அர்த்தம்: 'சீ, சீ, இந்தப் பழம் புளிக்கும்.']

வெற்று வாசகம் 2: "நான் கூட நிறைய கதை, கவிதையெல்லாம் எழுதுவேன். இப்ப எல்லாம் விட்டுப்போச்சு."

அர்த்தம்: கதையும் கவிதையும் எழுதுவது பெரிய விஷயமா? உனக்கு/உங்களுக்கு நான் எந்த விததிலும் குறைந்தவளில்லை/வனில்லை. [ஆழமான அர்த்தம்: பெயரை நினைவில் வைத்துக்கொள்ளவும். என்றைக்காவது பிரபலமாகித் தொலைத்தால், 'அப்பவே எனக்குத் தெரியும்," என்று அடித்துச் சொல்ல உதவும்.]

வெ.வா. 3: "...நான் யார்கிட்டயும் எந்த உதவியும் எப்பவும் கேட்டதில்லை. எனக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது, தெரியுமா?"

அர்த்தம்: அடிக்கடி 'உதவி' கேட்பேன். மறுத்தால், தொலைந்தாய்.

வெ. வா. 4: "உனக்கு மட்டும்தான் இந்த விஷயம் தெரியும். உன்னளவுக்கு வேற யாரையும் என்னால நம்ப முடியலை. சொல்லிறாதே, என்ன?"

அர்த்தம்: உலகத்திற்கே இந்த 'ரகசியம்' தெரியும். இருந்தாலும் உன்னைக் கரைக்க இதுதான் வழி. நீ பதிலுக்கு எதையாவது உளறி வைக்க மாட்டாயா?

வெ.வா 5: "யார் மனசையும் நான் புண்படுத்தமாட்டேங்க. அந்த வழக்கம் எனக்கில்ல. நான் அவ்வளவு 'சீப்'பான ஆள் கெடையாது."

அர்த்தம்: அப்படித்தான் புண்படுத்துவேன். மன உணர்வுகளாவது, மண்ணாங்கட்டியாவது? உன்னால் முடிந்தால், என்னைத் திருப்பி அடி. என்னை எதிர்த்துப் பேசு. சாக்கடைக்குள் இறங்கு. [ஆழமான அர்த்தம்: 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்.']

வெ. வா. 6: (எதைப் பற்றிக் கேட்டாலும்) - "எனக்கு ஒண்ணுமே தெரியாது. பயங்கர மக்கு..."

அர்த்தம்: எனக்குத் தெரியாத விஷயம் இல்லை. என்ன செய்ய? மரியாதைக்காகவாவது இந்த மாதிரி அவ்வபோது சொல்லவேண்டியிருக்கிறது. யாராவது 'உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்பதற்கு முன்னால், முந்திக்கொண்டு நானே சொல்லிவிடுகிறேன்.

வெ. வா. 7: "இப்பல்லாம் எங்க வீட்டுக்கு ஏன் வர்றதே இல்லை? ஹவுஸ் அரெஸ்ட்டா?"

அர்த்தம்: சும்மா கேட்டு வைத்தேன். வந்து நிற்க வேண்டாம்.

வெ. வா. 8: "எதிலையும் நடு நிலைமை வேணும் சார். நான் ரொம்ப நேர்மையான ஆள். யார் சார்புலையும் பேச மாட்டேன்."

அர்த்தம்: சமயத்திற்கேற்ற மாதிரி சம்பவங்களைத் திரிப்பேன். எனக்குச் சாதகமான முறையில் மாற்றிக்கொள்வேன். உன்னால் அது முடியவில்லை என்றால், அது உன் கையாலாகத்தனத்தைக் காட்டுகிறது.

வெ. வா. 9: (மூச்சுக்கு முன்னூறு முறை) - "இந்தியா/தமிழ்நாட்டுல இருக்கறவங்களுக்கெல்லாம் சொந்த மொழியே/தமிழே மறந்து போச்சு சார். எல்லாபக்கமும் இங்கிலிஷ். ஊரே கெட்டுப் போச்சு. என்ன ஆவுறது நம்ம பண்பாடும், கலாச்சாரமும்?

அர்த்தம்: நான் குற்ற உணர்வில் செத்துக்கொண்டிருக்கிறேன். 'பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மற்றவர்கள் காப்பாற்றட்டும்' என்று நான் சுகமாக வெளியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனக்கு நாடு திரும்பும் எண்ணமேயில்லை. ஒவ்வொரு முறை 'இந்தியா/என் தாய்நாடு' பற்றிப் பேச்சு வரும்போதும் 'நான் அங்கே இல்லை,' என்ற எண்ணம் உறுத்துகிறது. கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக்கொண்டே இருந்தால் போதாதோ?

உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home