Shangri - La

Anything under the sun - in Thamizh!

Monday, July 05, 2004

ஹரி பட்டர் புராணம் - மூன்றாம் பட(ல)ம்

வந்த நாள் முதல், இந்த நாள் வரை...பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று தவியாய்த் தவித்து, வெப்பத்தில் வெந்து, பாகாக உருகி...இன்று 'Harry Potter and the Prisoner of Azkaban' படத்தை வெற்றிகரமாகப் பார்த்து முடித்துவிட்டேன்.

எச்சரிக்கை: 'ஹாரி பட்டரில் என்ன இருக்கு? 'இதெல்லாம் ஒரு கதையா?' 'குட்டிப் பசங்க புக்கு,' ' நாங்க இதெல்லாம் படிக்க/பாக்க மாட்டோம்' என்று அலட்...சொல்பவர்கள் - இப்படியே நடையைக் கட்டிவிடலாம். You are hereby warned.

மூன்று விஷயங்களை, 'இழந்து பெற்றால்தான் இனிக்கும்' என்பார்கள். செல்வம். தூக்கம். ஆரோக்கியம். இவையெல்லாவற்றையும் அனுபவிக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட, அவற்றை இழந்து, 'இனிமேல் கிடைக்காதோ?' என்று கவலைப்பட்டு, திடீரென்று கிடைத்தால்...பம்பர் லாட்டரிதான். இந்தப் படமும் அப்படிதான் எனக்கு அமைந்தது. 'நமக்கு தியேட்டரில் பார்க்கும் கொடுப்பினை இல்லை, கம்ப்யூட்டர் திரைதான்,' என்று சமாதானப் படுத்திக்கொள்ளும் வேளையில் கிடைத்த வாய்ப்பு.

இதுவரை வெளியான அத்தனை HP புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். முதலிரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன். முன்றாவது படத்தில் சில மாற்றங்கள்.நல்ல மாற்றங்கள்.

கதையே சற்று கனம் ஏற்றிக்கொள்கிறது. இருளும் ஒளியும் மாறி மாறி விளையாட்டுக் காட்டுகின்றன. இசையும்தான். கதாபாத்திரங்கள் முப்பரிமாணம் அடைகிறார்கள் (இயக்குனர் மாறியதுதான் காரணம் என்று நினைக்கிறேன். ஹாரி கோபத்துடன் தன் அறையின் அலமாரியை 'தடாலெ'ன்று உதைக்கும்போதே,'சரி, பையன் தேறிட்டான்,' என்று தோன்றுகிறது. முந்தைய படங்களில் நிறைய முழித்தார்.) முதல் இரண்டு படங்களில் - எல்லாம் சரியாக, புத்தகத்தில் இருந்த மாதிரியே இருந்தாலும் - என்னவோ கொஞ்சம்...சாரமின்றி - நவீன இலக்கிய பாணியில் சொல்வதானால் - 'தட்டையாக' இருப்பது போல் தோன்றியது. இந்தப் படத்தில் அதைச் சரிக்கட்டி விட்டார்கள்.

கதை...?

மந்திரவாதிகளின் உலகில், கொடிய குற்றங்கள் புரிந்தவர்களை 'அஸ்கபன்' என்னு இடத்தில் அடைத்து வைத்து, அவர்களுக்குக் காவலாக 'dementors' என்னும் பேய் பிசாசு மாதிரியான ஜந்துக்களை காவலுக்கு வைப்பது வழக்கம். அங்கிருந்து, பல கொலைகளைப் புரிந்ததாகச் சொல்லப்படும் குற்றவாளி தப்பித்துவிடுகிறான். ஹாரி படிக்கும் 'ஹாக்வார்ட்ஸ்' பள்ளியைத் தேடி வருகிறான்.

இந்த 'டிமெண்ட்டார்' பிறவிகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. மனிதர்களிடமிருந்து சந்தோஷத்தை மொத்தமாகப் பிடுங்கியெடுப்பதே அவர்களுக்கு வேலை. காற்று மாதிரி, மகிழ்ச்சியை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள். அதற்கப்புறம், சம்பந்தப்பட்ட மனிதர்களிடம் வாழ்வதற்குக் காரணமே இல்லாமல் போய்விடும். வாழ்க்கையை வாழும் உந்துதலை அவர்கள் இழந்துவிடுவார்கள். இதுதான் அவர்கள் குற்றவாளிகளை தண்டிக்கும் விதம். பதிமூன்று வயதான ஹாரியும், அவனது நண்பர்களும் எப்படி எல்லாவற்றையும் சமாளிக்கிறார்கள், சிறையிலிருந்து தப்பும் குற்றவாளி உண்மையில் யார் (இந்த முடிச்சுதான் நான்காவது புத்தகத்தைத் தீர்மானிக்கிறது.)என்பதுதான் மீதிக் கதை.

சில சமயம் இந்தக் கதைகள் எல்லாவற்றையும் மொத்தமாக 'குழந்தைகள் கதை' என்று ஒரு தலைப்பின் கீழ் கொண்டு வருவது சரியா என்று தோன்றுகிறது. ஹாரி சந்திக்கும் மனிதர்களோ, சம்பவங்களோ, அவன் உட்படும் தொல்லைகள் எதுவும் குழந்தைத்தனமாக இல்லை. அவன் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்க ஏகப்பட்ட அறிவும், திறமையும், துணிச்சலும் தேவையாக இருக்கிறது. (அதுதானே இந்த மாதிரிக் கதைகளின் ஆதாரம்.). ரவுலிங்கின் திறமை - ஹாரியை நம்பும்படியான கதாபாத்திரமாகச் சித்தரித்திருப்பது. 'பக்கத்து வீட்டுப் பையன்' உணர்வைத் தருவது. நிஜ உலகை மறந்துவிட்டால், ஹாரியின் உலகத்தின் அழகையெல்லாம் ரசிக்க இந்த ஆயுட்காலம் போதாது. மறக்கவும் வைக்கிறார்கள்.

முதலிரண்டு படங்களிலும் கதைக்களன் அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். மூன்றாம் பகுதியில், கதை எடுத்த எடுப்பில் 'தடதட'வென்று ஓட ஆரம்பிக்கிறது. நிறுத்தி நிதானமாக எதையும் ரசிகர்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை - அதெல்லாம் முடிந்துவிட்டது.

இன்னொரு ஆச்சர்யம் எனக்குக் காத்திருந்தது. படத்தில் 'Remus Lupin' - ஹாரியின் ஆசிரியர் -என்னும் கதாபாத்திரமாக நடித்தவரை நான் 'Dragonheart' படத்தில் சுயநலமும், கொடுங்கோன்மையும் நிறைந்த பிரிட்டிஷ் இளவரசனாகப் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் அன்பான ஆசிரியராக, ஹாரிக்குப் பக்க பலமாக இருக்கிறார் (ஓநாயாகவும் மாறுகிறார் என்பது வேறு விஷயம். அவர் என்ன செய்வார்? அவர் தலையெழுத்து அப்படி.). 'அவர்தானா இவர்?' என்று இரண்டு மணி நேரமும் அதிசயப்பட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவ்வளவு கச்சிதமாக இருந்தது அவரது நடிப்பு.

'பக்பீக்' என்னும் பாதிப் பறவை, பாதி மிருகம்' மீது ஏறிக்கொண்டு ஹாரி பறக்கும் காட்சி...

ஹெர்மைனியும், ரான் வீஸ்லியும் அழகாக வளர்ந்துவிட்டார்கள். அடையாளமே தெரியவில்லை.:-) படத்தில் ட்ரேகோ மால்·போயை (இவர்தான் ஆஸ்தான...er...வில்லன்.)ஹெர்மைனி விடும் ஒரு குத்துக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ரான் சொல்வது போல், 'Brilliant!'

படத்திற்கே அது பொருந்தும்.


|