Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, June 12, 2004

என்ன இது, என்ன இது...

என் மேஜையிலிருந்த குப்பையை இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று (எதையும் கொட்ட மனம் இல்லாமல்) இடம் மாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது அகப்பட்டது இந்த ஓவியம். எப்போதோ நான் வரைந்தது. என்னத்தை வரைந்தேன் என்று ஒரு மணி நேரம் மூளையைக் கசக்கிக் கண்டுபிடித்தேன்.

உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? :-))


What am I?

|

Sunday, June 06, 2004

அலாவுதீன் குகையில்...

சில நாட்களுக்கு முன்னால் எனக்கும் நண்பருக்கும் தீவிரமான விவாதம் ஒன்று ஏற்பட்டது (இது 'கடவுள்' நண்பரில்லை.). நான் ஒரு சமயத்தில் நான்கைந்து புத்தகங்கள் படிப்பேன். நண்பர் 'ஒரு சமயத்தில் ஒரு புத்தகத்திற்கு மேல் படிக்கவே முடியாது,'என்று அடித்துச் சொல்கிறார்.

நான்: ஒரே சமயத்துல நான் நாலு புக் படிக்கிறேனே?

அவர்: கண்டிப்பா எல்லாக் கதையும் குழம்பிப்போயிடும். ஹாரி பாட்டர் 'துப்பறியும் சாம்பு'வேலை செய்வார். அகதா கிரிஸ்டீ 'பாரீசுக்குப் போ'வாங்க...

நான்: அதெல்லாம் ஒண்ணுமில்லை. எந்தக் கதையும் எனக்குக் குழம்பிப்போறதேயில்லை.

அவர்: பத்து மெகா-சீரியல் பாத்தாலும் எதுவும் குழம்பாத எங்கம்மா மாதிரியா?

நான்: பெண்கள் இயற்கையிலேயே....

அவர்: %#%^*&%($^@&$$%#*%)*&^)!!!!!!!!!!

மிச்ச சொச்சத்தை அவர் சொல்லி முடிப்பதற்குள், காதைப் பொத்திக்கொண்டு நான் வெளியேறிவிட்டேன் (தொலைபேசித் தொடர்வதாக அவர் பயமுறுத்தியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்.). ஆனாலும், என் சந்தேகம் தீர்ந்தபடில்லை. ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் படிக்க முடியாதா என்ன?

நான் விசிட்டடிக்கும் நூலகம் அலாவுதீன் குகை மாதிரி. அடுக்கடுக்காகப் புத்தகங்கள். உள்ளே விளக்கை எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டால், எல்லா பக்கமும் சிதறிக்கிடக்கும் முத்துக்களூம்,வைரங்களும், பவளங்களும் கண்ணைக் குருடாக்கிவிடும். இரண்டு மணி நேரம் செலவழித்து, நூலகத்தில் குடைந்து எடுத்தவை:

1. திருக்குறள் கதைகள்: மணியன், சாவி ஆகிய எழுத்தாளர்கள், ஒரு குறளை எடுத்துக்கொண்டு அதைச் சுற்று ஒரு கதை பின்னியிருக்கிறார்கள். அதாவது, பின்ன முயன்றிருக்கிறார்கள். அம்புலிமாமா கதை போல் "ஒரு ஊரிலே சுந்தரம் என்று ஓர் இளைஞன் இருந்தான்..." ரேஞ்சுக்கு எல்லா கதைகளும் இருக்கின்றன. இருந்தாலும்...ரசிக்கும்படிதான் இருக்கின்றன. :-) சாப்பிடும்போது கொறிப்பதற்கு எடுத்து வைத்திருக்கிறேன்.

2. 'திருடர்கள்' - ர.சு.நல்ல பெருமாள்: 'கல்லுக்குள் ஈரம்' படித்தபோதே 'ர.சு.பெ' ரசிகை ஆகிவிட்டேன். அவர் பொருட்டுத்தான் இந்தப் புத்தகத்தை எடுத்தேன். எடுத்துப் பிரித்தபோதுதான், புத்தகத்தின் கடைசியில் 'தூக்கு மரத்தின் நிழலில்' கதையும் சேர்த்து பைண்ட் ஆகியிருப்பது தெரிந்தது. போனஸ்! [கொஞ்சம் பழையகால பைண்ட் புத்தகங்களை எடுத்து வருவதில் இது ஒரு பெரிய சவுகரியம். எந்தப் புத்தகத்தில், எந்தப் பொக்கிஷம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 'மோகினித் தீவு' புத்தகத்தோடு, 'வாண்டு மாமா' கலெக்ஷன் ஒன்றைக் கண்டுபிடித்தது இப்படித்தான்.:-)

3. 'திறக்காத ஜன்னல்கள்' - வாஸந்தி: ஏற்கனவே நான்கு முறை படித்தது. ['ஒரு தடவை தான் படிச்சாச்சில்ல? படிச்ச புக்கையே எத்தனை முறைதான் படிப்பே?' இன்னொரு காரசாரமான விவாதம். ஹ்ம். கழுதைக்குத் தெரியுமா? பழைய புத்தக வாசனை. என் பதில்: நல்ல விஷயத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.].

கதை இரண்டு காலகட்டங்களை மாறி மாறி விவரிக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால், அடக்கப்பட்ட மருமகளாக அவமானபடுத்தப்பட்ட சரோசி. இன்றைய உலகத்தின் பிரதிநிதி, அவளது பேத்தி அருணா. கதை, அருணா விவாகரத்து பெறுவதிலிருந்து ஆரம்பமாகிறது.

அருணாவின் விவாகரத்தில் அவளது அம்மா நளினிக்கு பயங்கர மூட்-அவுட். அவளது சிநேகிதிகள் கேவலமாகப் பேசுவார்கள்; உலகம் தன்னையும், தன் பெண்ணையும் ஏசும் என்ற பயம். கணவனால் துன்புறுத்தப்படுவதைத் தாங்க முடியாமல்தான் பெண் அவனிடமிருந்து விலகுகிறாள்' என்பதைப் புரிந்துகொள்ளாத அம்மா. ஆனால், அருணாவின் பாட்டி சரோஜினி அதற்கு முழு ஆதரவு தருகிறாள்.

சரோஜினியின் கடந்த காலம் குரூரமானது. அழகான, மென்மையான மனம் கொண்ட அவளை மரக்கட்டையைப்போல் பயன்படுத்திவிட்டு, அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்திற்காக, இன்னொருத்தியை மணந்துகொள்ளும் அவளது கணவன். இரண்டாமவளுக்கும் குழந்தை இல்லை. சரோசி அவளால் துச்சமாக மதிக்கப் படுகிறாள். அந்தப் பெரிய ஜமீன் மாளிகையில் சரோசி சம்பளமில்லாத வேலைக்காரி.

ஆனாலும், இறுதியில் அந்த ஜமீன் குடும்பத்தின் மானம் அவளால்தான் காப்பாற்றப் படுகிறது -அவளுக்குப் பிறக்கும் குழந்தை மூலமாக. வாரிசு உருவாகிவிடுகிறது - ஊரே அவளைக் கொண்டாடுகிறது. சரோஜினி வெற்றியடைந்து விடுகிறாள். அந்த வெற்றியின் மூலம், தன் புகுந்தவீட்டைச் சேர்ந்தவர்கள் மீது பழி தீர்த்துக்கொள்கிறாள். தன்னை மூர்க்கமாகப் பயன்படுத்திய கணவனைப் பழி வாங்கிவிடுகிறாள்.

விஷயம் 'இன்னதெ'ன்பது சரோஜினியையும், அவளால் பழி வாங்கக்கப்பட்ட கணவனியும் தவிர யாருக்கும் தெரியாது. ஐம்பது வருடமாக அந்த ரகசியம் காப்பாற்றப்பட்டு வருகிறது - அவளது மனச்சாளரங்களால் மூடப்பட்டு.

சரோசியின் கதையை எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.

*********

இப்போது கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்கள்:

1. 'என்ன இது...' - நள தமயந்தி
2. 'உன்ன விட...' - விருமாண்டி
3. 'ஒன்றா இரண்டா...' - காக்க காக்க

|