Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, September 09, 2004

கல் சொன்ன கதை - # 2

இன்று ஒரு விசேஷம். என் அபிமான எழுத்தாளரின் 105ஆவது பிறந்த நாள். (இது எனது 105ஆவது பதிவு. அட!)

*********



எங்கே விட்டேன்...? மாமல்லபுரம் செல்லும் வழியில்தானே? அங்கிருந்தே தொடர்கிறேன். [முன் கதைச் சுருக்கம் - இங்கே.]

இதற்கு முன் சில முறை மாமல்லபுரம் சென்றபோது, சூரிய பகவான் அன்பு முற்றிப் போய் ரொம்பவும் அருள் செய்து, வெய்யிலை எங்கள் (எங்கள் என்றால், நானும் குடும்பத்தாரும்) மீது பொழிந்து, வறுத்தியெடுத்துவிட்டார். என்னதான் விடியற்காலையில் அவசரமாக புறப்பட்டு, காலை வேளையை அனுபவித்துக்கோண்டு மா.புரம் வந்தடைந்தாலும், அதற்கப்புறம் அங்கு இருக்கும் சிற்ப அதிசயங்களை சுற்றிப் பார்க்கக் கிளம்பும் போது, செதுக்கப்பட்டிருக்கும் அழகிய நடன மாதர்களையெல்லாம் தோற்கடிக்கும் வகையில் அற்புதமாக நடனமாடக் கற்றுக்கொண்டு விடலாம். ஒவ்வொரு முறை பாதத்தையும் தரையில் வைக்கும் போது, அடுப்பிற்குள்ளேயே வைப்பது போல், பொறிந்து விடும்.

இந்த முறை உலகின் கடவுளர்களெல்லோரும் எங்களை ஆசிர்வதித்து அனுப்பி வைத்துவிட்டார்கள். வானம் முழுதும் மெல்லிய சாம்பல் நிறத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அடர்ந்திருந்த சவுக்குத் தோப்புகள். தூரத்தில் கடல். அவ்வப்போது வெய்யில் அரை மனதுடன் தலை தூக்கும்போது, வெள்ளி நூல் போல் தார் ரோட்டுக்கு மேல் மின்னி மறையும். காற்று 'சில்'லென்று எங்களைத் தாண்டிக் கொண்டு சென்றது.

போகும் வழியில் நாங்கள் பார்க்கப் போகும் சிற்ப அதிசயங்களை கட்டக் காரணமாக இருந்த அரசர்களைப் பற்றிப் (மகேந்திர வர்மன், முதலாம் நரசிம்ம வர்மன், இராஜசிம்ம பல்லவன்)பேசிகொண்டே சென்றோம். [இதே மன்னர்களைப் பற்றி எத்தனை சரித்திரப் புத்தகங்களில் படித்துப் மனப்பாடம் செய்து, தேர்வில் 'எஸ்ஸே' எழுதியிருக்கிறேன்...?]

ஐந்து மணிக்கு மேல் மாமல்லபுரத்திற்கு வந்து சேர்ந்தோம். சாயங்கால வேளை மிச்சமிருக்கும்போதே பஞ்சரதங்களைப் பார்த்துவிடுவது நலம் என்று நினைத்தோம். அதன்படி, பஞ்சரதங்களுக்கு வழி விடும் இரும்புக் கம்பங்களைத் தாண்டி, மண்ணில் கால் புதைய நடந்து சென்று, ஓரமாக இருந்த சிமெண்ட்டுப் படிகளின் மேல் அமர்ந்தோம். ஆளுக்குத் தலா இரண்டு மூன்று இளநீர்களூக்குப் பிறகு, ரதங்களைச் சென்றோம்.

முதலில் 'கொற்றவை ரதம்' (உள்ளே கொற்றவையின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதால் இந்தப் பெயர்.). சிறுத்த இடையும், களையான முகமுமாக இந்தக் கொற்றவை மிக அழகாக இருக்கிறாள். கொற்றவை ரதத்திற்கு வலப்புறம் அப்படியே தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்த பெரிய கல் யானையைப் பார்த்த போது, சில வரிகள் நினைவுக்கு வந்தன.

...இதே இடத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் வந்து இதே விதமாக நின்றதுண்டு. ஆனால், அங்கு நின்ற குன்றுகளும் பாறைகளும் அப்போது மொட்டைக் குன்றுகளாகவும், மொட்டைப் பாறைகளாகவும் இருந்தன.

"அப்பா! அந்தப் பாறையின் நிழலைப் பாருங்கள்! அது யானையைப் போல் இல்லையா?" என்றான் பல்லவ குலந்தழைக்க வந்த நரசிம்மவர்மன். அவன் சுட்டிக் காட்டிய நிழலைச் சக்கரவர்த்தி பார்த்தார்.

"ஆஹா!" என்று அவர் வாயிலிருந்து புறப்பட்ட வியப்பொலியில் விவரிக்க முடியாத பல உணர்ச்சிகள் தொனித்தன.

சற்றுநேரம் மகேந்திரர் சிந்தனையில் ஆழ்ந்து வெளி உலகப் பிரக்ஞையே இல்லாதவராய் நின்றார். பிறகு நரசிம்மனைத் தழுவிக் கொண்டு, "குழந்தாய்! எப்பேர்ப்பட்ட அதிசயமான உண்மையை நீ கண்டுபிடித்துக் கூறினாய்! நீ கூறிய வார்த்தையின் மகிமை முழுவதும் உனக்கே தெரிந்திராது!" என்றார்.

பன்னிரண்டு பிராயத்துச் சிறுவனான நரசிம்மன் மேலும் உற்சாகத்துடன், "அப்பா! அதோ, அந்தக் குன்றின் நிழலைப் பாருங்கள்! கோயில் மாதிரி இல்லையா?" என்றான்.

"ஆமாம், நரசிம்மா! ஆமாம்! அந்தக் குன்றின் நிழல் கோயில் மாதிரிதான் இருக்கிறது. அதை கோயிலாகவே செய்து விடுவோம். இந்த ஐந்து குன்றுகளையும் ஐந்து கோயில்களாக்குவோம். இன்னும் இங்குள்ள சிறு பாறைகளை யானையாகவும் சிங்கமாகவும் நந்தியாகவும் ஆக்குவோம். இந்தத் துறைமுகத்தைச் சொப்பன லோகமாக்குவோம். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் துறைமுகத்துக்கு வருகிறவர்கள் எல்லாரும் பார்த்துப் பிரமிக்கும்படியாகச் செய்வோம்!" என்றார்.

சீக்கிரத்திலேயே அந்தப் பிரதேசத்துக்குச் சிற்பிகள் பலர் சிற்றுளிகளுடன் வந்து சேர்ந்தார்கள். குன்றுகளிலும் பாறைகளிலும் வேலை செய்யத் தொடங்கினார்கள்...


இந்த வரிகள் எந்தப் படைப்பில் இடம் பிடித்திருக்கின்றன என்று நான் சொல்லத் தேவையில்லை :-)

யானைக்கு வலப்புறம், 'நகுல சகாதேவ ரதம்' என்று அழைக்கப்படும் ரதம். மேற்கொண்டு, பீம ரதம், தர்மராஜா ரதம்...

அடுத்த ஒரு மணி நேரம் ஒவ்வொரு ரதத்தையும் ஆராய்ந்து, எந்தெந்த ரதம் என்னென்ன அமைப்பு கொண்டது, என்னென்ன முறையில் கட்டப்பட்டிருக்கிறது, தூண்கள் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன...இப்படிச் சென்றது. [இந்த மாதிரி விஷயத்திற்காகவே 'பயணங்கள்' உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதால், கொஞ்சம் 'technical' சமாச்சாரமெல்லாம் அங்கு இடம்பெறும்.]

கடைசியில் நின்ற 'தர்மராஜா' ரதத்தின் மேலே எற, அதன் வலப்புறம் வச்தியாக ஒரு பெரிய பாறையே இருக்கிறது என்பதால், ASIக்காரர்கள் அதன் மேல் ஒரு ஏணியை நிறுத்தி வைத்தார்கள். அடுத்த கட்ட ஆராய்ச்சியெல்லாம் அதன் மேல் ஏறிய பிறகுதான்.(நான் ஏறவில்லை- மற்றவர்கள் ஏறினார்கள்.:-)

பஞ்சரதங்களில் கொட்டிக் கிடக்கும் அழகிய சிற்பங்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அழகிலும், உணர்ச்சி மிக்க முகபாவங்களைக் கொண்டு வருவதிலும் பல்லவச் சிற்பிகள் அசுரத் திறமை படைத்தவர்கள். சோழ நாட்டுச் சிலைகளில் நுணுக்கம் கிடைக்கும் - விரல் நகங்கள் கூட துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் பல்லவச் சிற்பிகள் வடிவமைத்த சிலைகளில் இருக்கும் உயிரோட்டம் அற்புதமானது. கண்ணும் உதடும் பேசும். கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. அது மர்மப் புன்னகை புரியும் அர்த்தநாரீஸ்வரர் ஆகட்டும், அல்லது ஒரு மண்டபத்தின் கீழ்ப்புறத்தில், தரையைத் தந்தத்தால் பெயர்க்க முயற்சி செய்யும் குட்டி யானையாகட்டும் [இந்த மாதிரிச் சிற்பமெல்லாம் கண்ணில் படுவது கொஞ்சம் கஷ்டம் - உற்றுப் பார்த்தால்தான் தெரியும்.]

ஆறு மணி சுமாருக்கு, 'கடற்கரை கோயில்களுக்குப் போகலாமா? இருட்டுவத்ற்கு முன் அங்கே சென்றால், கோயில்களைப் பார்த்துவிட்டு, நிலாவை ரசிக்க அங்கேயே உட்கார்ந்துவிடலாம்,' என்றார் டாக்டர். கலைக்கோவன். அவர் சொல்வது சரியெனப்பட, மறுநாள் மேற்கொண்டு ஆராய்ச்சிக்காக ரதங்களுக்கு வரும் முடிவுடன், கடற்கரைக் கோயில்களை நோக்கி நகர்ந்தோம்.

(தொடரும்...)

|