Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, June 16, 2004

தண்ணீரே...

என்னுடைய காலை வேளை:

6:15 : முதலில் ஒரு கண்ணைத் திறந்து, அரையும் குறையுமாக சாம்பல் நிறத்தில் தெரியும் அறையை ஆர்வமின்மையுடன் பார்த்துவிட்டு, மீண்டும் கண்ணை மூடிக்கொள்ளுதல். (சென்னப்பட்டணத்தில் ஆறேகாலுக்கெல்லாம் நன்றாகவே விடிந்துவிடும். எங்கள் தீப்பெட்டி ·ப்ளாட் இரண்டு மெகா-·ப்ளாட்டுக்கு இடையில் தொத்திக்கொண்டிருப்பதால், சூரிய வெளிச்சம் உள்ளே தயங்கிக் கொண்டு பதினொன்றரை மணியளவில்தான் வரும்.)

6:17: இன்னொரு கண்ணைத் திறந்து, பளீர் என்று அடிக்கும் ட்யூப்லைட்டை எரிச்சலோடு பார்த்தல்.

6:18: அம்மா - "எழுந்துக்கப் போறியா இல்லியா?"

6:20: கேட்டும் கேளாத மாதிரி அப்படியே இருத்தல்.

6:22: "தண்ணி நின்னுரும்..." - மீண்டும் அம்மா.

6:22:02 விநாடி: வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்திருத்தல்.

6:30: அவசர அவசரமாக துணி தோய்ப்பு.

6:31: ஐயோ. துணி அலசுவதற்குத் தண்ணீர் இல்லை. பிடித்த வைத்த டிரம் தண்ணீரைத்தான் காலி செய்ய வேண்டும். சாயங்காலம் என்ன செய்வது?

6:32: அம்மா - "அப்பவே சொன்னேன்..."

6:34: அலசு, பிழி, உலர்த்து, கழுவு. எடுத்து வை. தண்ணீர், தண்ணீர்...!

6:40: பக்கத்து வீட்டு உமா காலிங் பெல்லை அழுத்திவிட்டுப் பரிதாபமாக நிற்கிறார். "என்னங்க?" என்றால், "தண்ணி நின்னு போச்சு." அழுது விடுவார் போலிருக்கிறது. "அநியாயமா இருக்கு. ஒரு மணி நேரம் விடறதா சொன்னாங்க இல்லை? இப்பவே நிறுத்திட்டா என்ன அர்த்தம்? பாதி துவையல்ல இருக்கேன்."

6:42: அவசர மீட்டிங். பின்பக்கம் மட்டும் ஒரு குழாயில் அதிசயமாகத் தண்ணீர் 'தடதட'வென்று கொட்டுகிறது? அவிழ்க்க முடியாத மர்மம். எப்படி? எப்படி?

6:44: பின்னாடி இருக்கும் ·ப்ளாட்டுக்காரர்கள் தங்களுக்குத் தண்ணீர் குறைவின்றி வருவதாகச் சொல்கிறார்கள். அநியாயம். நாங்கள் என்ன செய்வது? குளித்துவிட்டு ஒயிலாக தலைமுடியை உலர்த்தும் ஹேமாவை ஏக்கத்துடன் பார்க்கிறேன்.

6:45: வெற்றி. வெற்றி. யார் வீட்டுக்கும் தண்ணீர் வரவில்லை.

6:47: அசோசியேஷன் செகரெட்டரி சாவகாசமாக வருகிறார். "ரெண்டு மோட்டர்ல ஒண்ணும் ரிப்பேர்."

"எப்பங்க ரெடியாகும்?"

"டைம் ஆவுங்க. அது ரிப்பேராகி பத்து நாள் ஆவுது."

அதிர்ச்சி. பத்து நாள்??!!

"மீட்டிங்கு கூட்டணுங்க. எல்லாரும் சாயங்காலம் ஏழு மணிக்கு மொட்டை மாடிக்கு வந்துறுங்க."

6:50: பிடித்து வைத்த தண்ணீரில் முக்கால்வாசி காலி. இந்த நாள் முழுவதும் ஜாஆஆ...க்கிரதையாக ஓட்ட வேண்டும். தப்பித் தவறி ஒரு மக் கூட வீணாக்கக்கூடாது.

7:00: எல்லா வேலையும் முடிந்துவிட்டது. ஈ-மெயில் பார்க்க அமர்தல். அப்புறம் வலைப்பூ உலா. 'வலைப்பூவில்', சிங்கப்பூரில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையே கரண்ட் போவது பற்றி ஜெயந்தியின் செய்தி. அங்கே தண்ணீர் வசதி எப்படியோ? அதுவும் நன்றாகத்தான் இருக்கும். பெருமூச்சு.

7:01: Blacksburgர்க்கிலிருந்து கடிதம். "ஹேய், இப்பதான் டென்னிஸ் ஆடிட்டு வர்றேன். இங்க போரடிக்குது. I miss Chennai. தண்ணி லாரியெல்லாம் ஒழுங்கா வருதா?"


Aaaaaaargh....!

|

Tuesday, June 15, 2004

Yahoo!

ஆ. யாஹ¥ மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களுக்கு திடீர் யோகம் - நான்கு எம்.பி யை நூறு எம்.பியாக்கிவிட்டர்கள்!

எல்லாம் ஜிமெயில் அசுரன் புளியைக் கரைத்ததன் விளைவு...
|
என்ன இது - #2

Duh. ஒரு விஷயத்தை நாம் பார்க்கும் விதம் எவ்வளவு மாறுபடுகிறது. இதைத்தான் 'perception' என்ற பெயரில் எல்லோரும் பாய்ந்து பாய்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். ஒரு 'How to...' புத்தகம் போடலாம் என்றிருக்கிறேன். [புத்தகத்தின் பெயர் - 'பார்வை பலவிதம்?'. வேறு மாதிரி அர்த்தம் வந்துவிடும் போலிருக்கிறதே.]

முந்தைய பதிவின் அந்த வண்ணக் களஞ்சியம் (அல்லது, சுஜாதா பாஷையில், 'வர்ணக் கொசகொச') என்னவென்று போட்டு உடைக்கட்டுமா?

அதற்கு முன்: எத்தனை பேர், என்னென்ன பதில்கள் கொடுத்தார்கள் என்று ஒரு சிறிய லிஸ்ட்:

1. பிரகாஷ்: தீக்குச்சி சாயம், பூந்துடைப்பம். (!)

2. ஷ்ரேயா: மழை, வெய்யிலில் நின்றுவிட்டு கண்களை மூடிக்கொண்டால் தெரியும் தோற்றம். (very original:-)

3. சத்யராஜ்குமார்: வண்ணத்துப் பூச்சி, தென்னங்கீற்று.

4. சந்திரவதனா: பென்சில்.

5. ராஜரத்னம்: பென்சில் சீவிய பின் விழும் துண்டுகள்.

6. ஷங்கர்: சோளக் கருது, மூன்றாம் வகுப்பில் வாங்கிய ·ப்ரில் ·ப்ராக். (ஆஆ!)

7. பிரதீப்: மயில் தோகை (அப்புறம் 'மஞ்சக்கலரு இடிக்குது' என்கிறார்.), என்னைப் பற்றி நானே வரைந்திருப்பது. (அடேடே. இதுகூட நல்லாருக்கு:-)

8. ஸ்ரீனிவாஸ் வெங்கட்: Scarlet macaw பறவையின் சிறகுகள். (wow.)

9. சோடாபாட்டில்: Aurora borealis. [ஆனால் இவர் நான் வரைந்த வேறொரு படத்தை (அவரே ஒப்புக்கொண்டது போல்) திருப்பி வைத்துப் பார்த்துவிட்டு, ஒன்றும் புரியாத முகபாவத்தோடு சிலாகித்துக்கொண்டிருந்தார்.]

10. Bob (அ) பால சுப்ரா: இவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். படம் 'load' ஆகும் போது, அடியில் தெரியும் 'லிங்க்'கை வைத்துக்கொண்டு எப்படியோ உண்மைக்கு அருகில் வந்துவிட்டார். (அப்படித்தான் நினைக்கிறேன். இல்லையென்றால் அவ்வளவு சரியாக எப்படி விடை கிடைத்திருக்க முடியும்?!)

இப்போது விடை: Polarized light reveals the crystalline structures of toxic materials with unusual clarity. Phenol is a toxic compound, serves as a building block for chemical products including resins, dyes, disinfectants and lubricationg oils. இந்தப் புகைப்படத்தைத்தான் வரைந்தேன்.

ஆதாரம்: National Geographic - March 1985. 'Hazardous waste' என்ற கட்டுரையில் வெளிவந்த புகைப்படம். அதிலுள்ள மற்ற புகைப்படங்களையெல்லாம் பார்த்துவிட்டால், ஒரு வாரத்திற்கு உணவு இறங்காது.


|