Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, April 16, 2005

ருத்ர பூமி


அது ஒரு போர்க்களம். குவிந்து கிடக்கும் போர்க்கருவிகளும், உக்கிரமான சண்டையின் மிச்சங்களும் பரவியிருந்தன; எங்கும் புகை-ஒரு வித தீய்ந்த நாற்றம். கலப்படமாகக் கூச்சல்கள். அங்குமிங்கும் ஒரு வித கையாலாகாத்தனத்துடன் போருக்குத் தப்பியவர்களைக் காப்பாற்றும் சில உத்தம உயிர்கள். இனிமேலும் இப்படியொரு கொடுமையை எப்போதும், எங்கும் நடக்கவிடக்கூடாது என்று ஆயிரமாவது முறையாக நினைக்கும் தலைவர்கள். 'இதிலிருந்து எப்போது மீளப்போகிறோம்?' என்று கவலையிலாழும் இன்னபிற ஜீவன்கள்...

...அப்பா சமைத்து முடித்தபின் உருவெடுக்கும் நிலவரம்.

என் தந்தையாரின் சமையல் செஷன்களின்போது, அருகிலிருந்து பார்த்து [உதவி], நான் அறிந்துகொண்ட அரிய பெரிய தகவல்கள்...

1. இருப்பதிலேயே மிகக் கடினமான, சாமானியத்தில் செய்துமுடிக்க முடியாத, சமையல் புத்தகத்தில் பக்கம் பக்கமாக நீளும் உணவு வகைகளையே தேர்ந்தெடுப்பார். ["அதான் குழம்பு ரசமெல்லாம் தெனமும் செய்யறமில்ல?" - அசைக்க முடியாத லாஜிக்.].

2. மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் வழி வந்த லட்சியவாதி. 'சமையல் என்னும் இமயத்தை ஒரே நாளில் வென்று விடலாம்' என்று தீர்மானமாக நம்பும் அசாத்திய தீரமும் வீரமும் படைத்தவர்.

3. சமையலறையில் பயன்படும் பாத்திரங்கள் அத்தனையையும் கடை பரத்திவிட வேண்டும் என்பது 'அப்பா சமையல் செஷன்'களின் எழுதப்படா விதி. அரியது, பெரியது, சிறியது என்று மேடை கொள்ளாமல், கல்யாண சீர் வரிசை ரேஞ்சுக்குப் பாத்திரங்கள் நிரம்பி வழியும் [அப்போதுதான் உள்ளேயே நுழைய முடியாமல் கூஜாக்களின் மீதும், அடுக்குகளின் மீதும் தடுக்கி விழலாம்.]

4. தோராயமாக 10.4569123 விநாடிகளுக்கு ஒரு முறை எங்களிடம் "இப்ப புளியைக் கரைக்கணுமா, கடுகு தாளிக்கணுமா?" என்று கேள்வி எழுப்பப்படும். அதனால் வேறு காரியங்களில் ஈடுபடாமல், சமையலறைக்கு வெளியே, பத்தடி தூரத்தில் 'உதவிக்கு' அமர்ந்திருப்பது நலம்.

5. சமையலறைக்குள்ளேயே 'உதவி' செய்வது ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. [அப்போது சமையல் 'ஆபரேஷ'னில் நாமும் கலந்துகொண்டதாக அர்த்தம் வந்துவிடும்.]

6. இதற்காகத் தொலைவில் [அதாவது ஹால், அவரவர் அறை] சென்றுவிடக்கூடாது. "நான் இங்கே கிடந்து அல்லாடறேன்; உங்களுக்கெல்லாம் டீவி கேக்குதோ?" என்பன போன்ற கூச்சல்கள் செவிப்பறையைக் கிழிக்கும். [காதில் பஞ்சு வைத்துக்கொள்வது unacceptable.]

7. அவ்வப்போது எழும் காரசாரமான அதட்டல்கள் ["கிச்சனை இப்படியா வெச்சுக்கிறது? எது எங்க இருக்குன்னு ஒண்ணுமே புரியலை..."]

8. கொஞ்ச நேரத்தில் பட்டாசு வெடிக்கும் சப்தம், மற்றும் சுவரெங்கும் எண்ணேய் தீற்றல்கள் ["சீடை செய்யிறது ரொம்ப ஈஸி இல்லை?"], மேடை முழுவதும் குழப்படியான வழவழப்பு ["நல்லெண்ணெய் கொட்டிப்போச்சு..."], ஒரு வித இனம் காண முடியாத அபூர்வ வாடை ["அதான் என்னன்னு எனக்கும் தெரியலை..."]

9. "வாசனை வருதா?" என்று சில நிமிடங்களுக்கொரு முறை [மிக ஆவலாகக்] கேள்வி எழுப்பப்படும். இதற்குக் பட்டுக்கொள்ளா¡மல், ஒரு மையப் புன்னகை புரிந்துவிட்டு, "ரொம்ப நல்லா இருக்கு," "அட, நல்லாயிருக்கே..." என்னும் பதில்களைத் தரவேண்டும். [ஒரேயடியாக "அற்புதம், சூப்பர்," என்று உளறிக்கொட்டாமல் இருப்பது பிற்காலத்தில் நன்மை பயக்கும். "என்ன வாசனை?" "என்னவோ தீயுது," போன்ற பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.]

10. 'சமையல்' முடிந்த பிறகு [இதற்கு குறைந்தது மூன்று மணி நெரமாவது ஆக வேண்டும்; சமையலறையிலிருந்து வெற்றிப்பெருமிததுடம் அப்பா புறப்படுவார்] - எல்லாவற்றையும் தகுந்த பாத்திரங்களில் மாற்றி, டேபிளில் அடுக்க வேண்டும் [நாங்கள் யாரும் டேபிளில் சாப்பிடுவதில்லை].பிறகு எல்லோரும் அணிவகுத்து நின்று, சமையலை ருசி பார்க்க வேண்டும். ["நான் அப்புறம் சாப்பிடறேன்..."]

11. சமைத்த எல்லாவற்றையும் [அவை நம்மளவு பெரிய அடுக்குகளில் இருந்தாலும்] பத்தாவது நிமிடம் காலியாக்க வேண்டும்.

12. "நீயே தெனமும் சமைக்கலாம்," என்று பாராட்டுப் பத்திரம் அவசியம் கொடுக்க வேண்டும்.

13. இப்பாராட்டுப் பத்திரத்தை நிஜமாக்காமல் இருக்க பெருமுயற்சி எடுக்க வேண்டும். ["அன்னிக்கு சாப்டதே இனிக்கும் நாக்குல நிக்குது..."]

14. அதையும் மீறி உள்ளே நுழைந்தால், எமெர்ஜென்சி உத்திகள் கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும்.

15. இவையெல்லாவற்றையும் மீறி, அத்தனை போர்க்கால நடவடிக்கையையும் தாண்டி, (அம்மா சமையல் போல் இல்லாவிட்டாலும்) எனக்குப் பிடித்த உணவுகளாகவே சமைக்கும் அப்பாவின் சமையலில் ஒரு வித ருசி இருக்கத்தான் செய்கிறது என்பதை மனம் உணர, அதை நினைத்து அதிசயப்பட வேண்டும்.

Yup. இன்று அப்பா சமையல்.
|

Friday, April 15, 2005

...!

இன்று ஒரு மகா-மெகா-திறமைசாலியின் பிறந்தநாள். இவரின் சாதனைகளுக்கு அளவே இல்லை. சகலகலா வல்லவர்.

எல்லோரின் வாழ்த்துகளும் இவருக்கு உரித்தாகுக.
|

Monday, April 11, 2005

கிழக்கும் மேற்கும்...


"பணமும் வசதியும் படைத்த, திருமணமாகாத வாலிபன் ஒருவன் முதலில் தேடுவது - மணம் செய்துகொள்ள ஒரு அழகான பெண். இது உலகம் முழுதும் அறிந்த, ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை."
- Jane Austen
.



பல நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்து, நேற்று முன் தினம் 'Bride and Prejudice' திரைப்படத்தை வெற்றிகரமாகக் கண்டுவிட்டேன்[ஒரு படம் வெளி வந்து மாசக்கணக்கான பிறகுதான் எனக்குப் பார்க்கக்கிடைக்க வேண்டும் என்பது என் விசித்திர ராசி.]

B&Pஐ நான் பார்க்க நினைத்ததற்குப் பல காரணங்கள். ஒன்று, அது எனக்கு மிக மிகப் பிடித்த நாவலான, ஜேன் ஆஸ்டென் என்னும் அற்புத எழுத்தாளரின் 'Pride and Prejudice' ஐ மூலக் கதையாகக் கொண்டது. P&P நாவலை நான் எத்தனை முறை படித்துப் போட்டிருக்கிறேன் என்று கணக்கில்லை - ஏறக்குறைய 'பொ.செ' வைப்போல், எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், முழுதும் முடிக்கும் வரையில் கீழே வைக்கமுடியாத அற்புதப் படைப்பு அது. ஆஸ்டெனின் நடை அப்படிப்பட்டது; அவர் கையாண்டிருக்கும் கதாபாத்திரங்கள் கச்சிதமானவை. 'P&P'யின் கதைக்களம் இங்கிலாந்து - என்றாலும், கதையில் வரும் எல்லோரும் நாம் தினசரி வாழ்க்கையில் பார்ப்பவர்கள் - பெண்களின் திருமணத்தையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு, வருவோர் போவோரிடமெல்லாம் அதைப் பற்றியே பேசும் (ரசனையோ, திறமையோ அற்ற) தாய், வாழ்க்கையின் அபத்தங்களைப் (தன் மனைவியின் நடவடிக்கை உட்பட) பார்த்து ரசிக்கும் (என்றாலும் அது விஷயமாக ஒன்றும் செய்ய முடியாத, சற்றே கையாலாகாத்தனத்துடன்)வாழும் தந்தை, ஐந்து பெண்கள். முதலிரண்டு பெண்களான ஜேனும் எலிசபெத்தும் (jane and Elizabeth) புத்தியும் அழகும் சம அளவில் கலந்த, நாகரீகமும் பண்பும் தெரிந்த மங்கையர்; மூன்றாவது தங்கை மேரி (தன் கலைத்திறமை மீது அதீத நம்பிக்கை கொண்ட,) அரைகுறை புத்தகப் புழு; கடைசி இரு தங்கைளும் உருப்படியாக சிந்திக்கத் தெரியாத, அடுத்தவர்கள் மீது மரியாதையற்ற, அதிக உலக அனுபவமில்லாத இரு சிறுமிகள். ஐவரில் இரண்டாவது மகளான எலிசபெத் பென்னெட் தான் நம் கதாநாயகி. இந்தக் கதை முழுவதுமே ஏறக்குறைய அவளது பார்வையில்தான் நகர்கிறது.

சிற்றோடை போல் அதிக சலசலப்பின்றி செல்லும் அவர்களது வாழ்வில் திடீரென இரு பணக்கார இளைஞர்கள் வந்து சேருகிறார்கள் - அவர்களின் வருகையால் பென்னெட் குடும்பத்தில் ஏற்படும் சலனங்களும் எலிசபெத், மற்றும் அவளது சகோதரி ஜேனின் மன நிலையும்தான் கதையின் கரு.

ஜேன் ஆஸ்டென் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் - அவர் தன் கதாபாத்திரங்களின் மன உணர்ச்சிகளைக் கையாளும் விதம். 'அவள் சோகத்தில் மூழ்கினாள்; அவன் மனமுடைந்து போனான்' என்பது போன்ற cliche வாக்கியங்களை ஆஸ்டெனின் எழுத்தில் காணமுடியாது - அவரது நாயகர்களும் நாயகிகளும் முப்பரிமாண உருவம் கொண்டவர்கள். படிக்க ஆரம்பித்தவுடன் காகிதத்திலிருந்து எழுந்து உயிர் பெற்று நம் கண் முன் நடமாட ஆரம்பிப்பார்கள். அவர் எழுதிய காலகட்டத்தையும், அப்பொழுது பெண் கல்வி எவ்வளவு தூரத்தில் இருந்ததென்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஆஸ்டெனின் எழுத்து புரட்சிகரமானது என்றுதான் சொல்ல வேண்டும். அவரது காலகட்டத்தில் எழுதிய எழுத்தாளர்கள் ஒன்று, பெண்களுக்கு புத்தி சொல்லும் புத்தகங்களாக எழுதிக் குவித்தார்கள் ('Fordyce's Sermons ஒரு நல்ல உதாரணம். 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே' ரேஞ்சுக்கு அறிவுரைகளாக இருக்கும் :-). இன்றைய 'How to...' புத்தகங்கள் போல என்று வைத்துக்கொள்ளுங்கள். ) அடக்க ஒடுக்கமான பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பெண்கள் இந்த மாதிரிப் புத்தகங்களைப் படித்துப் அறிவை(?) வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அன்றைய இங்கிலாந்தின் மேல்மட்டக் குடும்பங்களின் எழுதப்படாத விதி. படிப்பதாக இருந்தால் இந்த மாதிரிதான் படிக்க வேண்டும். நூலகங்களில் புழங்கும் 'நாவல்'கள் படிப்பதற்கு உகந்தவை இல்லை (அன்றைய புத்தகங்களின் அதிகம் காணக்கிடைக்கும் வசனம்: "சேச்சே, நான் நாவலெல்லாம் படிக்கிறதில்லை..."). தரமான புத்தகம் என்றாலும், அளவுக்கு மீறிப் படித்துத் தொலைத்துவிடக்கூடாது - அப்புறம் மாப்பிள்ளை பிடிப்பது கடினம். [அவர்கள் காலத்தில் அதிகம் படித்து, சுயமாக சிந்திக்கவும் தெரிந்த அபூர்வப் பெண்களுக்குப் பெயரே உண்டு - இவர்களை 'blue stockings' என்று அழைப்பார்கள். இந்த blue stockings பெண்களைக் கண்டால் எல்லோரும் பல காத தூரம் ஓட்டமெடுப்பது வழக்கம் (இப்போது என்ன மாறிப்போய்விட்டது என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது...). சுயமாக யோசிக்கும் பெண் குடும்பத்திற்கு அடங்க மாட்டாள் என்ற நினைப்புதான் காரணம். (எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?)]

நம் எலிசபெத் ஏறக்குறைய இந்த சிக்கலில் மாட்டுகிறாள் (புத்தகம் படிக்கும், சுயமாக யோசிக்கும், அடுத்தவர்களின் அரட்டல் உருட்டல்களாலும் - குறிப்பாக பணம் படுத்தும் பாட்டினாலும் - அதிகம் பாதிக்கப்படாத புத்திசாலி. அவள் தப்பிக்கும் இடம் ஒன்று உண்டு - அழகு. குற்றங்குறையில்லாத முக வசீகரம். எலிசபெத் குரூபியாக இருந்திருந்தால் 'P&P' எப்படி மாறிப்போயிருக்குமோ? [தெரிந்தேதான் ஆஸ்டென் புத்திசாலித்தனமாகக் கதாநாயகியை ஓரளவு அழகாகப் படைத்துவிட்டார் போலும். அறிவாளி.].

புத்திசாலியாக, சுயசிந்தனை உள்ள பெண்ணாக இருந்தும் (!), எலிசபெத் எப்படி தனக்குரியவனை அடைகிறாள் என்பதுதான் கதை. 'B&P' வெளியானவுடன், குரிந்தர் சாதா இதை எப்படி இந்தியத்தனமாக மாற்றியிருப்பார் என்று பார்க்கவும் ஆவலாக இருந்தது (அப்படி ஒன்றும் கடினம் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்திற்கும் நம் வாழ்க்கை முறையும் பல விஷயங்களில் ஒத்துப்போகின்றன. )

1. முதலில் கதாபாத்திரங்களும், அவர்களுடைய பெயர்களும். பென்னெட் குடும்பம் 'பக்ஷி' குடும்பம் ஆகிறது. இங்கிலாண்ட் அம்ரித்ஸராக மாறுகிறது. ஜேன் ஜெயாவாகவும், எலிசபெத் லலிதாவாகவும், Mr. Collins கோலி-ஸாப் ஆகவும் பெயர் மாறுகின்றனர். நல்ல வேளையாக, இயக்குனர் மூலக் கதையின் கதபாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் பொருத்தமான இந்தியச் சூழல் கொடுத்துவிட்டார். திருமதி பக்ஷி சமயம் கிடைக்கும் போதெல்லாம் திருமணம் பற்றிப் பேசுகிறார்; அழுகிறார்;, பலர் கூடியிருக்கும்போது உரத்த குரலில் அபத்தமான விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார். கோலி-ஸாப் அமெரிக்கப் பைத்தியம் பிடித்து, இந்தியா சம்பந்தமான எல்லாம் பிதற்றல் என்று கொக்கரிக்கிறார்.

2. ஐஸ். இந்தப் படத்தின் முழுமுதல் attraction ஐஸ்தான் என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்திருப்பார்கள் போலும். அந்தக் காரணத்தினாலேயே 'சப்'பென்றிருக்கிறது. ஐஸ் பேரழகி - யார் இல்லையென்றார்கள்? அங்குதான் பிரச்சனையே. எலிசபெத் பென்னெட் அழகான பெண். என்றாலும், அவள் அழகினால் முதலில் கவரப்படும் கதாநாயகன், இறுதியில் அவளது நல்ல குணத்திற்காகவும், அறிவுகூர்மையையும் அவளைத் திருமணம் செய்துகொள்கிறான் என்பதுதான் கதையின் ஆதாரக் கரு. அங்கேயே கோட்டை கைநழுவிப்போய்விட்டது. ஐரோப்பிய நவ நாகரீக மாடலைக் கொண்டு வந்து அம்ரிதஸரில் இறக்கிவிட்டால் எப்படி? ஐஸ்ஸின் அழகு கண்ணைக் கவர்ந்தாலும், 'இவள் நியூ யார்க், மிலன், பாரீஸ்' இன்னபிற நகரங்களில் இருக்கவேண்டியவள்,' என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அம்ரித்ஸரில் வளரும் சற்றே அழகான, புத்திகூர்மையுள்ள இந்தியப் பெண் என்ற உணர்வு ஏற்படவில்லை. லலிதா பக்ஷி கண்ணுக்குத் தெரியவில்லை; ஐஸ்வர்யா ராயின் நிழல் அவள் மீது விழுந்துவிடுகிறது.

சில வருடங்களுக்கு முன்னால், BBC யின் தயாரிப்பில், 'P&P' ஐ எடுத்தார்கள் - அதில் எலிசபெத் பென்னெட்டின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜென்னி·பர் எல், பிரமாதப்படுத்தியிருந்தார். வார்த்தை வார்த்தையாக scriptஐ ரசித்து, உணர்ந்து நடித்திருந்தார் என்பது அவரது ஒவ்வொரு அசைவிலும் தெரியும். கதைப்படி எலிசபெத்துக்கேயுரிய நகைச்சுவையுணர்வும், தன்னைச் சுற்றி நடக்கும் அபத்தங்களில் அவருக்கிருக்கும் ரசனையும் அவரது கண்களிலேயே வெளிப்பட்டுவிடும். ஜேன் ஆஸ்டென் இப்பொழுது இருந்திருந்தால், தான் எழுதிய எலிசபெத் இவர்தான் என்று சான்றிதழ் வழங்கியிருப்பார். ஐஸ் இந்த நாசூக்கைப் படத்தில் கொண்டு வரவில்லை. ஆத்திரமாக நிறைய வசனங்கள் பேசுகிறார்; அவ்வப்போது பரிதாபப் பார்வை பார்க்கிறார். மாற்றி மாற்றி காதல் வயப்படுகிறார் (எலிசபெத் கதையின் கடைசிக் கட்டம் வரையில் காதலில் விழுவதேயில்லை.). ப்ச். Disappointing.

3. நம் ஊர் மசாலாவை நன்றாகவே கலந்திருக்கிறார்கள் :-). மூலக்கதையில் ஏகப்பட்ட நடனங்கள் உண்டு - சொல்லப்போனால், கதையின் முக்கியக் கட்டங்கள் பல நடனங்களின் போதுதான் நடக்கின்றன. Chada ஏன் அம்ரித்ஸரைத் தேர்ந்தெடுத்தார் என்பது நன்கு புரிகிறது - அவர்களும் மூச்சுக்கு முன்னூறு முறை ஆடுகிறார்கள் :-)

பிரச்சனை பாடல்காட்சிகளில்தான். மகா நீஈஈஈஈஈ...ளமான பாடல்கள். கதையின் போக்கில் 'டம்'மென்று அரிசிமூட்டையைப்போல் உட்கார்ந்துவிடுகின்றன. மொத்தமாகத் தூக்கியிருக்கலாம் - அப்படிச் செய்திருந்தால், இந்தியத்தனம் இருந்திருக்காது. :-)

4. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை நகரும்போது, சமயத்தில் அந்த முக்கியக் கதாபாத்திரம் கைவிட்டுவிடும்; அனால் side-characters பின்னியெடுத்திருப்பார்கள். கோலி-ஸாப் இந்த வகை. எலிசபெத்தைத் திருமணம் செய்து கொள்ல விரும்பும், ஏதோ-ஒரு-உறவுக் கதாபாத்திரம். அலட்டலும் அடக்கமும், ஒருவித அறிவிலித்தனமும் கலந்தடிக்கப்பட்டிருக்கும் அற்புதமான ஒரு கதாபாத்திரம். தன்னைப் பற்றி மிக உயர்வாகவும், மற்றவர்களை மட்டமாகவும் நினைக்கும் - அதே சமயம், இதற்கு நேர்மாறாகப் பேசும் கதாபாத்திரம். எழுத்தாளராக ஜேன் ஆஸ்டெனின் திறனை வெளிப்படுத்த இந்த ஒரு பாத்திரப்படைப்பே போதும். அவர் எலிசபெத்தை திருமணம் செய்துகொள்ள அடுக்கும் 'காரணங்கள்'...[படிக்க இங்கே செல்லவும்).:-)))))

இதே போலத்தான் பல்ராஜின் (ஜேனின் காதலன்) சகோதரியாக வரும் கேரன் (இந்திரா வர்மா). ஒரே பார்வையில் ஆயிரம் வசனம் பேசுகிறார். கடைந்தெடுத்த திமிர் என்றால் இவரைச் சொல்லலாம். கலக்கியிருக்கிறார்.

5. இறுதியில் எலிசபெத்தின் கரம் பற்றப்போகும் மெக-பணக்காரராக வில்லியம் டார்சி - பொருத்தமான தேர்வு. முதலில் ஏளனம், பிறகு குழப்பம், கடைசியில் காதல் என்று நன்றாகச் செய்திருக்கிறார். கடைசிக்காட்சியில் அவரை அம்ரிதஸரில் டிரம்ஸ் வாசிக்கவிட்டு ஐஸ¤டன் ஒன்று சேர்த்திருக்கிறார்கள். பாவம், அவருக்கு இது பொறுந்தவில்லை போலும்; முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது.:-).

6. ஒரிஜினல் 'P&P'யின் மிகப் பெரிய பலம் - பென்னெட் குடும்ப சித்தரிப்புதான். அன்றைய இங்கிலாந்தின் சமூக அடுக்கில் அவர்கள் நடுவில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பெண்களுக்குப் படிப்பென்பது பெயரளவில்தான் - பணமும் அதிகம் இல்லை. திருமணம் ஒன்றுதான் அவர்களை விடுவிக்கும் ஒரே சாதனம். இப்படியொரு சூழலில், எலிழபெத்தின் குணத்தால் கவரப்பட்டு, அந்த நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவன் (முதலில் நிலவும் சண்டை சச்சரவுகளும், இருவர் பார்வையிலும் உள்ள அபிப்ராய பேதங்களும் அகன்ற பிறகு) அவளைக் கரம்பிடிக்கிறான். 'P&P' யின் இமாலய வெற்றிக்குக் கதையின் இந்த முடிவு ஒரு பெரிய காரணம். 'B&P' யிலும் இதே முடிவுதான் - ஆனால், அதே சந்தோஷம் இல்லை. இறுதில் லலிதாவும் டார்ஸியும் இணையும்போது, 'சரி, கல்யாணம் ஆயாச்சு,' என்ற மெத்தனம் வந்து சேர்கிறது. மூலக்கதையில், எத்தனை ஆயிரம் முறை படித்தாலும், கடைசியில் எலிசபெத்தின் கதி என்ன என்ற வேகம் வந்து பற்றிக்கொள்ளும்; 'இப்படித்தான் கதை முடியும்,' என்று தெரிந்தாலும்,பரபரப்பில் கொஞ்சமும் குறை இருக்காது - BBCயின் படைப்பிலும் அப்படியே. இதில்...ம்ஹ¤ம்.

'Bride & Prejudice' - ஒரு பெரிய மசாலாத் திருமணம் :-)
|