Shangri - La

Anything under the sun - in Thamizh!

Tuesday, September 09, 2003

சரித்திர புருஷர்

September 9, 2003.

இன்று ஒரு விசேஷம்.

1899இல், புத்தமங்கலம் என்ற கிராமத்தில், இந்தத் தேதியில்தான் ஒருவர் பிறந்தார். அந்தச் சமயத்தில், பின்னாளில் அவர் இத்தனை பெயர் வாங்குவார் என்பதையோ, இவ்வளவு புகழ் சம்பாதிப்பார் என்பதையோ யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

'தமிழ்த்தேனீ', 'கர்நாடகம்' என்கிற புனைப்பெயரிலெல்லாம் எழுதிக்குவித்து, பிறகு 'கல்கி' என்ற பெயரைத் தனதாக்கிக் கொண்டு, தமிழைப்பொறுத்தவரை எழுத்துப்புரட்சி செய்தவர். 'ஆனந்த விகட'னில் அவரது தலையங்கங்கள் மிகப் பிரசித்தம். அவருடைய ரசனையும், நகைச்சுவை உணர்வும் அதை விடப் பிரசித்தம். பின்னாளில், 'கல்கி' என்ற இதழ் ஒன்றையும் ஆரம்பித்துக் கொடி கட்டிப்பறந்த கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தியின் பிறந்த நாள்தான் இன்று.

'ராஜாஜி'யின் சார்பாகப் பேனாப் போர் நடத்தினார்','அன்றைய அரசியல் நிலைமையை கிழிகிழியென்று கிழித்தார்', 'தமிழி
சையை உயர்ந்த நிலமைக்கு கொண்டு வந்தார்', 'அரசியல், மற்றும் பத்திரிகை உலகின் அன்றைய ஜாம்பவான்கள் பலரின் நெருங்கிய சினேகிதராக இருந்தார்' என்றெல்லாம் கல்கியைப் புகழ்பவர்கள் உண்டு. அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,
கல்கியின் மேல் எனக்கிருக்கும் மரியாதைக்கு முதன்மையான காரணம், 'அற்புதமாகக் கதை எழுதினார்' என்பதுதான்.

எத்தனையோ தலைவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் நடுவில், நன்றாகக் கதை சொல்பவர்களுக்கு இருக்கும் மரியாதையே தனி. தினசரி வாழ்க்கையில் நமக்கேற்படும் கோபதாபங்களையும், அலுப்பு சலிப்புகளையும், எரிச்சல்களையும் மறக்கடிக்கச் செய்யும் வலிமை கதைகளுக்கு மட்டுமே உண்டு. அதிலும், யதார்த்த வாழ்க்கையின் சோகங்களையும்கூட சிரிக்கச் சிரிக்கச் சொன்னால், கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சோகம் மறைந்துவிடும் என்ற கட்சியைச் சேர்ந்தவள் நான். இந்த முறையில் எத்தனையோ பேர் கதை எழுதவும், சொல்லவும் முயற்சி செய்வார்கள். அந்த முயற்சியில் வெற்றி பெறும் சக்தி மிக மிக சிலருக்குத்தான் கை கூடும்.அவர்களுள் கல்கியும் ஒருவர்.

'நான் இன்றைக்குக் கடைக்குப் போனேன்' என்பதைக் கூட சுவையாகச் சொல்லும் கலை கல்கிக்குக் கை வந்திருந்தது. வரிக்கு வரி நம்மைச் சிரிக்க வைப்பதில் கெட்டிக்காரர் அவர். அவருடைய வர்ணனைகளும், அவர் கதை சொல்லத் தேர்ந்தெடுக்கும் களன்களும் விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.உதாரணத்திற்கு, 'ஆனந்த விகடன்' இதழின் தீபாவளி மலரில் வெளியான அவருடைய சிறுகதை, 'சுசீலா, எம்.ஏ'... அதன் கதாநாயகி,திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்து, 'எம்.ஏ' படித்து, மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறியவள். அதுவும் எதில்? சமையற்கலையில்!

அவரது எழுத்தில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம்- அவரது சிறுகதைகளில் அவர் தனது கதாபாத்திரங்களுக்குச் சூட்டும் பெயர்கள். உதாரணத்திற்குச் சில:--

லஞ்சநாத சாஸ்திரிகள்
விகாரம்பிள்ளை
இன்ஸ்பெக்டர் தீராத்துயரமய்யங்கார்
பெத்த பேராசைப் பிள்ளை

இவர்களெல்லோரும் 'புஷ்பப் பல்லக்கு' என்னும் சிறுகதையில் பவனி வருபவர்கள்.

இன்றைய உரைநடைத் தமிழுக்கும் அவர் முன்னோடி என்று சொல்வார்கள்.'கடமுட'வென்று பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி, தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக்கொள்ளாமல், எளிய தமிழில், புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் நடையில், நம்மை அவரது உலகத்திற்கு இழுத்துச் செல்வார்.

'Olde Worlde Charm' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கல்கியின் எழுத்தில் அது உண்டு. பழைய காலத்து விஷயங்களையும், அந்தக் காலத்தின் நிகழ்வுகளையும், சம்பவங்களையும் சுற்றி சுழலும் அவரது கதைகள் பல. அதிலும்,
பூர்வ ஜென்மத்து நினைவுகள், ஆளில்லாத் தீவுகளில் மாட்டிக்கொண்டு, அங்கு பழைமையான தமிழ்
மன்னர்களைக் காணும் கதாநாயகர்களின் மீது அவருக்குத் தனிப் பற்றுதல் உண்டு (உதா: 'மோகினித் தீவு').

சரித்திரம்? அதிலும், இன்றைய சரித்திர நாவல்களுக்கும் அவரே முன்னோடி. சரித்திர ஆதாரங்களைக் குறிப்பிட்டு, கதையில் வரும் இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று பார்த்து, அவர் எழுதியவைதான் 'பொன்னியின் செல்வன்','சிவகாமியின்
சபதம்', 'பார்த்திபன் கனவு' - இவற்றில் தன்னுடைய எழுத்தாற்றலையெல்லாம் பயன்படுத்தி, அவருக்கு மிகப் பிடித்தமான மாய உலகத்தைச் சாறு பிழிந்து கொடுத்துவிட்டார். 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் சோழ தேசத்து வர்ணனைகளையும்,
காவிரியாற்றின் அழகையும் படித்தால், அங்கேயே போய்விட்டாற்போலவே இருக்கும். அவரது மனதில் தனியிடம் பிடித்த சோழ தேசத்திலேயே, அதன் கோயில்களிலும், சின்னஞ்சிறிய கிராமங்களிலும் பயணம் செய்துகொண்டேயிருக்கலாம் என்று
தோன்றும்.

அந்த மூன்று நாவல்களையும் படித்தவர்கள் என்றென்றும் கல்கியின் தாள் பணிந்து கிடப்பவர்களே.:-)

கல்கியின் கதைகளில் இருக்கும் 'psycological touch' உம் அற்புதமாக இருக்கும். 'சிவகாமியின் சபதம்' நாவலில், 'சிவகாமி' என்னும் நடனமங்கையின் உள்ள உணர்வுகளை, காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் மனசஞ்சலங்களை
அவர் எழுதியிருக்கும் விதத்தைப் பார்த்தால், 'ஒரு ஆணால் எப்படி இவ்வளவு துல்லியமாக எழுத முடிந்தது ?' என்று பிரமிப்பு ஏற்படுவது நிச்சயம்.

இதையெல்லாம் அவர் எழுதிய காலத்தையும் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லாமே 1930க்களிலிருந்து, 1954க்குள். அந்தக் காலகட்டத்தில், 'taboo' என்று சொல்லப்பட்ட பல விஷயங்களை அவர் அனாயாசமாக எடுத்துக் கையாண்டிருந்திருக்கிறார். 'தமிழா? ஐய!" என்று எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டிருந்த நாளில், தனது எழுத்தை விழுந்து விழுந்து படிக்க வைத்தவர் அவர்.

இவர்தான் இப்படியென்றால், அவர் அடைந்த நண்பர்களும் பிரசித்தி பெற்றவர்களே. ராஜாஜியும், இவரும், ரசிகமணி டி.கே.சியும், சதாசிவம் அவர்களும் கொண்டிருந்த நட்பு அற்புதமானது.

மொத்தத்தில்...A great man.

பூர்வ ஜென்ம நினைவுகளிலும், காலதேச வர்த்தமானங்களைத் தாண்டிய உணர்வுகளில் நம்பிக்கை உள்ளவரும், சோழ தேசத்தின் மீது அளவிட முடியாத அன்பு கொண்டவருமான கல்கி, இப்பொழுதும் எங்கேயோ, ஏதோவொரு இடத்தில் பிறந்து,வளர்ந்து, வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று தோன்றுகிறது. அவர் எங்கே இருந்தாலும்...

Happy Birthday, Kalki.


|