Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, May 06, 2004

இருளில் ஒர் அலறல்

சமீபத்தில் நாகர்ஹொளே (கர்நாடகா) போய் வந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில், அந்த வனப்பகுதியில் சுற்றுலா வசதிக்காகக் கட்டப்பட்டிருந்த காட்டேஜ்களின் வாடகை இப்பொழுது எக்கச்சக்கமாக எகிறிவிட்டதென்றும் கூறினார்.

நான் நாகர்ஹொளேயைப் பார்த்து ஐந்து அல்லது ஆறு வருடங்களாவது இருக்கும்.

பச்சைப் பசேல் காட்டுப் பகுதியும், இருளில் விலங்குகள் நடமாடும் ஓசைகளும், வழக்கத்தை விடப் பெரிதான வண்டு, பாச்சை, நட்டுவாக்கிளி என வெவ்வேறு சைஸில் பூச்சிகளும் 'டக்'கென்று நினைவுக்கு வருகின்றன. நாங்கள் சென்றது ஒரு மே மாத்ததில். துல்லியமான பகல் வேளைகளில் காட்டுப் பகுதியை ரசிக்க இரு கண் போதவில்லை. இருட்ட ஆரம்பித்தவுடன்தான் தொடங்கியது பிரச்சனை. இராத்திரி ரோட்டில் நடக்கும்போது, காலை மிக மிக ஜாக்கிரதையாக வைத்து நடந்தது ஞாபகம் இருக்கிரது. அப்படியும், பெயர் தெரியாத ஜந்துக்கள் முகத்தைச் சுற்றி 'ஙொய்'யென்று பறப்பதை தடுக்க முடியவில்லை.

நாங்கள் நாகர்ஹொளே போய்ச் சேர்ந்த்பொழுது மாலை மணி ஆறு. இருளுடன் குளிரும் பரவ ஆரம்பித்திருந்தது. அங்கிருந்த கைடு ஒருவர், கன்னடம் கலந்த தமிழில் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காட்டேஜ்களைக் காட்ட அழைத்துச் சென்றார். (ஒன்றின் பெயர் 'மல்லப் பிரபா'. இன்னொன்றின் பெயர் 'கட்டப் பிரபா'. இரண்டுமே நதிகளின் பெயர்கள்.). பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு, பிரதான சாலையிலிருந்து பிரிந்து சென்ற பாதை ஒன்றில் அவருடன் இறங்கிச் சென்றோம். வனப்பகுதியைப் பற்றி விசாரித்துக்கொண்டு சென்றோம்.

"என்ன மாதிரி மிருகமெல்லாம் உண்டு?"

கைடுக்கு உற்சாகம் தாங்கவில்லை. "எல்லாம் உண்டு,' என்றார் பெரிய புன்னகையுடன்.

"எல்லாம்னா?"

"யானை, கரடி, நெறைய அனிமல்ஸ்..."

"இந்தப் பக்கமெல்லாம் வருமா?" நாங்கள் நடந்துகொண்டிருந்த இடமே காட்டை ஒட்டித்தான். பரவ ஆரம்பித்த இருளில் ஒவ்வொரு மரமும் விசித்திர உருவத்துடன் காட்சியளித்தது. பத்தடி தாண்டினால் ஒன்றுமே புலப்படவில்லை.

"ஓ. கண்டிப்பா வரும். ஈவினிங் 6.30க்கு கரெக்டா ஒரு யானை வரும். இந்தப் பக்கமெல்லாம் பிளிறிட்டுப் போகும்--"

"ஐ¨யையோ..."

"பயப்பட வேண்டாம்...அதுக்கு லேசா கிறுக்குப் புடிச்சிருக்கு. அவ்வளவுதான்."

நாங்கள் ஒருவரையருவர் கிலியுடன் பார்த்துக்கொள்ள, அவர் தன்பாட்டுக்கு கிறுக்குப் பிடித்த யானையை, ஒரு செல்லப் பிராணியின் குறும்புத்தனத்தை விவரிப்பது போல் புகழ்ந்துகொண்டிருந்தார். (நியாயம்தான். அவரை பொறுத்தவரை அந்த யானையும் செல்லப் பிராணிதானே.). நான் அவர் பேச்சைக் கேட்கவும் முடியாமல், கேட்காமல் இருக்கவும் முடியாமல், காட்டுக்குள் உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தேன்.

"பயப்படாதீங்க. இப்பல்லாம் வராது."

"ஆறரை மணிக்கு வரும்னீங்களே? " அப்போது மணி ஆறேகால்.

இன்னொரு பயம் தொற்றிக்கொண்டது. இராத்திரி சாப்பாட்டிற்கு வெளியே போக வேண்டாமா? என்ன செய்வது?

"சில சம்யம் அதுக்கு முன்னாலேயும் வரும்." என் நடையின் வேகத்தை எட்ட முடியாமல் என்னைச் சேர்ந்தவர்கள் பின்தங்க ஆரம்பித்தார்கள்.

ஒரு வழியாகக் காட்டேஜை வந்தடைந்தோம். எங்கள் கைடு பூட்டைக் கழற்றி, தாஜ் மஹாலைத் திறந்து காட்டும் தோரணையுடன் கதவுகளை விரியத் திறந்தார். உள்ளே நுழைந்து, தூசு தும்பையெல்லாம் தட்டி, ஜன்னல்களைத் திறந்தோம். பரவாயில்லை. நல்ல கெட்டியான கம்பிகள். உறுதியான மரம். ஹ. எந்த யானை எங்களை என்ன செய்து விடும்?

"சாப்பாட்டுக்கு என்ன வேணும்?" என்றார் எங்கள் வழிகாட்டி. அப்பா அவருடன் பேச, நான் எங்கள் குடியிருப்பை ஆராய்ந்தேன். பின்பக்கக் கதவு மூடியிருந்தது. அருகிலிருந்த ஜன்னலைத் திறந்தால், நேரெதிரே காடு. எந்தக் காட்டுப் பகுதிக்கும் நான் அவ்வளவு அருகில் இருந்தது கிடையாது. மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு. சாயங்கால வேளையின் 'ஜில்' காற்றை அனுபவித்தவாறு நான் கதவின் தாழ்ப்பாளை நீக்க முயல, வருடக்கணக்கான அழுக்கில் அது சிக்கித் தவிக்க, நான் விடாப்பிடியாக அதைப் பிடித்து இழுக்க...

கதவு கையோடு வந்துவிட்டது.

எண்ணம் 1: அடடா. நமக்கு எப்படியோ அசாத்திய சூப்பர்மேன்(வுமன்?) பலம் வந்து, கதவையே பிய்த்து எறிந்துவிட்டோம்.

எண்ணம் 2: சேச்சே. எனக்கு எந்த பலமும் வரவில்லை. கதவு அத்தனை லட்சணம். ஒரு இழுப்பு இழுத்தவுடன் பிய்த்துகொண்டு வந்துவிட்டது.


பின்பக்கக் கதவுகளைக் கைகளில் தாங்கியபடி, எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் இருளில் மறைந்த அடர்ந்த வனப்பகுதியைப் பார்த்துக்கொண்டு நின்றேன். என்னமாக காட்டேஜ் கட்டியிருக்கிறார்கள். இப்படி எங்கேயாவது உண்டா? கையோடு கதவு வந்து, எந்த சிக்கலும் இல்லாமல் எழில் பொங்கும் கானகக் காட்சியை இரு கண் கொண்டு ரசிக்க வசதியாக இருக்...

கிறுக்குப் பிடித்த யானை. கதவில்லாத காட்டேஜ்.

"ஐய்யோ, ஐய்யோ, ஐய்யய்யோ....!!!!!!!!"

(தொடரும்.)


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home