Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, May 16, 2004

மாடல் உலகம்

மேஜை மேஜையாக வித விதமான துணிகள் விரிந்து கிடக்கும். Silk, Felt, muslin இன்னும் என்னென்னவோ - சிலவற்றுக்கெல்லாம் பெயரே வாயில் நுழையாது. அதி நவீன உடையணிந்த மாணவர்கள் கையில் கத்தரிக்கோலும், கழுத்தில் மெகா சைஸ் மாலையாக இன்ச் டேப்புடனும் அலைந்துகொண்டிருப்பார்கள். எங்கேயாவது மூலையில் பாட்டு ஒலித்துகொண்டிருக்கும். அநேகமாக தையல் மெஷின்கள் இருக்கும் 'lab'இல்தான் கூட்டமும் வேலையும் அதிகம். இரவு பதினோரு மணி வரைக்கும் வேலை செய்துவிட்டு, வீடு செல்லும் மாணவ/மாணவிகள் நிறைய. (அடுத்த நாளே பிராஜெக்ட் சப்மிட் செய்ய வேண்டும் என்று அசாத்திய பிடிவாதம் பிடிப்பார்கள்.)

என்னுடைய தினசரி நாள் என்ன மாதிரித் தொடங்கும் என்பது எனக்கே தெரியாது. டைம்-டேபிள் என்று ஒன்று உண்டு. ஆனாலும், வகுப்பறையில் பாடம் எந்தத் திசையில் வேண்டுமானாலும் திரும்பும். சில சமயம் உடையலங்காரம் பற்றிப் பாடம் நடக்கலாம்; வரலாறு சம்பந்தமாக யாராவது லெக்சர் எடுப்பார்கள்; அல்லது ·பீல்ட் ட்ரிப் என்று வெளியே அழைத்துச் செல்வார்கள்...நேரம் போவதே தெரியாது.

வெளிநாடுகளில் இந்த மாதிரியான பாடம் நடத்தும் முறை சகஜமாக இருக்கலாம் - சென்னைவாசியான எனக்கு, மிக மிகப் புதுமையாக இருந்தது. பிடித்தும் இருந்தது. [நாற்காலியின் கைப்பிடிமேல் காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு, பாதி உட்கார்ந்து, பாதி படுத்துக்கொண்டு பாடம் கேட்பது நிச்சயமாக புதுமைதான்.:-)]

எவ்வளவுக்கெவ்வளவு சுதந்திரம் உண்டோ, அவ்வளவுக்கவ்வளவு உழைப்பு அவசியம். 'டிரெஸ் டிசைனிங்கா? அது ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்லியே? சும்மா கலர் கலரா வரையணும், இல்ல? ' என்று யாராவது கேட்கும் போது, முதலில் எரிச்சல் வரும்; அப்புறம் சிரிப்பு வரும். இரவு குறைந்தது இரண்டு மணி வரையிலாவது தினம் வேலை இருந்து கொண்டிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எங்கள் வகுப்பறைதான் எனக்கு மிகப் பிடித்த இடம். தனியாக லாக்கர் வசதி உண்டு - அறை முழுதும் கலர் பென்சிலும், பேப்பருமாக, வருங்கால டிசைனர்களின் கனவுகளுடன் சிதறிக்கிடக்கும். பார்த்தாலே உற்சாகமாக இருக்கும். ஒரு விடுமுறை நாளில் எங்கள் அறையின் ஒரு சுவர் முழுக்க எங்களை 'பெயிண்ட் அடி' என்று கையில் 'நெரோலக்'கைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். ஒரே ஒரு விதிதான். வகுப்பின் அத்தனை மாணவர்களும், தங்களுக்குப் பிடித்த மாதிரி எதையாவது வரைய வேண்டும்; அவர்களது கைவண்ணம் என்று தெரியும்படியாக எதையாவது கிறுக்க வேண்டும். [அடுத்த நாள் கல்லூரி முழுவதும் எஙள் அறையை வந்து பார்த்துவிட்டு தலையிலடித்துக்கொண்டது; அப்படி ஒரு ஓவியக் களேபரம் நடத்தியிருந்தோம்:-)

நான் படித்த NIFT (National Insititute of Fashion Technology) - என் அத்தனை வருடப் பள்ளி/கல்லூரி அனுபவத்தில் நான் பார்த்தேயறியாத உலகம். இப்படிக்கூட கல்லூரிகள் இயங்கும் என்று நான் நினைத்ததே இல்லை.:-). அந்த உலகத்தில் உடைகளும், உடைகளை வடிவமைப்பவர்களும், அந்தத் துறையை ஒட்டி வேலை செய்பவர்களுக்கும்தான்; வேறு எதற்கும், எவருக்கும் அதிக மதிப்பு கிடையாது. அவர்களுடைய வெளியுலகம் DKNY, Yves Saint-Lawrence, Christian Dior போன்ற உலகப் பிரசித்தி பெற்ற டிசைனர்களால் ஆனது; அவர்களும், அவர்களது உடையுலக வாரிசுகளும் ·பேஷன் உலகில் நடத்தும் புரட்சிதான் தினப்படி ·நியூஸ்; எங்களுக்கு F TV தான் பிரதான சேனல். தினசரி இரண்டு மணி நேரமாவது பார்க்க வேண்டும் என்பது எழுதப்படா விதி. :-) சும்மா பார்த்தால் போதாது. அடுத்த நாள், எந்த டிசைனர் என்ன டிசைன் செய்திருந்தார் என்றெல்லாம் காரசாரமாக விவாதிக்க வேண்டும்.

பேச்சுத் திறமைக்கு அவர்கள் கொடுத்த மதிப்பே தனி. 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்; என்னும் பழமொழி அந்த உலகத்திற்கு அதிகம் பொருந்தும். அதில் நியாயம் இல்லாமலில்லை - நம் பொருட்களைப் பற்றி நாம் நம்பிக்கையுடன் பேசினால்தானே, அடுத்தவர்களுக்கு அதை வாங்கும் ஆசை வரும்?

பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்துவிட்டு உண்ணுமாம் புராண காலத்து அன்னப்பட்சி. அந்தத் திறமையிருந்தால், ·பேஷன் உலகில் கொடி நாட்டுவது கஷ்டமேயில்லை.

பி.கு: Aaargh. 'இ.ஓ.அ' வைத் தொடர்கிறேன்.


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home