Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, May 23, 2004

இ.ஓ.அல(பிளி)றல் - #2

[Pssst! முதல் பகுதி இங்கே.]

கதவு கையோடு வந்துவிட்டதா? அதற்கப்புறம் கொஞ்ச நேரம் அமர்க்களமாக இருந்தது. 'குய்யோ முறையோ' என்று ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

அம்மா: என்னங்க, கதவு கையோடு வந்துடுச்சு?!

பெரியம்மா: சர்த்தான். உன் பொண்ணு கொஞ்ச நாளாவே 'Superman' பாக்க ஆரம்பிச்சா-

நான் : ஐய்யோ, ஐய்யோ! என்ன பேசறீங்க?

கைடு: அமைதி. அமைதி. எதுக்கு இவ்ளோ டென்சன்?

நான் (முணுமுணுப்பு): அதானே? இராத்திரியோட இராத்திரியா யானை உள்ள பூந்து ஒரு மிதி மிதிச்சு எல்லாரையும் சட்னியாக்கினா, என்ன டென்ஷன்?

அப்பா: என்னத்த அமைதி? என்ன காட்டேஜ் கட்டியிருக்கீங்க? ஆறரை மணியானால் யானை வந்து பிளிறும்னு டயலாக் வேற-

கைடு: ஹையோ, டயலாக் இல்லே சார். நெசமாவே...இப்ப மணி ஆயிருச்சு, வரும் பாருங்க.

நாங்கள் (மொத்தமாக): என்னது??!!

கைடு எங்களைப் பார்த்து மந்தகாசப் புன்னகை பூக்க, என்ன செய்வதென்று புரியாமல், நான் எடுத்த கதவை மீண்டும் ஜாக்கிரதையாக பொருத்தி வைத்தேன். தாழ்ப்பாளையும் போட்டு வைத்தேன்.

கைடு: இதை அப்பவே செய்திருக்கணும். சொம்மா கதவையெல்லாம் தெறந்துகிட்டு. ஜன்னலு வழியா பாத்துக்குங்க, என்ன? இனிமே கதவையெல்லாம் தெறந்துகிட்டுப் போவாதீங்க. பூச்சி பொட்டு கடிச்சிறும். இது காட்டுப் பகுதி.

பெரியம்மா: என்னது, பூச்சி பொட்டா? அட, அட. 'கதவு'ன்னு ஒண்ணு இருந்தா, அதையெல்லாம் யாராவது தெறப்பங்களா? கதவு பண்ணி வெச்சிருக்கிறதே, கையோட புடுங்கத்தான். என்ன நான் சொல்றது?

நாங்கள் ஒட்டுமொத்தமாக அவரை முறைக்க, ஜாலியாகப் பாட்டு பாடிக்கொண்டே ஜன்னலைத் திறக்கப் போய்விட்டார்.

அன்று இரவு சாப்பாட்டை அரையும் குறையுமாக முடித்துக்கொண்டு (யானை அன்று சாயங்காலம் லீவு விட்டுவிட்டது போல. அவ்வப்போது சத்தம் போட்டதோடு சரி. 'டாண்'ணென்று ஆறரைக்கு வரவில்லை. இதனால் நியாயப்படி எங்களுக்குப் பயம் குறைந்திருக்க வேண்டும், குறையவில்லை.)

இரவு மணி பத்தடித்து, தூக்கம் கண்ணைச் சுழற்ற ஆரம்பிக்க, பக்கத்துக் காட்டேஜிலிருந்து இன்னொரு அலறல் புறப்பட்டது.

ஆ, போச்சு. போச்சு. கடைசியில், எங்கள் எல்லோரின் பயத்தையும் கிளப்பி, ஒன்றுமறியா அப்பாவி வழிப்போக்கர்களைத் துவம்சம் செய்ய ஒரு மதம் பிடித்த யானை வந்துவிட்டது...

(இந்த இடத்தில் இன்னொரு 'தொடரும்' போட்டு எல்லோரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றி, தயக்கத்துடன் அதைக் கைவிட்டேன்.)

பதறியடித்துக்கொண்டு ஜன்னலைத் திறந்தோம். அப்பா கதவருகில் நின்றுகொண்டிருந்தார்.

"என்னப்பா? என்ன ஆச்சு?"

"நிலா எவ்ளோ அழகா இருக்கில்ல? வந்து பாரு."

அன்றிரவு அந்த இடத்தில் ஒரு 'மினி'-யுத்தம் நடந்திருக்க வேண்டியது...நாளும் கோளூம் குறுக்கே நின்றபடியால் (அப்பா 'சும்மா வெள்ளாட்டுக்கு...' என்று இழுத்தபடியாலும்), அது தடுக்கப்பட்டுவிட்டது.

************விடிந்ததும் எல்லோருக்கும் ஏகமாகத் தைரியம் வந்துவிட்டதில், 'யானையாவது பூனையாவது? பார்க்கலாம் ஒரு கை,' என்று இரவு முழுவதும் பிளிறியே தூக்கத்தைக் கெடுத்த யானையைப் பார்க்கப் புறப்பட்டோம். ம்க்கும். எங்களை வெறுப்பேற்றுவதாகக் கங்கணம் கட்டிக்கொண்டுவிட்டது போலும். பச்சைப் பசேல் என்று வனப் பகுதியை ரசிக்க முடிந்ததோடு சரி. யானை என்ன, அதன் வால் கூடக் கண்ணுக்குத் தெரியவில்லை.

அன்று முழுவதும் காட்டுப் பகுதியை சுற்றி பார்த்து ரசித்துவிட்டு, எங்களைச் சந்திக்காத யானைக்கும் உற்சாகப் பேர்வழியான கைடுக்கும் பிரியா விடை கொடுத்துப் புறப்பட்டோம். நாகர்ஹொளேயில் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் கண்ணாமூச்சி ஆடிய யானை, தேக்கடியில் காட்சி தந்தது...அது வேறு கதை.:-)


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home