Shangri - La

Anything under the sun - in Thamizh!

Tuesday, May 25, 2004

கனவு காணும் வாழ்க்கையாவும்...


கனவு என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்? நான்கு பக்கத்திற்கு மிகாமல் எழுதவும்.

(1000 மதிப்பெண். எவ்வளவு முக்கியமான கேள்வி பாருங்கள்.)

பதில்: கனவு பலவகைப்படும். என் அனுபவத்தில் அவையாவன:

1. (இரவுத்) தூக்கத்தில் கனவு காண்பது. (அருமையான Technicolourஇல் கனவுகள் வரும்.)

2. பகல் தூக்கத்தில் கனவு காண்பது . (எப்பொழுதாவது. பகல் தூக்கக் கனவுகள் நன்றாக இல்லை என்பதால் பகலில் தூங்கும் பழக்கத்தை ஒழித்துவிட்டேன்.)

3. தூங்காமல் கனவு காண்பது.( ஆ. இதுவல்லவோ கனவு? )

(தூக்கத்தில்) என் கனவுகள் விசித்திரமானவை. கனவே விசித்திரமானதுதான். நிஜ வாழ்க்கையின் விதிகள் எவற்றுக்கும் அவை கட்டுப்படாதவை. எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நிகழும். இந்த உலகில் செங்கல் கலரில் இருக்கும் நீதி மன்றம், கனவு உலகில், மழை மேகம் சூழ்ந்த மலை ஒன்றின் உச்சியில் 'தொங்கிக் கொண்டிருக்கும்'. (நான் 'கோர்ட்' வாசற்படி மிதித்த ஒரே தருணம் அதுதான் என்று நினைக்கிறேன்.). போலார் கரடியிலிருந்து, மகாபாரதக் கடோத்கஜன் வரையில் என் கனவில் வந்திருக்கிறார்கள்/றன. சில சமயம் நான் பார்வையாளியாக ஒரு ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். சில சமயம் நானே என் கனவுகளில் பங்கெடுத்துக்கொள்வதுண்டு. (ஒரு பித்துப் பிடித்த பெண் என்னைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொண்ட போது நடந்தது போல.:-)எனக்கு வந்த மிகத் தத்ரூபமான கனவுகளில் அது ஒன்று. சமீபத்தில் என்ன சினிமாவைப் பார்த்து மனம் இப்ப்டி ஒரு பயங்கர சம்பவத்தை உருவாக்கியது என்று அடுத்த நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

அந்தக் கனவில் வந்த இடம், பங்குபெற்ற ஆட்கள், அவர்கள் அணிந்திருந்த உடை...அத்தனையும் எனக்கு இப்பொழுது கூட நினைவிருக்கிறது. சம்பந்தபட்ட பெண்ணின் முகம் இப்பொழுதும் மனக்கண்ணில் தெரிகிறது. விசித்திரக் கனவுகளிலிருந்து 'சாகித்ய அகாடமி' விருது வாங்ககூடிய அளவு கற்பனை வளமுள்ள கதைகளை எழுதலாம் என்று நான் நினைத்துண்டு. மனம் எந்தக் கட்டுப்பாடும் அற்று மிதக்கும் வேளை அதுதான்.

பகல் கனவு...? அது ஒரு luxury. அந்த சுகத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லைதான்.

'Harry Potter and the Sorceror's Stone' கதையில், ஒரு விசித்திரக் கண்ணடி வரும். அந்தக் கண்ணாடிக்குப் பெயர், 'The Mirror of Erised.' அந்தக் கண்ணாடியின் மேற்பாகத்தில், சில வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கும்: Erised stra ehru oyt ube cafru oyt on wohsi. (கதையைப் படித்தவர்களுக்கு இதன் அர்த்தம் உடனே புரிந்துவிடும்.)

பகல் கனவும் அந்தக் கண்ணாடியைப் போலத்தான். நம் முகத்தையும், நம் இன்றைய நிலையையும் காட்டாது. மனதின் ஆசைகளையும் ஏக்கங்களையும், 'இப்படி இருந்தால், எப்படி இருக்கும்...?' என்ற கற்பனையையும் காட்டும். அதிலேயே நிலைத்துப் பொய், இந்த் வாழ்க்கை கரைந்துபோய் அந்தரத்தில் மிதக்கும் உணர்வைத் தரும்.

எத்தனை நேரம் மிதப்பது? தரையில் இறங்கத்தான் வேண்டும்.

'கனவு காணவே கூடாது, அது பெரிய தப்பு," என்று மெஸ்ஸேஜ் சொல்லும் சிவாஜி படம் ஒன்று பார்த்திருக்கிறேன். (பெயர் நினைவில்லை.). அந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் அதீதம் ஒருபக்கம் இருக்கட்டும். கனவு இல்லாத வாழ்க்கையை யாராலாவது நினைத்தாவது பார்க்க முடியுமா? கனவு காணாமல் ஒரு நாள் வாழ முடியுமா? அது ஒரு safety valve. உள்ளுக்குள் புகைந்துகொண்டிருக்கும் எண்ணங்களை வெளியே தூக்கியெறிய பயன்படும் அற்புத் சாதனம்.

நாணயத்திற்கு இரு பக்கம் உண்டே. கனவிலேயே நிலைத்துப்போய், இந்த உலகிற்கு வர முடியாமல் திண்டாடிப் போவதும் நடக்கும்தான். அது வேறு வகையான கொடூரம்.

இருந்தாலும்...கனவுக்கும் நனவுக்கும் இடையில் இருக்கும் அந்தக் கோடு எனக்குப் பிடித்திருக்கிறது. 'இந்த எல்லையைத் தாண்டினால் ஆபத்து' என்பதைப் புரிந்துகொண்டு இறங்கினால், கனவு காண்பது, ஆழமில்லாத கடல் பகுதியில் கால் நனைப்பது போலத்தான். சில சமயம், 'ஆழத்தில் என்னதான் இருக்கும்? பார்த்துவிடலாமா?' என்று தோன்றும். அதற்குமுன் சில ஆயத்தங்கள் செய்து, பயிற்சியெடுத்துக்கொள்வதும் அவசியம் என்பதும் புரிகிறது.

இப்போதைக்குக் கணுக்கால் ஆழம் போதும்.

|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home