Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, May 28, 2004

யார்? எங்கே? எப்போது?

addall.com
"...எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்,' திருமதி.ஆலிவர் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.

"உங்ககிட்ட ஒரு விஷயம் பகிர்ந்துக்கலாம்னு தோணுது. தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்க நல்ல மனசைப் பத்தி ரொம்ப பேர் சொல்லியிருக்காங்க," என்றார் எதிரில் இருந்த பெண்மணி.


'என்கிட்ட கடன் கேக்கப்போறாங்க,' என்ற எண்ணம் திருமதி.ஆலிவரின் மனதில் ஓடியது. 'இந்த மாதிரி எத்தனை பேரைப் பாத்தாச்சு...'

"எனக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும்," என்றார் திருமதி. பர்ட்டன்-காக்ஸ். "ஏன்னா...இந்தப் பொண்ணு இருக்கில்ல? சீலியா? அவளும் என் பையனும் - கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்காங்க."

"ஓ." என்றார் திருமதி. ஆலிவர், பட்டுக்கொள்ளாமல்.

"அப்படித்தான் ப்ளான். இந்த மாதிரி விஷயத்துலெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும், இல்லியா? வரப்போற பொண்ணு என்ன மாதிரி குடும்பம், அவங்க வீட்ல என்ன மாதிரி மனுஷங்கன்னு தெரிஞ்சுக்கிட்டுப் போகணும். அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு நெனைச்சேன். உங்களுக்கும் அவ குடும்பத்தைப் பத்தித் தெரியுமே? இதையெல்லாம் போய் வெளிய கேக்க முடியுமா? கேட்டா நல்லாத்தான் இருக்குமா? ஆனா, உங்ககிட்ட இது பத்திப் பேசறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, " பளீர்ப் புன்னகையுன் திருமதி. பர்ட்டன்-காக்ஸ் பேசினார்.

'நீங்க கேக்காமலேயே இருந்துருங்களேன்,' என்று நினைத்துக்கொண்ட திருமதி. ஆலிவர், மெதுவாக, "விஷயத்தைச் சொல்லுங்க," என்றார்.

"இல்லை...ஏன் கேக்கறேன்னா, உங்களுக்குத்தான் இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. கிரைம் த்ரில்லர்லாம் வேற எழுதறீங்க. இந்த பொண்னு இருக்கே...இதோட அம்மா அப்பாவைக் கொன்னாளா, இல்ல அப்பா அம்மாவைக் கொன்னாரா?"


*~*~*~*~*~*


அகதா க்ரிஸ்டியின் ஆரம்பகாலக் கதைகளில் ஓட்டம் அதிகம் இருக்கும், கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே என்று எங்கேயாவது சென்றுகொண்டேயிருப்பார்கள்; க்ளூ கண்டுபிடிப்பார்கள்; கடைசியில் கொலையாளியையும் கண்டுபிடிப்பார்கள் (ஆளுக்கு ஒரு முறையாவது வில்லனிடம் மாட்டிக்கொண்ட பிறகு)[ஒரு எ.கா: 'Why Didn't They Ask Evans?']. நாவலில் அதுவரை குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை கதாப்பாத்திரங்களிலும், எவர் கொலை செய்ய வாய்ப்பே இல்லையோ, அவர்தான் அநேகமாகக் குற்றவாளியாக இருப்பார். The essence of a 'whodunit'.

க்ரிஸ்டியின் கதைகளுக்கும், மற்ற 'யார் செய்தது?' கதைகளுக்கும் வித்தியாசம் - நடை. ஆகா, என்ன நடை. எடுத்தால் கிழே வைக்க முடியாத நடை. அவரது கதாபாத்திரங்களை அவர் கையாளும் விதம். உயிருடன் எழுந்து நடமாடவிடும் திறன். கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைத் துல்லியமாகக் கணக்கிடும் முறை.

அடுத்தடுத்து அவர் எழுதிய நாவல்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள். ஹெர்க்யூல் பாய்ரோவும் மிஸ் மார்ப்பிளும் வந்தவுடனேயே, ஒரே இடத்தில் உட்கார்ந்து பயங்கரமாக மூளையைக் கசக்கி விடை கண்டுபிடிப்பது அதிகரித்துவிட்டது. கொலை நடந்த இடத்தில் போய் நின்றுகொண்டு தடயங்கள் கண்டுபிடிப்பது குறைந்துபோய், கொலை நடந்த போது இருந்த சூழ்நிலை, அந்தச் சமயத்தில் அங்கிருந்தவர்கள் நடந்துகொண்ட விதம், என்றோ, எங்கேயோ, நடந்த உரையாடல்கள், அவற்றுக்கும் நடந்த கொலைக்கும் சம்பந்தம்...க்ரிஸ்டீயின் கொலைகள் எவ்வளவு கற்பனை வளம் நிறைந்தவை. 'ஒருவர் மாடியிலிருந்து விழுந்தார்' என்று வைத்துக்கொள்வோம். க்ரிஸ்டீயின் உலகில், மாடியிலிருந்து கீழே விழுந்தது நுணுக்கமான உளவியல் காரணங்களால் சூழப்பட்டு ...கடைசியில், 'அடுத்த பில்டிங்குக்காரர் பூத்தொட்டியைத் தட்டிவிட்டதுதான் மரணத்திற்குக் காரணம்' என்பது போல் ஒரு - ஒரு விசித்திர முடிவில் வந்து நிற்கும். அமானுஷ்யம் நிறைந்த சம்பவமாக மாற்றப்பட்டு, 'ஆ' என்று வாயைப் பிளக்க வைக்கும்.

என்றாலும்...ஏதோ ஒரு விதத்தில் அவர் சொல்வது அத்தனையும் நம்பக்கூடியதாகவும் இருக்கும். Pshycological analysis க்ரிஸ்டீயின் கதைகள் எல்லாவற்றிலும் முக்கிய இடம் பெறும். கதைகளில் உளவியல் கோணங்களைக் கொண்டு வருவதில் அசாத்திய திறமை படைத்தவர். "ஏன், இப்படியெல்லாம் கொலை நடக்கவே நடக்காதா என்ன?" என்று அவர் கட்சி பேச வைத்துவிடும். மேலே நான் மொழிபெயர்த்திருப்பது, அவரது 'Elephants Can Remember' கதையிலிருந்து ஒரு பகுதி. முதல் அத்தியாயத்திலேயே 'தடால்' என்று எழுந்து உட்கார வைத்துவிடுவார்.

கதைப்படி, சீலியா என்ற பெண்ணின் அம்மாவும் அப்பாவும், பல வருடங்களுக்கு முன்னால் அவர்களது வீட்டினருகே இறந்து கிடக்கிறார்கள். அருகில் துப்பாக்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால்தான், அம்மாவின் சகோதரி அருகேயுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து இறந்திருக்கிறாள்.

சம்பவம் நடந்தபோது, யார் என்ன செய்தார்கள்? நடந்தது கொலையா, தற்கொலையா ? என்பது கூட யாருக்கும் புரியவில்லை. 'ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு செத்தார்கள்' என்பதுதான் எல்லோரின் ஏகோபித்த முடிவு. அதுதான் எல்லோரையும் திருப்திப்படுத்தும் முடிவும்கூட.

ஆனால், சீலியாவின் மனதில் சந்தேகம் விழுந்துவிட்டது. அவளது அம்மா கொலைகாரியா? அப்பா கொலைகாரரா? இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா? அப்படியென்றால், ஏன் செய்துகொண்டார்கள்? இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டவர்கள்; அவர்களுக்குள் சண்டை வந்து யாரும் பார்த்ததில்லை. இருவருக்கும் வியாதி என்று எதுவும் இல்லை. அப்புறம் ஏன்...? தற்கொலை இல்லையென்றால், கொலையா? யார் செய்தது? எதற்காக?

ஹெர்க்யூல் பாய்ரோ - மீசையை நீவிவிட்டுக்கொண்டே, வருடக்கணக்காக புதைந்து கிடந்த உண்மைகளை தோண்டியெடுத்து வெளியில் கொண்டு வருகிறார். யார் யாரையோ கேள்வி கேட்டு, என்றோ நடந்த இரட்டைக் கொலைகளின் புதிரைக் கச்சிதமாக அவிழ்க்கிறார். நடந்தது இரட்டைத் தற்கொலை இல்லை - ஒரு கொலை, ஒரு தற்கொலை, ஒரு தண்டனை என்பதைப் புரியவைக்கிறார். [அது எப்படியென்றால்...கதையைப் படித்து நீங்களே தெரிந்துகொள்வது உத்தமம்.:-)]

க்ரிஸ்டீயின் நாவல்களை மழை நிறைந்த, சாம்பல் நிற நாட்களில் படிக்க வேண்டும். ஜன்னலின் வழியே சாரல் அடிக்க, அரை இருள் சூழ்ந்த அறையில், மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டும். அக்கம்பக்கத்தில் அதிக சப்தமில்லாத வேளைகளில் படிக்க வேண்டும். எங்கேயாவது 'கிரீச்'சென்று கதவு திறக்கும் சப்தம் கேட்டால்கூட, திடுக்கிட்டு எழுந்து உட்காரும் சூழலாக இருக்க வேண்டும். நாவலில் இருக்கும் அமானுஷ்ய உணர்வை அப்போதுதான் முழுதும் உணர முடியும் என்பது என் கணிப்பு ['கொளுத்தும் வெயிலில் பால்கனியில் உட்கார்ந்து கொண்டுதான் படிப்பேன்' என்று நீங்கள் வீம்பு பிடித்தால், நான் பொறுப்பில்லை.]

கிரிஸ்டியின் நாவல்களைப் படிக்கும் போது, நல்ல புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம் தோன்றும் ஆசைதான் எப்போதும் தோன்றும்: 'இந்தக் கதை எப்படியாவது என் நினைவிலிருந்து அழிந்து விடாதா?' மீண்டும் மீண்டும் புதிதாகப் படிக்கலாமே? :-)

************
ஒரு கு: இன்று மாலை 'போகோ'வில் Harry Potter. Yahoo!


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home