Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, June 03, 2004

கல்யாணப் பரிசு

எச்சரிக்கை: சொல்லிக்கொள்கிற மாதிரி ஒன்றுமில்லை. சும்மா போட்டு வைக்கலாம் என்று நினைத்தேன்.:-)))

திருமணங்களுக்குப் பரிசு கொடுப்பதைப் போல் கடினமான வேலை ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு முழுநீள Ph.d செய்யும் அளவுக்கு இதில் விஷயம் இருப்பதாக நான் அறிகிறேன். கொடுக்கும் பரிசு:

1. பரிசு பெறுபவர்களுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும்.

2. உபயோகமானதாக இருக்க வேண்டும். (இந்த இடத்திலேயே முதல் விதி அடிபட்டுப் போய்விடுகிறது. அழகான, உபயோகமான திருமணப் பரிசைத் தேட அண்டசராசரங்களைத்தான் கடக்க வேண்டும். அடுத்த முறை Andromeda Galaxyயில் கேட்பதாக உத்தேசம்.)

3. விலை உயர்ந்ததாக இருந்தால் நல்லது. (இல்லையென்றால், 'நட்பில் பணம் குறுக்கிடக்கூடாது' என்று அழகான தத்துவம் எதையாவது கைவசம் எடுத்து வைத்துக்கொண்டு, பலர் முன்னிலையில் சொல்லித் தப்பித்துக்கொள்ளும் குருட்டு தைரியமாவது வேண்டும்.)

இப்படி எல்லா 'பரிசு' விதிகளையும் சமாளிக்கும் ஒரு பொருளைத் தேடி கடை கடையாக ஏறி இறங்கி...பைத்தியம் பிடிப்பதுதான் மிஞ்சும்.

Corollary: பிறந்த நாள் விஷயத்தில் அவ்வளவு தொல்லை இல்லை - ஆண்கள் என்றால், கத்தி கபடாவில் ஆரம்பித்து, எலெக்ட்ரிக்கல் சமாச்சாரம் வரை 'கடமுட' வென்று எதையாவது கொடுத்தால் போதும் - இன்ஸ்டண்டாகத் திருப்தியடைந்துவிடுவார்கள். (:-))பெண்கள் என்றால், அழகான, ஆனால் உபயோகமற்ற பொருள் ஏதாவது. [உதா: 'உன்னைப் போல் ஒரு நண்பி எனக்கு உலகிலேயே இல்லை' என்று சொல்லும் பீங்கான் பாப்பா மாதிரி. Ugh. நியாயப்படி எனக்கும் இந்த 'அழகான, ஆனால் உபயோகமில்லாத' என்னும் விதி பொருந்தவேண்டும். என்னை வேறு விதமாக வளர்த்துவிட்டார்கள். (அட அட அட...)]

இந்த இடத்தில் ஒரு standard disclaimer: எல்லா ஆண்களுக்கும், எல்லா பெண்களுக்கும், மேற்கூறப்பட்ட விதி பொருந்தாது. (ஹப்பா.)

பொதுவாக இந்த மாதிரி ரெடிமேட் ரூல்களையெல்லாம் பயன்படுத்தாமல், கொடுக்க வேண்டிய பரிசுகளை நானே செய்து தருவது வழக்கம். அது முடியாத பட்சத்தில்தான், மேலே சொல்லப்பட்ட விதி அமலுக்கு வரும்.

நிற்க. என் நண்பர் ஒருவருக்கு இந்த மாதம் திருமணம். அமர்க்களமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பிறகு, பரிசு சமாச்சாரம் பற்றிப் பேச்சு வந்தது. பட்ஜெட் எகிறிய எகிறலில் எனக்கு உதறலெடுத்துவிட்டது. நெடு நேரம் மண்டையை உடைத்துக்கொண்ட பிறகு, நண்பரே பேச்சுவாக்கில் ஒரு க்ளூ கொடுத்தார் - தன்னையும் தன் (வருங்கால) மனைவியையும் வைத்து ஒரு ஓவியம் வரையப்பட்டால் நன்றாக இருக்கும் என்று.

அவரது ஆசையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்துவிட்டேன்.வேலை பாதி முடிந்துவிட்டது. முழுவதும் முடித்த பிறகு, ஓவியத்தை ஸ்கேன் செய்துவிடலாம் என்று எண்ணம். ஒரிஜினல் எப்படியும் என்னிடம் இருக்கப்போவதில்லையே.

நண்பர் இது பற்றி ஊரெல்லாம் ஒலிபரப்பிவிட, ஆளாளுக்கு 'எப்ப ரெடியாகும்?' என்று தொணதொணக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த நூற்றாண்டில்தான் ரெடியாகும் என்று சொல்லி வெறுப்பேத்திக்கொண்டிருக்கிறேன்.

அடுத்த பிரச்சனை: அடுத்த மாதம் இன்னொரு நண்பிக்குத் திருமணம். அதற்கு என்னத்தை செய்வது??!!


|

1 Comments:

  • At 9:38 PM, Blogger fieryblaster said…

    I have become a fan of your writings. Extremely well written blogs.

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home