நடனப் பித்து
Note: Hundredth post. Yahoo!
கலைகளில் பரிச்சயம் ஏற்பட்டு, அதில் சாதிக்க வேண்டும் என்று ஆசையுள்ளவர்களுக்கு, கொஞ்சம் பித்து அதிகம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 'Letting go' வாம். எதை பற்றியும் அக்கறை கொள்ளாமல், எடுத்துக்கொண்ட காரியத்தை சாதிக்க வேண்டுமானால், சமூகத்தைக் கொஞ்சம் மறக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது.
'Dancing in the Family' என்று ஒரு புத்தகம். நடனக் கலைஞர் சுகன்யா ரஹ்மான எழுதியது. சிறு வயதில், "கடவுளே, என் குடும்பத்தை சாதாரணமாக மாற்றிவிடேன்," என்று அடிக்கடி வேண்டிக்கொள்வாராம். அதிலிருக்கிறது ஆயிரம் அர்த்தம்.
1930க்களில், 'ராகினி தேவி' என்று ஒரு பெண்மணி, அமெரிக்காவில் இந்திய நடனங்களின் மகத்துவத்தை அதிகம் பரப்பி வந்திருக்கிறார். 'பரதநாட்டியம்' என்றால் இன்னதென்றே தெரியாமல், நாட்டியத்தின் பேரில் இருந்த ஆசை ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்துக்கொண்டு, சில பல புத்தகங்களைப் புரட்டி, 'இந்திய நடனம்' என்று ஒன்றை ஆட ஆரம்பித்தாராம். 'எஸ்தர் லுவெல்லா' என்று பக்கா அமெரிக்கரான இவர், நடனத்தின் பொருட்டு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று கணக்கு வழக்கேயில்லை. முதல் காரியமாக, பத்திரிகைகளில் கொடுத்த பேட்டியில், "நான் அமெரிக்கனே இல்லை. காஷ்மீரத்தைச் சேர்ந்த உயர் குலத்துப் பெண். அங்கு திபேத்திய லாமாக்களிடம், மனிதக் காதுகளால் உணர முடியாத இசையை வைத்து, மனிதக் கண்களுக்குத் தெரியாத அற்புத நடன வகைகளை அறிந்து கொண்டேன்(?!)," என்று கற்பனைக் குதிரையை ஏகமாகத் தட்டி விட்டிருக்கிறார். :-))) [நிருபர் இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியாமல், தலையைப் பிய்த்துக்கொண்டதாக கேள்வி. அடுத்த நாள் அவர் ஆடிய நாட்டியத்தைப் பார்த்துவிட்டு, "மேடை முழுவதும் மிதந்துகொண்டிருந்தார்," என்று ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார்.:-)]. பின்னாளில் ராகினி முறையாக நாட்டியம் பயிலவும் செய்தார் என்பது வேறு விஷயம். 'இந்திய நடனம்' பற்றி முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் பெயர் தட்டிக்கொண்டவர் இவர்.
சுகன்யா எழுதியிருக்கும் புத்தகம் - மூன்று தலைமுறை நடனக்கலைஞர்களைப் பற்றியது - அவரது பாட்டி, ராகினி தேவி. அம்மா இந்திராணி ரஹ்மான். அப்புறம் அவரது வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள். ஆரம்பத்தில் இந்திய நடனத்தைப் பிரபல்யப்படுத்த ராகினி பாடுபட்டதும், பின்னாளில் அவரையே மிஞ்சிக்கொண்டு பெண் இந்திராணி மூன்னேறியதும்...அவை எல்லாவற்றையும் விட சுவையானவை, நடனம் தாண்டிய அவர்களது வாழ்க்கை.
நாடு விட்டு நாடு பயணம் செய்யும் இரு நடனக்கலைஞர்களைக்கொண்ட குடும்பம் எப்படி நடந்திருக்கும்? வீடு முழுவதும் சீனா, அமெரிக்கா, ஜப்பான் என்று விதவிதமான பொருட்கள். தினம் தினம் ஏதோவொரு நிகழ்ச்சி. இந்த ஆட்ட பாட்டத்தை விரும்பாத பங்களாத்தேசத்து ஆயா. ஒவ்வொரு முறை வெளிநாட்டு நிகழ்ச்சி முடிந்து இந்திராணி வீடு திரும்ப டாக்ஸி சார்ஜ் கொடுக்கப் பணம் இல்லாமல் திண்டாடுவதும், "Ha, Miss India has returned from foreign! But no money to pay taxi!" என்று கூப்பாடு போடுவதும் வாடிக்கை.
ராகினி தேவியும் இந்திராணியும் நடத்தியிருக்கும் வாழ்க்கையைப் படித்தால், மலைப்பாக இருக்கிறது - வீட்டுக்குத் தெரியாமல், ராம்லால் பாஜ்பாய் என்ற பெங்காலியை ராகினி திருமணம் செய்துகொள்வதில் ஆரம்பித்து, பத்து வருடம் கழித்து அவரது நண்பருடன் யாருக்கும் தெரியாமல் இந்தியா வந்து, 'இந்திராணி' என்ற அழகிய பெண் குழந்தையைப் பெற்று, ஊர் ஊராக அலைந்து நடனம் கற்றுக்கொண்டது வரை...கற்பனைச் செய்து பார்த்தாலே, யாரோ இராட்டினத்தில் சுற்றிவிட்டது போல் இருக்கிறது. :-). அடுத்த வேளை சாப்பாடு யார் வீட்டில் என்பது கூடத் தெரியாமல் பல முறை அலைந்திருக்கிறார். நடனத்தைத் தவிர்த்து வேறு எதையும் அவர் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
பெண் இந்திராணி அவரையே மிஞ்சிவிட்டார். பதினைந்து வயதில் (காதல்)திருமணம் செய்து, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது கணவருடன் கொல்கத்தா வந்து தங்கி, கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலும், அப்போது நடந்த ரணகளத்திலும் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்ந்து, 1952வில் முதன்முதலாக நடந்த 'மிஸ் இந்தியா' போட்டியில் வென்று வாகை சூடியபின் அடைந்த புகழைக்கூட நடனத்திற்காக தூர வைத்து....சுகன்யா பிறந்தபோது அவருக்கு யாரும் ஒழுங்கான பெயர்கூட வைக்கவில்லை:-). 'Bohemian life' என்பது இவர்களது வாழ்க்கைக்குப் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது.
நடனத்தின் மேல் இவர்கள் மூவரும் கொண்டிருந்த காதல் - முழுக்க முழுக்க உண்மை. அதற்காக அவர்கள் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருந்தார்கள். மொழி தெரியாத சென்னையில் யாரார் வீட்டிலோ தங்கி பரதநாட்டியம் கற்றுக்கொள்வதிலிருந்து, ஒரிஸ்ஸா சென்று அழிந்து கொண்டிருந்த ஒடிஸ்ஸியைக் கற்றுக்கொண்டு பொதுமக்களிடையே அரங்கேற்றி, 'இவர்கள் பெயரைச் சொல்லாமல் இந்திய நடனம் முற்றுப் பெறாது', என்று பெயர் வாங்கிய மூன்று நடனமணிகள்.
அதிசயப் பெண்கள்தான்.
0 Comments:
Post a Comment
<< Home