Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, August 06, 2004

கல் சொன்ன கதை - #1

மந்திரசக்தி பெற்ற மகான் ஒருவர் உங்கள் முன்னால் வருகிறார். தமது மந்திரக்கோலை எடுத்து இரண்டு முறை சுழற்றுகிறார். உடனே நீங்கள் கால வெள்ளத்திலே பின்னோக்கி யாத்திரை செய்யத் தொடங்குகிறீர்கள். பின்னால், பின்னால், பின்னால் விரைந்து செல்கிறீர்கள். நூறு வருஷம், இருநூறு வருஷம், ஐந்நூறு வருஷம், ஆயிரம் வருஷங்கள் சென்றன. இன்னும் உங்கள் யாத்திரை நிற்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டு, 1934 ஆம் வருஷம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், காங்கிரஸ் போராட்டம், சட்ட சபைத் திட்டம், ஜில்லா போர்டுகள், முனிஸிபாலிட்டிகள், போலீஸ் ஸ்டேஷன்கள், காபிக்கிளப்புகள், ரயில், மோட்டார் வண்டிகள், நிலவரி வருமான வரித் தொல்லைகள், யுனிவர்ஸிட்டிகள், டெக்ஸ்ட் புத்தகங்கள், தினசரிப் பத்திரிகைகள், ஹாஸ்ய சஞ்சிகைகள், லா மெம்பர்கள், திவான் பகதூர்கள், முதன் மந்திரிகள், சர்வாதிகாரிகள் - இவையெல்லாம், இவர்கள் எல்லாம் திடீரென்று மறைவதைக் காண்போம்.

முத்து மாலைகளும் ரத்தின கிரீடங்களும் அணிந்த இராஜாக்களும், அவர்களுடைய பட்ட மகிஷிகளும், மந்திரி பிரதானிகளும், சபா மண்டபங்களும், நடன மண்டபங்களும், ரதங்களும், முத்துப் பல்லக்குகளும், குதிரை வீரர்களும் துவந்த யுத்தங்களும் புலவர்களும் அவர்களுடைய விவாதங்களும், சங்கீதக் கச்சேரிகளும், பொம்மலாட்டங்களும் புராண காலட்சேபங்களும், குதூகலமான குடியானவர்களும், அவர்களுடைய காதலிகளும், அவர்களுடைய பள்ளுப் பாட்டுகளும், ரிஷபங்களும், பசுக்களும், ஆயர்களும், பெரிய வனாந்தரங்களும், அவற்றில் மதம் பிடித்துத் திரியும் யானைகள், மான்கள், குரங்குகளும், அருவிக் குளங்களும் அவற்றில் மிதக்கும் அன்னங்களூம், மலைகளும் குன்றுகளும், கோயில்களும், சிற்பங்களும் சித்திரங்களும் நிறைந்து விளங்கும் ஓர் அற்புத உலகத்துக்கு உங்களை அந்தச் சித்தர் கொண்டு போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

மகாபலிபுரத்தில் பிரவேசித்ததும் இத்தகைய உணர்ச்சிதான் நமக்கு உண்டாகின்றது. ..

...இந்தக் கட்டுரையைப் படிப்பதினாலோ அல்லது முன்னம் ஏற்பட்டிருந்த விருப்பத்தினாலோ, மகாபலிபுரம் போக முற்படுபவர்கள், காலையிலேயே போய்விட்டுச் சாயங்காலம் திரும்பிவிடும் உத்தேசத்துடன் போவதில் பிரயோஜனமில்லை. சாதாரணமாய் மூன்று நாள்- குறைந்தது இரண்டு நாளாவது அங்கிருக்கத் தீர்மானித்துப் போக வேண்டும்...


- 'மகேந்திரஜாலபுரம்', கல்கியின் கட்டுரைத் தொகுப்பு:'ஸ்வப்னலோகம்'

1934இல் கல்கி பார்த்த மாமல்லபுரத்தின் அழகு, 2004இலும் அப்படியேதான் இருக்கிறது. அது அப்புறம்.

சனிக்கிழமை காலை பத்து மணிக்குச் சென்னையைவிட்டுக் கிளம்பி (சைதாப்பேட்டையில் ஒரு மணி நேரம் 'உடல் பாதுகாக்கும் கிடங்'கோ என்னவோ இருக்கிறதே? அதன் வாசலில் நின்று காத்துக்கொண்டிருந்த ஒரு மணி நேரம் சுவாரசியமானது.:-)) மாமல்லபுரம் நோக்கிக் கல்லிலே கலைவண்ணம் காணப் புறப்பட்டவர்கள்: நான், கமல், க்ருபா, ராம், லாவண்யா. வழியில் டாக்டர். கலைக்கோவனையும் முனைவர் நளினியையும் கூட்டிக்கொண்டு ஒன்றாகக் கல்லில் கரைவதாகத் திட்டம்.

சாயுங்காலம் மாமல்லபுரத்திற்குக் கிளம்பினால் போதும் என்று முடிவாகியதால், காலைப் பொழுதை என்ன செய்வது என்ற கேள்வி உண்டாயிற்று. பல்லாவரத்திற்கு சற்று அருகே, 'மாடம்பாக்கம்' என்ற சிற்றூரில், அழகிய சிவன் கோயில் ஒன்று இருப்பதாகக் கமல் சொல்ல, அங்கே செல்வது என்று முடிவெடுத்தோம்.

வழக்கமாகச் சென்னையை எரித்து, தார் ரோட்டை பொசுக்கியெடுக்கும் வெய்யில் அன்று இல்லை. 'பாவம் மக்கள்; விட்டுப் பிடிப்போம்' என்று ஒதுங்கிவிட்டார் போலிருக்கிறது. மேக மூட்டம். 'குளுகுளு'வென்று காற்று வீச, மாடம்பாக்கத்தை நோக்கிப் படையெடுத்தோம்.

'தேனுபுரீஸ்வரர்' ஆலயம் அகலத் திறந்த கதவுகளோடு எங்களை வரவேற்றது. நாயக்கர் காலத்து வெளிச்சுவர்கள் (நாயக்கர்களால் பின்னால் திருப்பணி செய்யப்பட்டது என்றாலும், உண்மையில், கோயில் சோழர் காலத்தியது என்று அறிந்தோம்) முழுவதும் நுணுக்கமாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. கொடிகளைத் தாங்கிய கொடிப்பெண்கள், இசைக் கருவிகளை இசைக்கும் விற்பன்னர்கள் என்று உள்ளங்கை அகலச் சிற்பங்கள் - வெளிச்சுவரில் பார்ப்பதற்கே ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. நிதானமாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு , உள்ளே நுழைந்தோம். ASI பாதுக்காப்பில் இருந்தாலும், 'மாடம்பாக்கம்' மக்கள் வழிபடும் தலமாக இருக்கிறது. அதனால் அனுமார் சிலைக்கு எண்ணையெல்லாம் தடவி, செம்பருத்தி செருகி வைத்திருப்பதையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், அழகழகான சிற்பங்கள் கொட்டிக்கிடந்தன. யானையின் மேல் பவனி வரும் முருகன், நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்தும் (அடக்கும்?! நரசிம்மர் பயந்த வாக்கில், ஏறக்குறைய படுத்துக்கிடக்கிறார்) சரபேஸ்வரர் என்று தூண் தூணாக நிறைந்துகிடக்கின்றனர். [புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்று கூறிவிட்டார்கள். ("அதுக்கெல்லாம் ரிட்டன் பர்மிஷன் வேணுங்க.") எங்களில் ஒருவர் "எல்லாப் பர்மிஷனும் இருக்கு" என்று தடாலடி அடித்ததத்ற்கு எந்தப் பயனும் இல்லை:-)]. மேற்பக்கம் - கூரையில், நுணுக்கமான வேலைப்பாடமைந்த இரத்தினக் கம்பளம் ஒன்றைக் கல்லில் செதுக்கிப் போர்த்தியது போல் இருக்கிறது. (புகை படிந்து கிடைக்கிறது என்பதுதான் வருத்தம்).

கோயிலின் உள்ளே இருளடைந்து கிடந்தது. 'கஜபிருஷ்ட' விமான அமைப்பை (அது வேறு ஒன்றுமில்லை, யானையின் பின்பக்கம் போன்று கோயிலின் விமானம் அமைக்கப்பட்டிருக்கும். முன்பக்கம் வண்டிக்கூடு போல இருக்கும், பின்னால் வளைந்து கீழிறங்கும்) உன்னிப்பாகக் கவனிக்க முடியவில்லை. இந்த விமான அமைப்பை உடைய கோயில்களில், கீழே, கர்ப்பக்கிருஹத்தின் வெளிப்புறச் சுவர்கள் ஏறக்குறைய வட்ட வடிவமாக இருக்கும். இந்த அமைப்பு, தமிழ்நாட்டுக் கோயில்களில் கொஞ்சம் வித்தியாசமானது. வளைந்த சுவர்கள் வெளி மண்டபங்களின் தூண்களோடு ஒட்டிவாறு நிற்க, இடைவெளியில் சூரியக் கதிர்கள் அங்கும் இங்குமாக மின்னிக் கொண்டிருந்தன. அந்த வெளிச்சத்தில், சுவரில் செதுக்கியிருந்த கல்வெட்டைப் படிக்க முயன்றோம். கோயில் அதிகாரிகளுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது போலும்; 'நேரமாச்சு, கெளம்புங்க," என்று அறைகூவல் விடுத்து, கிளப்பிவிட்டார்கள்.

மதியம் ஒரு மணிக்கு பெசண்ட் நகர் பீச்சின் ·புட்-கோர்ட்டில் சாப்பாடு. ஆற அமர அதை முடித்துக்கொண்டு, டாக்டர். கலைக்கோவனையும் அழைத்துக்கொண்டு, மாமல்லபுரம் நோக்கி நாங்கள் பயணித்தபோது, மதியம் மணி மூன்றேகால்.

(தொடரும். Ha ha!)

|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home