Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, June 08, 2005

Me and Meme

புத்தகம் படிக்கும் வழக்கத்திற்காக வாங்கிக்கட்டிக்கொள்ளூம் அனுபவம் எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறதோ, தெரியவில்லை. நான் திட்டு வாங்கிய சமயங்கள் ஏராளம், ஏராளம். சாப்பிடும்போது மடியில் புத்தகத்தை வைத்துப் புரட்டிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்திற்காக கணக்கு வழக்கில்லாமல் 'கடி' பட்டிருக்கிறேன். ("என்னிக்காவது சோறுன்னு நெ¨னைச்சு, பேப்பரைக் கடிக்கப்போற...")

இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் புத்தகப் பழக்கம் விடாமல் என்னைப் பீடித்துக்கொள்ள, இன்று வரையில் சாப்பாடும் புத்தகமும்ம் ஈருடலும் ஒருயிருமாக ஒன்றுடன் கலந்து போய்விட்டன.

அப்படியிருக்க, பிடித்த புத்தகம் பற்றி எழுத அமையும் சந்தர்ப்பத்தை விடுவதா, என்ன? அதுவும் நண்பர்கள் கேவியாரும் மீனாக்ஸ¤ம் சொல்லியனுப்பிய பிறகு... :)

இதோ என் பட்டியல்...

என் அறையின் அலமாரியில் கன்னாபின்னாவென்று கிடப்பவை (புத்தகத்திற்கு அழகு, இப்படிக் கிடப்பதே.):

ம் ? பல வருடச் சேகரிப்பின் பலன்: தமிழும் ஆங்கிலமும் கலந்து தோராயமாக... 450 - 500 வரை இருக்கும். நூலகம் சென்று ஷெல்·பு ஷெல்·பாகத் தேடியெடுப்பது தனி. :)

எவ்வளவுதான் சீரியஸ் விஷயங்கள் படித்தாலும்...
அடிப்படையில் நான் ஒரு fiction-junkie.

தமிழில் எனக்கு மிகப் பிடித்த புத்தகங்கள்:

1. ஹா. இதைச் சொல்வது ரொம்ப கடினமோ? 'பொன்னியின் செல்வன்' தான் முதல். 'சிறுவர் இல்லகியம்'/ 'பாப்பா மலர் கதை'/ 'ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம்...' - என்ன மாதிரியாக வேண்டுமென்றாலும் நக்கலடிக்கப்படலாம். இருக்கட்டும். இப்பொழுதே கிராண்ட் ஸ்வீட்ஸ் ரேஞ்சுக்கு சிறிய பெட்டியில் அடைத்து 'பாக்கெட் சைஸ்' நாவலாக விற்கிறார்கள். வருகிற வருடங்களில் இன்னும் 'வாசிப்பனுபவத்தில்' புதுமைகள் புகுத்தப்படும்போது...'பொ.செ'தான் முதலில் நிற்கும். ['காலத்தை வெல்லும் எழுத்து', என்று இலக்கிய உலகில் அடிக்கடி பயன்படும் ஒரு சொற்பிரயோகம் - அதுதான். அதுவேதான். ]

பிடித்த பகுதிகள்: மொத்த நாவலும். அதிலும் மிக மிகப் பிடித்த பகுதிகள்: குந்தவை-வந்தியத்தேவன் காதல், அருள்மொழிவர்மரும் வந்தியத்தேவனும் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளூம் சமயம், ஆதித்த கரிகாலன் மரணம், ஆழ்வார்க்கடியான் தடயடி சம்பவங்கள், கடம்பூர் சதித்திட்டம், நந்தினியை வ.தேவன் இடிந்த மாளிகையில் சந்திக்கும் கட்டம்...

2. 'தில்லானா மோகனாம்பாள்' - கொத்தமங்கலம் சுப்புவின் தமிழ் கொஞ்சி விளையாடும். நடனம், இசை, பற்றி அவர் பொழிந்து தள்ளியிருக்கும் வர்ணனைகளைப் படிக்க உட்கார்ந்தால்...புத்தகத்தை மீண்டும் கீழே வைப்பது சிரமம். 'தி.மோ' வை முதன் முதலில் படிக்க ஆரம்பித்த போது, அதைத் தூக்கிக்கொண்டே அலைந்து கை கடுத்தது நன்கு நினைவிலிருக்கிறது.

பிடித்த பகுதிகள்: சண்முகசுந்தரம்-மோகனாம்பாள் போட்டி நடனம், அவர்களிருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகும் தருனத்தில் ஊரில் ஏற்படும் பேச்சுக்கள், சண்முகசுந்தரம் மோகனாவுக்குத் தான் விரும்பிய வகையில் புடவை நெய்து தரும் சமயம். (படத்தில் இதெல்லாம் கிடையாது. ப்ச்.)

3. 'கரையெல்லாம் செண்பகப்பூ'- சுஜாதாவின் நாவல்களில் என்னை மிக மிகக் கவர்ந்தது இது. எனக்குப் 'புதையல்' கதைகளின் மீது பிடித்தம் அதிகம். இதிலும் 'எழுத்து மன்னர்' புகுந்து விளையாடியிருப்பார். சுஜாதா ஒரு 'கிம்மிக் எழுத்தாளர்' என்னும் குற்றச்சாட்டைக் கேட்கும் போதெல்லாம், 'இந்தக் கதையைப் படித்தவர்கள் அதைச் சொல்வார்களா?' என்று நினைத்துக்கொள்வது என் வழக்கம்.கொசுறாக, அவரது 'ஒரு சாதாரணக் காதல் கதை'யையும் லிஸ்ட்டில் சேர்த்து விடுகிறேன்.

பிடித்த பகுதிகள்: 'பழையனூர் நீலி' கதை, ஜமீந்தாரிணி ரத்னாவதியின் உடைந்த ஆங்கிலக் குறிப்புகள் ('Rathna not happy...') - படிக்கும்போதே மனம் கரைந்து போகும். சிநேகலதாவின் கொலை, அப்புறம் கதையின் உச்சமாகப் புதையல் கண்டுபிடிப்பு...chilling.

4. 'பூர்ண சந்திரோதயம்' - வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல். :). மகா, மெகா பழையது...ஆனால் அவர் கையாண்டிருக்கும் விஷயங்களையும், அவரது அபாரமான நடையையும் பார்க்க வேண்டும் நீங்கள். கதை என்னவோ காதல் கதைதான்...அதையே Alexander Dumas ரேஞ்சுக்கு சதி, கொலை, கொள்ளை, முகமூடியிட்ட கோஷா பெண்கள் என்று கலந்தடித்திருப்பார். எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தின் taboo விஷயங்கள் பலவற்றை இந்தக் கதையில் அவர் தைரியமாகக் கையாண்டிருக்கிறார். (ஒரே பெண்ணைக் கவர - கவனிக்க: 'கவர', திருமணம் செய்துகொள்ள அல்ல - ஐந்து பேர் திட்டம் போட்டுக் களமிறங்குவதில் ஆரம்பித்து...)

பிடித்த பகுதிகள்: 'பூர்ணசந்திரோதயம்' (கதாநாயகி) அறிமுகமாகும் இடம், துரை-துரைசானிகள் வாழ்க்கை முறை...எல்லாமே. ஒரு நூற்றைம்பது வருடக் காலக் கண்ணாடி மாதிரியுள்ள புத்தகம் இது. :)

5. 'இன்பக்கேணி' - பிரபஞ்சனின் நாவல். வில்லியனூரைச் சேர்ந்த ஆயி என்னும் கணிகையின் வாழ்க்கை. கதையைப் படித்து முடித்த போது, 'திறமையாக வரலாறும் கற்பனையும் கலந்த கதை' என்று நினைத்தேன். வேலை விஷயமாக பாண்டிச்சேரி செல்ல நேர்ந்த போது, அங்கிருந்த 'ஆயி' மண்டபம், சங்கராபரணி ஆற்றங்கரை, எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து, 'கதை கொஞ்சம், வரலாறு அதிகம்', என்று உணர்ந்தேன். அது ஒரு இனிமையான அனுபவம்.[கொசுறுத் தகவல்: பாண்டியில் ரிக்ஷாக்கரரை 'ஆயி மண்டபம் எங்கே?' என்று விசாரிக்க, அவர் குழப்பம்/நக்கல் கலந்த பார்வையுடன் 'ஆயில் மண்டபமா? இன்னாது?' என்று பதில் கொடுக்க...]

பிடித்த பகுதிகள்: பிரபஞ்சனின் நடை. வாசகர்களை அந்தக் காலத்திற்கே இட்டுச் செல்லும் திறமை. ஆயியின் நடை உடை, பாவனைகள், வர்ணனை...

6. 'கோபல்ல கிராமம்' மற்றும் 'தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்': கி.ராவின் master-pieces. வேறென்ன சொல்ல?

பிடித்த பகுதிகள்: அத்தனையும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கோபல்ல கிராமத்தின் வித்தியாசமான குணச்சித்திரங்கள். :)

7. 'சங்கச்சித்திரங்கள்' - ஜெயமோகன்: சங்கப் பாடல்களையும் இன்றைய வாழ்க்கையயும் அவர் முடிச்சுப்போட்டிருக்கும் விதம் அருமை. ஆரம்பத்திலுருந்துதான் படிக்க வேண்டும் என்றில்லாமல், எங்கே வேண்டுமானாலும் ஆரம்பித்து, எங்கு வேண்டுமானாலும் முடிக்கலாம். ஜெ.மோவின் வழக்கமான (சற்றே கடின) நடையில்லாமல், இதில் எளிமை தான் ஓங்கி நிற்கும்.

இவை தவிர ஜெ.கா, தி.ஜா, ராஜம் கிருஷ்ணன் என்று அத்தனை பேரையும் நூலகத்தில் அடிக்கடி சந்திப்பதுண்டு. அந்தப் பட்டியல் போட்டால் நாளை முழுவதும் எழுத வேண்டி வரும். ஆங்கிலத்திற்குச் செல்கிறேன். :)

ஆங்கிலத்தில் பிடித்தவை:

1. The Shoes of the Fisherman ( Morris West). Anthony Quinn நடித்த இந்தப் படத்தை யதேச்சையாக என்றோ ஓரிரவு பார்த்து அசந்து போனதின் விளைவாக இந்த புத்தகத்தைப் படித்தேன். போப் தேர்தல் சம்பந்தபட்ட புத்தகம். சைபீரியச் சிறை ஒன்றில் 17 வருடங்கள் சித்திரவதை பட்ட ஒரு கார்டினலை, போப் இறந்த பிறகு தடாலடியாக புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கிரார்கள். தனிமையில் பல வருடங்கள் கழித்த அவர், ரோமின் அரசியல நிலவரத்தையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.

பிடித்த பகுதிகள்: அமைதியான, ஆழமான நதி போல் செல்லும் நடை. மனசஞ்சலத்திற்கு இந்தப் புத்தகம் சிறந்த மருந்து. கிரில் லகோட்டா (அவர்தான் போப்) வின் கடவுள் பற்றிய சிந்தனைகள், அவர் போப்பாகத் தெந்தெடுக்கப்பட்ட பிறகு, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல், 'என் மக்களைக் காணச் செல்கிறேன்' என்று சாதாரணப் பாதிரியாக வேடமிட்டு 'ரோ'மை நகர்வலம் வருவது, வாட்டிகன் நகரத்தின் பிரச்சனைகளை சமாளிப்பது...எல்லாமே, எல்லாமே.

2. Memoirs of a Geisha (Arthur Golden) - சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜப்பானிய கீய்ஷா பெண் ஒருத்தியின் வாழ்க்கையின் சில வருடங்களைத் தொகுத்து (சற்றே கற்பனை கலந்து) வழங்கும் புத்தகம். முதல் வாசிப்பில் depressingஆக இருந்தது உண்மை. போகப் போக நடையின் வசீகரம் கவர்ந்துவிட்டது.

பிடித்த பகுதிகள்: கிமோனோ உடை வர்ணனைகள் (ஏயப்பா! அது என்ன பட்டுத் துணியா, அல்லது கனவுகளை இழைத்து நெய்த சமாச்சாரமா?). அன்றைய ஜப்பானிய (குறிப்பாக கீய்ஷாவின்) வாழ்க்கை முறை, கதை முழுவதும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் மெல்லிய சோகம்...

3. Bridget Jone's Diary (Helen Fielding) - ஒரு சாதாரணப் பெண்ணின் டைரி. ஒரு டைரி படிப்பது போல் சுவாரசியமான விஷயம் வேறு உண்டா? :)

பிடித்த விஷயம்: கதாநாயகியின் தினப்படி சில்லறைப் பிரச்சனைகள் - அலுவலகத்தில் ஆரம்பித்து, நண்பர் நண்பிகள் வரை, தினம் எழுதப்படும் டைரி போல் இருக்கும் நடை.

4. Pride and Prejudice (Jane Austen) - பத்தி பத்தியாக ஒரு பதிவே செய்திருக்கிறேன். :)

5. The Green Odyssey (Philip Jose Farmer): சைன்ஸ்-·பிக்ஷன் என்னும் மிகப்பெரிய கடலில் காலடி நனைக்க வைத்த அருமையான நாவல்.வேற்று கிரகத்தில் மாட்டிக்கொள்ளூம் மனிதன் ஒருவன். மூட நம்பிக்கைகளின் ஊறிப்போய் மூச்சு மூட்டிப் போயிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து அவன் எப்படி வெளியேறி தப்பித்துச் செல்கிறான் என்பதுதான் கதை.

பிடித்த பகுதிகள்: வேற்றுக்கிரக வர்ணனை, கதாநாயகன் முதன் முதலில் தப்பிக்கும் கட்டம், இறுதியில் அந்தக் கிரகத்தில் அற்புத ரகசியம் ஒன்றைக் கண்டுபிடித்து அவன் தப்பித்துச் செல்லும் இடம்...

6. Ashok Banker's Ramayana - நெருங்க முடியாத கடவுளை மனிதனாக்கி, அவனது உணர்வுகளில் என்னையும் பங்குகொள்ள வைத்த தொடர் நாவல்கள். இதைப் பற்றியும் முன்னமே எழுதியிருக்கிறேன்.

7. O'Henry's Shortstories - 'Gift of the Magi'தான் என்னை முதலில் படிக்கத் தூண்டியது என்றாலும், அப்புறம் முழுத்தொகுதியையும் படித்து முடித்து பிரமித்துப்போனேன். இவரளவுக்கு நடையாளுமை உள்ள எழுத்தாளரை ஆங்கிலத்தில் நான் இதுவரை பார்த்ததில்லை. Whew.

8.Harry Potter, மற்றும் Lord of the Rings Series. :)

இன்னும்...இன்னும்...இன்னும்...[கை வலிக்கிறது. ]

படிக்க நினைக்கும் புத்தகங்கள்...

1. Revenge of the Sith - Matt Stover
2. Dark Tower Series - Stephen King
3. பாதி படித்து வைத்திருக்கும் ராஜம் கிருஷ்ணனின் 'வனதேவியின் மைந்தர்கள்'
4. ஜெ.கா வின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'
5. Pied Piper - Nevil Shute

இவர்களும் இந்த Memeஇல் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்:

அருணா ஸ்ரீனிவாசன்
மனுஷ்யபுத்திரன்
'மழை' ப்ரதீப்
'வலைமொட்டுக்கள்' கண்ணன்
நேசகுமார்
சோடாபாட்டில்

என் ஆவல்தான். மற்றவை அவர்கள் கையில்... :)
|

10 Comments:

 • At 10:36 AM, Blogger மீனாக்ஸ் | Meenaks said…

  நன்றி இளவரசி. ஹாரி பாட்டரை டீல்ல விட்டுருவீங்களோன்னு பயந்துகினே இருந்தேன்.

   
 • At 10:43 AM, Blogger Pavithra Srinivasan said…

  LOL. ஹாரி பட்டரை விட்டுவிடுவதா? நடக்கிற காரியமா? :)

   
 • At 8:26 PM, Blogger Aruna Srinivasan said…

  Princess, thank you so much for your interest in my interests :-) I'll try to join you all soon with my list. :-) unfortunately, it was all in "those days..." in my later years the reading was confined to practical /newsbased publications. However, yes, it is indeed a good idea for discussion.

  P.S.I am yet to load Tamil software in this laptop I am working with. That explains my comment in english.:-)will be back in circuit soon.

   
 • At 1:14 AM, Blogger Chez said…

  இதென்ன?? இளவரசி தூக்கம் கலைந்து எழுந்து விட்டாளோ??

  சும்மா சொல்ல கூடாது.. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாமல் இருக்க முடியவில்லையே.. தமிழன் பேசாமல் இருந்தால்..:-)

  ஹூம் என்னைப் போலவே கொஞ்சம் பொறுமை அதிகம் உள்ள ஜீவன்களும் இருக்கிறார்கள்.. எனக்கும் மேலே இரு comment பதிவுகள்!

  என்னை பொறுத்த வரை 'குடன்பெர்க்' க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லையெனில், நம்மை குழந்தை பருவத்திற்கே மறுபடியும் அழைத்துச் செல்லும் ஹாரி பாட்டர் என்ற படைப்பில் லயித்திருக்க முடியாதே!! :-)

   
 • At 1:14 PM, Blogger Pavithra Srinivasan said…

  Aruna: Yay! You're back!! Thanks so much. You bet I'm interested. Am eagerly waiting for your post (which means you'll *have* to instal your software stuff)...

  Soon, I hope. :)

   
 • At 1:18 PM, Blogger Pavithra Srinivasan said…

  Magnus: வருக, வருக :) Harry Potterரில் லயிக்க வயது வரம்பெல்லாம் கிடையாது. 'மாஜிக்' சமாசாரங்களில் எனக்கு எப்போதுமே பிடிப்பு அதிகம் (உங்கள் வலைப்பதிவில் அடுத்த Harry புத்தக ரிலீஸுக்கு கவுண்டர் வைத்திருக்கிறீர்கள்; பார்த்தேன். ரசித்தேன்.:)

  இப்போதைக்குத் தூக்கம் கலைந்துவிட்டது உண்மை. :)

   
 • At 9:04 PM, Anonymous Anonymous said…

  அன்பின் பவித்ரா,


  அழைப்புக்கு நன்றி. ஆனால், நீங்கள் யூகித்தது போன்றே தற்போது நேரமில்லை. பிறகு சாவகாசமாக எழுதுகிறேன். தற்போது படிக்க நினைத்து எடுத்து வைத்து படிக்க முடியாமல் இருக்கும் புத்தகம், விவேகானந்தரின் ராஜயோகம், இது தற்போது எழுதி வரும் தமிழோவியம் தொடரில் டாக்டர்.எல்ஸ்ட் எழுதியுள்ள விஷயங்கள் தொடர்பாக சிலவற்றை அறிந்து கொள்வதற்காக எடுத்து வைத்துள்ளேன். அந்த அத்தியாயம் (தியானமும் சமாதியும்) மட்டுமே படிக்க முடிந்தது(அதிலும் அவர் குறிப்பிடும் இடம் மட்டுமே). மற்றபடி புரட்டியபோது மேலும் சில சுவாரசியமான தகவல்கள் தட்டுப் பட்டன. பொறுமையாக அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளேன்.

  மற்றபடி, நானும் பொன்னியின் செல்வன் ரசிகன் தான்( நீங்கள் கேட்டதால் இதைச் சொல்லவில்லை). ஆனால், குந்தவையை விட நந்தினியையே பிடிக்கும். அதற்கு அடுத்தாற்போல் அப்பாவிப் பெண் மணிமேகலை.

   
 • At 3:03 PM, Blogger Agnibarathi said…

  Helo iLavarasiyArE!!! ThangaL uthavi saRRE thEvai...tamizhil post seiyya. BTW, visit offnoimportance.blogspot.com, my new BLOg. ThangaLai enathu pathivil pArththu pala nAtkaL AgiRathu...veRRilai pAkku vaiththu azaikka vEndumO ;-)

   
 • At 12:37 AM, Blogger madhavan said…

  haa...thats one bad habit my wife tried to wean me away from and ultimately failed. Now, she serves my food along with a book, really!

   
 • At 5:51 PM, Blogger ரவியா said…

  ஆஹா ஆஹா ! வந்தாச்சா?

  //தோராயமாக... 450 - 500 வரை இருக்கும். நூலகம் சென்று ஷெல்·பு ஷெல்·பாகத் தேடியெடுப்பது தனி. :)
  //

  இதை படித்தவுடன் நூலகத்தில் "தேடி எடுப்பது" என்பதை எப்படி புரிந்துக் கொள்வது என்று குழப்பம்.

  ;)

   

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home