Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, August 19, 2006

கூத்துப்பட்டறையில் பரமார்த்த குரு
பரமார்த்த குருவின் கதை உங்களுக்குத் தெரியும்தானே? பதினெட்டாம் நூற்றாண்டில் ·பாதர் பெஸ்கி (தூய தமிழில் சொன்னால் பெசுகி :)) என்னும் வீரமாமுனிவர் எழுதிய நூல். பரமார்த்த குரு என்பவரும், அவரது அறிவற்ற, மூட சிஷ்யர்களையும், அவர்கள் அடையும் வெவ்வேறு அனுபவங்களைப் பற்றிய கதை. அன்றைய சமூகத்தைப் பார்க்கும் ஸடையர் பாணி.

கூத்துப்பட்டறையில் அதை நாடகமாக்கியிருக்கிறார்கள். அல்லையன்ஸ் ·ப்ரான்ஷேயில் பதினைந்தாம் தேதியிலிருந்து நடத்தி வருகிறார்கள். நாளைதான் (20th ஆகஸ்ட்)கடைசிக் காட்சி.

ஈமெயிலைப் பார்த்தவுடன் போய் வருவது என்று தீர்மானித்துக்கொண்டேன். அதன்படி, போய், பார்த்து, ரசித்து, வந்துவிட்டேன். வந்த சூட்டுடன் மனதில் நின்றவற்றை அப்படியே எழுதிவிடவேண்டும் என்ற எண்ணம் பீடித்துக்கொள்ள, ப்ளாக்கரும் கீபோர்டுமாக உட்கார்ந்துவிட்டேன் (சனிக்கிழமை சன் டீவியின் 'ஆனந்தம்' படத்தையும் கண்டுகொள்ளாமல்.)

கூத்துப்பட்டறைக்காரர்களின் காட்சியமைப்பையும் கதையமைப்பையும் இதற்கு முன்னேயே நான் ரசித்ததுண்டு: 'பொன்னியின் செல்வன்' நாடகமாக அமைத்தபோது. நான்கு மணி நேரம் எங்கே சென்றதென்றே தெரியவில்லை. அதன்பிறகு 'பட்டம்' என்றொரு நாடகம் பார்த்தேன். [இந்த நாடகங்கள் மேஜிக் லேண்டர்ன் குழுவால் அரங்கேற்றப்பட்டாலும், இவற்றில் முக்கியப் ப்ங்கு வகித்த பசுபதி (விருமாண்டி ஆள்தான்) கூத்துப்பட்டறை குழுவில் பல வருடங்கள் இருந்தவர்.] எதையும் வித்தியாசமாகப் பார்க்கும் அபூர்வத் தன்மை படைத்தவர்கள்.

பரமார்த்த குரு கதையையும் அப்படியே எடுத்திருக்கிறார்கள்.

நேரமாகிவிட்டதோ என்ற பரபரப்புடன் மதியம் மூன்று மணி ஷோவிற்குப் பறந்தடித்துக்கொண்டு Alliance Francaiseவிற்குச் சென்றால், அங்கு ஆளற்று ஏகாந்தமாக இருந்தது. பரமார்த்த குரு போஸ்டரைப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த வாட்ச்மேனைப் பிடித்து விவரங்கள் கேட்டு தபதபவென்று இரண்டாவது மாடிக்கு ஓடி பட்டுப்புடவையில் ஜொலித்த இரு பெண்மணிகளை முந்திக்கொண்டு (பாஸ் ஏதாவது வைத்திருந்தார்களோ என்னவோ?) டிக்கெட் வாங்கிக்கொண்டு அவசரமாகக் கையெழுத்துப்போட்டுவிட்டு அவர்கள் கொடுத்த காகிதம் கப்பெல்லாம் பொறுக்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தால்...

... சுடலை, இடுப்பில் சங்கிலியும் காதில் தொங்கட்டானும் தலையில் கொண்டையுமாக நாற்காலிகளுக்குப் பின்னால் 'தங்கு தங்க்'என்று குதித்துக்கொண்டிருந்தாள்.

அல்லையன்ஸ் ·ப்ரான்ஷேவின் தியேட்டர் அமைப்பை முழுதாக நான் ரசித்தது அந்தக் கணங்களில்தான்.

ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ஏதாவது ரிகர்ஸல் சமயத்தில் எக்குத் தப்பாக நுழைந்துவிட்டோமாவென்று நானும், என் பின்னால் வந்த பட்டுப்புடவைகளும் யோசித்துக்கொண்டிருந்த போது, அங்கேயிருந்த சல்வார் கமீஸ் பெண் புன்னகையுடன், "போங்க, போய் உக்காருங்க,"என்று - முன்னிருக்கையென்றால் என்னவென்றே அறியாத என்னை முன்ன்ன்ன் சீட்டில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டார்.

ஏறக்குறைய மேடையின் மேலேயே உட்கார்ந்துகொண்டிருப்பதுபோல் இருந்தது. அந்த தியேட்டரின் அமைப்பு அப்படி. நூறு பேர்தான் உட்காரலாம் போல அவ்வளவு சிறியதாக இருந்தது. நான் இருந்த இடத்திலிருந்து ஒரு படி இறங்கினால் அங்கே விளக்கெல்லாம் வைத்து இருட்டாக்கியிருந்தார்கள். திரும்பிப்பார்த்தால், "சூ பக்கரியா!" என்று பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது. சுடலை அடிவயிற்றிலிருந்து கத்திக்கொண்டு அமர்க்களமாகப் பாடிக்கொண்டிருந்தாள்.

அப்படியே ஒவ்வொரு படியாக இறங்கி வந்து, என் பக்கத்தில் நின்று புரியாத மொழியில் என்னவோ கேட்டுவிட்டு, அப்புறம் மேடைக்குச்சென்றாள். நாடகத்தின் 'கதைசொல்லி' அவள்தான். பரமார்த்த குருவின் சிஷ்யன்/சிஷ்யையாக அவள் எப்படி வந்து சேர்ந்தாள் (நடித்தவர் ஆனந்தசாமி. எம்பிஏ படித்தவராம். அவரது வெடுக்கும் சொடுக்கும், ஆட்டமும் பாட்டமும் ... பின்னியெடுத்திருக்கிறார்.)அப்புறம் பரமார்த்த குருவும், அவரது சிஷ்யர்கள் மிலேச்சன், பேதை, மூடன், மட்டி, மற்றும் மடையன், எல்லோருமாகச் சேர்ந்து அடிக்கும் 'கூத்து' தான் மிச்சக் கதை.

நடித்தவர்கள் எல்ளோருமே உணர்ந்து, ரசித்து செய்திருக்கிறார்கள். அவர்கள் propsசை பயன்படுத்தியிருக்கும் விதமே தனி. ஒரு சில குச்சிகள், நீலத்துண்டு, இவற்றை வைத்தே கதையை அற்புதமாக நகர்த்திக்கொண்டு போகிறார்கள். நதியைக் காண்பிக்க ஒரு நீலத்துணியைத் தரையில் விரித்து ஒரத்தில் கலர் கலராக கிழிசல்களைத் தைத்திருக்கிறார்கள். அசப்பில் கொஞ்சம் குப்பைகள் ஒதுங்கியிருக்கும் நதி போலவே இருக்கிறது.

பரமார்த்த குருவின் அசட்டு சிஷ்யர்கள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். நதியில் சுளுந்தைப்போட்டு ஆற்று நீரை சோதிக்கும் போது, குதிரை முட்டை வாங்கும்போது, இறுதியில் குருவைப் பாடையில் கொண்டு போகும் போது ... அழுது, அரற்றி கத்தி, கும்மாளமிட்டு - மேடையே அதிர்கிறது ... ஆடியன்சாகிய நாங்கள் சிரிக்கும் போது அவர்களுக்கும் சிரிப்பு வந்துவிடுகிறது (பரமார்த்த குரு சிரித்துக்கொண்டே 'தம்பிமார்களை' கண்டித்தது தமாஷாக இருந்தது.)

காதில்லாத, நொண்டிக் கிழட்டுக் குதிரை கல்யாணராமனாக வந்து கலக்கியவர் சோமசுந்தரம். அவர் தலையில் குட்டி குட்டிப் பின்னல்களாகப் போட்டு, பின்னால் ஒரு வாலைக் கட்டிவிட்டிருந்தார்கள். மனிதர் நடித்ததைப் பார்த்தால், வேறொரு ஜென்மத்தில் குதிரையாகத்தான் இருந்திருப்பாரென்று நினைக்குமளவுக்கு இருந்தது. [எங்களுடன் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஐந்து வயதுப் பையன், மேடையில் நடந்துகொண்டிருந்த நாடகத்தால் ஈர்க்கப்பட்டு, அருகில் போக ... குதிரை கல்யாணராமன் அவனைப் பார்த்து எக்ஸ்ட்ரா கனைப்பு கனைக்க, அலறிக்கொண்டு அம்மாவிடம் ஓடிவிட்டான். அதைப் பார்த்துவிட்டுக்கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம்.] ஒவ்வொரு முறை சுடலை வந்த போதும் ஒரு கலக்கு கலக்கினார். அப்படியே நடுவில் வந்த மத்தியஸ்தம் செய்யும் பெரியவரும், அருகில் குடித்துவிட்டு 'ஹெஹ்ஹே'யென்று ஆடும் வேலையற்ற கிராமத்தானும். Secondary charactersசை எவ்வளவு கவனமெடுத்து செய்திருக்கிறார்கள்!

நடிகர்களின் body languageதான் என்னை அதிகம் வியக்க வைத்தது. நாடகத்தில் ஒரு காட்சியில் சுடலையும் குருவும் பேசிக்கொண்டிருக்கும்போது கூட, ஓரத்தில் நிற்கும் குதிரை கனைத்துக்கொண்டு, கர்புர்ரென்று சத்தமிட்டுக்கொண்டு, சீடர்களில் ஒருவரை முட்டிக்கொண்டேயிருக்கிறது. சீடர்களும் அவரவர் முட்டாள்தனமான பாணியில் இவர் அவரைத் தள்ளி, அவர் இவரைத் தள்ளி - அதுவும் பேதையாக நடித்த ரமேஷ் அமர்க்களம் செய்திருக்கிறார். பேக்குத்தனம் personified. ஒரு நிமிடம் கூட நாடகம் பார்க்கும் நம் கவனம் வேறெங்கும் திரும்பாதபடிக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். நாடகம் பார்க்கும் நம்மையும், மொத்த அரங்கையுமே மேடையாகப் பயன்படுத்துகிறார்கள் - குதிரையைக் காணாமல் எல்லோரும் தேடும்போது, பார்வையாளர்களையும் கேட்கிறார்கள். நாம் உட்கார்ந்திருக்கும் சீட்டுக்குக் கீழெல்லாம் தேடுகிறார்கள். [பேதை என்னிடம் வந்து "எங்க போச்சு குதிரை?" என்று கத்திவிட்டுப் போனான். :)]

நாடகம் முடிந்ததும், இயக்குனர் அபர்ணாவின் வித்தியாசமான தலையாலங்காரத்தைப் பார்த்து அதிசயித்துவிட்டு, அவரது அபாரத் திறமையைப் பாராட்டிவிட்டு வந்து சேர்ந்தேன்.

ஒரு முறை பார்க்கலாம். வாய்விட்டு சிரிக்கலாம். Good show.
|

5 Comments:

 • At 8:24 AM, Blogger Boston Bala said…

  Thanks for the review

   
 • At 11:44 AM, Blogger The last adam said…

  :(...I wish I were at chennai...how sad! thanks for the review :)

   
 • At 4:19 PM, Blogger Pavithra Srinivasan said…

  Bob: Thanks :)

  Adam: Don't you wish? :)

  PS: Hey, I'm getting reviews from Bobs and Adams ...

  There's a moral there, somewhere.

   
 • At 11:24 AM, Blogger ப்ரியன் said…

  நல்ல விமர்சனம் தந்தமைக்கு நன்றி பவித்ரா...கடைசி நாள் கடைசி காட்சியை நம் வலைப்பூ நண்பர்கள் சிலருடன் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது...மிகவும் ரசித்துப் பார்த்தோம்...

  திரைக்கதை அமைப்பிலிருந்து இசை , ஒளியமைப்பு வரை எல்லாமே அருமையாக இருந்தது...

  நாடகம் பார்த்து வந்த அடுத்த இரு நாட்கள் "சூ பக்கரியா" பாட்டு நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருந்தது என்னவோ உண்மை...

  அன்றைக்கே வலைப்பூ நண்பர் இந்நாடகத்தைப்பற்றி ஒரு பதிவு இடுகிறேன் என்றார் வாரம் ஒன்றாச்சு இன்னும் காணோம் :)

   
 • At 8:19 PM, Blogger Pavithra Srinivasan said…

  ப்ரியன்: 'பரமார்த்த குரு'வை பார்த்துவிட்டீர்களா? வாழ்த்துகள். அவர்கள் போடும் நாடகங்களைப் பார்ப்பதே அபூர்வம்தான். அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். அவர்கள் போடுவதும் தெரியாது, போவதும் தெரியாது. எங்கே என்று திரும்பிப் பார்ப்பதற்குள் காணாமல் போயிருப்பார்கள். அதுதான் என் அனுபவம். :)

  நண்பர் போஸ்ட் செய்ததும் சொல்லுங்கள். :)

   

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home