Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, May 02, 2004

மிதிலையின் முற்றுகை

The Siege of Mithila. அஷோக் பேங்க்கர் (Ashok Banker)எழுதும் இராமாயணத்தின் இரண்டாம் பகுதி. சமீபத்தில்தான் படித்து முடித்தேன். முதல் பகுதியான 'The Prince of Ayodhya' பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதைப் படித்த உடனேயே, 'இரண்டாவது பகுதியை இந்த நிமிடமே படித்து முடிக்கவேண்டும்' என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆயிரம் முறை படித்த கதைதான். இருந்தாலும் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை.

The Siege of Mithila
இரண்டாவது பகுதியும் கைக்குக் கிடைத்தது. முதல் பகுதியைப் போல், இதிலும் விருவிருப்புக்குக் குறைவில்லை. முதல் பகுதி, இராம லக்ஷ்மணர்கள் தாடகையை வதம் செய்வதோடு முடிகிறது. இரண்டாம் பகுதி, மிதிலையின் மீது ஏற்படும் தாக்குதலையும், அதை இராமர் (விசுவாமித்திரர் துணையோடு) எப்படி முறியடிக்கிறார் என்பதோடு நிறைவு பெறுகிறது. [எனக்கு ஒரு சந்தேகம்: வால்மீகி இராமாயணத்தில், இராவணன் மிதிலையின் மீது நேரடித் தாக்குதல் ஏதேனும் நடத்துகிறானா என்ன? இது வரை எழுதப்பட்ட இராமாயண வகைகளையெல்லாம் படித்துவிட்டு எழுத ஆரம்பித்ததாகத்தான் பேங்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்].


பேங்க்கரின் இராமாயணத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய. அவற்றில் பிரதானமானது: இராமனை மனிதப் பிறவியாகச் சித்தரித்திருப்பது. [இராமாயணமே அதைச் சுற்றித்தானே பின்னப்பட்டிருக்கிறது என்கிறீர்களா? இராமாயணம் மனித உருவெடுத்த தெய்வத்தைக் காட்டுவது உண்மைதான். ஆனால், அதிலும் தெய்வீகத்தைத்தான் பிரதானப்படுத்தியிருப்பதாக எனக்குத் தோன்றும்.] சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் கோபதாப எரிச்சல்களுடன் அவனைக் காட்டியிருப்பது வித்தியாசம். பதினாறு வயது வாலிபனாக, தம்பிகளுடன் விளையாடி, மரமேறி மாங்காய் பறித்து [அதை உப்புடன் தொட்டு சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டு]...ரசனையுடன் இராமனை உயிருடன் கண்முன்னால் நடமாட விட்டிருக்கிறார். உண்மையைச் சொல்கிறேன்: இராமனைக் கடவுள் தன்மை கொண்ட அவதார புருஷனாகப் பார்த்து எனக்கு அலுத்து விட்டது. தெய்வம் மனிதனைப் போல் வந்ததால் அல்லவா, அந்த அவதாரத்திற்கு அவ்வளவு பெருமை? அப்படியானால், மனிதனாக அவரைச் சித்தரிப்பதில் அல்லவா, அதிக கவனம் வேண்டும்? அவதாரம் கோடிக்கணக்கான அசுரர்களை கொன்று குவித்ததில் என்ன அதிசயம்? அதே காரியத்தை சாதாரண மனிதன் செய்ததில்தானே விஷயம் இருக்கிறது? நான் படித்த/கேட்ட கதைகள் எல்லாம், 'larger than life' போன்ற உருவத்தை, சகல வித்தை கற்ற, தவறே செய்ய முடியாத கடவுளைத்தான் காட்டின.

இந்த இராமன் இனிமையானவன். எல்லோரையும் போல் பேசுகிறான், சிரிக்கிறான், அழுகிறான், அலுப்பும் சலிப்பும் குழப்பமும் அடைகிறான். தசரதன் கைகேயியின் ஜாலத்தில் மயங்கி, தன் பட்டமகிஷியை உதாசீனப்படுத்தும்போது, தன் அம்மா கவுசல்யாவின் சார்பாக ஆத்திரம் அடைகிறான் [இது கண்டிப்பாகப் புதுசு. புத்தக வாசிப்பின் போது, இந்தச் சம்பவம் குறித்துப் பேச்சு வந்தது. 'இராமாயணத்தில் இப்படி ஒரு சம்பவம் இருப்பது உண்மையா, அல்லது நீங்களே கதை கட்டிவிட்டீர்களா?' என்று ஒரு வாசகர் காரசாரமாகக் கேட்க, இன்னொரு வாசகர் பதில் சொல்ல, விவாதம் முற்றி, ரகளையாகிவிட்டது.:-)] சீதையின் அழகைப் பார்த்து சொக்கிப் போகிறான். தம்பியின் நக்கலுக்குப் பதிலடி கொடுக்கிறான். செல்லமாக அடித்துக்கொள்கிறான். 'அடக்கமான பையன்' இமேஜை விட இது பரவாயில்லை. இராமர் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை நம்ப முடிகிறது.

இதை நான் குறிப்பிட்ட போது, "...You've just summed my exact feelings when reading those earlier versions--particularly Ramcharitramanas. I'm human. I want to know how another human being would have dealt with such challenges and experiences, Rama the man, not the avatar, even though he may have been one. That's where my desire to write the Ramayana sparked." என்றார் பேங்க்கர்.

ஏறக்குறைய இதே எண்ணம் மகாபாரதத்திலும் எனக்கு உண்டு. கிருஷ்ணர் எவ்வளவு ஜாலியான பேர்வழி? கோபிகை லீலைகளைத் தாண்டி, அவருக்கு மிக நுண்ணிய personality உண்டு. கிருஷ்ணரை தெய்வமாக மட்டுமே பார்க்காமல், சாதாரண மனிதப் பிறவியாக எண்ணிப் பாருங்கள். அவர் எத்தனை சாதித்தார் என்பதும், அவர் சமாளித்த பிரச்சனைகளின் ஆழமும் புரியும். அதையெல்லாம் ஆராயாமல், பொத்தாம்பொதுவாக அவதாரமாக உயர்த்திவிட்டார்கள். அவரது personalityஇன் நுணுக்கங்களை அணு அணுவாக ரசிக்க வழி ஏற்படவில்லை. ப்ச்.

கிருஷ்ணரைக் கடவுளாக வழிபடுவது ஒரு விதம். Character analysis என்பது வேறு.

பேங்க்கர் கதையை நகர்த்திச் செல்லும் விதம், இப்பொழுது ஆங்கிலத்தில் வெற்றி நடை போடும் fantasy கதைகளை ஒத்து இருக்கிறது. மந்திரஜால வித்தைகளை நம்பும்படிச் சொல்லியிருக்கிறார். [அதெல்லாம் கடவுள் சமாச்சாரம் என்று நழுவாமல்.]. அயோத்தியையும், மிதிலையும் தெருத் தெருவாக, வீதி வீதியாக, அரண்மனை முழுவதையும் நிறுத்தி நிதானமாக வர்ணிக்கிறார். தத்ரூபமாக இருக்கிறது. சில இடங்களில் அதே வர்ணனை அதீதமாக இருந்தாலும், பொறுத்துக்கொள்ள முடிகிறது. நடையில் விருவிருப்பைக்கூட்ட வார்தைகளை அதிகப்படுத்தியிருக்கிறார். [படிக்கும் போது மனம் தானே edit செய்வதைத் தடுக்க முடியவில்லை.:-)]. ஆனாலும், கதை முடியும் போது, 'அடுத்தது என்ன?' என்ற பரபரப்பு ஏற்படுகிறது. அடுத்த பகுதி எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்.

Lord of the Rings படம் பார்த்தபோது, அவர்கள் கதையைக் கொண்டு சென்ற விதத்தையும், அந்த பிரம்மாண்டத்தையும், கதாபாத்திரங்கள் செதுக்கப்பட்ட நேர்த்தியையும் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. ஏக்கமாகவும் இருந்தது. நம் புராணங்கள் இவற்றுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. இவற்றையெல்லாம் யார், எப்போது, ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் பத்து நிமிடம் வரையில் இடைவெளி கொடுத்து நேரத்தை ஓட்டாமல், இவ்வளவு பெரிய அளவில் எடுக்கப்போகிறார்கள்?


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home