Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, November 13, 2004

புல்லும் பூண்டும்

"ஞாயிற்றுக்க்¢ழமை அன்று நீ புல் பிடுங்குவாய்," என்று என்னிடம் யாராவது சொல்லியிருந்தால், 'ஹா! இருக்கவே முடியாது,' என்று சத்தியம் செய்திருப்பேன். உண்மையில், இந்த கான்க்ரீட் காட்டில் இரண்டு மணி நேரம் பிடுங்குமளவுக்குப் புல் பார்க்கில் கிடைப்பதே அபூர்வம் [சமீபத்தில் பெய்த மழையில் முளைத்த புல்லையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது:-). அதனால், அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது அதிசயம்தான்.

ஞாயிற்றுக்கிழமையன்று திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் அமர்க்களமாக இருந்தது. கோயில் முழுதும் கூட்டம். எல்லோரும் 'பரபர'வென்று வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். வாசலில் அறிவிப்புக் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது. 'உழவாரப்பணி மன்றம்'.

கோயில்களுக்குச் செல்ல நேரிடும் போது, ஒரு சிலவற்றைத் தவிர்த்து மற்ற இடங்களில், 'இந்தக் கோயிலைக் கொஞ்சம் சீர்ப்படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என்று நான் நினைத்ததுண்டு. கன்னாபின்னாவென்று வளர்ந்து கிடக்கும் முட்செடிகளைப் பார்க்கும்போது ஒரு கையலாகாத உணர்வு ஏற்படுவதைத் தவ்ர்க்க முடிந்ததில்லை. தனியாளாய் மண் வெட்டியை வைத்துக்கொண்டு பிரம்மாண்டமான கோயில் வளாகத்தின் ஒரு மூலையைக் கொத்திக்கொண்டிருந்தால்...விடிந்துவிடும். ஒரு தனி நபர் செய்யக்கூடிய வேலை அல்ல இது என்பதால், அந்த எண்ணம் அநேகமாகப் பகல் கனவாகவே முடியும். பகல் கனவு நிஜமாகும் வாய்ப்பு சில மாதங்களாகக் கிட்டியிருக்கிறது.

இந்த ஞாயிற்றுக்கிழமை, பாம்பன் சுவாமிகள் கோயிலின் வெளிப்புறம் மண்டிக்கிடந்த புல்/புதர்/முள் இத்யாதியைப் பிடுங்கிப்போடும் வேலை. வேலை ஆரம்பிக்கும்போது மலைப்பாக இருந்தது - ஆனாலும், செயலில் இறங்கியபோது, நினைத்ததை விட சீக்கிரமாகவே முடிந்துவிட்டது. நூறு பேருக்குக் குறையாமல் மண்வெட்டி, கூடை சகிதம் கூடி, கோயில் வளாகம் முழுவதும் வேலை செய்தோம் (குழந்தைகள் தங்கள் சைஸில் பாதியிருக்கும் கூடைகளைத் தூக்கிக்கொண்டு அவர்கள் லெவலுக்கு 'வேலை' பார்த்தார்கள் :-). மதியம் சுமார் பன்னிரண்டுக்கு மணிக்கு முடித்தோம். பன்னிரண்டரைக்கு சொற்பொழிவு. பிறகு மதிய உணவு.

உழவாரப்பணி வேலை முடிந்து, மதியம் எல்லோருமாகச் சேர்ந்து உணவருந்திவிட்டு, மண்வெட்டி இத்யாதி உபகரணங்களையெல்லாம் மூலையில் அடுக்கிவிட்டு, 'பளிச்'சென்று துடைத்துவிட்ட மாதிரி இருக்கும் கோயிலைப் பார்த்தால் மனதில் பரவும் நிம்மதி...அது அனுபவித்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய விஷயம்.

*************



சென்னையில் தீபாவளி 'சொத சொத'வென்று விடிந்தது - ஆனாலும், பாதகமில்லை. ஒப்புக்கு ஒரே ஒரு மத்தாப்பு மட்டும் கொளுத்திவிட்டு (வேஸ்ட்!), இப்புவியில் உள்ளோரெல்லாம் காது கிழியும் அளவிற்கு வெடி வைத்துத் தள்ளியதையெல்லாம் குளிரக்குளிரக்கேட்டுவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் ஐக்கியமாகிவிட்டேன்.


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home