Shangri - La

Anything under the sun - in Thamizh!

Monday, September 11, 2006

BlogCampஉம் மற்றவையும்


நேற்றுடன் ப்ளாக்கேம்ப் வெற்றிகரமாக முடிவடைந்தது.

இதோ அதோ என்று செப்டெம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி, பத்தாம் தேதி BlogCamp முடிந்தேவிட்டது. இரண்டு நாட்களும் அங்கேயிருந்து, பார்த்து, கேட்டு, ரசித்து உண்டு வந்தேன்.

டைடெல் பார்க்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நான் முதலில் செல்வதாகவே இல்லை. வருபவர்கள் கண்டிபாக ஒரு presentation கொடுத்தே ஆகவேண்டுமென்று கிருபா தன் வலைப்பதிவில் மிரட்டியிருந்ததால், 'நமக்கேன் வம்பு' என்று சனி ஞாயிறை டீ வி பார்த்துக் கழிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அப்போதுதான் விக்கியின் கடிதம் வந்து சேர்ந்தது. "சும்மா வாங்க," என்று அவர் ஏற்றிவிட, தடாலென்று "போகலாம்," என்று முடிவெடுத்து, இன்ஸ்டண்டாக பதிவு செய்து ... இதோ எல்லாம் முடிந்து உட்கார்ந்து வலைபதிந்துகொண்டிருக்கிறேன்.

இந்தியாவின் மிகபெரிய Unconference என்று சொல்லப்பட்டது இது. நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் வலைப்பதிவாளர்கள் வந்திருந்தார்கள். Indian blogosphere என்பதால், வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் வலைப்பதிவு வைத்திருந்த சென்னைக்காரர்கள்/சென்னைக்கு வெளியே இருந்தோர். பலருக்கு மற்றவர்களை வலைப்பதிவு மூலம்தான் தெரியும். முதன்முறையாக சந்தித்துக்கொண்டோம்.

முதலில், டைடல் பார்க்கே எனக்குப் புதிய அனுபவம். நான் இதற்கு முன் ஒரே முறைதான் அங்கு சென்றிருக்கிறேன். கேட்டில் நுழைந்து மூன்று இடங்களில் செக்யூரிட்டி செக்குகளைக் கடந்து (ஒவ்வொரு இடத்திலும் ப்ளாக்கேம்ப்பில் கொடுத்த கடிதத்தை வைத்துக்கொண்டு) நடந்து, டைடல் பார்க்குக்குள் நுழைந்து, கீழ் ஃப்ளோரில் இருந்த ஏசி அரங்கிற்குள் நுழைவதற்கு முன், ஒரு பெரிய ப்ளாஸ்டிக் மூட்டையைக் கையில் கொடுத்தார்கள்: Yahoo!வின் பை, ஒரு மக், பேப்பர் பேனா சமாச்சாரம், டி-ஷர்ட் என்று கசாட்டாவாக ஒரு gift pack.

அன்கான்ஃபெரன்ஸ் (இதுக்கு என்னங்க தமிழ்ல?) நடக்கும் அரங்ககிற்குள் நான் நுழைந்த போது, சுலேகாவைச் சேர்ந்த ஒருவர் பேசிக்கொண்டிருந்தர். அரங்கு முழுவதும் லாப்டாப் மயம். ஒரு நிமிடம், வந்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் லாப்டாப் உண்டோ என்ற நப்பாசை (பேராசை?) எழுந்து, உடனேயே அடக்கிக்கொண்டேன். தமிழ்நாட்டில் இலவச டீவி வழங்குவதுபோல், இலவச லாப்டாப் வழங்கும் காலம் ஒன்று வராமலா போகும்? [அடுத்த முறை லாப்டாப் பையுடன் லாப்டாப்பே தருவார்கள் என்று விக்கி சமாதானப்படுத்தினார்.]கடைசியில் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டேன். சுற்றிலும் ஒன்று கூட தெரிந்த முகமாக இல்லை.



பேசியவர்கள் எடுத்துக்கொண்ட டாப்பிக் எல்லமே வலைப்பதிவுகளை மையமாகக் கொண்டவைதான். அமித் அக்கர்வால், [எனக்குத் தெரிந்து வலைப்பதிவு மூலம் லட்சக்கணக்கில் பணம் ஈட்டும் ஒரே சாமர்த்தியசாலி], தன் அனுபவங்களைப் பற்றிக் கூறினார். கூகிள், இவரது வலைப்பதிவுக்கு வரும் டிராஃபிக்கைக் கண்டு, தனியாக ஒரு ஏஜெண்ட்டைக் கொடுத்துவிட்டதாம். ஒரு நாளுக்கு அவரது வலைப்பதிவுக்கு வருவோரின் எண்ணிக்கை 1.25 மில்லியனைத் தாண்டுமாம். ["அப்படி எவ்வளவுதான் சம்பாதிக்கிறீங்க?" என்று ஒரு வலைப்பதிவர் தொணப்ப, "அதெல்லாம் சொல்ல முடியாது," என்று மறுத்துவிட்டார்.]

"கூகிள், யாஹூவை நம்பித்தான் வண்டி ஓடுகிறது. அதனால், திடீரென்று அவர்கள் கடையை மூடினால், நானும் நடுத்தெருவில்தான்," என்று சிரிக்கிறார்.

வெவ்வேறு வலைப்பதிவாளர்கள் நம் வலைப்பதிவை சுவாரசியமாக்குவது எப்படி, எப்படி டிராஃபிக்கை அதிகப்படுத்துவது என்றெல்லாம் பேசினார்கள். யாரும் பேச்சாளர்கள் இல்லை என்பதால், கொஞ்சம் போரடித்தது. சொல்லும் விஷயம் சுவாரசியமாக இருந்ததென்னவோ நிஜம். ஓம் ப்ரகாஷ் என்பவர் வலைப்பதிவாளரே இல்லை. இருந்தாலும், என்னென்ன இணையப்பக்கங்களுக்கெல்லாம் சென்றால் டிராஃபிக் கூடும் என்று ஒரு லிஸ்ட் கொடுத்தார். [அவரிடம் பேச்சுக்கொடுத்த போது, "என்கிட்ட லாப்டாப் இல்லை - ரெண்டு நாள் முன்ன செத்துப்போச்சு. இருந்திருந்தா இன்னும் அட்டகாசமா இருந்திருக்கும்," என்றார் வயிற்றெரிச்சலுடன். டெல்லியிலிருந்து வந்திருக்கிறார், இதற்காக.]



முதல் நாள் மதியம் நேஹா, டினா மேத்தா, பீட்டர் க்ரிஃஃபின், எல்லோரும் சேர்ந்து, ஒரு கூட்டு உரையாடல் போல நடத்தினார்கள். சுனாமி போன்ற இயற்கை உற்பாதங்கள் (அல்லது மனிதன் உருவாக்கியவையாக இருந்தாலும் கூட), வலைப்பதிவர்களின் பங்கு அதில் என்னவாக இருக்கும்? சுனாமியின் போது வலைப்பதிவாளர்களால் உண்மையிலேயே எவ்வளவு தூரம் பங்கேற்க முடிந்தது? அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒரு வலைப்பதிவாளர் நேரில் சென்று வலைப்பதிவது எவ்வளவு தூரம் சாத்தியம்?" என்றெல்லாம் பேச்சு சுழன்றது. கூட்டு வலைப்பதிவுகள் நன்மைகள், சங்கடங்கள் எல்லாம் ஆராயப்பட்டன. [சென்னை.மெட்ப்ளாக்ஸ் கூட்டுக்குழு என்பதால், அதில் ஓரு அங்கமான சந்திரசூடன் கலந்துகொண்டார். ]

Merinews.com என்று இணையப்பத்திரிகையை நடத்தும் எடிட்டர் பேசினார். முக்கியமாக, வணிகப்பத்திரிகைகளை வலைப்பதிவுகள் எப்படி பாதிக்கின்றன என்பது நிறைய அலசப்பட்டது. டெக்கன் கிரானிக்கிளிலிருந்து வந்து பேசிய ஒரு நிருபர், "வலைப்பதிவுகள் எங்களுக்குப் போட்டியே அல்ல," என்றார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் முன்பு பணிபுரிந்த ஒரு நிரு பி "வலைப்பதிவாளர்கள் இதுவரை நிருபர்கள் ஆனதில்லை; ஆனால் நிருபர்களாக இருக்கும் பலர் இப்போது வலைப்பதிவு வைத்திருகிறார்கள். நானே அப்படித்தான்," என்றார்.

நந்து என்று ஒரு நிருபர் நீளமாக எழுதி வைத்திருந்ததைப் படிக்க, ராபர்ட் ஸ்கோபல்லின் பேச்சைக் கேட்க ஆவலுடன் வந்த பலரது கவனம் வேறெங்கோ போய்விட்டது. அவர் பேசுவதில் ஏதோ டெக்கி கோளாறு ஏற்பட, "எல்லாரும் சாப்ட்டு வாங்கப்பா," என்று அனுப்பிவிட்டார்கள். அப்புறம் எல்லாம் சரியாகி, வந்து பேசிவிட்டுப் போனார் என்று வைத்துக்கொள்ளூங்கள். அவருக்கு அங்கே நடுராத்திரி. உற்சாகத்துடன் பேசினார்.





சுனில் கவாஸ்கர் podcastingபற்றிப் பேசினார். அது இரண்டாம் நாள் அன்று. "நானெல்லாம் டிரான்ஸிஸ்டர், ந்யூஸ்பேப்பர் காலத்தில் வளர்ந்தவன்; எனக்கு நீங்கள் எலோரும் என் முன்னால் லாப்டாப்புடன் உட்கார்ந்து நான் சொல்லச் சொல்ல அதை இணையத்தில் ஏற்றுகிறீர்கள் என்பதே அதிசயமாகத்தான் இருக்கிறது," என்றார். அவர் இன்னும் வலைப்பதியத் தொடங்கவில்லையாம். "அவசியம் யோசிக்கிறேன்," என்றார். "என் காலத்தை சேர்ந்தவர்கள் வேறு யாரும் இணையத்துடன் இவ்வளவு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகத் தெரியவில்லை - இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் உலகில். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கம்ப்யூட்டரும் கையுமாகத்தான் அலைகிறார்கள்," என்று சிரித்தார்.

மேலே கான்ஃப்ரன்ஸ் ஹாலில் ஒரு தனி ட்ராக் ஓடிக்கொண்டிருந்தது. "வர்ட்ப்ரெஸ்ஸ் பெரிதா, ப்ளாக்கரே போதுமா?" என்று பேசியதோடு, அவ்வப்போது கலாய்த்துக்கொள்ளவும் யாரும் மறக்கவில்லை. வர்ட்ப்ரெஸ்ஸைப் பற்றிப் பேசப்பேச, என் முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் லாப்டாப்பில் அந்த விவரங்களை அப்படியே பதிவு செய்துகொண்டு வர்ட்ப்ரெஸ் அக்கவுண்ட் திறந்துகொண்டது ரொம்ப சுவாரசியமாக இருந்தது. [அப்புறம் அவரிடமே அதைச் சொல்ல, வெட்கத்துடன் நெளிந்தார். அவர் திறந்த பதிவின் பெயர்: "Learning to blog in Wordpress."] வர்ட்ப்ரெஸ்ஸின் மகத்துவத்தைப் பற்றிப் பேசப் பேச, உட்கார்ந்திருந்த மற்ற வலைப்பதிவாளர்கள். "அடங்கு ..." என்று குரல் விட்டது வேறு விஷயம்.

ரஜேஷ் ஷெட்டி என்பவர், "எப்படி வலைப்பதிவை ச்வரசியமாக அக்கிக்கொள்வது" என்று பேசினார். வலைப்பதிவைப் பொறுத்தவரை, அவரது குரு கய் கவாசாகியாம். ஏழு புத்தகங்கள் எழுதியுள்ள இவருக்கு, நாளொன்றுக்கு மூன்றிலிருந்து நான்கு லட்சம் ஹிட்ஸ் வருமாம். "அடுத்தவர்களைக் கேவலப்படுத்துவது, வம்படிப்பது, கன்னாபின்னாவென்று பேசுவது, வலுச்சண்டைக்குப் போவது என்றால், ஒரு நாளுக்கு ஹிட்ரேட் எகிறும். ஆனால் நிலைக்காது. கெட்ட பெயர் வந்துவிடும். தொடர்ந்து நல்ல கண்டெண்ட் கொடுத்தால்தான் வலைப்பதிவில் உருப்பட முடியும்" என்று திரும்பத் திரும்பச் சொன்னார். "ஷவுட் பாக்ஸ், ஜிகினா சமாச்சாரமெல்லாம் போட்டு வலைப்பதிவை ரொப்பாதீர்கள். அமெச்சூர்தனமாக இருக்கிறது," என்று சலித்துக்கொண்டார்.

வீணா என்றொரு வலைப்பதிவாளர், "ஏன் நம் ஊர் அரசியல்வாதிகளெல்லாம் வலைப்பதிவு தொடங்கக்கூடாது," என்றொரு டாப்பிக்கை எடுத்துக்கொண்டார். "இதெல்லாம் நடக்கிற காரியமா? அப்பறம் வலைப்பதிவில் கொடுக்கும் வாக்குறுதியையெல்லாம் எப்படிக் காப்பாற்றுவது? ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்யும் போது சொல்வதையே செயல்படுத்த முடியவில்லை," என்று காரசாரமாக விவாதம் நடந்தது. "அமெரிக்காவில் நடக்கிறதே என்று இங்கும் நடத்த முடியுமா? அங்கே பில் க்ளிண்டன் எழுதினால் படிப்பார்கள். இங்கே ராஹுல் காந்தி எழுதினால், ஒரு சிலரைத் தவிர யாருக்கு என்ன லாபம்?" என்று வாதங்கள் தொடர்ந்தன.

வலைப்பதிவில் இசையைப் பற்றி ஸ்ரீராம் என்பவர் பேசினார். மொழிப் பதிவுகளைப் பற்றி அபர்ணா என்றொரு பெங்காலி பதிவர் பேசினார். "யுனிகோட் தான் எங்கள் தெய்வம்," என்றார், புன்னகையுடன். ஒரு பேப்பரைத் தூக்கிக் காட்டினார்.


"நான் ஆங்கிலத்தில் 'Paper Rat ' என்று எழுதியிருக்கிறேன். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்? நான் எலியைப் பற்றிப் பேசுவதாக் நினைப்பீர்கள். உண்மையில், நான் 'பாபர் ராத்' - 'பாவ இரவைப்' பற்றிப் பேசுகிறேன் என்பது உங்களுக்கெப்படித் தெரியும்? Romanized scriptஇன் பிரச்சனை இது. அந்தந்த மொழியில் வலைப்பதிவு எவ்வளவு அவசியம் என்பது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்தான் தெரியும்." [ஐகாரஸ் பிரகாஷ் - இரண்டாம் நாள் வந்து சேர்ந்துகொண்டார் - இதற்கு மிகப் பலமாக ஆமோதித்து, மேசையை ஓசைப்படுத்தித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.]

மனோஜ் என்றொரு வலைப்பதிவாளர், "வலைப்பதிவுகளில் நம் தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்வது எப்படி?" என்று பேசுகையில், "சச்சினில்லாத கிரிக்கெட்டா? ஸ்கோபெல் இல்லாத டெக்கி பதிவுலகமா? கிருபா இல்லாத இந்திய வலைபதிவுலகமா?" என்று பொழிந்து கொட்ட ... "ஓய்ய்ய்" என்றது கூட்டம். அங்கேயே இருந்த கிருபாவின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். மிகப்பெரிய காமெடி, கூட்டத்தில் ஒருத்தர், "யாருங்க அது போட்டோல?" என்றதுதான்.

மதியம் நான், பிரகாஷ், விக்கி, மூவரும் சேர்ந்து, தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி ஒரு சிறிய பாட்காஸ்ட் செய்தோம். தமிழ் வலைப்பதிவுகள் வரலாறே அதில் அடங்கியிருக்குமென்று நினைக்கிறேன் - அவ்வளவு பேசினோம். [நாங்கள் பேசப்பேச விக்கியின் கண்கள் விரிந்ததைப் பார்த்திருக்க வேண்டும்.] தமிழில் வலைப்பதிவது எவ்வளவு அவசியம் என்பதற்கு நானே ஒரு உதாரணம் குறிப்பிடுகிறேன்: டைடல் பார்க்கில் ப்ளாக் அமர்க்களம் நடந்துகொண்டிருந்த போது, சுற்றியிருந்த துப்புரவாளர்களும் மற்றவர்களும் ஏதும் புரியாமல் இங்கும் அங்கும் அவர்களது வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுகொண்டிருக்க, அதே ப்ளாக் கேம்ப்பைச் சேர்ந்த நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு, ஆவலாக 'என்ன பேசுகிறோம்," என்று கவனித்துக்கொண்டார்கள். [சிந்துபைரவி மீனவக் காட்சி நினைவுக்கு வரவில்லை? :)]

நிகழ்ச்சிகள் நடந்த அத்தனை நேரமும் கேமராக்கள் பளிச்சிட்டுக்கொண்டுதான் இருந்தன. படம் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தவர்கள் (Jace) - "Mood at the Camp" என்று எடுத்த காமெடிப் படம் ஒன்று:

என்னதான் இணையத்தில் விக்கிபீடியாவெல்லாம் வைத்தாலும், பேப்பரில் விக்கியெல்லாம் டூ மச்.


கடைசியாக quizஎல்லாம் வைத்தார்கள். 'கில்லி' என்ற பெயரில் நானும் பிரகாஷும் கலந்துகொண்டோம் [ நான்: "டீம் பெயருக்குகூட 'கில்லி'னுதான் வெக்கணுமா?" பிரகாஷ்: "அட விடுங்க!"] ப்ரிலிம்ஸ் வரையில் வந்து அப்புறம் அவுட். கொசுறாக சாக்லேட்டாவது ஜெயிக்கலாம் என்றால் ... ஹும்.

ப்ளாக்கேம்ப்பில் கலந்து கொண்ட பெண்கள் மொத்தம் பத்து பேர் கூடத் தேற மாட்டார்கள். அதிலும் வலைப்பதிவாளர்கள் (என்னையும் சேர்த்து) - 4 பேர். Chennaiistஇல் வந்து பேட்டியெடுத்தார்கள் (ஜெ ஷங்கர் இன்னொர் கல்கி ரசிகர்!) என்றால் பார்த்துக்கொள்ளூங்கள். பிபிசி ரேடியோவைத்தான் தவறவிட்டுவிட்டதாக விக்கி சொன்னார்.

Conclusion: கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் ஆஹா! கொஞ்சம் யாஹூ! கொஞ்சம் அறுவை, கொஞ்சம் நக்கல், நிறைய டெக்கி ... ப்ளாக்ப்கேம்ப்!

Photos courtesy: Jace and Dreamchaser. மேலும் புகைப்படங்களுக்கு இங்கே செல்லவும்.

|

7 Comments:

  • At 5:57 PM, Blogger Movie Fan said…

    சூப்பரா எழுதியிருக்கீங்க. இதை நான் முன்னரே படித்திருந்தால் நிகழ்வுகளை தொடர்ந்து எழுதுகிறேன் என்று எழுதியிருக்கமாட்டேன் ...

     
  • At 7:49 PM, Blogger Aruna Srinivasan said…

    வேடிக்கை பார்க்கவாவது வர வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் முடியவில்லை. அதுசரி, கல்லூரிப் பழக்கம் இன்னும் போகவில்லையா? CNN - IBN செய்தியில் பவித்ரா, கோடியில் பிரகாஷ், இந்த பக்கம் யாருன்னு தெரியலை - எல்லோரும் கடைசி பெஞ்ச்...... :-)

    வரமுடியலே தவிர, விரிவான செய்திகளுக்கு பதிவுகளை தேடிக் கொண்டிருந்தேன். நேற்று மாலை வரை ஆங்காங்கே கொஞ்சம் கண்களில் பட்டதே தவிர, நிறைய காணோம். அமைப்பாளர் கிருபா சங்கர் பதிவும் அதிசயமாக வெறிச்சோடி இருந்ததே!!! இப்படிப்பட்ட லேட்டஸ்ட் டெக்னாலஜி சமாசாரம் சம்பந்தமான "திடீர் மாநாட்டு" ( Unconference !!!) செய்திகள் இன்னும் உடனுக்குடன் சுடச் சுட விவரமாக வெளி வரும் என்று எதிர்பார்த்தேன்.

    ஆனால் தாமதமாக வந்தாலும் உங்கள் செய்திகள் விவரமாக இருந்தன பவித்ரா. மிக்க நன்றி.

     
  • At 8:44 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said…

    Thanks for the detailed write-up Pavithra.


    //மதியம் நான், பிரகாஷ், விக்கி, மூவரும் சேர்ந்து, தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி ஒரு சிறிய பாட்காஸ்ட் செய்தோம். தமிழ் வலைப்பதிவுகள் வரலாறே அதில் அடங்கியிருக்குமென்று நினைக்கிறேன் - அவ்வளவு பேசினோம். //

    Would it be possible for you to upload it Pavithra?

    -a wordpress user- ;)

    -Mathy

     
  • At 9:17 AM, Blogger ஓகை said…

    ரொம்ப கலக்கலா எழுதியிருக்கீங்க. இது மாதிரியெல்லாம் எழுதனும்னு முயற்சி பண்றேன். பரகாஷ் பக்கத்திலேர்ந்து உங்க பக்கத்துக்கு வந்தேன். விவரிப்புக்கு நன்றி.

    இது போன்றதொரு நிகழ்வினைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பலதமிழ் வலைப் பதிவாளர்களின் நிலையும் இப்படித்தான் போலிருக்கிறது.

     
  • At 10:10 PM, Blogger அறிஞர். அ said…

    அடேங்கப்பா, இவ்வளவு நீளமாக எழுதியிருக்கிறீர்களே...பாராட்டுக்கள்...

     
  • At 5:05 AM, Blogger Boston Bala said…

    நேரில் இல்லாத குறையை போக்கியதற்கு நன்றி :-)

     
  • At 11:40 AM, Blogger மதுமிதா said…

    பவித்ரா
    கலக்கல் போங்க
    நன்றிம்மா அருமையான பதிவுக்கு.

    அடுத்த முறை பக்கத்தில ஒரு கர்சிப் போட்டு வைங்க. வரேன்
    'ங்ஏ' ன்னு விழிக்கவாவது வரணுமில்லியா

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home