Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, June 30, 2004

பூனைக்குட்டிப் பிரதாபங்கள்"எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, பூனைகளை தெய்வமாக வழிபட்டார்களாம். இன்றுவரை, எந்தப் பூனையும் அதை மறக்கவில்லை."எந்த நாளில் யார் எழுதி வைத்த பழமொழி என்று தெரியவில்லை. ஆனால், முழுக்க முழுக்க உண்மை. ஒரு பூனையை - எக்காரணம் கொண்டும் - சாதாரணமாக நினைத்து நடத்திவிட வேண்டாம். அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால், பூனையின் ஒரே பார்வையில் நீங்கள் பொசுங்கிப்போவது திண்ணம். உலகம் முழுதும் இருக்கும் பூனைப் பிரியர்கள் எல்லோரும் இதை உணர்ந்துதானோ என்னவோ, தத்தம் பூனைகளை, குழந்தைகளை விட அதிகமாகப் பிரியத்தைக் கொட்டி வளர்க்கிறார்கள்.

பிஜிலி முந்தைய ஜென்மம் எதிலாவது நிச்சயம் அரசகுமாரியாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பிறவியின் வாசனைதானோ என்னமோ, பளபளவென்று, சிவப்பும் மஞ்சளும் கறுப்புமாக மல்டி கலரில், ஒரு குட்டி பஞ்சுப் பந்தைப் போல் எங்களிடம் வந்து சேர்ந்தாள். அன்றிலிருந்து எல்லாம் தலை கீழாகப் போய்விட்டது.

For starters, வீட்டுக்கு வருகிறவர்கள் அத்தனை பேரும் அந்த அழகு தேவதையின் வசீகரத்தில் சொக்கிப் போய், வாய் திறந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நிற்பார்கள். அருகில் வர மாட்டாளா என்று ஏக்கப் பார்வை பார்ப்பார்கள். வலுக்கட்டாயமாக (விருந்தினர்களை) சோபாவில் உட்கார்த்தி வைத்தால், அவள் இங்கும் அங்கும் ஒய்யார நடை போடுவதைப் பார்த்துவிட்டு, “வெரைட்டி (variety) பூனைங்களா? “ என்று ஆர்வமாகக் கேட்பார்கள். அவளை ஒரே ஒரு முறை தொடும் ஆவலில் தரையில் ‘சப்’பென்று அமர்ந்துகொள்வார்கள். “இந்த மாதிரி பூனை எங்களுக்கும் வேணும். எங்க கிடைக்கும்?“ என்பது இன்னொரு கேள்வி. [பின் தெருவில் குப்பை மேடுகளில் உருண்ட கருப்பு-வெள்ளை அம்மாவிற்குப் பிறந்த பிஜிலியின் பூர்வ சரித்திரத்தை யாரும் நம்புவதாக இல்லை. இங்கிலாந்து அரண்மனையிலிருந்து வரவழைக்கப்பட்டவள் என்று சொல்லியிருந்தால் அவர்களுக்குத் திருப்தியாக இருந்திருக்கும்.]

பிஜிலி எதிலும் கலந்துகொள்ளாமல், அரண்மனையின் உப்பரிகையில் நின்று மக்களுக்கு மென்மையாகக் கையசைக்கும் இளவரசியைப் போல் சாவகாசமாக முன்கால்களை உதறிவிட்டு, அதிலேயே அலுப்படைந்தது போல், அவளுடைய அறை (என்னுடைய அறைதான் - ஆனால் அவள் வந்த பிறகு எல்லாமே அவளுடையதாகிவிட்டது.) சென்று ஆசுவாசப்படுத்திக்கொள்வாள். [சில சமயம் மட்டுமே அவள் அங்கேயே தங்குவது வழக்கம்]. விருந்தினர்கள் அதிலேயே திருப்தியடைந்து, பெரும்பேறு பெற்ற இறுமாப்புடன் வந்த காரியத்தைக் கவனிப்பார்கள். [“வந்து...என்ன விஷயமா வந்தேன்? ஆங்...!“]

இப்பேர்ப்பட்ட அரசிளங்குமரி, அம்மாவாகவும் ஆகிவிட்டால், அமர்க்களத்திற்குக் கேட்க வேண்டாம். நான்கு அழகிய பூனைக்குட்டிகளின் தாயான பிறகு, அவளது பொறுப்பு (எங்களுடையதும்) அதிகரித்துவிட்டது. முதலில் பெயர் சூட்டும் படலம்.

அம்மாவிற்கு ‘பிஜிலி’ என்று பெயர் வைத்த பிறகு, குழந்தைகளுக்கு ஜிம்மி, பொம்மி என்றெல்லாம் பெயர் வைக்க மனம் ஒப்பவில்லை. அழகாக, நாகரீகமாக, சின்னதாக, பெயர் கண்டுபிடிப்பதற்குள் முழி பிதுங்கிவிட்டது. பெயர் வைக்கும் வரையில் எந்தப் பூனைக்குட்டியை எப்படிக்கூப்பிடுவது என்பது பெரிய பிரச்சனை. [நாய்களைப் போலன்றி, பூனைகள் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் கண்டுகொள்வதில்லை. எதற்காக அவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று இப்போது யோசிக்கிறேன்.] கடைசியில் Snowball, Sandal, Leo என்ற பெயர்களை முடிவு செய்தோம். [செந்தமிழில் சூட்டியிருக்கலாம். பூனைக்குட்டிகளுக்கு ‘தமிழ்ச்செல்வி’ என்றெல்லாம் பெயர் வைப்பதில் யாருக்கும் சம்மதமில்லை. அந்தப் பெயருள்ளவர்கள் வீட்டிற்கு வந்தால் பிரச்சனை. ‘Snowball’ என்ற பெயருடன் விருந்தாளி வருவது........அபூர்வம். To say the least.]

நான்காவது பூனைக்குட்டிக்குப் பெயர் வைக்கும்போது எல்லோரும் ஓய்ந்துவிட்டோம். “மூணாவதுதான் Leoன்னு வெச்சாச்சே? இதைக் ‘Keo’ ன்னு கூப்பிடு,“ என்று அம்மா மந்திராலோசனையை ‘சட்டு புட்’டென்று முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். “‘கியோ’ என்பது என்ன மாதிரியான பெயர்?“ என்று நான் எவ்வளவோ வாதாடியும், அவர் மனம் மாறவில்லை.

எங்கள் காலைப் பொழுதுகள் இந்த ஐந்து ஜீவன்களைச் சுற்றியே சுழல ஆரம்பித்துவிட்டன. சூரியன் கொஞ்சம் முன் பின்னாக உதித்தாலும் உதிக்கலாம், பிஜிலியும் அவளது வாரிசுகளும் பின்தூங்கியதாக சரித்திரமே இல்லை. விடிகாலையில் மூக்குக் கீழ் மெத்தென்று ஏதேனும் பட்டால், அது லியோ (அல்லது அதன் ரெண்டும்கெட்டான் இரட்டை, கியோ’) வாக இருந்தே தீரும். அவைகளுக்குக் காப்பி கலந்து தருவது என் வேலை. [இந்த இரண்டுக்கும் மட்டும் பால் அவ்வளவாகப் பிடிக்காது. எப்போதும் காப்பிதான்.]. மூக்குக்குக் கீழ் வாலை ஆட்டியும் பலன் இல்லை என்றால், ‘தொப்’ என்று மேலே விழுந்து உருப்படியாக தூக்கத்தைக் கலைத்துவிடுவார்கள்.

காப்பிக் கடை முடிந்த பிறகு, அவர்களின் வேலைகள் பின்வருமாறு:

1. Dry cleaning. (தங்களுக்கு.)

2. கர்ட்டன் துணிகள் காற்றில் அசைவதை பார்த்துக்கொண்டே இருப்பது. பிறகு அவற்றைப் பிடித்து மேலே ஏறுவது. பாதி வழியில் தரையில் விழுவது. எவ்ரெஸ்ட் சிகரத்தை தொட்ட ஹில்லரியின் உத்வேகத்துடன், மீண்டும் ஏறுவது.

3. காலை பேப்பரைப் படித்தால், பேப்பரின் பின்பக்கமாக சுரண்டுவது. கவனம் திரும்பாவிட்டால், ‘ஹெட்லை’னை கிழிப்பது.

4. கிச்சனில் நுழைந்து, பாதையில் படுத்துக்கொள்வது. [அப்போதுதான் நாங்கள் தடுக்கி விழலாம். ] நாங்கள் எரிச்சலுடன் கத்துவதை மிகுந்த சுவாரஸ்யத்துடன் பார்த்துவிட்டு, சோம்பல் முறித்து, காரியம் முடிந்த திருப்தியுடன் வெளியே செல்வது.

5. டைனிங்-டேபிளை யாரும் பயன்படுத்த முடியாமல் உருண்டு புரண்டு சண்டை போடுவது. தப்பித் தவறி பேப்பர், பேனா சமாச்சாரங்கள் இருந்தால், அவை நாசமாவது நிச்சயம்.

6. கண்ணாடியின் எதிரில் மணிக்கணக்காக நின்றுகொண்டு, எதிரில் தெரியும் பூனையைப் பார்த்துக்கொண்டே இருப்பது.

7. ஸ்டோர்-ரூமில் அடுக்கி வைத்திருக்கும் இரண்டு மிளகாய் மூட்டைகளை பிறாண்டித் தள்ளூவது.

8. எல்லாவற்றையும் குதறி வைப்பது.

9. கதவைச் சாத்தினால் ‘திறக்க வேண்டும்’ என்றும், திறந்தால், ‘மூட வேண்டும்’ என்று அடம் பிடிப்பது. மறுத்தால், எட்டு ஊருக்குக் கேட்கும் வகையில் அலறுவது.

10. நடு நடுவே கரப்பான் பூச்சி, தவளை, எதையாவது மிகுந்த அன்புடன் எங்களிடம் கொண்டு வருவது. விரட்டினால், “அற்புதப் பரிசை ரசிக்கத் தெரியாத மானுடப் பிறவிகளே!“ போன்ற பார்வையுடன் விலகுவது. சோபாவுக்கடியில் பத்திரமாக தவளையை ஒளித்து வைப்பது.

11. வரும் விருந்தாளிகள் (அபூர்வமாக) பூனை பிடிக்காவதவர்களாக இருந்தால், வேண்டுமென்றே அவர்களை வெறுப்பேற்றும் வகையில் நடந்துகொண்டு, வந்தவர்கள் பயத்துடன் கால்கள் தரையில் படாமல் விறைத்துகொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அற்ப சந்தோஷம் அடைவது. (“ஒண்ணும் செய்யாது“, என்று நாங்கள் சமாதானம் செய்யும் தருணத்தில் சிறுத்தையைத் தோற்கடிக்கும் வகையில் சீறி, எல்லோரையும் வெலவெலக்க வைப்பதும் இதில் அடக்கம்.)

12. ‘மொசைக்’ தரையில் பிறந்து வளர்ந்த சுகவாசிகள். மண்தரை என்றால் என்னவென்றே தெரியாமல், மண்ணில் ‘இறக்கிவிட்டால்’ எங்களைப் பார்த்து விழிப்பது. கால்களை நாசூக்காக உதறிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிடுவது.

13. பயங்கர எரிச்சலுடன் எதற்காவது திட்டினால், மிக மிகப் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு மனதை உருக்கிவிடுவது.

எல்லா சமயமும் விளையாட்டும் சிரிப்புமாகவும் அமைந்துவிடவில்லை. எப்போதும் வீட்டைச் சுற்றும் நாய், காக்காய் வகையறாவிலிருந்து இந்த சிறிய ஜீவன்களைப் பொத்திப் பொத்திக் காப்பாற்றுவதற்குள்...ஒவ்வொரு முறையும் எங்கு உறுமல் கேட்டாலும் பதறிப் போய், இரண்டாம் உலகப்போர் நடந்த போது ஏர்-ரெய்டிற்காக பயந்த மக்களைப் போல், எல்லாப் பூனைக்குட்டிகளையும் ரவுண்ட்-அப் செய்து பட்டிக்குள் அடைப்பதுபோல் அறைக்குள் அடைத்து வைக்க பட்ட பாடு. இவற்றையெல்லாம் மீறி, இரண்டு பூனைக்குட்டிகளை இரத்தக் களறியில் பறிகொடுத்தது..............

ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது தங்களின் பின்னால் ஓட வைத்த பிஜிலியையும், அவளது குழந்தைகளையும், இத்தனை நாட்களுக்குப் பிறகும் மறக்க முடியவில்லை. இப்போது எப்படி இருக்கிறார்களோ?


*********


குறிப்பு: சக Harry Potter பிரி(வெறி)யரான நண்பர் மீனாக்ஸ், நல்ல செய்தி ஒன்றை இப்போதுதான் சொன்னார். அடுத்த HP புத்தகத்திற்குப் பெயர் வைத்துவிட்டார்களாம். :-))

|