Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, July 14, 2004

வலைபாயுதே...!

"...முன்னாபாய் எம்.பி.பி.எஸ். தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆவதோடு நில்லாமல், ஹாலிவுட்டிலும் பயணிக்க இருக்கிறது. விது வினோத் சோப்ரா - 20த் செஞ்சுரி ·பாக்ஸ¤டன் இணைந்து தயாரிக்கப்போகிறார் - சொல்வது Teakada.com. இந்தத் தளத்தின் தமிழ்ப் பதிப்பில் பிரபல வார இதழ்களிலிருந்து சுட்ட பல விஷயங்கள் விரவிக் கிடக்கின்றன. சினிமா, அரசியல் என எல்லாக் கட்டுரைகளூம், யாராலும் வாசிக்க முடியாத தமிழ் fontகளில் தரிசனம் தருகின்றன...

(ஏம்ப்ப்பு...எழுத்தைக் கொஞ்சம் கவனியுங்க!)..."

- கல்கி வார இதழ், 18.07.2004.


|

Tuesday, July 13, 2004

தேரோடும் வீதியிலே...


(c) medien-lab.ch
"புத்திசாலியாக இரு, ஜூடா. இது ரோம சாம்ராஜ்ஜியத்தின் உலகம். இங்கு நீ வாழ விரும்பினால், இந்த சாம்ராஜ்ஜியத்தின் ஒரு அங்கமாகத்தான் நீ இருக்க வேண்டும். டைபர் நதிக்கரையின் ஒரு சிறிய கிராமத்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சி, வெறும் விபத்தென்றா நினைக்கிறாய்? இல்லை, இது விபத்தில்லை. விதி எங்களைத் தேர்ந்தெடுத்து, உலகத்திற்கு நாகரீகம் போதிக்கச் சொல்லிக் கட்டளையிட்டது. நாங்களும் வெற்றிகரமாக அந்த ஆணையை நிறைவேற்றிவிட்டோம். எங்கள் நாட்டுக் கப்பல்களும், சாலைகளும் உலகை இணைக்கின்றன. எங்கள் கட்டிடக் கலையும் சிற்பங்களும்தான் உலகிலேயே சிறந்தவை..."


முதன் முதலாக 'Ben-Hur' பார்த்தபோது...ஆச்சர்யத்தில் ஸ்தம்பித்துபோய், 'அடடா, என்ன படம், என்ன படம்,' என்று பார்த்தவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்புறம் எத்தனை முறை அதைப் பார்த்தேன் என்று கணக்கு வழக்கே இல்லாமல் போய்விட்டது. முதலில் கதைக்காகப் பார்த்தேன். அப்புறம் சார்ல்டன் ஹெஸ்டனுக்காகப் பார்த்தேன் (இவரை விட வில்லன் தான் லட்சணமாக இருக்கிறார் என்று நினைத்தது நினைவில் இருக்கிறது). அப்புறம் இசைக்காகப் பார்த்தேன். கடைசிக் காட்சிக்காகப் பார்த்தேன். அந்த ரதப்போட்டி இருக்கிறதே? அதற்காக ஒரு பதினைந்து முறை பார்த்தேன். (ஒவ்வொரு முறையும், புத்தம்புதிதாக பார்ப்பதுபோல் தொண்டைக்குழிக்குள் என்னவோ பந்துபோல் வந்து சுருண்டுகொள்ளும். ஜெயிக்கப்போவது மெஸ்ஸாலாவா, ஜூடாவா என்று சஸ்பென்ஸ் தாங்க முடியாது. கறுப்பு ராட்சதனைப் போல் சாட்டையை 'விர் விர்' ரென்று இழுக்கும் மெஸ்ஸாலாவைப் பார்த்தால் ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும். 'இதே சாட்டையால் ஒரு வீசு வீசினால்தான் என்ன?' என்று தோன்றும். What a magnificient villain. சார்ல்ட்டன் ஹெஸ்டனும், ஸ்டீ·ப்ன் பாய்டும், அவர்களே ரதங்களை ஓட்டியதாகக் கேள்வி.]

அப்புறம் கொஞ்ச நாள் பார்க்காமலிருந்துவிட்டு, புதிதாகப் பார்த்தால் கிடைக்கும் உணர்வுக்காக சில காட்சிகளை மறக்கடித்துக்கொண்டு பார்த்தேன். [அந்தக் கால எம்ஜியார் படங்களைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு நாளும் பகலில் தோய்க்கும் கல்லில் உட்கார்ந்து 'அந்த நம்பியார் இருக்கானே...' என்று விரல்களை நெட்டி முறிக்கும் பாட்டியைப்போல், மெஸ்ஸாலாவை ஆசை தீர திட்டித் தீர்ப்பது சுவாரசியமான பொழுதுபோக்கு. ]

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டத்தான் இல்லை. ['வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் வரும் போட்டி நடனம் மாதிரி. 'பாலி' நாட்டு டான்சரைப் போல் ஜொலிக்கும் வைஜயந்தி மாலா -'சவுந்தர்ய தேவதை' என்பதற்கு இவரைப்போல் நான் பார்த்தில்லை. இவரைப் பற்றி ஆரம்பித்தால், நிறுத்த முடியாது என்பதால், இதோடு முற்றுப்புள்ளி. ]. சார்ல்ட்டன் ஹெஸ்டன் நடிப்பில் இமாலய உயரங்களைத் தொட்டிருக்கிறார். அடிமையாகக் கப்பலுக்கு விற்கப்பட்டு, ஆயிரம் கஷ்டம் அனுபவித்து, ஊர் திரும்பும்போது, பாழடைந்து கிடக்கும் வீட்டைப் பார்த்து அவர் அடையும் துயரம்...முதல் சில காட்சிகளில் முகத்தில் தெரியும் குழந்தைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இறுதியில் முதிர்ச்சியைக் காட்டும் கண்கள்...வெறி பிடித்து மெஸ்ஸாலாவைப் பழி வாங்கியே தீருவது என்று அலைந்து, பிறகு லெப்ரஸி வந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக்கொண்டிருக்கும் அம்மாவையும் தங்கையையும் பார்த்து மறுகுவது...

அந்த அரேபிய குதிரைக்காரர் இருக்கிறாரே - ஷேக் இல்டெரிம்? ["ஒரு கடவுள்? அது எனக்குப் புரிகிறது. ஒரு மனைவி? அது பட்டிக்காட்டுத்தனம்."] அடேயப்பா. 'சா.ஹெ'வுக்குக் கொஞ்சமும் குறைந்தவரில்லை. 'வெளு வெளு' வென்று வெளுத்து வாங்கியிருக்கிறார். தன் ஆசைக் குதிரைகளுக்கெல்லாம் நட்சத்திரங்களின் பெயர் சூட்டுவதும், விருந்து முடிந்த பிறகு 'ஏப்பம் வந்தால்தான் ஆயிற்று' என்று ஜூடாவைக் கள்ளப்பார்வை பார்ப்பதும்....

ரதப்போட்டியில் வெற்றி வாகை சூடும் ஜூடாவைப் பாண்ட்டியஸ் பைலேட் பாராட்டுகிறார். "இன்றைக்கு நீதான் மக்களின் கடவுள். உன்னைத் தொழுகிறேன்." ஒரு கூர் பார்வை பார்த்துவிட்டு. "உனக்கு நீண்ட ஆயுளும் - அதை புத்திசாலித்தனமாக வாழ்வதற்கு உரிய அறிவும் கிடைக்கட்டும்."

உலகத்திற்கே பொருந்தக்கூடிய வார்த்தைகள்.

படத்தில் எங்கும் ஏசுநாதரின் முகத்தைக் காட்டுவதே இல்லை. இறுதியாக, சிலுவையில் அறையப்படும்போதும், தன்னைத் துன்புறுத்துபவர்களை மன்னிக்கச்சொல்லி அவர் வேண்டும்போது, ஜூடாவின் முகத்தில் தெரியும் ஆச்சர்யம் - தெய்வத்தை நேரில் கண்டவனின் கண்களில் விரியும் அற்புத உணர்ச்சி...

இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

*********சில நாட்களாக, கல்கி வார இதழுடன் 'சென்னை ஸ்கேன்' என்று புதிதாக எட்டு பக்கத்துக்கு ஒரு குட்டிப் பத்திரிகை கொடுக்கிறார்கள். வண்ண மயமாக இருக்கிறது. இந்த வார கவர் ஸ்டோரி: 'ஷரத் சூர்யா' என்னும் இளம் இயக்குனர் (இயக்குனர் சேரனிடம் சினிமாவில் பால பாடம் படித்தவர்) காவிரிப் பிரச்சனை பற்றிப் படம் எடுக்கப்போகிறாராம். அதற்கு ·பைனான்ஸ்?

கடந்த இரண்டு வருடங்களாக, கல்லூரி மாணவர்களை சந்தித்து, ஆளுக்குப் பத்து ரூபாய் என்று வசூல் செய்து, மொத்தம் 16 லட்சம் பார்வையாளர்களிடமிருந்து 1.6 கோடி சேர்ந்துவிட்டது. இப்போது ஐந்து மொழிகளில் படம் உருவாகப்போகின்றது. (மொபைல் எண்கூடத் தந்திருக்கிரார்கள்.)

மிச்சம் இருக்கும் ஏழு பக்கங்களில் ' மன்மதன்' கேஸட் வெளியீட்டு விழா(வில் ஜோதிகா காணாமல் போனது ஏன்?), கவிஞர் கனிமொழியுடன் சந்திப்பு, 'யூத் கடல' என்று கலந்துகட்டியாக அடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.:-).


|