Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, July 21, 2004

ஒரு அழகியும், ஆயிரம் கப்பல்களும்


"ஒண்ணு, நாங்க பொண்ணுக்கு அடிச்சுக்குவோம்; இல்ல, மண்ணுக்கு அடிச்சுக்குவோம்," என்று விருமாண்டியில் ஒரு வசனம் வரும்.

மூன்று மாதங்களுக்கு முன்பாக இருந்தால் என்ன? மூவாயிரம் வருடம் முன்பு இருந்தால்தான் என்ன? இப்போதும், அப்போதும் - எப்போதும் - இந்த இரண்டு விஷயங்களுக்குத்தான் மனிதர்கள் அடித்துக்கொண்டு சாகிறார்கள்.

ஒரு தேவனும் தேவதையும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அதைக் கொண்டாட மிகப்பெரும் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். ஊர் பேர் தெரியாதவர்களெல்லாரும் 'All are welcome' ரீதியில் கலந்துகொண்ட அந்த விருந்தில், ஒரே ஒருவருக்கு மட்டும் அழைப்பில்லை - அது எரிஸ். மனிதர்களுக்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் தேவதை (அதனால்தான் அழைக்கவில்லை.). எரிஸ் மகா எரிச்சலோடு ஒரு காரியம் செய்தாள் - அழகான தங்க ஆப்பிள் ஒன்றை உருவாக்கி, அதில் 'மிக அழகானவளுக்கு உரியது' என்று கிறுக்கி, அருவமாக விருந்தில் நுழைந்து, விருந்தினர்களிடையே உருட்டிவிட்டாள்.

விருந்துக்கு வந்திருந்த மூன்று தேவதைகளுக்குள் சண்டை தொடங்கியது. ஆளாளுக்கு 'அழகுப்போட்டியில்' வெற்றி வாகை சூடத் துடிக்க, விஷயம் முற்றிப்போய், 'நாட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட இளவரசன் ஒருவன் (உங்களுக்காகவே வேலையற்று) இன்ன மலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான் (அவன் பிறந்தபோது, 'நாடு இவனால் அழியும்' என்று அசரீரி ஒலித்ததால் அவசரமாக மூட்டை கட்டி மலையேற்றிவிட்டார்கள் அரசரும் அரசியும்.)- அவனைப் போய்ப் பார்த்தால் பிரச்சனை திரும்' என்று யாரோ சொல்லிவைக்க, புறப்பட்டார்கள் முப்பெரும் தேவியர். அவனிடம் சென்று, 'எங்களில் அழகி யார்? நேர்மை, தர்மம், நியாயம் இன்னபிற வழி வகையைத் துணையாக கொண்டு, சரியான முடிவு கூறவும்," என்று வேண்டிக் கேட்டுக்கொண்டனர். வேண்டிக் கேட்டுவிட்டு,'விதி விட்ட வழி' என்று சும்மா இருந்துவிடாமல், ஆளாளுக்கு ஏற்ற மாதிரி, பெரிய லெவலில் லஞ்சம்.

ஒருத்தி, "நான் உனக்கு அறிவும், போர்த்திறமையும் தருகிறேன்" என்றாள். இன்னொருத்தி, "ஆசியாவையே தருகிறேன்" என்றாள். கடைசி தேவதை இருப்பவர்களுக்குள் அழகியோ இல்லையோ, கெட்டிக்காரி. "உலகின் மிக அழகான பெண்ணின் காதலை உனக்குப் பெற்றுத் தருகிறேன்," என்று கண்ணைச் சிமிட்டினாள்.

இளவரசன் புரண்டு புரண்டு, நின்று, நடந்து, உட்கார்ந்து, தலைகீழாய்த் தொங்கி - யெல்லாம் யோசித்து மண்டையைப் பிய்த்துக்கொள்ளாமல், 'பட்'டென்று, "அழகி நீயே. எங்கே எனக்குரியவள்?" என்றான்.

தோற்றுப் போன சகோதரி தேவதைகளை ஏளனமாகப் பார்த்துவிட்டு, ஒய்யாரமாகக் கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்ட காதல் தேவதை காட்டிய பெண் - ஹெலன். ஸ்பார்ட்டாவின் மன்னன் மெனலேயஸ்ஸின் மனைவி. பின்னாளில் 'The face that launched a thousand ships' என்று பாடல் பெறப்போகிறவள். (அப்படிப் பாடல் பெற்று அவள் என்ன சுகத்தைக் கண்டாள்? ஒன்றுமில்லை.)

வரம் கொடுத்த காதல் தேவதை - கிரேக்க தேவதை Aphrodite. "அழகிய பெண்ணா? அம்புட்டுதான்," என்று அழகிப் பட்டம் கொடுத்த இளவரசன் - பாரிஸ். 'ட்ராய்' நகர மன்னரின் இரண்டாவது மகன். அவன் பிறந்த போது ஒலித்த அசரீரி பொய்க்கவில்லை. மாபெரும் ட்ராய் நகரம் பத்து வருடப் போருக்குப் பிறகு, அழிந்து மண்ணோடு மண்ணாகியது - ஹெலனை அவன் அழைத்து வந்த காரணத்தால்.

மற்றது...?

ஹெலனின் கணவனும், அவனது அண்ணனும் ட்ராய் வரை துரத்திக்கொண்டு போவதும், ஹெலன் மணமுடித்த போது, 'இவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாளோ, அவளது கணவன் உதவி கோரினால், செய்து தர வேண்டும்," என்று ஒப்பந்தம் செய்து கொண்ட மற்ற கிரேக்க மன்னர்களூம், Achilles தலைமையில் முற்றுகை இடுவதும், பத்து வருடம் போர் செய்வதும், கடைசியில் யுலிஸ்ஸிஸின் யுத்த தந்திரம் பயன்படுத்தி, ட்ராய் நகருக்குள் மரக்குதிரையில் நுழைவதும்...

'ட்ராய்' படம் பார்த்ததன் விளைவு, பழைய கதையை நோண்டிகொண்டே சென்றதில், இத்தனை தகவல்கள் அகப்பட்டன. இருப்பதிலேயே சுவாரசியமான விஷயம் - Achillesஇன் பாதத்தில் அம்பு பட்டு அவன் இறப்பது. Achilles heel என்னும் பிரயோகம் தெரியும். எதனால் இந்த கிரேக்க கதாபாத்திரத்துக்கு இப்படி ஒரு விசித்திர வரம் என்று புரட்டியதில்...நம் மகாபாரதம் ரேஞ்சில், துரியோதனனின் தாய் காந்தாரி, அவனுக்கு சர்வ சக்தியும் கொடுக்க, தன் பார்வையால் அவனை ஊடுருவ...(தொடையைத் தவிர்த்து - அதனால்தால் அவன் பீமனின் கதையால் இறக்கிறான்)அதேபோல், அகிலீஸ்ஸின் அம்மாவும் அவனைப் பாதுக்காக்க (இவன் பிறக்கும்போது ஒரு அசரீரி 'ட்ராய் போரில் இறப்பான்' என்று ஒலித்து தொலைப்பதால் - அந்தக் காலத்தில் எவ்வளவு அசரீரி! உள்மனதின் குரலைத்தான் அசரீரி என்றார்களோ?) அவனை ஸ்டிக்ஸ் நதியின் தண்ணீரில் முக்கி எடுக்கிறாள். பாதத்தைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறக்குவதால், உயிர் காக்கும் சக்தியைகொடுக்கும் அந்த நீர், அகீலிஸ்ஸின் உடல் முழுவதும் நனைப்பதில்லை. அசரீரியின் வாக்குப் படி, ட்ராய் போரில் இறந்தும்போகிறான்.

இத்தனையும் நடந்து, ட்ராய் நாசமாகி, ஆயிரக்கணக்கில் வீரர்களும், பெண்களும், ட்ராய் நகர மக்களின் ஆதரவைப் பெற்ற இளவரசன் ஹெக்டரும் செத்து, 'போதுமடா சாமி இந்தப் போரும் மண்ணாங்கட்டியும்," என்று கிரேக்க மன்னர்களே உச்சு கொட்டிய பிறகு, ஹெலன் என்ன ஆனாள்...?

போரில் பாரிஸ் இறக்க, ஹெலன், அவனது சகோதரனின் மனைவியாகிறாள். அப்புறம் அவளது பழைய கணவன் மெனலேயஸ் இவனையும் கொன்றுவிட, 'கடனே' யென்று அவனுடன் திரும்பிச் செல்கிறாள். அவளை அவளது மகனே பின்னாளில் விரட்டிவிடுகிறான் - என்கிறது ஒரு version.

'ஆயிரம் கப்பல்களைச் செலுத்திய அழகிய முகம்'...கடைசியில் இப்படித்தான் முடிகிறது. ஹ்ம்.

|

Tuesday, July 20, 2004

நடனப் பித்து

Note: Hundredth post. Yahoo!

கலைகளில் பரிச்சயம் ஏற்பட்டு, அதில் சாதிக்க வேண்டும் என்று ஆசையுள்ளவர்களுக்கு, கொஞ்சம் பித்து அதிகம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 'Letting go' வாம். எதை பற்றியும் அக்கறை கொள்ளாமல், எடுத்துக்கொண்ட காரியத்தை சாதிக்க வேண்டுமானால், சமூகத்தைக் கொஞ்சம் மறக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது.

'Dancing in the Family' என்று ஒரு புத்தகம். நடனக் கலைஞர் சுகன்யா ரஹ்மான எழுதியது. சிறு வயதில், "கடவுளே, என் குடும்பத்தை சாதாரணமாக மாற்றிவிடேன்," என்று அடிக்கடி வேண்டிக்கொள்வாராம். அதிலிருக்கிறது ஆயிரம் அர்த்தம்.

1930க்களில், 'ராகினி தேவி' என்று ஒரு பெண்மணி, அமெரிக்காவில் இந்திய நடனங்களின் மகத்துவத்தை அதிகம் பரப்பி வந்திருக்கிறார். 'பரதநாட்டியம்' என்றால் இன்னதென்றே தெரியாமல், நாட்டியத்தின் பேரில் இருந்த ஆசை ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்துக்கொண்டு, சில பல புத்தகங்களைப் புரட்டி, 'இந்திய நடனம்' என்று ஒன்றை ஆட ஆரம்பித்தாராம். 'எஸ்தர் லுவெல்லா' என்று பக்கா அமெரிக்கரான இவர், நடனத்தின் பொருட்டு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று கணக்கு வழக்கேயில்லை. முதல் காரியமாக, பத்திரிகைகளில் கொடுத்த பேட்டியில், "நான் அமெரிக்கனே இல்லை. காஷ்மீரத்தைச் சேர்ந்த உயர் குலத்துப் பெண். அங்கு திபேத்திய லாமாக்களிடம், மனிதக் காதுகளால் உணர முடியாத இசையை வைத்து, மனிதக் கண்களுக்குத் தெரியாத அற்புத நடன வகைகளை அறிந்து கொண்டேன்(?!)," என்று கற்பனைக் குதிரையை ஏகமாகத் தட்டி விட்டிருக்கிறார். :-))) [நிருபர் இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியாமல், தலையைப் பிய்த்துக்கொண்டதாக கேள்வி. அடுத்த நாள் அவர் ஆடிய நாட்டியத்தைப் பார்த்துவிட்டு, "மேடை முழுவதும் மிதந்துகொண்டிருந்தார்," என்று ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார்.:-)]. பின்னாளில் ராகினி முறையாக நாட்டியம் பயிலவும் செய்தார் என்பது வேறு விஷயம். 'இந்திய நடனம்' பற்றி முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் பெயர் தட்டிக்கொண்டவர் இவர்.

சுகன்யா எழுதியிருக்கும் புத்தகம் - மூன்று தலைமுறை நடனக்கலைஞர்களைப் பற்றியது - அவரது பாட்டி, ராகினி தேவி. அம்மா இந்திராணி ரஹ்மான். அப்புறம் அவரது வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள். ஆரம்பத்தில் இந்திய நடனத்தைப் பிரபல்யப்படுத்த ராகினி பாடுபட்டதும், பின்னாளில் அவரையே மிஞ்சிக்கொண்டு பெண் இந்திராணி மூன்னேறியதும்...அவை எல்லாவற்றையும் விட சுவையானவை, நடனம் தாண்டிய அவர்களது வாழ்க்கை.

நாடு விட்டு நாடு பயணம் செய்யும் இரு நடனக்கலைஞர்களைக்கொண்ட குடும்பம் எப்படி நடந்திருக்கும்? வீடு முழுவதும் சீனா, அமெரிக்கா, ஜப்பான் என்று விதவிதமான பொருட்கள். தினம் தினம் ஏதோவொரு நிகழ்ச்சி. இந்த ஆட்ட பாட்டத்தை விரும்பாத பங்களாத்தேசத்து ஆயா. ஒவ்வொரு முறை வெளிநாட்டு நிகழ்ச்சி முடிந்து இந்திராணி வீடு திரும்ப டாக்ஸி சார்ஜ் கொடுக்கப் பணம் இல்லாமல் திண்டாடுவதும், "Ha, Miss India has returned from foreign! But no money to pay taxi!" என்று கூப்பாடு போடுவதும் வாடிக்கை.

ராகினி தேவியும் இந்திராணியும் நடத்தியிருக்கும் வாழ்க்கையைப் படித்தால், மலைப்பாக இருக்கிறது - வீட்டுக்குத் தெரியாமல், ராம்லால் பாஜ்பாய் என்ற பெங்காலியை ராகினி திருமணம் செய்துகொள்வதில் ஆரம்பித்து, பத்து வருடம் கழித்து அவரது நண்பருடன் யாருக்கும் தெரியாமல் இந்தியா வந்து, 'இந்திராணி' என்ற அழகிய பெண் குழந்தையைப் பெற்று, ஊர் ஊராக அலைந்து நடனம் கற்றுக்கொண்டது வரை...கற்பனைச் செய்து பார்த்தாலே, யாரோ இராட்டினத்தில் சுற்றிவிட்டது போல் இருக்கிறது. :-). அடுத்த வேளை சாப்பாடு யார் வீட்டில் என்பது கூடத் தெரியாமல் பல முறை அலைந்திருக்கிறார். நடனத்தைத் தவிர்த்து வேறு எதையும் அவர் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

பெண் இந்திராணி அவரையே மிஞ்சிவிட்டார். பதினைந்து வயதில் (காதல்)திருமணம் செய்து, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது கணவருடன் கொல்கத்தா வந்து தங்கி, கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலும், அப்போது நடந்த ரணகளத்திலும் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்ந்து, 1952வில் முதன்முதலாக நடந்த 'மிஸ் இந்தியா' போட்டியில் வென்று வாகை சூடியபின் அடைந்த புகழைக்கூட நடனத்திற்காக தூர வைத்து....சுகன்யா பிறந்தபோது அவருக்கு யாரும் ஒழுங்கான பெயர்கூட வைக்கவில்லை:-). 'Bohemian life' என்பது இவர்களது வாழ்க்கைக்குப் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. 

நடனத்தின் மேல் இவர்கள் மூவரும் கொண்டிருந்த காதல் - முழுக்க முழுக்க உண்மை. அதற்காக அவர்கள் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருந்தார்கள். மொழி தெரியாத சென்னையில் யாரார் வீட்டிலோ தங்கி பரதநாட்டியம் கற்றுக்கொள்வதிலிருந்து, ஒரிஸ்ஸா சென்று அழிந்து கொண்டிருந்த ஒடிஸ்ஸியைக் கற்றுக்கொண்டு பொதுமக்களிடையே அரங்கேற்றி, 'இவர்கள் பெயரைச் சொல்லாமல் இந்திய நடனம் முற்றுப் பெறாது', என்று பெயர் வாங்கிய மூன்று நடனமணிகள்.

அதிசயப் பெண்கள்தான். 
 

|