Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, September 22, 2004

கல் சொன்ன கதை - # 3

Note: பகுதி 1 மற்றும் 2.

பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்த கடற்கரைக்கோயில்கள், மணல் நிரம்பி வழியும் பிரதேசத்தில் தனியாக நின்று கொண்டிருந்தன. அனந்த சயனப் பெருமாள் வீற்றிருக்கும் கர்ப்பகிருஹப் பகுதிக்குள் பிஸ்கட், சாக்லேட் காகிதங்களும், தினசரிப் பக்கங்களும் பறந்துகொண்டிருக்கும். உப்புக்காற்று பட்டு சிலைகள் மழுங்கிப்போயிருந்தன.

உப்புக்காற்றை எதுவும் செய்ய முடியாது - ஆனால் காகிதக் குப்பைகளை சுத்தப்படுத்தலாம். இப்படித்தான் ASIக்காரர்கள் முடிவு செய்திருக்க வேண்டும். இப்பொழுதைய கடற்கரைக்கோயில்களுக்கருகில் வரிசை வரிசையாகக் கடைகள் முளைத்திருந்தாலும்...செல்லும் பாதை 'பளிச்'சென்று சுத்தமாக இருக்கிறது. கேட்டைத் தாண்டி, கடற்கரைக்கோயில் வளாகத்திற்குள் செல்லும்போது, நமக்கெதிரே இருக்கும் புல்வெளிப்பரப்பு கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. பச்சைப்பசேல் புல்வெளிக்கு நடுவிலிருந்து இரு கோயில்கள் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.

இருட்டும் சமயத்தில் கடற்கரைக்கோயில்களுக்கு எதிரே, புல்வெளியில் உட்கார்ந்தோம். எங்கள் தலைக்கு மேல் கருமேகங்கள் அலை பாய்ந்துகொண்டிருந்தன. தூறல் விழுந்தது. 'இன்று நிலவு உண்டா, இல்லையா?' என்று ஒரு பக்கம் கவலை இருந்தாலும், காத்திருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்தது. கடற்கரைக்கோயில்களில் செதுக்கப்பட்டிருந்த சிலைகளின் உருவங்கள் மெல்ல மெல்ல மறைந்து தேய்ந்தன. சூரியன் மறைவதற்கு முன், இருளும் வெளிச்சமுமாக இருந்த சில நிமிடங்களில், கோயில்களின் உருவம் மட்டும் தெரிந்தது. 'இன்றைக்கு இவ்வளவுதான் போலும்' என்ற
நினைப்புடன் உட்கார்ந்திருந்தோம். நப்பாசையுடன் வானத்தைப் பார்க்க...

...ஒரு கருமேகத்தின் நுனியிலிருந்து, வெண்ணிலா எட்டிப் பார்த்தது.

"அண்ணன் வந்தாச்சு," என்று கோரஸாகக் குரல்கள் கிளம்பின. (:-). சிறிது நேரத்தில் சந்திரன் முழுமையாக வானில் ஏறியிருந்தான். சந்திர ஒளி கடற்கரைக்கோயில்களை வெள்ளி மழையில் நனைத்தது. எங்களைச் சுற்றி ஒரு மின்சார விளக்கு கூட இல்லை. தலைக்கு மேல் நிலவு, தூரத்தில் கடல் ஓசை, எதிரே ஒரு பழமையான கோயில். வருடம் 2004 என்பதை நம்புவது கடினம். நாங்கள் நினைத்து வந்தது நடந்துவிட்டது.

எங்களுடன் வந்து சேர்ந்துகொள்வதாகக் கூறியிருந்த நண்பர் (திரு. சுந்தர் பரத்வாஜ்) அப்போது வர, வரலாற்று சர்ச்சைகள் தொடங்கின (அவையெல்லாம் 'பயணங்க'ளில் -:-). ஒன்பது மணி வரையில் திகட்டத் திகட்ட, ஆளற்ற தனிமையில், கடலையும் நிலாவையும் கோயில்களையும், அதை எழுப்பிய இராஜசிம்ம பல்லவனின் பெருமைகளையும் ரசித்துவிட்டு, ஹோட்டல் அறைகளுக்குத் திரும்பினோம்.

ஒரு முறை கடல் பார்த்த கண்களுக்கு அதை மீண்டும் மீண்டும் ரசிக்கத் தோன்றும். அறைகளில் மூட்டை முடிச்சுக்களைப் போட்டுவிட்டு, எல்லோரும் கடற்கரைப் பகுதியில் ஆஜரானோம். நள்ளிரவுக்கு மேல் ஈர மணலில் அமர்ந்து, வெள்ளி நிற கடலலைகள், சாம்பல் வானத்தின் கீழ் மணலைத் தொட்டுக்கொண்டு செல்வதைப் பார்த்து, பிரமித்துப்போய் உட்கார்ந்திருந்தோம். எத்தகைய புகைப்படமும், சினிமாவாவும், க்ரா·பிக்ஸ் வித்தையும் உருவாக்கித் தர முடியாத மாயாஜாலம் அது.

மறு நாள் காலை...மீண்டும் பஞ்சரதங்கள். முந்தைய நாள் மாலை விட்டதையெல்லாம் காலையில் பிடிக்க முயற்சி செய்ய, எங்களுக்குக் கீழே ஞாயிறு காலையைப் போக்க வந்த மாண்புமிகு பொதுஜனம், எங்களில் சிலர் ரதத்தின் மீது ஏறுவதைப் பார்த்துவிழி விழியென்று விழித்தது. கூட்டமோ கூட்டம். பாறைகளுக்கிடையில் ஆற்றுத் தண்ணீர் சுழித்துக்கொண்டு ஓடுவது போல் மக்கள் வெள்ளம் ரதங்களை சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.

சல்வார் போட்ட பெண் ஒருவரிடம் மா.புரத்தின் அருமை பெருமைகளை அளந்துகொண்டிருந்த கைடு ஒருவர், அவர் போனவுடன் தரையில் கிடந்த நாவற்பழங்களை அவ்வையார் போல் ஊதிக்கொண்டிருந்தார்.

டாக்டர். கலைக்கோவன் எங்களைப் பார்த்துக் கண் சிமிட்டிவிட்டு, கைடிடம் கேட்டார். "ஏங்க, இந்த ரதங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்."

"அதா...பெரிய கலைப் பொக்கிசமுங்க."

"அப்படியா? எங்களுக்கு இதப் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. கொஞ்சம் சொல்லுங்க."

"ரைட்டான ஆளுகிட்ட வந்திருக்கீங்க." நானும் கமலும் ஒருவரையருவர் பார்க்க, டாக்டர் முகத்தில் உணர்ச்சியே இல்லை. "ஆரம்பத்துல இதெல்லாம் கோயிலா இருந்துச்சு. அப்புறம் மக்கள்லாம் வழிபாடு நடத்தி செலையெல்லாம் அசுத்தப்படுத்தறங்கன்னு சொல்ட்டு, கவர்மெண்ட்டு அல்லாத்தையும் ரதமா மாத்திருச்சுங்க."

இதைக்கேட்டுவிட்டு, எத்தனை பேர் மா.புரத்தின் ரதங்கள் தமிழ்நாட்டு அரசின் கைவண்ணம் என்று
நினைத்துக்கொண்டார்களோ. அது கொற்றவைக்கே வெளிச்சம்.

ரதங்களைப் பார்த்த பிறகு, அங்கிருந்த மக்கள் வெள்ளத்தின் கைக்கு அதிகம் எட்டாத இராமானுஜர் ரதம், அப்புறம் ஆதி வராகக் கோயில், கணேச ரதம், இவையெல்லாவற்றையும் பார்த்து முடித்த போது, மதியம் மணி இரண்டு.

மதிய உணவிற்குப் பிறகு, வாயனுர் என்னும் சிறிய ஊரில், சிவன் கோயில். மீண்டும் சென்னை திரும்புகையில், வழியில் 'சத்ராஸ்' என்று இன்று அழைக்கப்படும் 'சதுரங்கப்பட்டிணத்தில்' நிறுத்தம். பிரம்மாண்டமான, காலி அறைகளைப் பார்த்துவிட்டும், அப்படியே டச்சு வீரர்களைப் புதைத்திருந்த இடத்தையும் பார்த்துவிட்டு, சென்னை வந்து சேர்ந்தோம். இந்தப் பயணம் முடியுமுன்னரே, 'அடுத்து எங்கு செல்லலாம்' என்று விவாதம் தொடங்கிவிட்டது.

பயணங்கள் முடிவதில்லை.

(முற்றும்.)


|