Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, October 08, 2004

கேரள விஜயம்

நீண்ட நெடுநாட்களாக இந்தப் பக்கம் தலைகாட்டாமல் இருந்ததற்குக் காரணம் - என் சொர்க்க பூமியிலிருந்து சற்றே விலகி, கடவுளின் சொந்த ஊருக்கு ஒரு எட்டு போய் வந்ததுதான். போய்விட்டு இரண்டே நாளில் வந்துவிடாமல், ஆற அமர பத்து நாள் மலையாள தேசத்தின் அழகை நிதானமாக ரசித்துப் பார்த்துவிட்டு வருகிறேன். இது எனக்குப் பயண ஸீசன் போலும். ஒன்று மாற்றி ஒன்று எங்காவது போய் வந்து கொண்டிருக்கிறேன்.

கேரள தேசத்தில் நான் சென்று வந்த இடம் - திருவல்லா. பச்சைப் பசேலென்று மலையும் நதியும் தோப்புமாக, சமீபத்து depression புண்ணியத்தில் சிலிர்த்துக்கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்கள் கருஞ்சாம்பல் நிறத்தி மேகங்கள் மூடிக்கொண்டு மழை. மற்ற நாட்கள் கண் கூசும் சுரிய வெளிச்சம். இருக்கட்டும். இப்பொழுது நான் விசிட்டடித்தது பற்றி சில குறிப்புகள்:

1. கேரளம் சென்றது கண் சிகிச்சை விஷயமாக. திருவல்லாவில் 'சுதர்சனம் நேத்ர சிகித்சாலயம்' என்றொரு கண் சிகிச்சை மையம் இருக்கிறது. ஆயுர்வேத முறைப்படி கண் சிகிச்சை செய்கிறார்கள். நவீன கண் வைத்திய முறையில் கைவிடப்பட்டவர்களுக்கெல்லாம் இங்கே குணம் கிடைக்கிறது என்பது இவர்களுக்குக் கிடைத்திருக்கும் சான்றிதழ்.

2. நூறு வருடப் பழங்கால வீட்டில் சிகிச்சை செய்கிறார்கள். போகும் வழியெல்லாம் காட்டுப் பிரதேசம் போல் செடி கொடிகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. நம் கான்க்ரீட் காடுகளிலிருந்து இவை அளிக்கும் குளுமையான மாறுதலிலேயே உடல் பாதிக்கு மேல் குணமடைந்துவிடும். மிச்சத்திற்கு ப்ளாஸ்டிக் வயர் கட்டில்கள், மரத் தடுப்புச் சுவர்கள், குளுமையை வடிகட்டும் மர உத்தரங்கள், இனிமையாக சிரித்துப் பேசும் மருத்துவர்கள் என்று ஆஸ்பத்திரி வாசனை எதுவும் இன்றி, அமைதியாக இருக்கிறது. 'பர பர'வென்று எல்லோரும் இங்கும் அங்கும் அலைந்து வேலை செய்து கொண்டிருக்காமல் (அல்லது அப்படி பாவனை செய்து கொண்டிருக்காமல்), நிறுத்தி நிதானமாக பொழுது போவது இன்னொரு ப்ளஸ்.

3. திருவல்லாவில் மிகப் பிரசித்தம் பெற்ற விஷ்ணு கோயில் (அல்லது அவர்கள் மொழியில் 'அம்பலம்') இருக்கிறது. ஸ்ரீ வல்லபர் என்பது அங்கு குடியிருக்கும் மூர்த்தியின் பெயர். மிக அழகான கோயில். எத்தனை சுத்தமான வைத்திருக்கிறார்கள். திருவல்லாவைச் சுற்றிய தேசத்திற்கு இவர்தான் 'தேச தேவ'ராம். இந்தக் கோயில் சம்பதப்பட்ட சுவாரஸ்யமான கதைகள் அங்கு கிடைத்தன. தமிழும் மலையாளமும் கலந்த கலப்பட மொழியில் அந்த ஊர் மக்கள் அவற்றைச் சொல்லக் கேட்பது அற்புதமான அனுபவம்.

4. மறத் தமிழர்களாகிய எங்களை மலையாளம் பேச வைத்தே தீருவது என்று 'சுதர்சன'த்தைச் சேர்ந்தவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டுவிட்டார்கள். நாங்கள் பேசும் தமிழை கண்களை விரித்துக் கேட்பதும், அதற்கு என்ன அர்த்தம் இருக்கக்கூடும் என்று தங்களுக்குள் விவாதிப்பதும், பிறகு அதற்கு மிகத் தூய்மையான மலையாளத்தில் பதில் கொடுப்பதும், நாங்கள் மண்டை காய்வதைப் பார்த்து ரசித்துச் சிரிப்பதும்...பத்து நாட்கள் மலையாளத்தில் 'பறை'ந்து 'பறை'ந்து, இப்பொழுது எதையெடுத்தாலும் 'அது அல்லோ?' என்றுதான் வாயில் வருகிறது. என்னால் ஆனது - அவர்களுக்கு செந்தமிழ் கொஞ்சம் கற்றுக்கொடுத்து வந்தேன். சில வார்த்தைகளைச் சிட்டுக்குருவி மாதிரி தலை சாய்த்துக் கேட்டுக்கொள்வார்கள். சிலவற்றுக்கு ரியாக்ஷன் வேறு மாதிரி இருக்கும். ஒரு உதாரணம்: 'கொட்டாவி' என்ற வார்த்தை. அந்த வார்த்தையைக் கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரிக்காதவர்களே இல்லை. "நாங்கள் 'வாய்க்கோட்டா' என்றுதான் சொல்வோம். 'கொட்டாவி' என்பது அபத்தமான வார்த்தை" என்பன போன்ற மொழித் தகராறுகள் நிறையவே நிகழ்ந்தன:-)

5. எல்லாஞ்செரி. மஞ்சு தவழும் மலைகளையும், தோப்பையும் துரவையும் விட்டுவிட்டு, நமது காய்ந்துபோன தமிழ்நாட்டிற்குள் ரயில் நுழைந்த போது...

..."சொர்க்கத்தில் உள்ளவர்கள் புண்ணியம் மட்டுந்தானா செய்கிறார்கள்? அங்கேயும் பாவங்கள் செய்கிறார்கள். அதற்குப் பரிகாரம் தேடப் பூவுலகத்துக்கு வருகிறார்கள். வந்த காரியம் ஆனதும் சொர்க்கத்துக்குப் போகிறார்கள்."

"இல்லை. எனக்குச் சொர்க்கத்துக்குப் போக விருப்பம் இல்லை. பாண்டிய நாட்டில் ஒரு பாலைவனம் இருக்கிறது. அதன் நடுவில் சில மொட்டைப் பாறைகள் இருக்கின்றன. புல், பூண்டு முளைக்காத பாறைகள். அவற்றில் சில முழைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் அந்த முழைகளில் திகம்பர ஜைனர்கள் இருந்து தவம் செய்தார்கள். இப்போது பாம்புகளும் நரிகளும் அவற்றில் வசிக்கின்றன. தேவலோகத்து அமராவதி நகரைக் காட்டிலும் அந்தப் பாண்டிய நாட்டுப் பாலைவனப் பாறைகளே எனக்கு அதிகம் பிடித்தமானவை." ...


அழகு கொஞ்சும் மலையாள தேசம்தான். என்றாலும், நம் ஊரின் பனை மரங்களும் வயல்வெளிகளும்தான் சொர்க்கம் போலத் தெரிகின்றன. !

பி. கு: இங்கே நான் தேசாந்திரம் போயிருக்கையில், அங்கு ஒருத்தர் 'வளவளவென்று வலைப்பதிவு இருக்கலாம்' என்று ஸேம்சைடு கோல் அடிக்கிறார். கவிஞரே, நூற்றுக்கணக்கான ஓலைகள் எழுதி, Harry Potter முதல் படத்தில் கடிதத்தால் வீட்டையே தாக்குவார்களே, அப்படி செய்யவேண்டும்...! [உமது பெண் பெயரில் நீர் அமர காவியம் பாடத்தான் போகிறீர், அதை நானும் விமரிசனம் செய்யத்தான் போகிறேன்...]

பி.கு 2: மரத்தடிப் போட்டிகள் இனிதே நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் :-)


|