Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, January 27, 2005

ஓவியரும் நடனமணியும்

அது நான் மூக்கற்ற ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்த சமயம். ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் முகத்தில் மூக்கை வரைய மறுத்தேன். என மனதில் தீவிரமாக 'மூக்கு-வெறுப்பு' ஏற்பட்டிருந்தது. வட்ட வட்டமாக மொண்ணை முகங்களை நான் வரைந்ததைப் பார்த்தவர்கள் "ஏன் மூக்கே இல்லை?" என்று கேட்டால், "மூக்கு சரி வராது", என்று திட்டவட்டமாகச் சொல்வேன். வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பது போல் என்மீது ஒரு பார்வை வீசி விட்டுப் போவதுடன் அவர்கள் வேலை முடிந்துபோகும். "மூக்கில்லாமல் மனிதர்கள் எப்படி?" என்பது மாதிரியான விஞ்ஞானபூர்வமான கேள்விகளெல்லாம் எனக்குள் அதிகக் குழப்பங்கள் ஏற்படுத்தவில்லை. முகத்தில் மூக்கு துருத்திக்கொண்டிருக்கும் தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். End of argument.

என் மூக்கற்ற ஓவியங்களைப் பார்த்தபோது, ஓவியர் தனபால் சற்று நேரம் சும்மா இருந்தார். விதவிதமாக மூக்கற்ற மனிதர்கள் உலகில் உலா வருவதை முகபாவம் மாறாமல் தீவிரமாக ஆராய்ந்தார்.

அம்மா கவலையுடன், "மூக்கே வரைய மாட்டேங்கிறா," என்றார். ["டாக்டர், சாப்பிடவே மாட்டேங்கிறா," என்பது மாதிரியான தோரணையுடன்.]

ஓவியரின் முகத்தில் ஒரு விசித்திரப் புன்னகை தோன்றியது. "அப்ப விட்றுங்க," என்றார் சாவதானமாக.

அம்மா முகத்தில் மேலும் கவலை.

"அவள் மனதில் முகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ, அப்படி வரைகிறாள்." என்றார், சிரித்துக்கொண்டே. "குறுக்கே விழுந்து தடுக்க நாம் யார்? மூக்கில்லாத மனிதர்கள்தான் வரைய வேண்டும் என்று அவள் இஷ்டப்பட்டால், அப்படியே இருக்கட்டும். மூக்கின் மேல் பிடிப்பு வரும் போது, அது தானாக மாறும்." கொஞ்சம் யோசித்துவிட்டு, "இல்லை, மாறாமலேயே இருக்கும்."

நான் வெற்றிப் பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தேன். அன்றே என் மனதில் ஓவியர் தனபாலை மானசீகக்குருவாக நினைத்துக்கொண்டேன் என்றும் சொல்லலாம். மூக்கு இருக்கிறதோ, இல்லையோ, 'இது சரி, தப்பு,' என்று எதுவும் சொல்லாமல், என் இஷ்டப்படி என்னை வரையவிட்டவர்களில் முதன்மையானவர் அவர். இன்று வரையில், அவரை நினைத்தால் எனக்கு நினைவுக்கு வருவது அவரது கண்களில் தெரிந்த கனிவு. முகம் முழுதும் மலரும் புன்னகை. சற்றே வித்தியாசமான பேச்சுத் தமிழ்.

'மதுபானி' ஓவிய வகைகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்த புண்ணியம் அவரைச் சேர்ந்தது. தன் வீட்டுத் தோட்டத்தைச் சுற்றிக் காண்பிப்பார். சொத்து விவரம் ஒப்புவிப்பதுபோல் ஆசை, அருமை, பெருமை என்று எல்லாம் கலந்து தன் பொன்சாய் மர வகைகளைச் சுற்றிக்காண்பிப்பார் ("இந்த மரத்துக்கு என் மகன் வயசாகுதும்மா..."]. தாழம்புதர்களை வர்ணிப்பார். ["இதை 'screwpine'ன்னு சொல்லுவாங்க..."]. வித்தியாசமான தோட்டம். வித்தியாசமான மனிதர்.

எல்லாவற்றையும் விட...

"இவளுக்கு வரைய சொல்லித்தாங்களேன்," என் ஓவிய முயற்சிகளையெல்லாம் தூக்கிக்கொண்டு நாங்கள் அவரைச் சந்தித்த போது அம்மா கேட்டுக்கொள்ள, நிதானமாக அத்தனை ஓவியங்களையும் பார்த்துவிட்டு, "கத்தை கத்தையாகப் பேப்பரும், பேனா பென்சில் சமாச்சாரமும் அலுக்காமல் வாங்கிக் கொடுங்கள்," என்றார்.

"அப்படின்னா...?"

"நான் சொல்லிக்குடுக்கக்கூடியது எதுவும் இல்லை." என்றார் புன்னகையுடன். 'வரைவது எப்படி?' என்று அவர் இறுதி வரை எனக்கு வகுப்பெடுக்கவேயில்லை. "உனக்கு அதெல்லாம் தேவையில்லை," என்று ஒரே வரியில் முடித்துவிட்டார்.

அதனாலேயே, 'காலச்சுவடி'ல் ஓவியப்போட்டி அறிவித்தபோது, அவர்கள் பட்டியலிட்டிருந்த 'ஆளுமை'களில் (இந்த வார்த்தை பொருந்துமா என்ன? 'Personality' என்கிற வார்த்தையை அப்படியேவா தமிழ்ப்படுத்துவார்கள்? அர்த்தமே மாறிப்போகிறதே?) ஓவியர் தனபாலைத் தேர்ந்தெடுத்தேன். நான் வரைந்ததைப் பார்த்திருந்தால் அவர் என்ன சொல்லியிருப்பாரோ, தெரியவில்லை.

அது இங்கே...

Oviyar Dhanabal. Medium Used: Black and White, poster colours. (c) Pavithra[குறிப்பு : மூக்கின் மேலிருந்த வெறுப்பு காலப்போக்கில் மறைந்துவிட்டது. இப்போதெல்லாம் காதுகள்தான் பிடிப்பதில்லை...]

'ஆளுமை' வரைதலில் இரண்டாவதாக நான் தேர்ந்தெடுத்த நபர் - ருக்மிணிதேவி அருண்டேல்.

"...ஒரு கலையில் தேர்ச்சி பெறுவதற்கு அதனிடம் அபிமானமும், அதில் பயிற்சி பெற ஆர்வமும் மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொரு கலைக்கும் இன்றியமையாத சில அம்சங்கள் இயற்கையில் அமைந்திருக்க வேண்டும். நடனக் கலைக்குரிய தேக அமைப்பு ருக்மிணி தேவி பெற்றிருக்கிறார்.

அவருடைய உடையும் அலங்காரமும் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தன. தமிழர்களின் பழைய நாகரிகத்துக்குரிய உடையும் அலங்காரங்களும்தான்; ஆனால் அவற்றில் புதுமையும் கலந்திருந்தது. கருத்த கூந்தலில் வெண்ணிற மல்லிகைப்பூ, காதில் ஜிமிக்கி, நெற்றியில் குங்குமம், கழுத்தில் ரத்தின ஹாரம், கால்களிலும் உள்ளங்கையிலும் செம்பஞ்சுக்குழம்பு ஆகிய எல்லாவற்றிலும் நமது பழைய நாகரிகம் புதுமை பெற்று விளங்கியது.

உடையும் அப்படித்தான், நடனத்துக்கு வசதியானது. அதே சமயத்தில் அசைப்பிலே பார்த்தால், புராதனத் தமிழ்ச் சிற்பி ஒருவன் செய்த தேவமாதின் சிலை உயிர்பெற்று வந்தது போல் தோன்றும்...
"

- "கல்கி", ஆ.வி. 22-3-36 ('பொன்னியின் புதல்வர்' தொகுப்பு)

ருக்மிணிதேவியைப் பற்றி நான் படித்த குறிப்புகள் கற்பனையைத் தூண்டிவிட்டன. நடனம் என்றாலே, 'அது சதிர்க்கச்சேரிதான்' என்னும் பரவலான (தாழ்வான) அபிப்ராயம் இருந்த அந்தக் காலத்தில், முறையாக நடனம் கற்றுக்கொண்டு மேடையேற எப்பேர்ப்பட்ட துணிச்சல் வேண்டும்? எத்தனை வம்புப்பேச்சுக்களையும், அவமானங்களையும் தாண்டி வர வேண்டும்? எத்தனை பேருக்கு அவ்வளவு மன உறுதி இருந்திருக்கும்?

முதுமையடைந்த பிறகு அவரை வைத்து எடுத்த புகைப்படங்கள் தவிர்த்து, வித்தியாசமாக ஏதாவது கிடைக்காதா என்று தேடியபோது, அகப்பட்டது அவரது இளமைத் தோற்றம்.

'துடைத்து வைத்த குத்து விளக்கைப்போல பளிச்சென்ற அழகு' என்ற சொற்றொடர் கேள்விப்பட்டிருக்கிறேன். ருக்மிணிதேவியின் விஷயத்தில் அது உண்மையென்று தோன்றியது.

கூர்மையான நாசி. கச்சிதமாக அமைந்த உதடுகள், படிய வாரிய தலை...அப்புறம் கண்கள். ஆழ்ந்த யோசனையைக் குறிக்கும் மிக அழகான கண்கள். என்னவோ கனவு கண்டுகொண்டிருக்கும்போது 'சட்'டென்று புகைப்படம் எடுத்துவிட்டதுபோல. அந்த முகத்தை வரையக் கைகள் துறுதுறுத்தன. வரையும்போது, அவரது முக அமைப்பின் கச்சிதத்தை மேலும் ரசித்தேன். விதவிதமான கோணங்களில் ஆராய்ந்தேன். எப்படிப் பார்த்தாலும் என் கண்களுக்கு அழகாக இருக்கிறார். புராதன தெய்வச் சிற்பம் போலத்தான்.

அது இங்கே...

Rukminidevi. Medium: Sketched using Black micro-tip pen. (c) Pavithra'கலைகளைப் பயிலுவதே ஆனந்தம்' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 'பரிசு கிடைக்குமா, கிடைக்காதா' என்ற எண்ணம் எதுவும் இல்லாமல், ஓவியங்கள் வரைவதே ஆனந்தம்தான்.

பி.கு: மகாபாரதம் குறித்த எனது ஆங்கிலப் பதிவு இங்கே.


|