Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, February 25, 2005

"கண்டுகொண்டேன்..."

(c) Sulekha.com


"வாழ்க்கையில் உயர விரும்புகிறாயா? முதலில் உன் இருப்பை உறுதிசெய்துகொள். உன் வாழ்நாள் என்னும் நூலைக்கொண்டு அற்புத உடை ஒன்றை நெய்யத் தொடங்குமுன், அடக்கம் என்னும் தறியை உருவாக்கிக் கொள். நீ எதையும் உருவாக்கத் தொடங்குமுன், உன் மனதில் மிக ஆழமான, பலமான அஸ்திவாரம் வேண்டும்."

"உயரமான மலைகளையும், வளைந்து நெளிந்து செல்லும் நதிகளையும், ஆழமறிய முடியாக் கடல்களையும், வானில் நிற்காமல் சுழலும் நட்சத்திரங்களையும் மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் கண்டு அதிசயத்தில் ஆழ்கிறார்கள்...அவர்கள தங்களைப் பார்த்துக்கொள்வதே இல்லை."

- Saint Augustine.பிப்ரவரி 23.

இன்றைக்கு 502 வருடங்களுக்கு முன்னால், மகான் ஒருவர் இந்த உலகை விட்டு மறைந்தார். தனது வாழ்நாள் முழுவதும் - ஏறக்குறைய 92 ஆண்டுகள் - யாரை நாயகனாக பாவித்து 32,000 சங்கீர்த்தனங்கள் வரை இயற்றினாரோ, யாரை நினைத்து உருகி, கண்ணீர் விட்டுப் பாடி, தன்னையும், தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் பரவசத்தில் ஆழ்த்தினாரோ...அவரது பாதங்களை அந்த மகானின் உயிரொளி சென்றடைந்தது.

அன்னமாச்சார்யா.

'தல்லபாகா' என்ற சிறு ஆந்திர கிராமத்தில் பிறந்தவர். 1408ஆம் ஆண்டு, வருடக்கணக்காக குழந்தையில்லாமல் தவித்துக்கொண்டிருந்த நாராயணசூரி, லக்கமாம்பா தம்பதிக்கு அருமைப்பிள்ளையாக பிறந்த போது, பின்னாளில் சுந்தரத் தெலுங்கின் முதல் வாக்கேயக்காரராக அவர் பரிணமித்து, இசையுலகத்தைக் கட்டிப்போடுவார் என்று யாராவது அறிந்தார்களோ...தெரியவில்லை.

ஒருவர் பிறந்தவுடன், 'இன்னார் மகானாகக்கூடும்' என்று அவர்களது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுடர்வது அபூர்வமாகத்தான் நடக்கும் போலும். அநேக சமயங்களில் அப்படி ஒரு விதி அவர்களுக்குக் காத்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் எதுவும் சிறு வயதில் இருப்பதில்லை. அன்னமய்யாவும் சாதாரணமாகத்தான் வளர்ந்தார். கடவுளிடம் - அதிலும் விஷ்ணுவிடம் அதிக பக்தி கொண்டிருந்தார் என்பதைத் தவிர்த்து, அவர் தெய்வக் குழந்தை என்பதை ஊர்ஜிதப்படுத்த 'தடா'லென்று ஒளிக்கீற்று எதுவும் உடனேயே தோன்றவில்லை.

படிப்பை முடித்தார். அத்தை பெண்களும் அவருடன் வளர்ந்தனர். உரிய வயதில் 'திருமணம் செய்துகொடுத்துவிடலாம்' என்று குடும்பத்தில் முடிவெடுத்தார்கள். ஒரு நாள், திம்மக்கா, அக்கலம்மா என்ற தன் இரு முறைப்பெண்களுடன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட குடை ஒன்றை தூக்கிக்கொண்டு, அவர்களுடம் சிரித்துப் பேசியவாறு மலைப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது...

ஆஜானுபாகுவான ஒரு மனிதர் 'தட்'டென்று அன்னமய்யாவின் தோள்களை இடித்தார். 'யார், எவர்', என்று அறிமுகம் எதுவும் செய்துகொள்ளாமல், "எத்தனை நாட்களுக்கு உன் அத்தைப் பெண்களின் கண்ணழகில் லயித்துப் போயிருக்கப்போகிறாய்?" என்றார்.

"பைத்தியக்காரராக இருக்கிறீர். இந்தக் கண்களை மிஞ்சும் சவுந்தர்யமும் ஒன்று உண்டா? உம் வேலையைப் பார்த்துக்கொண்டு போம்." அன்னமய்யாவின் கவனம் பாதி வந்த மனிதர் மீதும், மீதி பூக்குடையின் மீதும் இருந்தது.

"என் வேலையைத்தான் பார்க்கிறேன். இவர்களுடைய கண்களைக் காட்டிலும் அழகிய விழிகளை உனக்குக் காட்டினால் என்ன தருவாய்?"

அன்னமய்யாவின் கவனம் முழுதும் திரும்பியது. "முதலில் காட்டும். பார்ப்போம்."

[உண்மையைச் சொல்கிறேன். இந்தக் காட்சி எனக்கு ஸ்ரீராமானுஜரின் வரலாற்றில் வரும் 'வில்லிதாசனின்' கதையை நினைவுபடுத்தியது.]

அந்த மனிதர் அன்னமய்யாவை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு குடியிருந்த தெய்வத்தின் விழிகளைப்பார்த்து மயங்கி விழுந்தவர் மீண்டபோது, 'கண்டுகொண்டேன்...' என்ற பாட்டுடன்தான் விழித்தார். அப்புறம், அந்தக் கண்களை மறக்கமுடியாமல், பக்தர்கள் கோஷ்டியுடன் திருப்பதி சென்றது, அங்கேயே லயித்துப்போய் பாடல்கள் இயற்றியது...

இரண்டு நாட்களுக்கு முன்னால் நாகார்ஜுனா, ரம்யா கிருஷ்ணன், கஸ்தூரி நடித்த 'அன்னமய்யா' பார்த்ததன் விளைவு, இந்தப் பதிவு.

நாகார்ஜுனா நடித்து, 'இதயத்தைத் திருடாதே' படம்தான் எனக்கு முதலில் நினைவில் இருந்தது. அந்தப் படம் எனக்குள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...என்றாலும், அப்பொழுதே நாகார்ஜுனாவைக் கொஞ்சம் பிடித்துப்போய்விட்டது. இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில், ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. மகானாக நடிக்கக் கொஞ்சம் - கொஞ்சம் என்ன, நிறையவே மெனக்கெட வேண்டும். முகத்தில் சாந்தமும், கண்களில் அமைதியும் இருக்கவேண்டும். Body Language அதற்கு ஈடு கொடுக்கவேண்டும். 'ஏதோ ஒரு மகான்' என்பதாக இல்லாமல், 'அன்னமய்யாவின்' கதாபாத்திரத்தோடு இயைந்துபோக வேண்டும். 'நாக்' இயைந்துபோயிருக்கிறார்.

படத்தில் நான் அன்னமாச்சாரியாரை மட்டுமே நான் பார்த்தேன். அவர் கடவுளைக் காணும்போது நானும் கண்டேன். அவர் திருப்பதி மலையில் ஏற முடியாமல் தவித்துத் தடுமாறியபோது நானும் தடுமாறினேன்; இறுதியில், அவர் பக்திப் பெருக்குடன் கீர்த்தனைகள் இயற்றியபோது, அவரது பரவச நிலை என்னையும் பற்றிக்கொண்டது. எங்கேயும், நடிகனை நான் காணவில்லை. தங்கு தடையில்லாமல் உணர்ச்சி வெள்ளத்தில் கீர்த்தனைகள் இயற்றிய, 'பிரம்மம் ஒன்றுதான்,' என்று தீர்மானமாக நம்பிய அன்னமய்யாவையே கண்டேன். A great performance. [இந்தப் படத்திற்கு அவருக்கு 'நந்தி' அவார்ட் கிடைத்தது.]

சில மசாலாக் காட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை. அன்னமய்யாவை நன்கு சித்தரித்தவர்கள், சாளுவநரசிங்கராயனின் கதாபாத்திரத்தையும் நல்ல முறையில் உருவாக்கியிருக்கலாம். Unwarranted silliness.

ரம்யாவும் கஸ்தூரியும் அழகுப் பதுமைகளாக - உண்மையிலேயே அழகுப் பதுமைகளாக வந்து போகின்றனர் :-). இந்த மாதிரி மனம் ஒத்துப்போகின்ற மனைவியர் கிடைக்க கோடிக்கணக்கான ஜென்மங்கள் தவம் செய்திருக்க வேண்டும். கணவனின் மனம் துறவறத்தை நாடுகிறது என்பதை உணர்ந்து, அவரை விடுவிக்கின்ற மனம் சுலபத்தில் எவருக்கும் வாய்த்துவிடுவதில்லை - அதிலும் அவர்கள் காதல் தம்பதியராக இருக்கும்போது.

அப்புறம், இசை. ஆ, அதற்கென்று தனியாகவே ஒரு பதிவு கொடுக்கலாம் - அவ்வளவு விஷயம் இருக்கிறது.

முதலில், இனிமை. அன்னமாச்சாரியாரைப் பற்றிய படம் எடுப்பதாக இருந்தால், இசைக்குத்தான் அதிக முக்கியம் கொடுக்கவேண்டும் என்பதை நன்கு உணர்ந்து, உருக்கும் இசையை அள்ளி வழங்கியிருக்கிறார்கள். 'சமையல் செய்த கைக்குத் தங்கக் காப்பு போடுகிறேன்' என்று சொல்வார்கள் - அன்னமய்யாவின் கீர்த்தனைகளை இவ்வளவு அற்புத உணர்ச்சியோடு பாடியதற்கு எஸ்.பி.பிக்கு என்ன கொடுக்கலாம் என்று தெரியவில்லை.கடவுளை முதன்முதலில் காணும்போது அவரது குரலில் தொனிக்கும் அற்புத உணர்வு, அரசன் சாளுவநரசிங்கராயனின் சேவகர்கள் சாட்டையால் விளாசும்போது ஆத்திரத்தில் துடிக்கும் குரல்...மாயங்கள் செய்திருக்கிறார். BGMஇலும் பின்னியிருக்கிறார்கள். பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு, டேப்பைத் தேய்த்துவிட்டேன்.

அடிப்படையில், அன்னமாச்சாரியாரின் பாடல்கள் மிக எளிமையானவை. கரடுமுரடான சொற்கள், 'என்ன சொல்ல வர்றார்?' என்பது மாதிரியான குழப்படிகள் அதிகம் நேர்வதில்லை. தெலுங்கு மொழியின் நெளிவு சுளிவுகள் அதிகம் தெரியாத என்னாலேயே பல வரிகளைத் தங்குதடையில்லாமல் புரிந்துகொள்ள முடிந்தது. [ஒரு உதாரணம்: திருப்பதி மலையை முதன்முதலில் காணும்போது அவர் பாடும் 'அதிவோ...' பாடல்.அப்புறம் அவர் பாடிய தாலாட்டுப் பாடல்கள்.] பக்திக்கு மொழி ஒரு தடையே அல்ல. நல்ல இசைக்கும்தான்.

'அவனருளாலே அவன் தாள் வணங்கி,' என்று வாக்கு உண்டு. அன்னமாச்சாரியார் இறைவனடி சேர்ந்த நாளிலேயே அவரைப் பற்றியும், அவரது பாடல்களையும் கேட்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் என்று தோன்றுகின்றது.

நல்ல விஷயங்களையும், நல்லவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதே ஒரு கொடுப்பினைதான்.
|