Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, March 20, 2005

விசிறிக்கதைகள்

எழுத்து சம்பந்தப்பட்ட வரையில், எல்லோருக்கும் சில சமயம் சில பித்துக்கள் பிடிக்கும். எனக்குச் சமீபத்தில் பிடித்த பித்து - விசிறிக்கதைகள். (Fanfictionஐத்தான் 'விசிறிக்கதை' என்று மொழிபெயர்த்தேன். 'என்னாது?' என்று புருவத்தை நெறிப்பவர்களுக்கு: 'magical realism' என்பதை 'மாந்த்ரீக யதார்த்த'மாக மொழிபெயர்க்கும்போது, 'விசிறிக்கதைகள்' ஒன்றும் மோசமில்லை என்பது என் எண்ணம். வேறு பெயர் சூட்ட வேண்டுமென்று நினைப்பவர்கள்...:-)

சில படங்களைப் பார்க்கும்போது/புத்தகங்களைப் படிக்கும்போது, சம்பந்தப்பட்ட படைப்பு நிறைவடைந்தவுடன், 'இதற்குப் பின் இந்தக் கதாபாத்திரங்கள் என்ன ஆனார்கள்?' என்ற கேள்வி வரும்.அவர்களை விட்டு விலக முடியாது; பாத்திரங்கள் அவ்வளவு நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கும். 'அப்புறம் என்ன?' என்ற கேள்வி நமநமக்கும். [எனக்கு நிறைய்ய்ய்ய்ய்ய வந்திருக்கின்றன. நாள்கணக்காக யோசித்திருக்கிறேன் :)] எழுத்தாளரோ, இயக்குனரோ இதற்குப் பதில் சொல்வது மாதிரி sequel உருவாக்குவார்கள் (அது பல சமயம் பலனளிக்காமல் சப்பையாக முடிந்துவிடும் அபாயம் உண்டு. முதல் படைப்பின் அழகும் கச்சிதமும் அடுத்தடுத்த படைப்புக்களில் குறைந்துகொண்டே வருகின்றன. இந்தப் பிரச்சனையில் சிக்காத படங்களோ, புத்தகங்களோ, குறைவுதான். 'இல்லவே இல்லை; என்று சொல்லவில்லை - ஆனால், குறைவு.). பல சமயம் அது நடக்காது. பார்வையாளர்கள் தங்கள் கற்பனைத் திறனை முடிந்த வரையில் பயன்படுத்தித் திருப்தியடைய வேண்டியதுதான்.

இந்தப் பள்ளத்தை இட்டு நிரப்ப உருவானதுதான் 'fanfiction' என்னும் மகாசமுத்திரம். சமீபத்தில் எனக்கு அறிமுகமான உலகம். ஏற்கனவே உருவாக்கப்பட்ட திரைப்படம்/ புத்தகம் இவற்றில் உள்ள கதாபாத்திரங்களை வைத்து, படத்தின்/புத்தகத்தின் விசிறிகள் உருவாக்கும் கதைகள் fanfiction வரையறையின்கீழ் வரும். சில சமயம், விசிறிக்கதைகளை உருவாக்கும் எழுத்தாளர்களின் திறமை, மூலக்கதாசிரியர்களே பிரமிக்கும் அளவுக்கு இருக்கும். என்னை அப்படி அதிசயிக்க வைத்தது - Starwars Fanfiction உலகம். ஸ்டார்வார்ஸ் படங்கள்/புத்தகங்களின் கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கபட்ட இதிகாச/புராண/தொடர்கதை/சிறுகதை இயக்கம். தொடக்கத்தில் கொஞ்சம் தயக்கத்துடன்தான் உள்ளே நுழைந்தேன் - சீக்கிரத்திலேயே அது என் ஓய்வு நேரத்தை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டது. முதலில் படிக்க மட்டுமே வந்தவள் ஆர்வக்கோளாறில் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன் - ஆயிற்று; ஐந்து சிறுகதைகளும், ஒரு தொடர்கதையில் பாதியும் (எட்டு அத்தியாயங்கள் முடிந்துவிட்டன. :-)[ஷாங்ரிலா பக்கம் ஏன் நாள்கணக்காக வரவில்லை என்பது இப்பொழுது புரிந்திருக்கும்.]

விசிறிக்கதைகள் உலகில் உறுப்பினரானதின் விளைவாக நான் அறிந்துகொண்டவை:

1. முன்னமே உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். அவற்றின் பாத்திரப்படைப்பைப் பற்றி நாம் மூளையைக் குழப்பிக்கொண்டு திண்டாட வேண்டியதில்லை. எந்தக் கதாபாத்திரம் எப்படி நடந்துகொள்ளும் என்பதெல்லாம் ஏற்கனவே ஓரளவுக்கு ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. அதை அப்படியே பிடித்துகொண்டு போவது சுலபம்.

இது ஒரு பக்கம். 'சொந்தமாக உருவாக்கும் கதாபாத்திரத்தின் மகிமை யாரோ உருவாக்கிய பாத்திரத்தைப் பற்றி எழுதும்போது வந்துவிடுமா?' என்ற கேள்வி வராமலிருக்காது - அங்குதான் OCs - அல்லது 'Original Characters' கைகொடுக்கின்றன. நம் இஷ்டத்திற்கு கற்பனையை விளையாட விடுவதற்கு ஒரு சாக்கு.:-). என்ன ஒன்று...மூலக்கதாபாத்திரங்கள் வேறொருவருக்குச் சொந்தமானவை - அதற்கேற்றாற்போல், 'இன்னாருக்கே இவை சொந்தம், நான் கொஞ்ச நேரம் கடன் வாங்கிக்கொண்டு, பிறகு திருப்பித் தருகிறேன்' என்று ஒரு வரி எழுதிவிட வேண்டியது முக்கியம்.

2. கதாபாத்திரங்களின் சரித்திரம் நமக்கு அத்துப்படி. அவர்களது வாழ்க்கையில், இன்ன நாளில், இன்னது நடந்தது என்பது நன்கு தெரியும்- அவர்கள் எந்தெந்த சந்தர்ப்பத்தில் எப்படியெப்படி நடந்துகொண்டார்கள் என்பதும் தெரியும். புதிது புதிதாக நாமே சந்தர்ப்பங்கள் உருவாக்குவது எளிது. நான் அடிக்கடிக் கையாளும் கதாபாத்திரம் இவரும், இவரும். கன்னா பின்னாவென்று கலந்தடித்திருக்கிறேன். என் முயற்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த இருவரில் முதலாமனவரை மற்ற விசிறிகள் எப்படிப் போட்டுத் 'தாக்கியிருக்கிறார்ர்கள்' என்பதைப் படித்துப் பார்த்தால்தான் உணர்ந்துகொள்ளமுடியும். சித்திரவதையில் அத்தனை பரிமாணங்களையும் கொண்டு வந்துவிடுவார்கள். அப்புறம் (அநேகமாக) எல்லாம் சுபத்தில் முடியும். அவர்மீது அத்தனை அன்பாம்.

ஒரு வாசக நண்பி சொன்ன காரணம்: "நானும்தான் வாழ்க்கையில கஷ்டப்படறேன். அந்தாளும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே, என்ன இப்ப? அவன் படற கஷ்டத்தைப் பார்த்தா, நான் அனுபவிக்கிறது ஒண்ணுமேயில்லைன்னு தோணும்," என்றார் சிரித்துக்கொண்டே. அசைக்கமுடியாத logic. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.:-)

3. ஒரு கதாபாத்திரம் மிக மிகப் பிடித்துப்போய்தான் விசிறிக்கதை எழுதவே தொடங்குகிறோம் -அதனால், அதை உருவாகும் போது நம்மையறியாமல் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துவிடும். மெருகேறிவிடும். மணிக்கணக்காக நாமே வியந்து ரசித்துக்கொள்ளலாம். :-)

4. ஸ்டார்வார்ஸ் விசிறிக்கதைகளைப் பொறுத்தவரை, எனக்கு அமைந்த வாசகர் வட்டம் அற்புதமானது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பொறுமையாகப் படிப்பார்கள்; கருத்து சொல்வார்கள்; factual errors இருந்தால் பொறுமையாக சுட்டிக்காட்டுவர்கள்; இதில் கற்றுக்குட்டி, வருடக்கணக்காக எழுதுவோர் என்று பாகுபாடெல்லாம் இல்லை. எழுத்து நன்றாக இருக்கிறதா? அவ்வளவே விஷயம்.

பல சமயம், நம் திறமையை சோதிக்க சவால் விடுவார்கள்: 'இன்ன சந்தர்ப்பத்தில், இன்னார் எப்படி நடந்துகொள்வார் என்று எழுது பார்க்கலாம்' என்பார்கள். வார்த்தை விளையாட்டுக்கள் தூள் பறக்கும் [ஆங்கில வார்த்தைகள் இருபத்தாறையும் ஒவ்வொரு வரிக்கும் ஆரம்ப எழுத்தாக வைத்துக் கதை எழுத வேண்டும் என்பது ஒரு சவால்.]. எனக்கு ஏற்பட்ட சவால் சற்று வித்தியாசமானது: மிகவும் மரியாதைப்பட்ட ஒரு (சற்றே வயதான்) கதாபாத்திரம், நடனமாட வேண்டும். அது நம்பும்படியாகவும், ரசிக்கும்படியாகவும் அமைய வேண்டும். (அர்த்தம்: அபத்தமான, 'அய்யே' வகை ஹாஸ்யம் எடுபடாது.) 'முடிஞ்சா எழுதிக்காட்டு,' என்று கை சொடுக்கினார்கள் விசிறி மன்னிகள் ('மன்ன'ருக்கு எதிர்ப்பதம்.).

வெற்றிகரமாக முடித்துவிட்டேன் :-)

ஒரு பிரச்சனை உண்டு: நம் கதைகளைப் படிப்பவர்கள் அநேகமாக அதே புத்தகங்களையும், படங்களையும் நமக்கு மேல் கரைத்துக்குடித்தவர்களாக இருப்பார்கள் - எங்கேயாவது சிறு தவறு இருந்தாலும் கண்டுபிடித்து மானத்தை (நாசூக்காக) வாங்கிவிடுவார்கள். 'அந்த நாளில்/இடத்தில் அவர்/அவள் (சமயத்தில் அது?) அப்படிப் பேசவில்லையே?' என்று எக்குத்தப்பாகக் கேட்டு, கதையையே தலைகீழாக்குவர்கள். [நான் இதுவரை சிக்கவில்லை.]. இந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரு நூதன வழியுண்டு. AU அல்லது Alternate Universe - 'அதே கதாபாத்திரங்கள், ஆனால் வேறொரு பிரபஞ்சம்' என்று கதையை ஆரம்பித்து, வளர்த்துக்கொண்டு போக வேண்டும்.:-) - ஒரிஜினல் உலகில் சாத்தியப்படாத பல அம்சங்கள், இந்த நிழல் உலகில் சாத்தியம். [உதா: மகா உத்தமரான ஒரு பாத்திரத்தை கஞ்சா அடிக்கும் போலியாகக் காண்பிக்கலாம். அந்தப் பாத்திரம் ஏன் அப்படி மாறுகிறது என்பதற்குக் காரணகாரியம் கொடுத்துவிட்டால் போதும்:-)]

5. ஸ்டார்வார்ஸ் பிரபஞ்சம் நம்முடையதிலிருந்து முற்றுமாக வேறுபட்டது. நம் மொழி, உடை, கலாச்சாரம், வார்த்தைப் பிரயோகம், நாட்கள், மாதங்கள் (அவர்களுக்கு வருடத்தில் பத்து மாதம்தான். மாதத்தில் ஏழு வாரங்கள்.], வருடக்கணக்கு - ஏன், கண்ணாடிகள் கூட அங்கில்லை. மிக மிக மிக ஜாக்கிரதையாக எழுத வேண்டும். தப்பித்தவறி நம் பூமிக் கலாச்சார வார்த்தைகளை ('Earthisms') பயன்படுத்தினால்...சகிக்காது. அதனால், அந்த உலகங்களில் பான்படும் பொருட்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும் [இதற்காக நடமாடும் பல்கலைக்கழகங்கள் இரண்டு மூன்று பேரை பிடித்து வைத்திருக்கிறேன். 'கண்ணாடி'க்கு நாம் பயன்படுத்தும் 'glass' - அவர்கள் பிரபஞ்சத்தில் அதற்கு வேறு பெயர். அது என்னவென்று தேடியலைய நான்கு நாட்கள் ஆகிவிட்டது. கடைசியில் சம்பந்தபட்ட என்சைக்ளோபீடியாதான் கைகொடுத்தார். :-)]. Constraint அதிகமாக அதிகமாக, சுவாரசியமும் அதிகமாகும்.

6. நம்மூரில் இப்படிப்பட்ட விசிறிக்கதைகள் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன? தெரியவில்லை. இருக்கின்றனவா என்றுகூடத் தெரியவில்லை. தமிழ்த் திரைப்படங்கள்/புத்தகங்களில் எவ்வெவற்றிற்கு விசிறிக்கதைகள் தொடங்கலாம் என்று யோசித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன்? ['நந்திபுரத்து நாயகி' விசிறிக்கதை இல்லை - அது ஏறத்தாழ sequel.] 'தேவர் மகன்'? 'தில்லானா மோகனாம்பாள்'? அட, 'மோகமுள்'? பாபுவின் கதையை ரயிலிருந்து தொடரலாம். :-)

சுஜாதாவின் 'கணேஷ், வசந்த்'தை வைத்துச் சுற்றலாம் ஆயிரம் விசிறிக்கதைகள் :-).

தமிழ் எழுத்தாளர்கள் விசிறிக்கதைப் புரட்சியை எவ்வளவு அனுமதிப்பார்கள்/ஒப்புக்கொள்வார்கள் என்றுதான் தெரியவல்லை. 'வேலையற்ற வேலை,' என்று நினைப்பார்களோ? என்னைப் பொறுத்தவரை, ஒரு படமோ, புத்தகமோ, விசிறிக்கதைகளைப் உருவாக்குகிறதென்றால்...அது அந்தக் கதையை உருவாக்கியவருக்குக் கிடைக்கும் அபார வெற்றி. சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் வாசகர் மனதில் ஆழப் பதியாமல், விசிறிக்கதைகள் எழுதமுடியாது.

"Fanfictionஆல் என்ன புண்ணியம்? அதைவிட சொந்தக் கதை எழுதப்போகலாம்," என்று சொல்பவர்களுக்கு...நம் கதாபத்திரங்களை எப்படி வேண்டுமானாலும் அமைக்க நமக்கு எல்லா உரிமையும் உண்டு. என்றாலும், வேறொருவர் அமைத்த கதாபாத்திரங்களை, அவற்றின் ஆதார மெருகு குறையாமல் எழுதுவது மிகப்பெரிய சவால். நம் கதையை படிக்கும் வாசகர்கள் கருத்து சொல்லும்போது, மனதில் பரவும் ஜில்லிப்புக்கு ஈடு இணையே இல்லை. கற்பனையை தடையில்லாமல் ஓட விடுவத்ற்கு இது ஒரு அற்புத சாதனம். 'என்னத்தை எழுத?' என்ற சோர்வு பீடிக்கும்போதெல்லாம் நான் 'விசிறிக்கதை' மருந்தை நாடுவதுண்டு. அப்புறம் சோர்வாவது, புண்ணாக்காவது?

இவையும் ஒரு பயிற்சி. அள்ள அள்ளக் குறையாமல் உற்சாகத்தை உருவாக்கும் பயிற்சி. யார் மனதையும் புண்படுத்தாத, எல்லோருக்கும் சந்தோஷம் தரக்கூடிய பயிற்சி. எவ்வளவு சந்தோஷத்தைத் தருகின்றன என்பதைத் தனி மடல்களின் மூலம் புரிந்துகொண்டேன். :-). எல்லாவற்றையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், இறுதியில் மிஞ்சியிருப்பது...

...நல்ல எழுத்து மட்டுமே.
|