Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, August 21, 2005

செதுக்குதல்...

சில நாட்களுக்கு முன்னால் தி.ஜா பித்துப் பிடித்து, 'அம்மா வந்தாள்', 'மரப்பசு', 'அக்பர் சாஸ்திரி' என்று கசாட்டாவாகப் படித்துக் கிழித்தேன்.

மனதில் அதிகமாக - மிக அதிகமாக நின்றது 'அம்மா வந்தாள்' தான். 'மோகமுள்' படித்து முடித்த புதிதில், சில நாள் மேகக் கூட்டங்களுக்கிடையில் அலைந்தது நினைவிலிருக்கிறது. 'அ.வா' முடித்த பிறகு, 'நுணுக்கமென்றால் தி.ஜா' என்று சற்று நேரம் மெய்மறந்து உட்கார்ந்திருந்தேன்.

நல்ல புத்தகம் படிப்பதில் பாதி சந்தோஷம், நல்ல புத்தகங்களின் ரசிக/ரசிகையுடன் அதைப் பகிர்ந்துகொள்வதும். நானும் என் நண்பியும் போன வாரம் முழுவதும் அதைத்தான் செய்து கொண்டிருந்தோம். வேடிக்கை என்னவென்றால், அவருக்குத் தமிழ் தெரியாது. பேசினால் புரியும். புளிய மர நிழலில் நான் பத்தி பத்தியாகப் படித்துக்காட்ட, உள்ளங்கையில் மோவாயை வைத்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ['செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சும்மாவா சொன்னார்கள். பதினைந்து பக்கம் 'அ.வா' படித்தவுடனேயே நாக்கு ஒரு மாதிரி மடங்கி விட்டது. படிக்கப் படிக்க சரியாகிவிட்டதென்பது வேறு விஷயம்.]

எத்தனை முறை படித்தாலும், புதிது புதிதாக அர்த்தம் தோன்றும் நாவல் இது.

'சரஸ்வதி பூஜை'யன்று புத்தகம் படிக்கக் கூடாதென்று சொல்வார்கள்...' என்று முதல் வரியே contradictionஇல் தொடங்குகிறது. அங்கேயே, கதாநாயகன் அப்பு கடைசியில் எடுக்கப்போகும் முடிவின் முன்னறிவிப்பு வந்துவிடுகிறது. நாசூக்காக, எதையும் கோடி காட்டி, அதோடு முடித்துவிடும் தி. ஜாவின் அபாரத் திறமையை எத்தனை அனுபவித்தாலும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தோன்றுகீறது. இந்த வரிகளுக்குள் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று நினைக்க வைக்கும் நடை. 'காவேரி'யின் வர்ணனை, இந்து படைக்கப்பட்டிருக்கும் விதம், எல்லாவறிற்கும் மேல், அலங்காரத்தம்மாளின் பாத்திரப் படைப்பு...

'அம்மா வந்தாள்' நாவலை முழுக்கப் படித்து முடித்த பின், என் நண்பி சொன்ன முதல் விஷயம்: "என்ன ஒரு character இது!" என்பதுதான்.

மொழிபெயர்ப்பின் சந்தோஷங்களில் ஒன்று - நுணுக்கமாக, வரி வரியாக ஒரு நாவலை ஆராய முடிவதுதான். முதல் முறை படிக்கும் போது ஒரு விதமாகவும், நான்காவது முறை படிக்கும்போது முற்றிலும் வேறு மாதிரியாகவும் இருக்கும். முதல் முறை அலங்காரத்தமாளைப் பார்த்த போது, அப்புவுடன் சேர்ந்து நானும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தேன். மூன்றாம் முறை படிக்கும் போது, எனக்கு முன்னால் படித்து முடித்துவிட்ட (என்) அம்மா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. "அப்புவும் சரி, அவன் அம்மாவும் சரி, சுலபத்தில் கிடைக்காத, சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒன்றுக்குத்தான் ஆசைப்படுகிறார்கள்."

கடைசிக் கடைசியில், அலங்காரத்தம்மாள், "நீயும் அம்மாவுக்குப் பிள்ளையா இருக்கே..." என்று 'நறுக்'கென்று சொல்லும் இடம்...என்ன மாதிரியான கதாபாத்திரம் இது என்று பிரமித்து போனேன். தி.ஜாவின் நடையில் துளியும் judgemental தொனி தெரியாமல் இருப்பது, அற்புதம். Wow, wow, wow.

ஒரு விஷயத்தைத் தமிழில் தி. ஜா போன்றவர்கள் நான்கே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார்கள். அதை வேறு மொழியில் கொண்டு வருவதென்றால் முழு பிதுங்கித்தான் போகும் என்பதை நேரில் அனுபவித்தேன். அதுவும் அந்த வருடங்களின் தமிழ், வார்த்தைப் பிரயோகம், மொழி ஆளுமை, எல்லாமே வேறு. அதை ஆங்கிலத்தில் அடக்குவது...?

ம்ம்...அங்குதான் சவாலே அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றும். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பெருந்துறையில் sanatorium (TB) இருந்ததென்பது. நாவலில் இது பற்றி இரண்டு முண்ரு இடங்களில், 'பெருந்துறைல இருந்தப்ப...' என்கிற மாதிரியான பிரயோகம் வரும். 'பெருந்துறை'யின் உள்ளர்த்தம் என்னவென்று அப்போது புரியவில்லை. டி.பி. பற்றிய பேச்சு வந்ததும்தான். பெருந்துறையின் முக்கியத்துவம் புரிந்தது.

நாளை இதைப் பற்றி நண்பியிடம் பேச வேண்டும். அப்புறம் மீண்டும் 'மோகமுள்' படிக்க வேண்டும்.

பி.கு: பதினைந்து விசிறிக்கதைகள் முடித்துவிட்டேன். போன வாரம் நடந்த Fanfiction Awardsஇல் 'Best Original Characterization' அவார்டு கிடைத்தது.


Bounce
|