Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, November 02, 2005

தேவதை

எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு குட்டி இளவரசி இருக்கிறாள்.

அல்லது குட்டிப் புயல். குட்டி இராட்சசி. த்ரிஷா (த்ரிஷாவைப்போல் உடையணிந்து நடனமாடுவதால்). மிஸ் சென்னை (சில பேருக்கு ஒரு வயதிலேயே மிஸ் பட்டம் அணிவதற்கான தகுதிகள் ஏற்பட்டுவிடும் - முக்கியமாக, catwalk செய்வது) - டயத்திற்கு ஏற்றாற்போல் அவளுடைய பட்டப்பெயரும் மாறும்.

அவள் எதிர்வீட்டில் குடியில்லை. என்றாலும், குடியிருப்பதுபோலத்தான். காலை ஒன்பது மணிக்கு சங்கூதுவது போல் 'ஓ'வென்று ஒரு அலறல் கேட்டால் அது குட்டிப் புயலாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இயங்கும் க்ரஷிற்கு (creche) வரும் குழந்தைகளிலேயே அவள் தான் வயதில் சிறியவள். அவள்தான் முதலில் வருபவளும்கூட. அலுவலகமும் பள்ளியும் செல்பவர்கள்கூட இவ்வளவுதூரம் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தன்னைவிட பெரிய சைஸ் கூடையுடன் வந்து இறங்குவாள். அஸின், ஷ்ரேயா ஆகியோர் தோற்று ஓடும்படி உடையணிந்து வருவாள்.

க்ரஷ்ஷிற்குள் நுழைந்து, தன் அரண்மனையில் எல்லாம் அதன் இடத்தில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாசல் படிக்கட்டை சிங்காதனமாக்கித் தன் பிரஜைகளைச் சந்திக்க உட்கார்ந்தால், மணி ஒன்பதரை. அநேக நாட்களில் நான் கிளம்பும் சமயம் இது என்பதால் மரியாதையாக வணக்கம் செலுத்திவிட்டுப்போவேன். லீவாக இருந்தால் ஆரம்பிக்கும் அரசவை.

சின்ன த்ரிஷாவுக்கு செருப்புக்களின் மீது மோகம் உண்டு (எதிர்காலத்தில் இமெல்டா மார்கோஸாக உருவெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம்). அதிலும் பிறருடைய செருப்பு என்றால் பிரியம் இன்னும் அதிகம். வாசல் கம்பிக்கதவை திறக்கும் வரை அவளுக்குத் தெரிந்த ஒரே வார்த்தையை வைத்து எட்டூருக்குக் கேட்கும்படி அலறுவாள்: "பேஏஏஏஏஏஏஏ!" இந்தக் கட்டளைக்குரலுக்கு எல்லோரும் அடி பணிந்தே ஆகவேண்டும். வாசல் கதவில் கால்பகுதி வரைதான் அவள் உயரம். அதனால் கதவைத் திறந்து மூடி, அவளுக்கு சேவை செய்வது மற்ற குழந்தைகளின் வேலை. திறந்து விட்டவுடன் செருப்புக்களை அடுக்கி வைத்திருக்கும் ஷெல்·புக்கு சென்று, இருப்பதிலேயே பெரிதான செருப்பு (ஒன்றே ஒன்று)காலில் (அல்லது கையில்) மாட்டிக்கொண்டு 'தொம்' 'தொம்'மென்று சில முறை குதிப்பாள். இந்த சமயத்தில் யாரும் அவளை தூக்கவோ, தொடவோ முயற்சி செய்யக்கூடாது (வெளியே செல்பவர்களைத் தவிர்த்து.) அவள் நடக்கும் போது பிடித்துக்கொள்ள வாகாக நாங்கள் prop வேலை பார்க்க வேண்டும். மீறித் தூக்க முயன்றால், சைரன் எழும்.

சில மாதங்களுக்கு முன்பு வரை தூளிதான் சிம்மாசனம் (இப்பொழுதெல்லாம் எத்தனை வீடுகளில் தூளி இருக்கிறது?!). இப்பொழுது மாடிப்படி. க்ரஷ் நடத்தும் பெண்மணி சாப்பாட்டை ஊட்டிவிட்ட பிறகு, அடுத்து வீட்டில் எதை உடைக்கலாம் என்று அசை போடுவாள். மற்ற குழந்தைகளின் சாப்பாட்டை வாரி இறைத்துவிட்டு, அவர்கள் தலைமுடியெல்லாம் பிடித்து இழுத்துவிட்டு, எங்கள் வீட்டுக் கம்பி கதவருகே நின்று ஓரக்கண்ணால் கள்ளப்பார்வை பார்ப்பாள். அவளைப் பொறுத்தவரை எங்கள் விடு, சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதை'யில் வரும் மர்ம வீடு - அங்கே என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் அவளுக்குத் தீராத ஆர்வம். அதோடு உள்ளே வந்து ஒரு கண்ணாடிக் குப்பியையாவது உடைத்து எறியாவிட்டால் ராத்திரித் தூக்கம் வராது. குறைந்த பட்சம் ஒரு காகிதத்தையாவது கிழித்து எறிய வேண்டும்.

இன்று முழுவதும் சென்னையின் புதிய குளுகுளு (சில சமயங்களில்) வெதரை அனுபவித்துக்கொண்டு 'கீச் கீச்' சென்று மூஞ்சுறுவைப்போல் கத்தும் செருப்பை (ஒரு மாறுதலுக்கு தன்னுடைய செருப்பையே) போட்டுக்கொண்டு வாசல் முழுவதும் நடை பழகிக்கொண்டிருந்தாள். பார்க்க பீங்கான் பொம்மை போல் இருப்பதால், அவளைத் தூக்கிக் கொஞ்சாத ஆளில்லை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் அவள்தான் முடிசூடா ராணி. மாறி மாறி எல்லோரும் ஜன்னல் வரை அவளைத் தூக்கி எறிவதை அவள் மிகுந்த சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக்கொள்வதை காண இரு கண்கள் போதாது.

மாதக்கணக்காக அவளை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மூன்று மாதக் குழந்தையாக 'கம்'மென்று ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த நாளிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடு முழுக்கத் தவழ்ந்து, பிறகு எழுந்து நின்று, எங்களைப் பார்த்துப் பல்லில்லாத புன்னகை பூத்து, செருப்பு போட்டுக்கொண்டு காலால் மிதித்து, புதிதாக முளைத்த பல்லால் கடித்து, இதோ - இப்போது ராணியாக "பே!" என்று சைகை பாஷை பேசுவது வரை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்.

தினமும் காலையில் அவளை ஒன்பது மணிக்கு எதிர் வீட்டில் கொண்டு வந்து விடும் அம்மா. இரவு மீண்டும் ஏழு மணிக்கு செல்·போனுடனும், கைப்பையுடனும் உள்ளே நுழைந்து மீண்டும் தூக்கிக்கொள்ளூம் அம்மா. "வீட்ல பயங்கர விஷமம்" என்று எங்களிடம் ரகசியம் பேசும் குரலில் பகிர்ந்துகொள்வார். குட்டி த்ரிஷா தன் அரசாங்கத்தை எங்களிடம் பாதுகாப்பாகக் கொடுத்துவிட்டு வீடு செல்வாள்.

நாளையும் அவள் வருவாள். "பா? பூ?" என்று தனக்கு மட்டுமே புரியும் மொழியில் எங்களுடன் பேசுவாள். அவளுக்கென்று நினைவு வந்து, கேள்வி கேட்கும் வயது வந்து, சிங்காரச் சென்னையின் குழந்தைகளைப்போல் இரண்டு வயதில் 'ப்ளே ஸ்கூல்' செல்லும் வரை இங்கே தூளியில் ஆடிக்கொண்டிருப்பாள். அராஜக அரசாங்கம் நடத்துவாள்.

எப்பொழுதும் அவள் இப்படியே இருந்துவிடப்போவதில்லை. விவரம் தெரிந்து ஆடம்பர அரசியாக, லேசான ஆணவத்துடன் அவள் வளர்வதை அவள் குடும்பம் காணும். இப்பொழுது 'சின்ன குழந்தை' என்று மன்னிக்க முடிகிற விஷயங்கள் வளர்ந்தால் விஸ்வரூபம் எடுக்கும். இப்பொழுது எங்களைப் பார்த்து 'ஈ'யென்று பூக்கும் மந்தகாசமாகப் புன்னகை பின்னாளில் காணாமல் போகலாம். குட்டி த்ரிஷா மிக அழகான குழந்தை. அந்த உணர்வு அவளது மனதில் இப்பொழுதே விதைக்கப்பட்டுவிட்டது.

நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தன்னைப் பற்றிய சுய உணர்வு அதிகமில்லாத, குழந்தைத்தனம் மட்டுமே கண்களில் இருக்கும் இந்த மாதங்களை அனுபவிக்கும் சந்தோஷம் மட்டும் எங்களுக்குத்தான். வளர்ந்த பிறகு இது எதுவும் அவளுக்கு நினைவிருக்காது. பாதகமில்லை.

பின்னால் வரப்போகும் நீலாம்பரியைப் பார்ப்பதை விட, இப்பொழுது இருக்கும் கலப்படமற்ற குழந்தைத்தனம் எவ்வளவோ பரவாயில்லை.

Life is made of simple pleasures, after all.

சம்பந்தமில்லாத பின்குறிப்பு: Edited, as I don't know want to blow my own trumpet. இருந்தாலும்...

Bouncy 5
|