Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, June 26, 2004

எல்லோரும் இந்நாட்டுக் (கவி)மன்னர்!

வலைப்பூக்கள் அவ்வளவாகப் பூக்காத காலம் அது. இணைய இதழ்களில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. இணையம் என்னும் மாய உலகமே அப்போதுதான் புரிபடத் தொடங்கியிருந்தது. எழுதும் வாய்ப்பு தரும் இணையப் பக்கங்களாக தேடியபோது அகப்பட்டதுதான்...இது.

'பருத்தி புடவையாகக் காய்த்தது' என்று நினைத்து, உள்ளே நுழைந்து பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். கவிதைகளாகக் கொட்டிக்கிடந்தன. [அவற்றில் பலவற்றுக்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. "...Why is it when I look at you, you look with unknowing eyes
Day dreaming circles of uncertainty (JUJU MOMA, JUJU MOMA, JU-JU MOMA)..." இப்படிச் செல்லும் ஒரு கவிதை ஆயிரம் டாலர் பரிசு வென்றதாம். 'என்றாவது ஒரு நாள் புரியும்' என்ற தன்னம்பிக்கையுடன் நகர்ந்துவிட்டேன்.]. எல்லா கவிதையும் இப்படி இருக்க வாய்ப்ப்பில்லை என்று ஒரு சின்ன நப்பாசையும் இருந்தது. ஒரு கவிதை எழுதிப் போடலாம் என்று என் பங்குக்கு ஒன்று அனுப்பி வைத்தேன்.

வாரக்கணக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து, 'இனி பதில் வரப்போவதில்லை,' என்று நம்பிக்கையைக் கைவிட்ட பிறகு, திடீரென்று ஒரு நாள், இன்ப அதிர்ச்சி ஒரு நீள, வெள்ளை உரையில் வந்து சேர்ந்தது. [அந்தக் 'கவ'ரின் நேர்த்தியே யாரையும் கவர்ந்துவிடும்.].இரண்டு மாதம் கழித்துச் சாவகாசமாக வந்த கடிதத்தில், நான் எழுதிய கவிதையைப் பாராட்டி, 'நாந்தான் அடுத்த Shakespeare' ரேஞ்சுக்குக் வரை முறையில்லாமல் புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். [அந்த சில நிமிடங்கள் தான், சொர்க்கம்.]. இரண்டு மூன்று நாட்கள் கடிதத்தை கைப்பைக்குள் வைத்துக்கொண்டே எல்லா இடத்துக்கும் சென்றேன். அது கிழிந்து நார் நாராகப் போகும் அபாயம் வந்த பிறகு, பிரியா விடை கொடுத்து பீரோவில் பூட்டி வைத்தேன். [ஆ. எத்தனை 'ப' !]

அப்போதே சந்தேகம் சிறிய துகளாக மனதிற்குள் மாட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதைக் கண்டுகொள்ளும் உத்தேசம் எனக்கில்லை. அப்போது பார்த்து, 'நலம்விரும்பி' நண்பர் ஒருவர், 'ரொம்ப சந்தோஷப்பட்டுவிடாதே,' என்று ஒரு பெரிய கடிதம் அனுப்பி வைத்தார். [இந்த சமயத்தில் கடிதம் எழுதுவதற்காகவே ஒரு நண்பரோ, நண்பியோ அகப்படுவார்கள். 'எல்லாம் உன் நல்லதுக்குதான்' என்று சர்க்கரையாகப் பேசுவார்கள்.]. எனக்கும் சந்தேகம் வலுத்தது [விசித்து விசித்து அழும் பழங்காலக் கதாநாயகி: "...வாழ்க்கை என்பது ஒரு கண்ணாடிப் பாத்திரம்/ மண் பாத்திரம்/ஏதோவொரு பாத்திரம்/புடவை/தகர டப்பா மாதிரி. ஒரு முறை விரிசல்/கிழிசல்/கீறல் விழுந்துவிட்டால். ஒன்றும் செய்ய முடியாது..."].

இப்படி ஒரு சந்தேகம் விழுந்த பிறகு வேலை ஓடுமா? என் கவிதைக் கனவுகள் என்னாவது? கூகிளில் ஒளிந்து ஒளிந்து தேடிய போது, தகவல்கள் வந்து குவிந்தன.

இன்னும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. அப்போது பிறந்ததுதான் இந்தக் கவிதை.

Dark Smell

Bethany, if you are there, I agree,
The lark of the birds scream,
Night sky, virgin lands, dream,
Dumb you, me, all the smell world.
We, and us, them and you,
range all over, cops in the land,
dull sufferings, do you?
I do. All the days.
What to say, will you?
Scream, and fall into the cream of puddings,
Likewise, they are, unknowing,
what they do unto me.
Till death do they reform,
Country, crown and king,
Do they, do they?
No, no, they don't.



இந்த அற்புதப் படைப்புக்கு சரியான பொழிப்புரை தருபவர்களுக்கு ஒரு ஜிமெயில் இன்வைட் இலவசம். ['முடியாது' என்று வீறாப்பாய் சென்றுவிட்டால், ஹாட்மெயில் யாஹ¤ ரீடி·ப், இத்யாதியுடன் திருப்தியடையாமல் ஜிமெயிலுக்காகக் காத்திருந்து துன்வுறுவீராக.].

இந்தக் கவிதையைத்தான் அந்தத் தளத்திற்கு அனுப்பினேன். பதில் என்னவாக இருந்ததென்று நினைக்கிறீர்கள்?


|

Friday, June 25, 2004

வார்த்தை ஜாலம்

Warning:Rant.

வழக்கில் இருக்கும் சில உப்பு சப்பற்ற வாசகங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

**********


வெற்று வாசகம் 1:"...எனக்கு புக்கு படிக்க எல்லாம் நேரமேயில்லை. பயங்கர பிசி. "

அர்த்தம்: வேறு வேலையில்லாதவர்கள்தான் இதெல்லாம் செய்வார்கள். நான் அப்படி இல்லை. [ஆழமான அர்த்தம்: 'சீ, சீ, இந்தப் பழம் புளிக்கும்.']

வெற்று வாசகம் 2: "நான் கூட நிறைய கதை, கவிதையெல்லாம் எழுதுவேன். இப்ப எல்லாம் விட்டுப்போச்சு."

அர்த்தம்: கதையும் கவிதையும் எழுதுவது பெரிய விஷயமா? உனக்கு/உங்களுக்கு நான் எந்த விததிலும் குறைந்தவளில்லை/வனில்லை. [ஆழமான அர்த்தம்: பெயரை நினைவில் வைத்துக்கொள்ளவும். என்றைக்காவது பிரபலமாகித் தொலைத்தால், 'அப்பவே எனக்குத் தெரியும்," என்று அடித்துச் சொல்ல உதவும்.]

வெ.வா. 3: "...நான் யார்கிட்டயும் எந்த உதவியும் எப்பவும் கேட்டதில்லை. எனக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது, தெரியுமா?"

அர்த்தம்: அடிக்கடி 'உதவி' கேட்பேன். மறுத்தால், தொலைந்தாய்.

வெ. வா. 4: "உனக்கு மட்டும்தான் இந்த விஷயம் தெரியும். உன்னளவுக்கு வேற யாரையும் என்னால நம்ப முடியலை. சொல்லிறாதே, என்ன?"

அர்த்தம்: உலகத்திற்கே இந்த 'ரகசியம்' தெரியும். இருந்தாலும் உன்னைக் கரைக்க இதுதான் வழி. நீ பதிலுக்கு எதையாவது உளறி வைக்க மாட்டாயா?

வெ.வா 5: "யார் மனசையும் நான் புண்படுத்தமாட்டேங்க. அந்த வழக்கம் எனக்கில்ல. நான் அவ்வளவு 'சீப்'பான ஆள் கெடையாது."

அர்த்தம்: அப்படித்தான் புண்படுத்துவேன். மன உணர்வுகளாவது, மண்ணாங்கட்டியாவது? உன்னால் முடிந்தால், என்னைத் திருப்பி அடி. என்னை எதிர்த்துப் பேசு. சாக்கடைக்குள் இறங்கு. [ஆழமான அர்த்தம்: 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்.']

வெ. வா. 6: (எதைப் பற்றிக் கேட்டாலும்) - "எனக்கு ஒண்ணுமே தெரியாது. பயங்கர மக்கு..."

அர்த்தம்: எனக்குத் தெரியாத விஷயம் இல்லை. என்ன செய்ய? மரியாதைக்காகவாவது இந்த மாதிரி அவ்வபோது சொல்லவேண்டியிருக்கிறது. யாராவது 'உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்பதற்கு முன்னால், முந்திக்கொண்டு நானே சொல்லிவிடுகிறேன்.

வெ. வா. 7: "இப்பல்லாம் எங்க வீட்டுக்கு ஏன் வர்றதே இல்லை? ஹவுஸ் அரெஸ்ட்டா?"

அர்த்தம்: சும்மா கேட்டு வைத்தேன். வந்து நிற்க வேண்டாம்.

வெ. வா. 8: "எதிலையும் நடு நிலைமை வேணும் சார். நான் ரொம்ப நேர்மையான ஆள். யார் சார்புலையும் பேச மாட்டேன்."

அர்த்தம்: சமயத்திற்கேற்ற மாதிரி சம்பவங்களைத் திரிப்பேன். எனக்குச் சாதகமான முறையில் மாற்றிக்கொள்வேன். உன்னால் அது முடியவில்லை என்றால், அது உன் கையாலாகத்தனத்தைக் காட்டுகிறது.

வெ. வா. 9: (மூச்சுக்கு முன்னூறு முறை) - "இந்தியா/தமிழ்நாட்டுல இருக்கறவங்களுக்கெல்லாம் சொந்த மொழியே/தமிழே மறந்து போச்சு சார். எல்லாபக்கமும் இங்கிலிஷ். ஊரே கெட்டுப் போச்சு. என்ன ஆவுறது நம்ம பண்பாடும், கலாச்சாரமும்?

அர்த்தம்: நான் குற்ற உணர்வில் செத்துக்கொண்டிருக்கிறேன். 'பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மற்றவர்கள் காப்பாற்றட்டும்' என்று நான் சுகமாக வெளியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனக்கு நாடு திரும்பும் எண்ணமேயில்லை. ஒவ்வொரு முறை 'இந்தியா/என் தாய்நாடு' பற்றிப் பேச்சு வரும்போதும் 'நான் அங்கே இல்லை,' என்ற எண்ணம் உறுத்துகிறது. கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக்கொண்டே இருந்தால் போதாதோ?

உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?


|

Monday, June 21, 2004

போரும் அமைதியும்

"இறந்தவர்கள் மட்டுமே போரின் முடிவைக் காண்கிறார்கள்."


அசோகச் சக்கரவர்த்தி. வாழ்ந்த வருடம் : c.299 BC - 237. சந்திர குப்த மவுரியரின் பேரன். போர் வெறி பிடித்தவர். மகத நாட்டின் எல்லைகளை விஸ்தீரணம் செய்துகொண்டே வந்தவர். கலிங்க நாட்டை இரத்தக் களறியில் வென்றவர். மனம் மாறியவர். புத்தமதத்தைத் தழுவி, 'தர்ம அசோகா' என்ற பெயரைப் பெற்றவர். அப்புறம் மரம் நட்டார், குளம் வெட்டினார், ஸ்தூபி எழுப்பினார், புத்த மதத்தின் நெறிகள் வாயிலாக அன்பையும் அமைதியையும் பரப்பினார், உலகப்புகழ் பெற்றார்.....

இன்றைக்கு எல்லாருக்கும் சர்வசாதாரணமாகத் தெரிந்திருக்கும் விஷயங்கள் இவை. 88 வருடங்களுக்கு முன்பு வரை, இது எதுவுமே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றால், நம்ப முடிகிறதா? 1835இல்தான் 'Devanampriya Piyadasi' என்ற பெயரில் ஒரு அரசன் ஆண்டதற்குரிய ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் (கண்டுபிடித்தவர் James Prinsep என்னும் ஆங்கிலேயர்.). அப்போதுகூட, 'இது அசோகராக இருக்கலாம்' என்று யாருக்கும் தோன்றவில்லை. எத்தனையோ அரசர்கள், தங்களைத் தாங்களே 'இந்திரன்', 'சந்திரன்' என்று புகழ்ந்து வெட்டிக்கொண்ட கல்வெட்டுக்களைப் போன்றவைதான் இவையும் என்று நினைத்திருக்கிறார்கள். யாரும் இவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

1915ஆம் வருடத்தில், இந்த 'தேவனாம்ப்ரிய' அரசனும் அசோகரும் ஒருவரே' என்னும் விஷயம் மெதுவாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஏறக்குறைய 1700 வருடங்கள் ஆகியிருக்கின்றன - ஒரு சக்கரவர்த்தி வெளிச்சத்திற்கு வர.

இந்தியாவை ஆண்ட ஒரு மிகப்பெரிய அரசரைப் பற்றிக் கிடைக்கும் தகவல்கள் கொஞ்சம்தான். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தது? என்னவிதமான ரசனைகள் அவருக்குண்டு? உண்மையிலேயே இரத்தவெறி பிடித்துத்தான் அலைந்தாரா? கலைகளில் விருப்பம் உண்டா? நெருக்கமான நண்பர்கள் யார்? இரத்தவெறி பிடித்தவர் என்பது உண்மையானால், கலிங்க நாட்டைக் கைப்பற்றும் யுத்தத்தின்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்? எப்படி திடீரென்று அமைதியை நோக்கித் திரும்பினார்?

சில நாட்களுக்கு முன்னால், 'சாம்ராட் அசோகா' படம் பார்த்தேன். அந்தப் படத்தில், அசோகரின் வாழ்க்கையில் இருண்டு கிடக்கும் சில விஷயங்களை தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார்கள்.

Indiatimes.com
முதலிலேயே என்னைக் கவர்ந்தது - படத்தை எடுத்திருந்த நேர்த்தி. ஒவ்வொரு காட்சியும் நுணுக்கமாக வரையப்பட்ட ஓவியம்போல் ஜொலிக்கிறது. பச்சைப் பசேல் என்று சோலையும் மலையும் காடும் தண்ணீருமாக கலக்கியிருக்கிறார்கள். லொக்கேஷனுக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். [சிமெண்ட்டும் செங்கல்லும் பெயிண்டும் சூழ்ந்த நகரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்தால், எதுவும் நன்றாகத்தான் இருக்கும்.].

கதை...? அதைக் கொஞ்சம் அங்கே இங்கே எடுத்து, கோர்த்து, ஒட்ட வைத்து...அரசன் என்றால் காதல் என்று ஏதாவது இல்லாமல் போகுமா? அதுவும் மகத நாட்டின் சக்கரவர்த்திக்கு? அதனால் கவுர்வகி என்னும் கலிங்க இளவரசியைப் புகுத்தி, அசோகரின் மனமாற்றத்திற்குக் காதலியும் காரணம் என்று கொண்டு வந்து...


'சாம்ராட் அசோகா'வைப் பார்த்த பிறகு, சில புகைப்படங்கள் மனதில் நின்றுவிடுவதுபோல், காட்சிகள் அங்கங்கு பதிந்துகொண்டன.

1. அசோகனும், அவனது சகோதரன் சுஷீமும் மோதிக்கொள்ளும் காட்சிகள். தன்னுடைய பலத்தை நன்கு உணர்ந்தவனாக, எப்போதும் லேசான ஆணவத்துடனேயே இளவரசன் நடந்துகொள்ளும் விதம்...

2. இளவரசன் அசோகன், சகோதரச் சண்டைக்கும் சிம்மாசனப்போட்டிக்கும் பயப்படும் அம்மா தர்மாவால், நாட்டைவிட்டு அனுப்பப்படுகிறான். 'பவன்' என்னும் பெயரில் அவன் தன் பயணத்தை ஆரம்பிக்க, முதன்முதலாக அவன் காட்டில் கவுர்வகியை (கரீனா கபூர்) சந்திக்கும் காட்சி. ஒரே தண்ணீர் மயம். 'சில்'லென்ற அனுபவம்.

3. படத்தின் முதல்பாதி முழுவதும் காதல், காதல், காதல். தண்ணீர். மேகம், மலை, காடு. பார்க்க அழகாக, மிக அழகாக இருக்கிறது. கவுர்வகியும் அட்டகாசமான, அலட்டல் இளவரசியாக, ஒரு நிமிடம் கோபம் காட்டி, மறுநிமிடம் கள்ளப் பார்வை பார்த்து...பின்னுகிறார். அதோடு சரி. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, 'காதலைத் தவிர வேறு எதையாவது காட்ட மாட்டார்களா?" என்று ஏங்க வைத்துவிடுகிறார்கள்.

4. நடுவில் ஒரு சண்டைக் காட்சி வந்து ஏக்கத்திற்கு விடை கொடுக்கிறது. கவுர்வகியையும், கலிங்க இளவரசன் ஆர்யாவையும் காப்பாற்ற 'பவன்' கத்திச் சண்டையிடும் காட்சி. அழகான நாட்டியம் பார்ப்பதுபோல், மிக நளினமாக இருக்கிறது.

5. பவன் மீண்டும் மகதநாடு செல்ல, 'அவன் திரும்பி வருவான்' என்று ஏங்குகிறார்கள் கலிங்க இளவரசியும் இளவரசனும். ஒன்றே ஒன்றுதான் நம்ப முடியாமல் இருக்கிறது: நாட்டைவிட்டு ஓடி ஒளிந்து காடு மலைகளில் வாழும் கவுர்வகி, ஆர்யா - ஏறக்குறைய தன்னுடைய உயிரையே பணயம் வைத்து அவர்களை ஒவ்வொரு முறையும் காப்பாற்றும் சேனாதிபதியிடம் சொல்லாமல் கொள்ளாமல் பவனைத் தேடிப் போகிறார்கள். [ஆ, லாஜிக்.]. அப்புறம் திடீரென்று அவனுடன் சேர்ந்தும் கொள்கிறார்கள். [எடிட்டிங்?]

6. இந்தக் காட்டு அலைச்சல் காட்சிகள், பனி சூழ்ந்த மரங்கள், எல்லாம் 'Braveheart' படத்தை நிறைய நினைவுபடுத்துகின்றன.

7. ஊர் ஊராக இளவரசன் அசோகனைத் துரத்தோ துரத்தென்று துரத்தி மல்லுக்கு நிற்கும் 'விராத்' என்ற வீரன், அவன் உண்மையில் யார், அவனது பின்புலம் என்ன என்பது புரிந்தவுடன், நெருங்கிய நண்பனாகும் காட்சிகள். 'கலிங்கப் போர்' என்னும் பெயரில் அட்டூழியங்கள் நடக்கும்போது, அசோகனைத் தடுத்து நிறுத்த முயலும் அவனது தைரியம்.

8. ஷா ரூக் கான். 'இளவரசன் அசோக'னாக தன்னைக் காண்பித்துக்கொள்ள முயன்றாலும், ஷா ரூக் என்னும் நடிகர் அதிகம் வெளிப்படுகிறார். இருந்தாலும், எக்கச்சக்கமாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அவருக்காகவே எத்த்த்த்த்...தனை முறை வேண்டுமானாலும் படத்தைப் பார்க்கலாம்.:-))))))

9. இறுதியாக நடக்கும் கலிங்கப் போர், அழகாக வடிவமைக்கபட்ட நடனம் ஒன்றைத் தண்ணீருக்கடியில் பார்ப்பதுபோல் இருக்கிறது [கரீனா கபூர், கலிங்கநாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் போருக்கு அணிந்துகொண்டு வருவது என்ன மாதிரியான உடை? நேராக fashion showவிலிருந்து இறங்கிவந்த மாதிரி இருக்கிறார். இந்த உடையில் சண்டை போட்டால்...]. உஷ்ணமும், ஆக்ரோஷமும், வீராவேசத்தையும் இன்னும் கொஞ்சம் புகுத்தியிருக்கலாம். ஒவ்வொருவரும் வாளை சுழற்றும்போது "வேகமா சுத்துங்கப்பா!" என்று கத்த வேண்டும்போல இருக்கிறது. குட்டி இளவரசன் ஆர்யாவைக் கடைசியில் சாகடித்துவிட்டார்கள். ப்ச்.

10. எவ்வளவு லாஜிக் உதைத்தாலும், 'இது சரி, அது சரியில்லை' என்றெல்லாம் அங்கங்கு தோன்றினாலும்...எம்ஜியார் படங்களைப் போல், இன்னும் இரண்டு மூன்று முறையாவது பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.

நீதி: படம் பிடித்துவிட்டால், லாஜிக்காவது, கத்தரிக்காயாவது?

|