Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, September 02, 2006

சென்னையும் படச்சுருளும் - 2

Madras in Moviesஇன் இரண்டாம் பகுதி.

படச்சுருள் - 2 SmileyCentral.com

"I am going to talk about the history of mankind," என்று ஆரம்பித்தார் ராண்டார் கய். கடைசி நிமிடத்தில் பேச வேண்டிய உரையை மாற்றிவிட்டர்களா என்று யோசித்துக்கொண்டிருந்த போது, "இது சினிமாவின் எழுபத்தைந்தாவது வருடம்," என்று சொல்லி நிம்மதியேற்படுத்தினார்.

பெண்ணாத்தூர் சுப்ரமணியம் ஹை ஸ்கூலில் மாலை மணி ஏழு. ஸ்கூலின் கடைசிப் பகுதியில் இருந்த தக்ஷினாமூர்த்தி ஹால். வெளியே சடசடவென்று மழை வந்து விட்டது. அதன் சப்தத்துடன் போட்டியிட்டு எழுந்தது ராண்டார் கய்யின் கரகரப்பான குரல். "க்ளிப்பெல்லாம் சரியா இருக்கா?" என்று விசாரித்துக்கொண்டார். "அன்றைய சினிமாவில் மதராஸ்பட்டினத்தைப் பார்க்கலாமா?" என்றார். உற்சாகமாக எல்லோரும் தலையசைக்க, தமிழ் சினிமா சரித்திரத்தின் பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டப்பட்டன.

Randor Guy

1931இல், இந்திய சினிமாவின் முதல் பேசும் படம் வெளிவந்தது. 'ஆலம் ஆரா.' படம் எடுத்தவர் ஆர்தேஷிர் இரானி. சப்தமில்லாத சினிமாவின் காலம் முடிந்துபோய்விட்டது என்பதை நன்கு உணர்ந்தவர்.

அதே படத்தை தமிழிலும் எடுக்கலாம் என்று நினைத்தவருக்கு, தமிழில் அந்தப் படம் 'டப்' ஆகுமா என்று சந்தேகம் வந்தது. படத்தில் தமிழ் வசனங்கள் ஒலிக்காவிட்டால் எப்படி? அப்புறம் தெலுங்கு வசங்கள் சேர்த்தார். மீண்டும் சந்தேகம் தலைதூக்கியது. அதனால் இந்தி வசனங்கள் சிலதைச் சேர்த்தார் ('ஆலம் ஆரா' எடுத்ததால், ஹிந்தி கண்டிப்பாக ஒலிக்கும் என்ற நம்பிக்கை).

இதனால் அறியப்படுவது என்னவென்றால், நாம் முதல் தமிழ் 'டாக்கீ' - ஒரு trilingual படம் என்பதே. சுதேசமித்திரனில் விளம்பரம் கொடுத்த போது, "தமிழ்/தெலுங்கு பேசும் படம்" என்று கொடுத்தார்கள்.

காளிதாஸ் படத்தில் நடித்த கதாநாயகி, டி. பி ராஜலக்ஷ்மி. மிகச் சிறிய வயதில் திருமணம் ஆகி, கணவர் பிரிந்து போய்விட, அந்த துக்கத்தில் அப்பாவும் இறந்துவிட்டார். தன்னந்தனியாக நிறுத்தப்பட்ட தாயும் மகளும், நாடகத்தில் சேர்ந்துவிடும் முடிவுடன் திருச்சி வந்து சேர்ந்தார்கள். ராஜலக்ஷ்மியின் தாய் தீர்க்கதரிசி. மகளின் ஆடல் பாடல் திறமைகளுக்கு இங்கு நிச்சயம் இடமுண்டு என்பதை நம்பினார். அந்தக் காலத்தில் இந்த முடிவை எடுக்க, பயங்கர தைரியம் இருந்திருக்க வேண்டும்.

திருச்சியில் ஜகன்னாத ஐயரை (பட இயக்குனர்)சந்தித்திருக்கிறார்கள். வந்திருந்த சின்னப் பெண்ணை நடித்துக்காட்டச் சொன்னாராம் அவர். அப்போது அருகிலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் ஒருவர். தமிழ் நாடகங்களின் தந்தை என்று புகழப்படும் சங்கரதாஸ் சுவாமிகள். "இந்தப் பெண் மிகப்பெரிய நடிகையாக வருவாள்," என்று ஆருடம் சொன்னவரும் அவர்தான்.

இன்று நம் காதாநயகர்களும் நாயகிகளும் என்னென்னவோ டைட்டில்களுடன் வலம் வருகிறார்களே? அன்று டி.பி.ராஜலக்ஷ்மியின் டைட்டில், 'சினிமா ராணி.' அது ஒன்றே போதுமானதாக இருந்தது. அன்றைய தேதியில் அவரது சம்பளம், மாதம் முப்பது ரூபாய். செய்தியைக் கேட்டதும் அவரது தாயால் விஷயத்தை நம்பவே முடியவில்லை. "நெஜமாவா? மாசாமாசம் முப்பது ரூவா தருவீங்களா?" என்று அதிசயத்துடன் கேட்டாராம். அப்போது ரூபாய் ஒன்றுக்கு பதினாறு படி அரிசி வாங்கலாம். பவுன் விலை பதின்மூன்று ரூபாய்.

Windfall!

பின்னாளில் வாசு தெரிவில், 'ராஜா நிவாஸ்' என்று பெரிய பங்களா கட்டிக்கொண்டு அதில் வாழ்ந்தார்கள். சினிமாவின் செழிப்பு அப்பேர்ப்பட்டது.

அப்போதெல்லாம் புராணக் கதைகளையும், ராஜா ராணிக் கதைகளையும்தான் எக்கச்சக்கம். 'As is, where is,' முறையில் நாடக வசனங்களை அப்படியே திரைக்கு மாற்றினார்கள். 1933இல் அப்படி வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'வள்ளி திருமணம்.' இதிலும் நம் 'சினிமா ராணி'தான் ஹீரோயின். Elephantstone Cinemaவின் ரிலீஸ். இயக்குனர் சாமிக்கண்ணு வின்செண்ட். படத்தைத் திரையிட்டபொது ஒரு ரீல் எங்கோ காணாமல் போய்விட, அது இல்லாமலேயே ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அப்புறம் எப்படியோ அது கிடைத்துவிட, கல்கத்தாவிலிருந்து (?!) அதை வரவழைத்து, "காணாமல் போன ரீலுடன் சேர்த்து மீண்டும் திரையிடப்படுகிறது" என்று ரி-ரிலீஸ் செய்தார்கள் ... படம் படு பயங்கர ஹிட்!

இதைதான் ராசி என்கிறார்கள் போலும்.

அப்புறம் வந்ததுதான் தியாகராஜா பாகவதரின் பொற்காலம். [ ஃபிலடெல்ஃபியாவில் இன்று தி.பாவின் ரசிகர் மன்றம் முழுவீச்சில் செயல்படுகிறதாம்.]'பவளக்கொடி'யில் ஆரம்பித்து, அவருக்கென்று பித்துப்பிடித்து அலையும் ஒரு fan followingஐ உருவாக்கினார். [ஜெயகாந்தன் எங்கோ எழுதிப் படித்திருக்கிறேன்: பொன் கலர் ஜிப்பாவை அவர் அணிந்துகொண்டால், ஜிப்பா எது, கை எது என்று தெரியாத அளவு, பொன் நிறத்தில் இருப்பாராம். அவர் ட்ரெயினில் எங்காவது செல்லும்போது, ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று கூட்டம் அலைமோதுமாம். ஸ்டேஷனில் எங்காவது நின்றால், 'கொஞ்சம் வெளிய வந்து நில்லுங்களேன்,' என்று டிடிஆர் வந்து ரிக்வெஸ்ட் செய்துகொள்வாராம்.]

Srinivas Cinetoneஐ ஆரம்பித்தவர் ஏ நாராயணன். அவரது மனைவி மீனாக்ஷியை அன்றைய மடிசார்மாமி என்று சொல்லலாம். கர்நாடக சங்கீதம் நன்கு தெரிந்த அவர்தான் தமிழ் சினிமாவின் முதல் பெண் இசையமைப்பாளர். ['ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்வதா?' என்று பலர் முறைத்துக்கொண்டு வெளியேறியதாகக் கேள்வி.]

Audience


அன்றைய மதராஸ் பட்டினத்தில், அவுட்டோர் ஷூட்டிங் எடுப்பதற்கென்று பரவலாக அறியப்பட்ட இடம் அடையாறு. மரங்கள் சூழ்ந்த பகுதி. வெய்யில் வந்தால்தான் ஷூட்டிங். ஏனென்றால் லைட்டிங்கிற்கெல்லாம் வசதியில்லை. மேகம் வரும்போதெல்லாம் உட்கார இடம் தேடி, சாப்பாட்டுக் கடையை முடித்து, இப்படியே சமாளித்திருக்கிறார்கள். சாப்பிட்ட பருக்கையையெல்லாம் காடு போல் வலர்ந்திருந்த பகுதியில் எல்லோரும் வீசியெறிய, அதைக் கொத்தித்தின்ன காக்காக்கூட்டம் வந்துவிடும். 'கா, கா," என்று அவை கத்தி அமர்க்களப்படுத்துவது ஷூட்டிங்கை பாதிக்கவே, அவற்றை விரட்டுவதற்காகவே தனியாக ஒரு Anglo-Indianஐ ஏற்பாடு செய்தார்கள்: படம் வெளிவரும்போது, 'Crow-shooter Joe' என்று டைட்டிலில் தெரியுமாம். SmileyCentral.com


இதோடு ராண்டார் கைய்யின் பேச்சு முடிந்தது. அப்புறம் ஃபிலிம் கிளிப்புக்களை ஓடவிட்டு, அதனுடன் சேர்ந்து பேச ஆரம்பித்தார். பழைய மதராஸைக் காட்டும் சில படங்களைப் பார்த்தோம். முக்கியமாக 'என் மனைவி' [இதைப் பற்றி என் ஆங்கிலப் பதிவில் எழுதியிருக்கிறேன்]- மதராஸ் தெருக்களெல்லாம் ஈயோட்டிக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு முறை நான் பார்த்திருக்கீறேன். [எனக்கு இதில் மிகப்பிடித்த வசனம்:

சாரங்கபாணி: நாங்க இப்போ ஊரை விட்டு ரொம்ப தொலவு குடிபோயுட்டோம்.

வந்தவர்; அப்படியா? மின்னே மைலாப்பூர்ல இருந்தேளே? இப்போ எங்கே?

சா (மிகுந்த சோகத்துடன்): கோடம்பாக்கம்.

வந்தவர்: அடப்பாவமே!

ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். கோடம்பாக்கம் வெகு தொலைவாமே
!]

படத்தில் ஆர் பத்மா என்றொரு நடிகை வருவார். கதைப்படி, பட்டிக்காட்டிலிருந்து வந்து, முதன்முறையாக மதராஸ் பட்டினத்தைப் பார்க்கும் வேலைக்காரப் பெண் அவர். வீட்டின் முற்றத்தில் அங்கும் இங்கும் 'தங்கு தங்'கென்று குதிப்பார். தமாஷாக இருக்கும். அவர் பாடும் பாட்டிலிருந்து:

"மானத்திலே போகுது பார் மாடில்லாத வண்டி!" (ஏரோ ப்ளேன்)

கடற்கரையில் கார்ப்பரேஷன் ரேடியோவில் அப்போதெல்லாம் (1930s) செம்மங்குடி, அரியக்குடி பாட்டுக்களையெல்லாம் ஒலிபரப்புவார்கள். அது பற்றியும் இந்தப் பாட்டில் வரும். பின்னாளில் கார்ப்பரேஷன் ரேடியோ 'ஆல் இந்தியா ரேடியோ'வாக மாறியது.

கிடக்கட்டும். ஆர் பத்மா வாங்கிய பட்டம் என்ன தெரியுமா? Sex symbol! [ஜாக்கெட்டில்லாமல் வந்ததனால்.]

அப்புறம் 'சபாபதி.' இதுவும் ஒரு (அன்றைய வார்த்தைகளில் சொன்னால்) 'காமிக்' படம். ரோஜா முத்தையா லைப்ரரி சென்றிருந்த போது, அதைப் பற்றிய விமர்சனம் ஒன்றைக் கண்டுபிடித்தேன். பேப்பர் கையில் உதிர்ந்து விழும்போல, அவ்வளவு பழையதாகவும், லேசாகவும் இருந்தது:

'சபாபதி'யில் சாரங்கபாணி!



"சபாபதி டாக்கியில் ஸ்ரீ கே சாரங்கபாணி ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதராக நடிக்கிறாறென்ரறிந்து யாம் கழைபேருவகை எய்தினம். வெண்டிரைட் டண்டமிழ்ப் படத்தின் கண் இற்றைவரை நகைச்சுவை நடிப்பிற் பல் வேடம் புனைந்து மக்களைக் களிப்பூட்டுவார் சிலரேயாம்; மிகச் சிலரே யெனினும் பிழைபடா. இன்னவர்களி லின்று இயல்பே டொட்டியக்களி நடிப்பிறம்மோ டொப்பாரற்ற திறன் வாய்ந்த திரு சாரங்கபாணி என்பார், இச் 'சபாபதி,' வெண்டிரைப் படத்தினிற் றோன்றித் தண்டமிழ்ப் பண்டிதராய் நடிக்கிறாறெறுஞ் செய்தி கேட்டு உவகை யெய்தாத மாந்தரும் உளராங்கொல்! 'சபாபதி'யின்கண், சாரங்கபாணியின் ஆசிய நடிப்பினைக் கண்ணுற்ற வன்பர்களொரு கருத்தினராய்ப் புகழ்ந்த லிவண் நோக்கிற் பிற கூறுத லெற்றுக்கு ...?"

- கல்கி இதழ், டிசம்பர், 1941.

[கொடுந்தமிழைப் பார்த்து அயர்ந்துவிடாதீர்கள். படத்தில் சாரங்கபாணி ஆசிரியராக நடிக்கிறார் அல்லவா? அதான். தமிழ் ஆசிரியர் விமர்சனம் செய்வது போல் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். :) ஆனால் எழுதி முடிப்பதற்குள் கை உடைந்தே போய்விட்டது.]

அப்புறம் 'தியாக பூமி' படம். முதல் முறையாக பேபி சரோஜாவைப் பார்த்தேன். 'பாங்கிள் வாங்கலாமா?' என்று ஏதோ பாடிக்கொண்டிருந்தார். இந்தப் படம் வந்த பிறகு எல்லோருக்கும் பேபி சரோஜா பைத்தியம் பிடித்து சகலத்திற்கும் அவர் பெயரை வைத்து (ஜாப்பானிய சோப்புக்குக் கூட!), கோர்ட் வரை சென்று அதை நிறுத்தியிருக்கிறார்கள்.

'ஜெனோவோ' படத்தில் (பெயர் சரியா என்று தெரியவில்லை), எம்ஜியார் கிறிஸ்துவ மணமகனாக வந்து அசத்துகிறார். 'கைதி' என்றொரு படம் - எடுத்தவர் எஸ். பாலசந்தர். Humphrey Bogartஇன் Dark Passage படத்தின் தமிழ் ரீமேக்காம். அதற்கு முதலில் இயக்குனர் 'இரத்தம்' என்று பெயர் வைக்க, ஜூபிட்டர் பிக்சர்ஸ் அதை ரிலீஸ் செய்யும்போது 'இரத்தம் ஓடுகிறது' என்று வரவே, எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி, back அடித்துவிட்டர்கள். அப்புறம் 'கைதி' (இயக்குனருக்கு அவ்வளவாக இஷ்டமில்லையென்றாலும்) என்று பெயர் மாற்றினார்களாம்.

அன்றைய தமிழ் பற்றி ராண்டார் கை சொன்னது ஜாலியாக இருந்தது. அதிலும் 'மங்கம்மா சபதம்' படத்தில் அரச வேடம் பூண்டு வரும் ரஞ்சன், "இவா ஊதுவா, அவா வருவா," என்று பேசும் 'வசனம்' ... SmileyCentral.com

கண்ணாம்பாள் நடித்த பழைய 'கண்ணகி' படம் வேறு மாதிரி. அவர் தெலுங்கு நடிகையல்லவா? தமிழ் வசனங்களை தெலுங்கில், கரும்பலகையில் எழுதி கேமராவுக்குப் பின்னால் மாட்டியிருந்ததர்களாம். கண்ணகியாக அவர் ரௌத்ரம் பொங்க, கண்களில் ஆத்திரம் தெறிக்க, இறுதிக் காட்சியில் ஆவேச வசனம் பேசும்போது "என் பேச்சூ, என் மூச்சூ..." என்று தெலுங்கூஊ ஸ்டைலில் இழுக்க ... ரஷ் பார்க்கும்போது, "என்ன சார் இது?' என்று சிரிப்பு தாங்க முடியாமல் இயக்குனரைக் கேட்டிருக்கிறார்கள். அவர் கையைப் பிசைந்துவிட்டு, 'எப்படியோ போகட்டும்," என்றாராம். [அப்புறம் மனோகரா படத்தில் அவரது "பொறுத்தது போதும், பொங்கியெழு," வசனம் தன்னுடைய அற்புத வசனங்களையெல்லாம் சாப்பிட்டு விட்டதாக சிவாஜி கணேசன் ஜோக்கடிப்பாராம். இன்னொரு சுவாரஸ்யமான டிட்பிட்: 'மனோகரா' நாடகமாக நடத்தப்பட்டு வருகையில், கண்னாம்பாவின் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜிதான்! Ironic, இல்லை? ]

'காதலிக்க நேரமில்லை' படத்தின் கடற்கரைப் பாட்டுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

கொட்டும் மழை நின்றிருந்தது. எனக்கு ஒரு ரோ முன்னாலமர்ந்திருந்த ஐக்காரஸ் பிரகாஷைப் பார்த்து ஹலோ சொன்னேன். [இருவரும் சினிமா ஸ்டைலில் "நீங்கதான...? என்று ஆரம்பித்தோம்.]வெளியே விற்றுக்கொண்டிருந்த 'எம் கே டி'யின் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு, ஐகாரஸ்ஸுடன் பேசிக்கொண்டே மைலாப்பூர் தெருக்களில் நடந்தேன். பழைய சென்னையின் வாசத்தில் மிதந்தவாறு வீடு வந்து சேர்ந்தேன்.

பி.கு: Madras University Senate House Restoration பற்றிய என் ஆங்கிலப் பதிவு இங்கே.
|

Wednesday, August 30, 2006

"A-ஆ!"

அவசர அவசரமாக ஒரு மொழிபெயர்ப்பு rant:

"அவனை அங்கே அனுப்பணும்னு நீதான் தலைகீழ நின்னே..." என்கிறது தமிழ்.

அதை "You only were standing upside down on the head to send him there" என்றா மொழிபெயர்ப்பது?

[bangs head on desk]

[end rant]
|

Monday, August 28, 2006

சென்னையும் படச்சுருளும்

Madras in Movies. "சென்னையில் சினிமா'வா நீங்க எடுத்துக்கிட்ட தலைப்பு?" என்று வின்சென்ட் டி'சௌசா கேட்க, கொஞ்சம் யோசித்துவிட்டு (பக்கத்தில் இருக்கும் யாரோ ஒருவரிடம் கலந்தாலோசித்துவிட்டு) 'இதுதாங்க,' என்று உரைக்குப் பெயரிட்டவர் அவரே.

சென்னை தினம் போய் சில நாள் ஆகிவிட்டாலும், மதராஸ்பட்டினக் கொண்டாட்டங்கள் இன்று மாலை ஐந்தரை மணியளவில், கனிமொழியின் கவிதைப் பேச்சுடன் முடிவடைந்தன. ஒரு பெரிய திருவிழாவைக் கண்டு களித்த உணர்வுடன் திரும்பினேன்.

முந்தைய இரண்டு நாட்களில் நடந்தவை exclusively சினிமா. பின்னது பழைய்ய்ய காலச் சினிமா. ஒன்று இயக்குனர் ஹரிஹரனின் உரை. மற்றொன்றுதான் மேலே குறிப்பிட்ட ராண்டார் கைய்யின் உரை.

படச்சுருள் - 1 SmileyCentral.com

"நான் படமெடுத்தால் எதுவும் புரியாது" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார் ஹரிஹரன். சேமியர்ஸ் கடையில் நடந்த நிகழ்ச்சி இது. காபி, பிஸ்கெட் எல்லாம் மென்று தின்று ருசித்துவிட்டு, ஆவலாக உட்கார்ந்திருந்தோம். ஒரு புன்னகையுடன் ஹரிஹரன் எழுந்து மைக் முன்னால் நின்றார்.

[கூட்டத்தில் சிரிப்பலை பரவியது. கூடவே ஆச்சர்யமும். என்னதான் தன்னடக்கம் என்றாலும்...]

உடனேயே தொடர்ந்தார். "நான் Mani Kaulலின் கலையுலக வாரிசு என்று ஒரு காலத்தில் பரவலாக அறியப்பட்டவன். பெரிய இயக்குனர் என்று பாராட்டு பெற்றவர் அவர். அவருடைய படங்கள் யாருக்கும் புரிந்ததில்லை. அதே போலத்தான். நான் எடுத்த படமும் யாருக்கும் புரியவில்லை. 1977/78இல், 'காசிராம் கோட்வால்' என்று ஒரு படம் எடுத்தேன். அது என்னென்னவோ ஃபிலிம் பெஸ்டிவலுக்கெல்லாம் சென்றது.

அப்புறம் அவ்வளவுதான்.

எனக்கோ படம் எடுக்க வேண்டும் என்று பயங்கர ஆசை. ஆனால், எப்படி, என்ன செய்வது என்று புரியவில்லை. கையில் காசில்லை. அப்போதுதான், சிபிடியின் ஷந்தாராம், 'சென்னைக்கு வருகிறாயா? குழந்தைகளுக்காகப் படம் எடுக்கிறாயா?" என்றார். எனக்கோ படம் எடுத்தால் போதும் என்று இருந்தது. பம்பாயில் ஒரு கணம் கூட இருக்க முடியவில்லை. உடனே கிளம்பிச் சென்னை வந்துவிட்டேன்."

[கொஞ்சம் அமைதி.]

"சென்னையைப் போல் சினிமா எடுப்பதற்கென்றே அமைந்த இடத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. நான் வந்த காலத்தில், சென்னைதான் தென்னிந்திய சினிமாவுக்கே தலைநகரம் போல. ரொம்ப ஆரம்ப காலங்களில் புராணப்படங்களாக எடுத்துத் தள்ளினனர்கள். அப்புறம் தேசப்பற்றுப் படங்கள் வந்து குவிந்தன. அப்போதும், அதற்குப் பிறகும் சென்னைதான் எல்லாவற்றுக்கும் செண்டர். தெலுங்கு, மலையாளம் என்று எல்லாவித மொழிப்படங்களுக்கும் சென்னை டெக்னிஷியன்களைத்தான் நம்பினார்கள். இந்தியா மொத்தத்தில் எடுக்கப்பட்ட படங்களுக்கு, 65% லேபர் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு. அந்த விஷயத்தை நினைத்துப் பெருமிதப்பட்டுக்கொள்ளலாம்.

நம் ஊரில்தான் டெக்னிஷியன்கள் (இட்லி, பொங்கலுக்கு ஆசைப்பட்டாவது) நேரத்துக்கு வந்து சேர்வார்கள். Near-obese ஹீரோயின்கள் தெற்கேயும் வடக்கேயும் நடை பழகுவார்கள் - எந்த வெயிட்டும் குறையாமல், முகத்தில் அப்பிய மேக்-அப் கரையாமல். எப்போதும் குடிபோதையில் மயங்கிய கவிஞர்கள் காவியங்கள் படைப்பார்கள். நம் ஊர் சினிமாவுக்கும் ஆல்கஹாலுக்கும் தொன்றுதொட்டு வந்துள்ள உறவுக்கு ஒரு உதாரணம்: எங்கள் எல் வி பிரசாத் லேபுக்கு எப்படி வந்து சேர்வது என்று யாராவது வழி கேட்டால், 'அத்தாங்க, ரோஸி வைன்ஸுக்கு எதுத்தாப்புல!' என்று பட்டென்று பதில் வரும்!"

அநேகமாக, தமிழ்நாட்டிலிருந்து வந்து ஹிந்தியில் ஓரளவு எடுபட்ட ஒரே ஹீரோ கமல்தான் என்று நினைக்கிறேன். அவரும் முயற்சிதான் செய்தார். பெரிய ஹிட்டாகவில்லை.

நம்மூரில் (சென்னை) கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களாக இருந்தால் உடனே நண்பர்களாக வரித்துக் கொண்டுவிடுவார்கள். இயக்குனர் இசையமைப்பாளரின் பார்ட்டியில் இருக்கும் ஒருவரிடம், "இந்தப் பாட்டு ஹம்சத்வனி ராகம்தானே?" என்று கேட்டால், உடனே மலர்ந்து போய் இன்ஸ்டண்ட் ஃப்ரெண்டாகிவிடுவார். சென்னைக்காரர்களின் மனது அப்படி.

இங்கேயிருப்பவர்களின் அசாதாரண தைரியம் இன்னொரு விஷயம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பேனாவிஷன் கேமராவை இறக்குமதி செய்வார்கள். "இத்தனை செலவு உங்களுக்கெப்படிக் கட்டுபடி ஆகும்?" என்று விசாரித்தால். "எல்லாம் ரெகவர் பண்ணிக்கலாம் சார்," என்று அசால்ட்டாகப் பதில் வரும். ஜெர்மனியிலிருந்து வரும் விலைமதிப்பில்லாத equipmentடெல்லாம் அங்கே எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரியாது ... ஆனால் அவை இங்கே மாற்றி மாற்றி கன்னாபின்னாவென்று ஷிஃப்ட் ஓடும். ஜெர்மனி மெஷினின் உண்மையான test இங்கே சென்னையில்தான் நடக்கிறது!"

[சிரிப்பு.]

"எல் வி பிரசாத் ஸ்டுடியோ ஆரம்பித்த கதை கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும். தனக்கென்று தனியாக லாபம் எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் படமெடுப்பதிலேயே பணத்தைப் போட்டவர் அவர். ஒரு முறை, அவர் பம்பாயில் ஃபிலிம் எடிட்டிங்கிற்குக் கொடுத்த போது, ஒரு ரீல் ஸ்க்ராட்ச் ஆகி வந்தது. "இதை மாற்ற வேண்டும்,"
என்று அவர் சொல்ல, "விடுங்க சார், இதெல்லாம் இங்க சகஜம்," என்று அவர்கள் பதில் சொல்ல, எல் வி பிரசாத விடாப்படியாக ரீலை மாற்றீனார். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்த, நெப்ராஸ்காவில் படித்து வந்திருந்த அவரது மகன், "அப்பா, இந்தப் படம் ஓடினால், நான் உங்களுக்கு ஒரு லாப் கட்டித் தருகிறேன்." என்று சபதம் போட்டார். அப் எல் வி பிரசாத் எடுத்துக்கொண்டிருந்த படம்? 'ஏக் துஜே கே லியே.' சுப்பர் ஹிட். உடனே ஸ்டுடியோவும் லேப்பும் ரெடியாகிவிட்டன!

இவ்வளவு பெரிய மனிதர், மதியம் ஒரு குட்டி டப்பாவில்தான் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவார். வீட்டுச் சாப்பாடுதான் உயர்ந்தது என்பதைப் புரிந்துகொண்ட மனிதர்.

பம்பாயில் எனக்குப் பிடிக்காத இன்னொரு விஷயம் - "உங்க ஊர்ல சினிமாவில எல்லோரும் சேர்றதே சிஎம் ஆகத்தான்!" என்று ஒரு அடி அடிப்பது. இல்லையென்றால் 'தமிழ் ஷாவினிசம்' பற்றி உளறுவது. எனக்கு ஒன்று புரியவில்லை: தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவரான எம்ஜியாரை தலைவராக்கிப் பார்த்த தமிழ் சினிமாவை எப்படி 'தமிழ் ஷாவினிசம்' கொண்ட இடமாக நினைப்பது?

அது ஒரு பக்கம். இவர்கள் 'Wholesome entertainment' உள்ள படங்களை எடுப்பதாக வேறு சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியென்றால் என்ன? நோஞ்சானாகப் படம் பார்க்கப்போகும் எல்லோரும் புஷ்டியாகத் திரும்பி வருவார்கள் போலிருக்கிறது. அதுதானே wholesome?"

[New Wave Cinema பற்றிப் பேச்சு வர, அதைப் பற்றியும் சொன்னார். ]

"19977/78 வரை இருந்த சினிமா வேறு. அந்தக் காலங்களை எம்ஜியாரும் சிவாஜியும் ஆட்சி செய்தார்கள். ராஜ ராஜ சோழன் படத்துடன் சிவாஜியின் அப்பீல் இறங்க ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். அதேபோல், எம்ஜியாருக்கு 'உலகம் சுற்றும் வாலிபன்.' இந்தப் படங்களிலிருந்துதான், அவர்களால் அவர்களது இமேஜை முழுதாகக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போக ஆரம்பித்தது. அப்புறம் வந்தது எமர்ஜென்ஸி. தமிழ் சினிமாவும் மாறத் தொடங்கியது.

திடீரென்று புத்தம்புதிய இயக்குனர்களும், வித்தியாசமான படங்களும் முளைத்தன. சிந்தனைகள், செயல்பாடுகள், இதுவரை இருந்த சில கட்டுப்பாடுகள் ... எல்லாம் தகர்த்தெறியப்பட்டன. These new films attacked the hegemony of previous cinema. பாலுமஹேந்திரா, அஷோக்குமார், பி சி ஸ்ரீராம் என்று புத்தம்புதியவர்கள் தோன்ற ஆரம்பித்த நேரம். And they were unapologetic about their work, their stories and screenplays. எம்ஜியாரும் சிவாஜியும் பேசிய ஒரு மாதிரி செயற்கைத் தமிழ் காணாமல் போயிற்று. இயக்குனர் பாக்யராஜ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. "நான் எங்க சார் அந்த மாதிரி தமிழ் பேசறேண்?" என்றார், நான் ஒரு முறை அவரது திரைக்கதைகளைப் பற்றிக் கேட்ட போது. "அவங்க பேசற பாஷை எனக்குப் புரியலை. நான் எப்படிங்க அந்தத் தமிழ்ல எழுத முடியும்?"

அதுதான் சரி என்று எனக்குத் தோன்றியது.

நான் 'ஏழாவது மனிதன்' எடுத்த போது, ஒரு காட்சி அமைத்தோம்: புகை மண்டலத்தின் வழியே ஒரு டிரெய்ன் வருவதுபோல். பக்கத்தில் உள்ள ஒரு சிமெண்ட் ஃபாக்டரியிலிருந்து புகை சூழ்வது போலும் அமைத்தோம். அந்தக் காட்சி திரையில் தோன்றியபோது எழுந்த கைதட்டலுக்கு நான் ஆச்சர்யப்பட்டுப்போனேன். இதில் கை தட்ட என்ன இருக்கிறது?

மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பது நன்றாகப் புரிந்தது.

1985யில் இந்த நியூ சினிமாவின் வீச்சு குறைய ஆரம்பித்தது. அதன்பின் வந்த காலங்களில், இரண்டு இயக்குனர்கள் சினிமாவின் போக்கை மாற்றினார்கள் என்று சொல்வேன். ஒருவர் மணிரத்னம். அவர் எப்படிப்பட்ட படங்கள் எடுத்தார், எப்படி திரைக்கதை அமைத்தார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை - உங்களுக்கே தெரியும். ஹிந்திக்குச் சென்றால்தான் முன்னேறலாம் என்ற நிலையை மாற்றியவர்களின் முன்னோடி அவர். அவர்தான் ஐஸ்வர்யா ராயை தமிழுக்குக் கொண்டு வந்தவர். தமிழ்தான் எல்லாம், என்ற நிலைக்கு அவர் முக்கிய காரணம்.

இன்னொருவர் யார் தெரியுமா? டி. ராஜேந்தர்."

[ஹாலில் சட்டென்று மயான அமைதி. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.

ஹரிஹரன் புன்னகையுடன், "என்ன அப்படிப் பாக்கறீங்க? நெஜமாத்தான்," என்றார், ஆங்கிலத்தில்.

"என்ன சார் சொல்றீங்க?
"]

"இல்லையா பின்னே? அவரை மாதிரி யோசிக்கத் தனி திறமை வேண்டும். 'என் இதயம் துடிக்குதே!' என்று உருக்கமான பாட்டு வரி இருந்தால், எல்லாபக்கமும் இரத்தக்குழாய்கள் ஒடும் ஒரு பெரிய கார்ட்போர்ட் அட்டை ஹார்ட்டை ஓட வைப்பார். அது கருஞ்சிவப்புக் கலரில் பூதாகாரமாக ஸ்கிரீன் முழுக்க நகரும். கேட்டால், "டெக்னிக்கு சார், டெக்னிக்கு," என்பார். என்ன டெக்னிககென்று புரியவில்லை ..."

[மீண்டும் சிரிப்பு.]

"தமிழ் சினிமாவின் அத்தனை stereotypeஐயும் உடைத்தவர் அவர். கேரளாவில் 'என் தங்கை கல்யாணி' படம், ஆறு ஷோ ஓடியது தெரியுமா? காலை ஏழு மணிக்கெல்லாம் படம் பார்க்க கியூவில் நிற்பார்கள். என்ன லாஜிக்?! ஆனால், அதுதான் சினிமா."

[டப்பிங் படங்கள் பற்றிப் பேச்சு வந்தது.]

"டெர்மினேட்டர் படம் டப் ஆகி தமிழில் வந்த போது, பிபிசியில் இருந்த நார்மன் பிரௌன் அதைக் கேட்டுவிட்டு, "Schwarzeneggar sounds better in Tamil,"என்றார். எனக்குத் தெரிந்து, 'மம்மி' படம்தான் சக்கை போடு போட்டது என்று நினைக்கிறேன். 'கல்லறை மனிதன்' என்ர பெயரில்.

['இம்சை அரசன் இருபத்துமுன்றாம் புலிகேசி பயங்கர ஹிட் ஆகியதே? இனிமேல் சரித்திரக் காமெடிகள்தான் ஓடுமா?]

"நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால், புலிகேசி படத்தில் மக்கள் அதிகம் ரசித்தது, நிகழ்காலப் பிரச்சனைகளையும், அரசியலையும் அந்தப் படத்தில் கோடிகாட்டியிருப்பதைத்தான். அதனால் பயப்பட வேண்டாம்: அப்படியெல்லாம் சரித்திரப் படமாக எடுத்து நம்மைப் பழி வாங்க மாட்டார்கள்."

[இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் mindless தமிழ்க் காதல் படங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது?]

"Mindless என்று சொல்லாதீர்கள்." [நெஞ்சில் கை வைத்துக்கொண்டு] "எனக்கு மிகப் பிடித்ததே அந்த மாதிரியான படங்கள்தான். நம்முரில் இரண்டு வகைப் படங்கள் உண்டு: ஒன்று dramatic வகை. இன்னொன்று melodramatic வகை. நம்மூர்க்காரர்களுக்கு இரண்டாவது வகையின் மீது மோகம் அதிகம். அதனால் அவையெல்லாம் mindless ஆகிவிடாது." [கண்ணடித்தார்]

[ரஜினி படங்களில் 'முத்து'வைப்போல் மற்ற படங்கள் ஓடாதது ஏன்?]

"ஒரு ரகசியம் சொல்கிறேன்: ஜப்பானியர்களுக்கு மீனா மேல்தான் காதல். அவரில்லாததால் மற்ற படங்கள் ஓடவில்லை."

[கடைசியாக ஒரு சினிமா செய்தி ...?]

"தாராசந்த் பர்ஜாட்யா என்று ஒரு தயாரிப்பாளர் இருந்தார். அவர் இன்கம் டாக்ஸ் கட்ட மாட்டேனென்று தகராறு செய்வார். 'அதான் எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ் கட்டப்படுகிறதே, நான் ஏன் இன்கம் டாக்ஸ் கட்டவேண்டும்?'' என்று வாதாடுவார். 'ஐயா, அதை மக்கள் கட்டுகிறார்கள்; நீங்கள் கட்டவில்லை. நீங்கள் வருமான வரி கட்டித்தான் ஆக வேண்டும்,' என்று சொன்னால், 'அதான் எவனோ கட்றானே, அப்றம் என்ன?' என்பார்.

வாழ்நாள் முழுவதும் வரி கட்டாமல் தப்பிக்க என்னெல்லாம் வழி உண்டோ அத்தனையையும் செயல்படுத்தினார், அவர். அப்புறம் ஒரு நாள் பெரிய தப்பொன்று செய்தார். ஒரு படத்திற்கு distribution rights எடுத்தார். அந்தப் படம் என்ன தெரியுமா? Sholay.

பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. பிய்க்காமலும் கொட்டியது. நொந்து போனார் பர்ஜாட்யா. புதுமுகங்களை வைத்து, ஃப்ளாப் கொடுத்த இயக்குனர்களை வைத்தெல்லாம் படம் தயாரித்தார். எல்லாம் செம ஹிட். 'சினிமாவும் ஆச்சு, புண்ணாக்கும் ஆச்சு,' என்று சொத்தையெல்லாம் அஸ்ஸெட்டாக வாங்கிப் போட்டு freeze செய்தார். 'நஷ்டமாகப் போனால் போகட்டும்' என்று சூளுரைத்தார்.

ஒரு நாள் அவர்து பேரம் வந்தான். 'தாத்தா, எனக்கு ஒரே ஒரு படம் எடுக்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. ஒன்றே ஒன்று. புதுமுகங்களாகப் போடுகிறேன். எடுக்கத் தெரியாமல் எடுக்கிறேன். கண்டிப்பாக நஷ்டமாகும் தாத்தா. அந்த ஒரு படத்தையாவது நான் எடுக்க வேண்டும்,' என்று கெஞ்சினான். பேரனின் ஆசையைக் கெடுப்பானேன் என்று அவர் சம்மதிக்க ...

அந்தப் பேரன் எடுத்த படம் Maine Pyar kiya. பேரன் பெயர் சூரஜ் பர்ஜாட்யா.

அதிர்ச்சியில் நொந்து நூலாகிப் போன தாராசந்த் என்ன செய்தார் தெரியுமா?

இரண்டே வாரத்தில் மாரடைப்பில் போய்ச் சேர்ந்தார்!"
|