Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, April 24, 2004

சில்மிஷியே...!

ஆசைப்படுவது எல்லாவற்றையும் அடையமுடியாததில் ஒரு வித சுகம் இருக்கிறது. கேட்கும் எல்லா விஷயமும் உடனுக்குடன் கிடைத்துவிட்டால், அந்த அநுபவமும் பொருளும் மதிப்பிழந்து போய்விடுகின்றன. ஒரு பொருள் வேண்டுமென்று நினைத்து, அதற்காகக் கொஞ்சம் மெனக்கெட்டால், அதற்கான பலன் வந்து சேரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை.

நான் புத்தகம் வாங்குவதும் அப்படித்தான். எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் புத்தகக் கடைக்குச் செல்வேன். வாங்கும் உத்தேசமே இல்லாமல், புத்தகம் புத்தகமாகப் புரட்டுவேன். அட்டைகளைப் பிரித்துப் பார்ப்பேன்; சில சமயம், புத்தகம் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்போல் தோன்றினால், தரையில் மண்டியிட்டு இரண்டு மூன்று அத்தியாயமாவது படித்துவிட்டுத்தான் எழுந்திருப்பேன்.

என்னைப்போல் அந்தக் கடையில் புத்தகம் வாங்க வரும் மற்றவர்கள் பெரும்பாலும் ஹை-டெக் ஆட்கள். ஒயிலாக நடந்து வருவார்கள். கண்ணில் பட்டதைப் பிரிப்பார்கள் (அநேகமாக அப்போது புகழ்க் கொடி நாட்டியிருக்கும் பெஸ்ட்-ஸெல்லராக இருக்கும்); அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, நான் இரண்டு புத்தகம் புரட்டும் நேரத்தில் போயே போய்விடுவார்கள்.

எவ்வளவு பெரிய வேஸ்ட்.

புத்தகம் வாங்குவதென்றால் சாதாரணமா? அது ஒரு அற்புத அனுபவம். முதலில் கடை முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, அன்றைய புதுவரவுகளை நோட்டம்விட்டு விட்டு, பிடித்த எழுத்தாளர்கள் வரிசையை நோண்டிவிட்டு, இரண்டு மணிநேரமாவது செலவழித்து, மாதக்கணக்காக 'வாங்க வேண்டும்' என்று அலைபாய்ந்துகொண்டிருக்கும் புத்தகம் ஏதாவது திடீரென்று கண்ணில் பட்டு, அதைப் பாய்ந்து பிடுங்கி எடுத்து, கடவுளை எதிர்பாராமல் கண்ட பக்தை மாதிரி முகத்தைச் சுற்றி ஒளிவட்டத்துடன் வெளியேறினால்தான்... புத்தகம் வாங்கும் அனுபவம் முழுமை அடைகிறது. எனக்கு.

சொல்லிக்கொண்டே போகலாம் - ஆனால் நான் எழுத நினைத்தது வேறு.

சமீபத்தில் இப்படிக் கடையில் சுற்றிக்கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட புத்தகம்தான் 'சில்மிஷியே...'. கவிஞர் பா.விஜய்யின் கவிதைத் தொகுப்பு. தலைப்பைப் பார்த்தவுடன் அது என்ன மாதிரியான தொகுப்பாக இருக்கும் என்று புரிந்துவிட்டது. 'வழ வழ'வென்று அட்டை போட்டு, கலர் கலராக ஓவியங்கள் போட்டு கலங்கடித்திருக்கிறார்கள். பழங்கால ஓவியங்களைப் போட்டு நிரப்ப முடியாத இடங்களில் ஓவியர் காதல் கவிதைக்கேற்ற ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

'கவிதை எப்படி?' என்று பார்க்கப் புரட்டினேன். 'என் கண்ணின் மணியே...உன் உடல் முழுவதும் காதல் நரம்பு...என் உயிர் உன் கண்ணில்...நன் உன் பெயர் சொல்வேன்...நீ உருகிப்போவாய்...' etc etc.

ஏமாற்றமாக இருந்தது. சிரிப்பாகவும் இருந்ததது. ஒரு பக்கம், நல்ல எழுத்தை வெளிக்கொணர ஒவ்வொருத்தர் மலையைக் கெல்லி எலி பிடிக்க வேண்டியிருக்க, இங்கே 'நான் மரம், நீ கொடி' என்று கவிதைகள் எக்கச்சக்க விலையில் அமர்க்களப்படுகின்றன.

ஓ'ஹென்றி ஒரு சிறுகதையில், ' மனித வாழ்க்கையின் அத்தனை அபத்தங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை ஆசைகளையும் லட்சியங்களையும் களைந்துவிட்டுப் பார்த்தால், பசி ஒன்றுதான் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கும்', என்று சொல்லியிருப்பார்.

இதே விதியை கவிதைக்கும் பயன்படுத்தலாமோ என்று தோன்றுகிறது. 'சில்மிஷியே'வின் வெளிப்பூச்சையும் கலர் ஓவியங்களையும் களைந்துவிட்டு சாரத்தைப் பார்த்தால்...ஒன்றுமில்லை.

நான் புத்தகத்தைக் கீழே வைத்த மறுநிமிடம் ஒரு சல்வார்ப் பெண் அதை ஆவலாகத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார். ரசனை பலவிதம். குற்றம் கூறும் உரிமை யாருக்கு இருக்கிறது?

|

Friday, April 23, 2004

அந்த அறுபது ஆண்டுகள்...!


தமிழ் வருடங்களுக்கெல்லாம் ஏன் சமஸ்கிருதத்தில் பெயர்கள் இருக்கின்றன என்பது மாதக்கணக்காக என்னைக் குடைந்துகொண்டிருந்த கேள்வி. 'இதற்கு ஏதாவது காரணம் இருந்தே தீர வேண்டும்' என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அப்புறம் சில நாட்களுக்குப் பிறகு, பத்ரியும் இதே கேள்வியைத் தனது வலைப்பதிவில் கேட்டிருந்தார்.

அந்தக் கேள்விக்கு இன்று விடை கிடைத்தது. ஸ்ரீஹரி என்ற இலங்கை அன்பர் (வரலாற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவர், மன்றமையத்தில் இவரது பதிவுகள் பலவற்றைக் காணலாம்) சோழர் வரலாறு பற்றி ஏகப்பட்ட தகவல்கள் அறிந்து வைத்திருக்கிறார். அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, பின்வரும் பதிலைத் தந்தார்:

"...தமிழ்நாட்டிலுள்ள பல சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில், அவர்கள் எந்தத் தமிழ் வருடத்தில் 'இன்ன காரியத்தைச் செய்தார்கள்' என்ற குறிப்பு இல்லை. ஒரு மன்னன் அரியணை ஏறிய வருடத்திலிருந்து ஐந்தாவது ஆண்டு, அல்லது பதிமூன்றாம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்துத்தான் அவர்கள் கல்வெட்டுக்களில் ஆண்டுகளை குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இதே சோழமன்னர்கள், கர்நாடகாவில் வெட்டியுள்ள கல்வெட்டுக்களில், இப்பொழுது நாம் பயன்படுத்தும் 'தமிழ்' வருடப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக:

(1) "In the 9th year of the increasing reign of victory of the glorious emperor of the three worlds Vikkrama Choladeva in the P(i) lava year which was the Saka year 1049 on the occasion of an eclipse of moon in the month of Jyaishtha..."

EPIGRAPHICA INDICA - Vol 6, No 7.

(2) "In the twenty eighth year of glorious Rajaraja Chola corresponded to the Paridavin year the Saka 934..."

EPIGRAPHICA CARNATICA - Part 1, No 140

இப்படி இருக்கின்றன.

என் கருத்து இதுதான்: கர்நாடகாவில், ஒவ்வொரு ஆண்டையும் குறிக்கும் சமஸ்கிருதப் பெயர்கள் சோழர் காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றன. தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் கீழ் வந்த போது, அவர்களுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தப் பெயர்களும் நம்மிடம் வந்துவிட்டன (பழங்காலத் தமிழ்ப் பண்களுக்குப் பதில், கர்நாடகத்தின் இராகங்கள் இடம் பிடித்தது போல்.) இப்படி இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்..."

எனக்கும் அவர் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகத்தான் படுகிறது.


|

Thursday, April 22, 2004

வந்ததே...ஜி - மெயில் வந்ததே!

ஆ - ஹா.

புத்தம்புதிய Gmail அக்கவுண்ட் கிடைத்துவிட்டது. கொஞ்ச நாட்களாகவே கூகிள் 'நாங்கள் 1000 MB இடம் தருகிறோம்' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். 'இதெல்லாம் நடக்கிற காரியமா? இரண்டும் நான்குமாக MBக்களை மற்ற மின்னஞ்சல்காரர்கள் தரும் போது இவர்கள் மட்டும் எங்கேயிருந்து ஆயிரம் எம்.பி தரப்போகிறார்கள்? ஏப்ரல் ·பூல் சமாச்சாரம்' என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் காதில் விழுந்துவிட்டது போல.

ஆங்கிலத்தில் 'packrat' என்பார்களே? அந்த வகை நான். எனக்கு எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 1999இல் யாரோ ஒரு நண்பர்/நண்பி எழுதிய 'நலமா?' மெயில்கூட எனக்கு அதிமுக்கியம். எதையும் தூக்கி எறியவே மனம் வராது. (இதற்காக எத்தனை பேச்சு கேட்டிருக்கிறேன் என்று கணக்கே இல்லை. 'இதெல்லாம் அன்பின் அடையாளம்' என்று சொன்னால் யாருக்குப் புரிகிறது? 'எது...ஸ்பேம் மெயில் கூடவா?' என்று நக்கலாகப் பதில் வரும்.) ஐம்பது வருடங்களுக்கு முன்பு பிறந்திருந்தேனானால், கண்டிப்பாக மூட்டை மூட்டையாக இன்லேண்ட் லெட்டர் சேகரித்திருப்பேன். இப்பொழுது அதையே வேறு உருவில் சேகரிக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கு, ஜி-மெயில் வரப்பிரசாதம்.

'வரப்பிரசாதமும் இல்லை, புளியங்கொட்டையும் இல்லை' என்று காரசாரமாக விவாதிப்பவர்களும் உண்டு. 'கூகிள் தனிப்பட்ட மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்கிறது' என்ற குற்றச்சாட்டு வெகுவாகப் பரவியிருக்கிறது. 'என்ன பெரிய ஸ்கேன்?' என்று சொல்பவர்களும் உண்டு.

'போகப் போகத் தெரியும்...
இந்த ஜி-மெயில் சுயரூபம் புரியும்...'

இப்போதைக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன்.:-)


|

Monday, April 19, 2004

பாலமும் பிறவும்...

பாலங்கள்.

சிவசங்கரியின் நாவல்களிலேயே என்னை அதிகம் கவர்ந்தது அவரது 'பாலங்கள்' தான் [இந்த நாவல், 'கோவை கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை பரிசு (ரூ.10,000) பெற்றது.]. பதினான்கு வயதில், தொடர்கதை வடிவத்தில் படித்தேன். அப்போதே மனதில் 'பச்' சென்று ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்புறம் நூல் வடிவில் அதைத் தேடியலைந்து, நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியில் பிடித்தேன். அப்போது முதல், ஆர்வம் தோன்றும் போதெல்லாம் எடுத்துப் புரட்டுவது வழக்கம்.

'பாலங்கள்' நாவலின் கதைக்களம் கொஞ்சம் வித்தியாசமானது (அப்போது). 1907 - 1931, 1940-1964, 1965-1980 என்று மூன்று வெவ்வேறு காலகட்டங்களைப் பதிவு செய்யும் நாவல். பெரும்பாலும் அந்தண சமூகத்தின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த குடும்பங்கள், அப்பொழுதைய சமூகம், பழக்க வழக்கங்கள், திருமணங்கள், வாழ்க்கை முறை...இப்படிச் செல்கிறது கதை. 'மூன்று தலைமுறைகளை ஒப்பீடு செய்க' என்ற கேள்விக்கு பதில் மாதிரி இருக்கிறது.

1907-1931:

இந்தக் காலகட்டம் எனக்கு மிகப் பிடித்தமானது. ஏழிலிருந்து பத்து வயதிற்குள் பெண்ணுக்கு திருமணம் செய்வது, வருடம் முழுவதும் வரும் ஒவ்வொரு பண்டிகைக்கும் வீட்டுப் பெண்கள் மாய்ந்து மாய்ந்து வேலை செய்வது, விவசாயம், வெளி வேலைகள் என்று ஆண்கள் சாம்ராஜ்யம் நடப்பது, இப்படி எத்தனையோ. இத்தனை வருடங்கள் கடந்து, எழுத்தின் மூலம் அந்த நாட்களை எட்டிப் பார்த்தால், சுவாரசியமாக இருக்கிறது. [அப்பொழுது வாழ்ந்தவர்களைக் கேட்டுப் பார்த்தால், எக்கச்சக்கமாக அலுத்துக்கொள்வார்கள்.]. சவுகரியங்கள் எதுவும் அற்று, பொழுது போக்கு என்றால் அடுத்த வீட்டுக்காரர்களுடன் பேசுவதும், கோவிலுக்கும் உறவினர் வீட்டுக்குப் போவது மட்டுமான வாழ்க்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. [புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அப்பொழுதெல்லாம் புத்தகம் படிக்கும் வழக்கமே பெண்களுக்கு இல்லை.].

மாறி மாறி தீபாவளி, பொங்கல், புது வருடம், அந்த நோன்பு, இந்த நோன்பு என்று இடுப்பொடிய வேலை செய்திருக்கிறார்கள். பண்டிகை என்பதே எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயம் என்பதற்குப் பதிலாக, 'மாங்கு மாங்'கென்று வேலை செய்யும் சமயம் என்று அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வீட்டிலும் செய்யும் இனிப்பு/கார சமாச்சாரங்களின் பட்டியல் இது: சோமாசி, மனோப்பு, சாதா தேன்குழல், திரட்டுப்பால், மைசூர்பாகு, ஒக்காரை, காலை டிபனுக்கு இட்லி, அப்புறம் இருக்கவே இருக்கும் தீபாவளி லேகியம்...இன்னும் எத்தனையோ.

சமையலும் வீட்டு வேளையும் செய்தது போக ஒழிந்த நேரங்களில், கொஞ்சமே கொஞ்சம் என்ஜாய் செய்திருப்பார்கள் போல. கதாநாயகியின் திருமணத்தின் போது, கூடியிருப்பவர்கள் பாடும் நையாண்டிப் பாடல்களின் ஒரு சாம்பிள்:

'சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்,
வெகு சங்கோஜி-எங்கள் சம்பந்தி-
பானை போதி வயிறும்
பட்டாணி மூக்கும்
எலிவால் பின்னலும்-எங்கள் சம்பந்தி...'இதற்கு பதில் பாடல் எதிர் சாரியிலிருந்து கிளம்பும்.

'என்னால் முடியாது-இந்த
அருமை வேட்டகம் போய்
அவமானப்பட்டுவர
என்னால் முடியாது-
முதல் நாள் வடை பாயசம்,
இரண்டாம் நாள் வத்தக் குழம்பு,
மூணாம் நாள் பழைய சாதம்,
நாலாம் நாள் வடிச்ச கஞ்சி
என்னால் முடியாது-
முதல் நாள் கட்டில் மெத்தை,
இரண்டாம் நாள் பட்டுப் பாய்,
மூணாம் நாள் வாசத் திண்ணை,
நாலாம் நாள் மாட்டுக்கொட்டில்,
என்னால் முடியாது...'இப்படி இட்டுக் கட்டி பாட்டிக்கொண்டே போய்விடுவார்கள். இதற்கே ஒரு தனி சாமர்த்தியம் வேண்டும். [(எங்கள் உறவினர் இந்த மாதிரி பாட்டு கட்டுவதில் மன்னர். கல்யாணங்களில் நலங்கு சமயத்தில் அவர் எதிர்ப்பட்டால் எல்லோரும் நடுங்குவது வழக்கம். எப்போது யாரை 'பாட்டுப் பாடுகிறேன் பேர்வழி' என்று வம்புக்கிழுக்கப்போகிறார் என்பதினால்:-)].

1940-1965

இந்தக் காலகட்டத்தில் பல மாற்றங்கள் நுழைந்துவிடுகின்றன. சினிமா வந்துவிட்டது (தியாகராஜ பாகவதர்...). பெண்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவது சாதாரணமாகிவிட்டது. இருந்தாலும், பழைய பழக்க வழக்கங்கள் மொத்தமாகத் தேய்ந்து மறைந்துவிடவில்லை.

1965-1980

நம் மாடர்ன் உலகம். வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமா? :-)

இந்தத் தொடரைப் படித்த போது, புத்தகத்தின் இறுதியில் வாசகர் கடிதத்தையும் சேர்த்து 'பைண்ட்' செய்து வைத்திருந்தார்கள். அதில் ஒரு வாசகர், '1907 படித்த போது, உருளைக்கிழங்கு ரோஸ்ட்டும், வெங்காய சாம்பாரும் சாப்பிட்டது போல் இருந்தது. 1940இல் புளியோதரை, கெட்டித் தோசை, 1980 ப்ரெட் டோஸ்ட்டும் வெண்ணெய் ஜாமும் சாப்பிட்ட உணர்வு வந்தது' என்று ரசனையுடன் எழுதியிருந்தார்:-)

***********************

ஜெ.மோகனின் 'காடன்விளி' படித்தேன். (பெருமூச்சு.)

'The woman in the dunes' புத்தகத்தை விமர்சனம் செய்திருக்கிறார். இருத்தலியல், இருண்மை என்று கொஞ்சம் 'கடமுட'வென்று இருந்தாலும், இது பரவாயில்லை.:-)


|