Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, April 30, 2004

உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை.


1. விவாதம் வேண்டாம்.

2. அப்படி விவாதம் செய்தாலும் அதில் ஜயிக்க வேண்டாம்.

3. அப்படி விவாதத்தில் ஜயித்தாலும், ஜயித்ததாகக் காட்டிக்கொள்ள வேண்டாம்.


எனக்கு மிக மிகப் பிடித்த கதாசிரியர் விதித்த கோட்பாடுகள் இவை. (அவருக்கு ஏகப்பட்ட அனுபவம். தான் கற்ற பாடம் மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்று கட்டுரையாக எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்.).

யாரிடமாவது விவாதம் செய்து அவர்களை மண்ணில் போட்டு புரட்டு புரட்டென்று புரட்டாவிட்டால், இராத்திரி தூக்கம் வராமல் திண்டாடும் நண்பர்கள் சிலர் எனக்கு உண்டு. அவர்களுடன் அதிகம் பேசாமல் இருந்துவிடுவது என் வழக்கம். விவாதம் செய்யத் தெரியாமல் இல்லை; விவாதம் முற்றினால், இரண்டு பக்கமும் மனவருத்தம் மட்டும்தான் மிஞ்சும் என்பதால். ஒரு கட்டத்தில் 'சரியா, தவறா'? 'என்பதெல்லாம் மறந்து போய், 'நான் சொல்வதை நீ ஒப்புக்கொள்,' என்று இரு அணியுமே நினைப்பதால். நட்பையே பலிகொடுக்கும் நிலை வந்துவிடுவதால். The heat of the battle. எதிராளி நமது நண்பர் என்பது மறந்து போய்விடும். [தப்பித் தவறி நாம் வெற்றியடைந்துவிட்டால், நாள் கணக்காக கறுவிக் கொண்டு அலைவார்கள். மட்டம் தட்டும் சந்தர்ப்பம் அமையும் வரை விட மாட்டார்கள். இதைப் பார்த்து ரசிக்க ஒரு கூட்டம் கூடும். தேவையா?]. ஈகோ பிரச்சனை தலைதூக்கும். இந்த நிலைமை வரும்போதெல்லாம் நான் ஒதுங்கிவிடுவேன். நாளாவட்டத்தில் 'விவாதத்தில் இறங்குவதேயில்லை,' என்று முடிவெடுத்துவிட்டேன்.

ஒரே ஒரு முறை இந்த விதிக்கு விலக்கு அளிக்கலாம் என்று ஒரு நண்பரும் நானும் முடிவு செய்தோம். அது 'கடவுள்' சமாச்சாரம். நான் 'கடவுள் உண்டு' கட்சி. அவர் 'இல்லை' கட்சி. தொடங்கும்பொதே, 'நான் காரசாரமாகப் பேசுவேன். தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தோற்றுப் போவதற்குத் தயாராக இரு,' என்று ஏகப்பட்ட வார்னிங் கொடுத்துவிட்டுத்தான் ஆரம்பித்தார். "கடவுள் என்று ஒருவர் கிடையவே கிடையாது. தன் ஆழ் மனத்தின் பயங்களை மறைத்துக்கொள்வதற்காகவும், இயற்கையின் சீற்றங்களுக்குக் காரணம் காட்டவும், மனிதன் உருவாக்கிய விஷயம் அது" என்று Voltaire முதலான அறிஞர்களையெல்லாம் மேற்கோள் காட்டி ஆரம்பித்தார் நண்பர். என் வாதத்திற்கு நான் எந்த அறிஞரையும் துணைக்கு அழைக்கவில்லை. என் சொந்த அனுபவங்களை வைத்துக்கொண்டே வாதாடினேன். 'நாம் விவாதிக்கும் விஷயத்திற்கு ஏன் மற்றவர்களையெல்லாம் இழுக்க வேண்டும்?' என்பது என் எண்ணம்.

இந்தக் கடவுள் விவாதத்தில் எல்லோரும் வழக்கமாகப் பயன்படுத்தும் அஸ்திரத்தை நண்பரும் பயன்படுத்தினார். "கடவுள் என்று ஒருவர் இருந்தால், உலகத்தில் ஏன் இத்தனை கஷ்டம்? கடவுளுக்குக் கண் இல்லையா?" etc. etc.

"கஷ்டம் எதுவும் கடவுள் ஏற்படுத்தவில்லை. மனிதனே அவற்றை உருவாக்கிக்கொண்டான்..." என்ற ரீதியில் நான் பத்தி பத்தியாக வாதாடினேன்.

அவர்: கடவுள் என் பாரபட்சம் காட்டுகிறார்? குற்றமே செய்யாதவருக்கு தண்டனையும், குற்றம் செய்தவர்கள் சந்தோஷமாக வாழ்வதும் எப்படி நடக்கின்றன? இது எவ்வளவு பெரிய அநீதி?

"பிறந்ததிலிருந்து குற்றமே செய்யாதவர் என்று யாராவது உண்டா? அப்படி அவர் மனத்தூய்மையுடன் வாழ்ந்து, அப்படியும் தண்டனை அனுபவிக்கிறார் என்றால், காரணம் இல்லாமல் இல்லை. இங்கேதான் karma theory ஆரம்பிக்கிறது..." என்று பதில் மடல் எழுதினேன். Naturally. அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை.

மனக்கஷ்டத்தை அனுபவிக்காதவர்கள் - கடவுள் தத்துவத்தைப் புரிந்துக்கொள்ள முடியாது. அதையும் மீறி அவர்கள் கடவுளைக் குறை கூறினால், அவர்களின் அடிப்படைப் புரிதலில் ஏதோ தவறு இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் அதலபாதாளத்தின் வரை செல்பவர்கள் - அதிலிருந்து மீட்கப்படுபவர்கள் - அவர்கள் மட்டும்தான் கடவுளின் இருப்பை முற்றுமாகப் புரிந்துகொள்ள முடியும். It's a question of faith. கோயிலில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைப்பவளும் அல்ல நான். கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவர்கள் வைக்கும் அத்தனை வாதத்திற்கும் பதில் இருக்கிறது. எதிராளி அதைப் புரிந்துகொண்டு பேசினால். 'கண்ணால் பார்க்க முடியாத எதையும் ஒப்புக்கொள்ள முடியாது' என்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இதற்கு விடையை நம் மனம் அல்லவா சொல்ல முடியும்?

விவாதம் முற்றி, நாட்கணக்கைத் தாண்டி வாரக்கணக்கை எட்டியதும், 'இது முடியக்கூடிய விஷயமில்லை,' என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், இந்த விவாதம் எங்களது நட்பை பாதித்துவிடும் என்ற பயமும் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில், 'வேண்டாம் விவாதம்' என்று முற்றுப்புள்ளி வைத்தோம். We agreed to disagree.

இன்று வரையில் அவருடைய நம்பிக்கையின்மையை நான் கிண்டலடிப்பதும், அவர் என்னை 'பக்தையே' என்று நக்கலடிப்பதும் தொடர்கிறது. ஆனால், இதனால் எங்கள் நட்பு பாதிக்கப்படாமல் இருந்து வருவதில் ஒரு நிம்மதியும் இருக்கிறது. கடவுளின் இருப்பை நிர்ணயிப்பதை விட, நட்பு பெரிதாகப் பட்டது/படுகிறது.

ஆனால், இது முற்றுப் பெறாத விவாதம். மீண்டும் பொறி பறக்க அதிகக் காலம் ஆகாது. நண்பரும் காத்துக்கொண்டிருக்கிறார் என்று உள்மனம் சொல்கிறது. :-)

நிற்க. விவாதம் வேண்டாம் என்ற தத்துவத்தில் கடவுளுக்கும் நம்பிக்கை இருக்கும் போலும். இது சம்பந்தப்பட்ட மடல்கள் என் கணினியில் ஒரு ·போல்டர் நிறைய இருந்தன. வெகுநாள் வரை அந்த மடல்களையெல்லாம் பாதுகாத்து வைத்திருந்தேன். ப்ச். ஓர் அற்பக் கணினிக் கிருமியின் சீற்றத்தில் அவையும் என் மடல்களும் சேர்ந்து அழிந்துவிட்டன. கடவுள் பாரபட்சமற்றவர் என்று நிரூபிக்க இது போதாது?

தேவையில்லாத குறிப்பு: சில பேருக்குக் கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பதே வேலை.

|

Wednesday, April 28, 2004

இடையில் அகப்பட்ட தேசம்

ஜிப்ஸி இன மக்களின் வரலாறு பரிதாபமானது. நாடுவிட்டு நாடு துரத்தியடிக்கப்பட்டு, வேரற்றுத் திரியும் அவர்களது வேதனையைப் படம்பிடிக்கும் கவிதை இது. நாதியா ஹாவா (நடனப் பெண்மணி மற்றும் கவி, செக்கோஸ்லோவாக்கியா) இயற்றியது:

எனது இதயம் பிளக்கப்பட்டது
சுதந்திரத்தின் பெயரில்
இரத்தம் பெருக்கெடுத்தது

பிற்பாடு என்னதான் மிஞ்சியது?

எனது குருதி நாளங்களில்
இனிய இசை
எனது உடைந்த எலும்புகளில்
புராதன நடனம்

மகிழ்ச்சியுடன் துக்கத்துடனும்
சொந்தமொன்று அழைத்துக்கொள்ள யாதுமற்று
நாடும் வீடுமற்ற இன்மையினுள் தேடித் திரிகிறது
எனது ஆன்மா

நீண்ட காலங்களுக்கு முன்

உடைந்த கண்ணாடிபோல் சிதறிப் போன
எனது மக்களை
கடந்த காலத்தில் அவநம்பிக்கையுடன்
தேடியலைகிறது
எனது ஆன்மா

கேளுங்கள்...
காத்திருத்தலின் பாடலை நீங்கள் செவிமடுக்கலாம்
தொடுவானத்துக்கும் அப்பால்
தொலைதூரத்தில் பாருங்கள்

தனித்த எனது ஜிப்ஸி இதயத்தின் நடனத்தை
நீங்கள் காணலாம்...


[நன்றி: 'உயிர்மை']

|
பரணும் நானும்

போன மாதம் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அகப்பட்டவை:

1. பழைய மரப்பெட்டி ஒன்று. வழுவழுவென்று, சிறியதாக, கைக்கடக்கமாக இருந்தது. ஏதோ ஒரு யுகத்தில் என் பாட்டிக்குப் பாட்டியால் கடுகு, சீரகம் கொட்டிவைக்கப் பயன்படுத்தப்பட்டதாம். 'பழைய பொட்டிதானே, தூக்கியெறியவா?' என்றார்கள். 'வரலாற்று முக்கியத்துவம் படைத்த சமாச்சாரத்தையெல்லாம் தூக்கியெறியவாவது?' என்று எடுத்து வைத்துக்கொண்டேன் ['உன்னைக் கேட்டிருக்கவே கூடாது...' - அப்பா.]. இப்பொழுது அதில் ஒவியம் வரையும் வர்ணங்களையெல்லாம் அடுக்கி வைத்திருக்கிறேன்.

பிரச்சனை என்னவென்றால்...பெட்டி நல்ல கனம். அசால்ட்டாகத் தூக்கிக்கொண்டு போக முடியவில்லை. நான் வரையும் இடத்திற்கு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு பதில், அது இருக்கும் இடத்திற்கு ஓவியத்தைக்கொண்டு வர வேண்டியதாகிவிட்டது. இப்பொழுது வேறு பெட்டி தேடிக்கொண்டிருக்கிறேன்.

2. பழைய டைரிகள் பத்து. நான்காவது படிக்கும் நாளிலிருந்து டைரி எழுதும் பழக்கம் உண்டு. ஆண்டுக்குப் பத்து முறை. (அதுவே அதிகம். மிச்சத்திற்கு பக்கம் பக்கமாகக் கிழித்து நண்பிகளுக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிடுவேன்.). அதில் 'கடவுள்' பற்றிய தத்துவ விசாரணை எல்லாம் எழுதி வைத்திருந்தேன் (என்பது பிரித்தபோதுதான் நினைவுக்கு வந்தது.). அன்றைய தேதியில் நடந்த கிரிக்கெட் மாட்சுகள், இன்னும் என்னென்னவோ...தெரிந்தவர்களிடம் அதையெல்லாம் காட்ட முடியவில்லையே என்று அப்பொழுதெல்லாம் பயங்கர ஏக்கமாக இருக்கும்.

3. 'சுழிக் காற்று' என்று பைண்ட் செய்யப்பட்ட பழைய நாவல். செல்லரித்துப் போய்க் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது. அதைத் தட்டிக்கொட்டி சரி செய்ய முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். 'டம்பப் பை,' குட்டைத் தலைப்புப் புடவை, ஆளுயரக்கொண்டை, ('வசந்தமாளிகை' வாணிஸ்ரீயின் தலையலங்காரம் மாதிரி.)...

கதை: ஒரு ஜமீன் பங்களா. கதாநாயகியும் அவளது காதலரும் வருகின்றனர் (அந்தக் காலத்துக் கதைகளில் எவ்வளவு சுலபமாகக் காதலிக்கின்றனர்!). அப்புறம் டிரங்குப் பெட்டியில் உடல், பங்களாவில் இருளில் மர்மம், சொத்துத் தகராறு என்று கதை ஜாலியாகப் போகிறது.

4. இரண்டு பக்கெட் அகல்விளக்குகள். (கார்த்திகைக்கு இன்னும் நாளிருக்கே?)

5. நான்கு பனை விசிறி. தாத்தாவின் சொத்து. (அவர் புதிதாக வேறு வாங்கிக் கொண்டுவிட்டார்.). ஒரு சாக்கு மூட்டை நிறைய பழைய துணி.

6. 'கிராண்ட் ஸ்வீட்ஸ்' அட்டைப் பெட்டிகள் இரண்டு. (எப்படி இவை பரணில் வந்து மாட்டிக்கொண்டன என்பது 'சுழிக்காற்றை' விடப் பெரிய மர்மம்.).

7. மரப்பாச்சி பொம்மைகள் நான்கு. கலர் கலராக ஜிகினா பேப்பர் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

8. ஐம்பது கரப்பான்பூச்சிகள். இரு அணில்கள். ஒரு குருவி (உயிரோடு). ஏகப்பட்ட தூசி.

"யோசித்துப் பார்த்தால், நம் மனமெனும் பரணிலும் எத்தனையோ விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன..." என்று எழுத ஆசையாகத்தான் இருக்கிறது. வேண்டாம்.

முக்கியக் குறிப்பு: '2004 - ஒரு பரணின் குறிப்புகள்' என்ற கட்டுரைத் தொகுதியில் மேற்சொன்ன பட்டியல் இடம்பெறும்.

|

Monday, April 26, 2004

ஆட்டோகிரா·ப்

நேற்று நண்பர்களுடன் விருந்து.

யாரைக் கேட்டாலும் (என் அனுபவத்தில்), கல்லூரி நாட்களைப் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள். கல்லூரி நினைவுகளில் இன்ஸ்டண்டாக உருகிப்போவார்கள். முதல் கவிதையிலிருந்து முதல் காதல் வரை எல்லாமே அங்குதான் தொடங்கியிருக்கும். நட்பு மிக முக்கிய இடம் வகிக்கும். அந்த வருடங்களின் எல்லா சம்பவங்களூம் வழக்கத்தை விட அதிக முக்கியத்துவம் அடையும்.

எனக்கு எல்லாமே தலைகீழ். கல்லூரியில் எனக்கு இது எதுவும் அமையவில்லை.(கவிதை எழுதும் நண்பி ஒருத்தியைத் தவிர. அவளும் இரத்தத்தில் கவிதை எழுதும் பழக்கமுடையவளாக இருந்தாள். டைரி டைரியாக, காய்ந்து போய் பிரவுன் நிறமாக மாறியிருந்த இரத்தத்தில் கவிதைகள். 'எங்கே, உன் நட்பை நிரூபித்துக் காட்டு' என்று விபரீதமாக ஏதாவது சொல்லாமல் இருக்க வேண்டுமே' என்று நான் பயந்த பயம் எனக்குத்தான் தெரியும்.)

என் கல்லூரி நட்பு வட்டம் விதித்த சில கட்டுப்பாடுகள்:

1. காதல் சமாச்சாரங்கள் - அவை சம்பந்தப்பட்ட கவிதைகள் கூடாது. ('அதெல்லாம் ரொம்பத் தப்புடா.') ஆனால் தலைவி(self-appointed) மட்டும் கவிதை எழுதுவார். அதுவும் நட்பு பற்றி மட்டும். தினம் இரண்டு.

2. தலைவியைத் தவிர வேறு யாரும், பிறந்தநாள் விசேஷங்களூக்கு அவர் விதித்த விலையை மீறி பரிசுப் பொருள் வாங்கித் தரக்கூடாது. ('வாழ்க்கைல பணம் முக்கியமில்லைடா...' - அவரும் அவருக்கு அணுக்கமானவர்களும் மட்டும் ஐந்நூறு ரூபாய் செலவு செய்வார்கள்.)

3. 'கட்'டடித்து சினிமா செல்வது பெரிய குற்றம். (தலைவிக்குத் தோன்றினால், அப்பொழுது மட்டும் செல்லலாம்.)

4. 'டா' மொழி இன்றியமையாதது. அதில்லாமல், சாதாரணமாகப் பேசுபவர்கள் முறைக்கப்படுவார்கள்.

5. அடிக்கடி மற்றவர்கள் முன்னிலையில் அழ வேண்டும். (இது எனக்கு சுத்தமாகக் கை வரவில்லை.)

இது காலேஜா, மத்திய சிறைச்சாலையா என்று எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இந்த விதிகள் எனக்கு ரொம்பவும் 'டூ மச்'சாகத் தோன்றியதால், நான் ஒதுங்கிக்கொண்டேன். அபத்தமாகத் தோன்றியவை விதிகள் மட்டுமல்ல; அவற்றில் இருந்த மெல்லிய hypocrisyயும்தான். 'நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்; நீ செய்யக்கூடாது' என்ற லேசான ஆணவம். அதை அப்படியே சிரமேற்கொண்டு 'இதுதான் கல்லூரி வாழ்க்கை' என்று கடைபிடிக்கத் தயாராக இருந்த மீதி எட்டு நண்பிகள். ஒரளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. (சிரிப்பு வந்தது:-) தூரத்திலிருந்து அவர்களது ஆர்ப்பாட்டங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டேன்.:-)

நிற்க. அந்த மயக்கம் தெளிந்து ஆளாளுக்கு இப்பொழுது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்டார்கள் என்பது வேறு விஷயம்.

கல்லூரி 'நட்பு' வட்டத்தின் வெறுமை புரிந்து விலக ஆரம்பித்த போது, அதைத் தீர்க்க ஆபத்பாந்தவர்களாக வந்தவர்கள் - பள்ளி நண்பர்கள். கல்லூரி வாழ்க்கையில் வெவ்வேறு திசைகளில் பிரிந்தவர்கள், கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் மீண்டும் சந்தித்துக்கொண்டோம் (அதுவரை அப்படியோரு ஹோல்-சேல் சந்திப்பு அமையவில்லை.)அதன் பிறகு அவ்வப்போது சந்தித்துக்கொண்டோம்.

இல்லாத உணர்ச்சிகள் இருப்பதாக நாடகம் ஆடாமல், செயற்கையாகப் பேசாமல், 'எதுவானாலும் நாங்கள் இருக்கிறோம்' என்று காட்டிக்கொண்ட நண்பர்கள்/நண்பிகள். எத்தனை வருடம் கடந்தாலும், க்ளாஸ் ரூம் கலாட்டாக்களையும், ப்ரின்சியை மீறிக்கொண்டு ஸ்டிரைக் செய்ததையும் (?!) மறக்காத, ரசித்துச் சிரிக்கும் நண்பர்கள்.

ஹா. இப்படிப்பட்டவர்களுடன் ஒரு மதியப்பொழுதைக் கழிப்பது சுகம். நேற்றும் பழைய நினைவுகள் (வயசாச்சில்ல?) பகிர்ந்துகொண்டோம். அதில் இருவருக்கு அடுத்து வரும் மாதங்களில் திருமணம். அவர்கள் நாகரீகமாக 'ஜொள்ள', மற்றவர்கள் அவர்களை ஏற்றிவிட...யாருக்கும் வீட்டுக்குப் போகவே மனம் வரவில்லை. 'அடிக்கடி இந்த மாதிரி சந்திக்கணும்' என்று சத்தியம் செய்துகொண்டோம். (அதற்காக வாரம் மூன்று முறை கூட்டம் போட்டால், இந்த சந்தோஷம் இருக்குமா?)

எப்படியிருந்தால் என்ன? அந்த நாள் - இனிய நாள்.


|